Sunday, September 6, 2009
நடிகர்களுக்காக காத்திருக்கும்தமிழக காங்கிரஸ் கட்சிகள்
காங்கிரஸ் கட்சியில் நடிகர் விஜய் சேரப்போகிறார் என்ற தகவல் கடந்த வாரம் தமிழக அரசியலை பரபரப்பாக்கியது. சிதம்பரம், இ.கே.வாசன், இளங்கோவன், தங்கபாலு ஆகிய தமிழக காங்கிரஸ் தலைவர்களின் பின்னால் குழுவாக பலர் நின்று காங்கிரஸ் கட்சியை வழி நடத்துகின்றனர். இளைஞர்களைக் கவரக்கூடிய தலைவர்கள் காங்கிரஸில் இல்லாதது பெருங்குறையாக உள்ளது.
திராவிட முன்னேற்றக் கழக இளைஞர்கள் துணை முதல்வர் ஸ்டாலினின் பின்னால் உறுதியாக உள்ளனர். இளைஞர் அணித் தலைவராக ஸ்டாலின் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து கட்டுக்கோப்பான இளைஞர் படையை அவர் உருவாக்கினார். திராவிட முன்னேற்றக் கழகத்தின் இன்றைய வெற்றிக்கு இளைஞர் அணியும் காரணம்
விஜயகாந்தின் அரசியல் பிரவேசம் தமிழக இளைஞர்களைக் கவர்ந்துள்ளது. திராவிட முன்னேற்றக்கழகம், அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் ஆகியவற்றுக்கு விஜயகாந்த் சவாலாக இருப்பார் என்ற எதிர்பார்ப்பில் இளைஞர்கள் அவரின் பின்னால் அணி திரண்டுள்ளனர். விஜயகாந்தின் ரசிகர் மன்ற இளைஞர்களும் அவருக்கு பக்கபலமாக உள்ளனர். இந்த இளைஞர் படையால் விஜயகாந்துக்கு வெற்றியைத் தேடிக் கொடுக்க முடியவில்லை.
இளைஞர்களை முன்னிறுத்தி வேலைத் திட்டங்களை உருவாக்கி வரும் ராகுல் காந்தி தமிழக காங்கிரஸ் கட்சிக்கு புத்துயிரளிக்க விரும்புகிறார். அவரின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் சகல திறமையும் விஜய்க்கு இருப்பதால் விஜய் பற்றி அவருக்கு கூறப்பட்டது.
திராவிட முன்னேற்றக் கழகமும், காங்கிரஸ் கட்சியும் ஒரே கூட்டணியில் இருந்தாலும் இரண்டு கட்சிகளுக்குமிடையே அவ்வப்போது சிறுசிறு உரசல்கள் உண்டாவதும் அவை தீர்க்கப்படுவதும் வெளியே தெரியாத இரகசியம். திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆதரவு இல்லாமல் தேர்தலில் வெற்றி பெறமுடியாது என்று காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் சிலர் நம்புகின்றார்கள்.
திராவிட முன்னேற்றக்கழகத்தின் உறவைத் துண்டித்து அதன் வளர்ச்சியைத் தடுக்கவேண்டும் என்று சில தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் கருதுகிறார்கள்.
அவர்களின் ஆலோசனையின் பிரகாரமே ராகுல் காந்தி விஜய் சந்திப்பு நடைபெற்றது. திராவிட முன்னேற்றக் கழகத்துடனான உறவைத் துண்டித்து அக்கட்சியைத் தோற்கடிக்கவேண்டும் என்று எண்ணுபவர்களில் முதன்மையானவர் இளங்கோவன். ராகுல் விஜய் சந்திப்பின் பின்னணியில் இளங்கோவன் இருப்பதாகக் கருதப