Monday, September 14, 2009
ராகுல்காந்தியின் தமிழக விஜயம்ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துமா?
காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ராகுல்காந்தியின் தமிழக விஜயத்தினால் காங்கிரஸைச் சேர்ந்த இளைஞர்கள் பெரும் உற்சாகமடைந்துள்ளனர். தமிழக காங்கிரஸ் தலைவர்களும் திராவிட முன்னேற்றக் கழகத்தினரும் ராகுல் காந்தியின் தமிழக விஜயத்தை எச்சரிக்கையுடன் அவதானித்தனர். தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சியை நிறுவுவோம் என்று தேர்தல் காலங்களில் வாக்குறுதி அளிக்கும் தமிழகக் காங்கிரஸ் தலைவர்கள், தமக்கென ஒரு கோஷ்டி அமைத்துச் செயற்படுவதனால் தமிழகத்தில் காங்கிரஸின் வளர்ச்சி குன்றியுள்ளது.
காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்திப்பதால்தான் திராவிட முன்னேற்றக் கழகமும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும் தேர்தலில் வெற்றி பெறுவதை ராகுல்காந்தி தமிழக இளைஞர்களுக்கு விளக்கியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியை இளைஞர்களின் கையில் கொடுக்க வேண்டும் என்று திட்டமிட்டு வட இந்திய மாநிலங்களில் இளைஞர் காங்கிரஸை கட்டி எழுப்பியதால் காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கு அதிகரித்துள்ளது. இளைஞர்களின் எழுச்சியில் வட இந்தியாவில் உள்ள மூத்த அரசியல் தலைவர்கள் படுதோல்வி அடைந்தனர். தமிழகக் காங்கிரஸையும் இளைஞர்களின் கையில் ஒப்படைக்க வேண்டும் என்ற ராகுலின் விருப்பத்துக்கு உரிய பலன் கிடைத்துள்ளது. ராகுல் வீதி ஓரத்தில் திரண்டிருந்த மக்களுடன் கை கொடுத்து சிரித்துப் பேசியதும் சிறுவர்களுடன் அளவளாவியதும் இளைஞர்களும் ஆலோசனை செய்ததும் காங்கிரஸ் கட்சிக்கு புதுத் தெம்பைக் கொடுத்துள்ளது.
இன்றைய இளைஞர்கள் நாளைய தலைவர்கள் என்ற பழமொழியை நடைமுறைப்படுத்த விரும்பும் ராகுல் காந்திக்கு தமிழகக் காங்கிரஸ் இளைஞர்கள் தமது முழு ஆதரவையும் தெரிவித்துள்ளனர். காங்கிரஸ் கட்சிக்குள் இருக்கும் கோஷ்டி மோதலுக்கு முடிவு கட்டுவதே ராகுல் காந்தியின் முதல் பணியாக இருக்கும். கோஷ்டி மோதல் பற்றி இளைஞர்களுடன் வெளிப்படையாகப் பேசிய ராகுல்காந்தி, தமிழகக் காங்கிரஸ் தலைவர்களுக்கு மறைமுக எச்சரிக்கை விடுத்துள்ளார்.
உட்கட்சித் தேர்தல் மூலம் மாவட்டம் தோறும் இளைஞர் காங்கிரஸ் தலைவர்கள் தெரிவு செய்யப்பட வேண்டும். நாடாளுமன்றத் தேர்தலிலும் தமிழக சட்டமன்றத் தேர்தலிலும் போட்டியிடும் வேட்பாளர்களைத் தெரிவு செய்ய மாவட்டம் தோறும் இளைஞர் குழுவை அமைக்க வேண்டும் என்று ராகுல்காந்தி கூறியுள்ளார். ராகுல்காந்தியின் இந்தக் கூற்று தமிழகக் காங்கிரஸ் கோஷ்டித் தலைவர்களுக்கு எச்சரிக்கை மணியாக அமைந்துள்ளது.
தமிழக காங்கிரஸ் தலைவராக யார் தெரிவு செய்யப்பட்டாலும் காங்கிரஸ் கட்சியில் உள்ள கோஷ்டித் தலைவர்களை அனுசரித்து போக வேண்டிய கட்டாயம் உள்ளது. இல்லையேல் அவரது பதவி பறிப்புக்கு யாரோ ஒரு தலைவர் காரணமாகி விடுவார். யாருக்கும் கட்டுப்படாத சுயமாக சிந்தித்து, கட்சி நலனில் அக்கறை கொண்டு முடிவெடுக்கக் கூடிய இளைஞர் தலைவர் ஒருவரையே ராகுல்காந்தி விரும்புகிறார்.
தமிழக இளைஞர் கழகத் தலைவராக வேண்டும் என்ற ஆசை தமிழகக் காங்கிரஸ் தலைவர்களின் வாரிசுகளிடம் உள்ளது. தமிழகக் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரின் மகன் இளைஞர் காங்கிரஸ் தலைவராக முடியாத சூழ்நிலை உள்ளது. அமைச்சர் ப. சிதம்பரத்தின் மகன் இளைஞர் காங்கிரஸ் கட்சித் தலைவரானால் ப.சிதம்பரத்தை எதிர்க்கும் தமிழகக் காங்கிரஸ் தலைவர்கள் அதனை விரும்ப மாட்டார்கள். ஆகையினால் தான் கோஷ்டிகளுக்கு அப்பால் உள்ள ஒருவரை இளைஞர் காங்கிரஸ் தலைவராக்க வேண்டும் என்று ராகுல் காந்தி விரும்புகிறார்.
தமிழகக் காங்கிரஸ் கட்சி பல கோஷ்டியாகப் பிளவுபட்டிருப்பதையே திராவிட முன்னேற்றக் கழகமும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும் விரும்புகின்றன. தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சி என்ற ராகுல் காந்தியின் பேச்சை திராவிட முன்னேற்றக் கழகம் இரசிக்கவில்லை. காங்கிரஸ் கட்சியின் ஆதரவு இல்லாமல் தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற திராவிட முன்னேற்றக் கழகத்தின் விருப்பத்துக்கு ராகுல்காந்தியின் பேச்சு முட்டுக்கட்டை போட்டுள்ளது.
தமிழகக் காங்கிரஸ் பலமானால் திராவிட முன்னேற்றக் கழகத்துடனும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துடனும் கூட்டணி சேர வேண்டிய அவசியம் இல்லை என்பதை மறைமுகமாக விளக்கி உள்ளார் ராகுல் காந்தி. மத்திய அரசில் வேண்டிய அமைச்சுகளைத் தேர்ந்தெடுக்கிறது திராவிட முன்னேற்றக் கழகம். தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ் கட்சி இடம்பெற வேண்டும் என்று பலமுறை இரந்து கேட்டும் இவ்விடயம் செவிடன் காதில் ஊதிய சங்கு போல் கவனிக்கப்படாமல் இருக்கிறது. திராவிட முன்னேற்றக் கழகம் தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சி ஏற்பட்டால் அமைச்சர் பதவிகளுக்கு இன்னொரு கட்சியிடம் கெஞ்ச வேண்டிய அவசியம் இருக்காது என்பதை ராகுல் மறைமுகமாக உணர்த்தியுள்ளார்.
ராகுல் காந்தியை டில்லியில் சந்தித்து தனது அரசியல் பிரவேசம் பற்றிய செய்தியை கசிய விட்ட நடிகர் விஜய் வழமை போன்று அமைதியாக இருக்கிறார். காங்கிரஸ் கட்சியில் நடிகர் விஜய் சேர்வதை தமிழக அரசியல் வட்டாரமும், தமிழ் சினிமாவும் விரும்பவில்லை. விஜயின் அரசியல் பிரவேசத்தை தமிழகக் காங்கிரஸ் கட்சியில் உள்ளவர்களில் சிலர் விரும்பவில்லை. விஜய்க்குப் பின்னால் உள்ள ரசிகர்கள் காங்கிரஸில் நுழைந்தால் தமது செல்வாக்கு குறைந்து விடும் என்று அவர்கள் பயப்படுகிறார்கள்.
விஜய் நடித்து கடைசியாக வெளிவந்த மூன்று படங்களும் தோல்வி அடைந்ததால் தீபாவளிக்கு வெளிவரும் வேட்டைக்காரன் படத்தையே அவர் பெரிதும் நம்பி இருக்கிறார். வேட்டைக்காரன் படத்தின் விநியோக உரிமையை சன் தொலைக்காட்சி வாங்கியுள்ளது. சன் தொலைக்காட்சியும் திராவிட முன்னேற்றக் கழகமும் ஒன்றாகக் கைகோர்த்துள்ளன. வேட்டைக்காரன் படத்தின் விநியோகத்தில் குளறுபடி ஏற்பட்டால் விஜயின் செல்வாக்குப் பலத்த அடி விழும் என்பது வெளிப்படை. விஜயின் படத்தைத் தயாரிக்க ஆவலாக இருந்த ஒஸ்கார் நிறுவனம் அதனை கைவிட முடிவு செய்துள்ளது. விஜய் அரசியலில் குதிக்கப் போகிறார் என்ற செய்தியில் விஜய் சந்தித்த பெரிய இழப்பு இது.
விஜயின் அரசியல் பிரவேசம் பற்றி பல செய்திகள் தினமும் வெளிவந்து கொண்டிருக்கிறது. விஜய் வழமைபோல் மௌனமாக இருக்கிறார். நான் அரசியலுக்கு வரவில்லை என்று கூறினால் இவரைப் பற்றிய அரசியல் வதந்திகள் முற்றுப் பெற்று விடும். இதுபற்றி விஜய் வாய்திறக்காமல் இருப்பதனால் வதந்திகள் உண்மையாகி விடும் நிலை உள்ளது. அரசியலில் இறங்கும் முடிவை விஜய் ஒத்தி வைத்துள்ளார்.
முதல்வர் கருணாநிதி, ஜெயலலிதா, வைகோ, விஜயசாந்தி ஆகியோரைக் காண்பதற்கு முன்பு அடிக்கும் தொண்டர்களைக் கண்டு திகைத்த காங்கிரஸ் கட்சி, ராகுலைக் காண திரண்ட மக்கள் வெள்ளத்தைப் பார்த்து வியந்து போயுள்ளது. 15 இலட்சம் இளைஞர்களை காங்கிரஸில் சேர்க்க வேண்டும் என்பது ராகுல் காந்தியின் திட்டம். ராகுல் காந்தியைக் காண்பதற்கு கூடிய பெரும் கூட்டத்தைப் பார்த்தார். அவர் எதிர்பார்த்த 15 இலட்சத்துக்கும் அதிகமான இளைஞர்கள் காங்கிரஸ் கட்சியில் சேர்வார்கள் போல் தோன்றுகிறது.
இது ராகுல் காந்தியின் கொள்கையினால் கவரப்பட்டு சேர்ந்த கூட்டமா? அவரைக் காண்பதற்காகச் சேர்ந்த கூட்டமா? என்பது தமிழக சட்டமன்றத் தேர்தலின் போது புரிந்து விடும்.
வர்மா
வீரகேசரிவாரவெளியீடு 13/09/09
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment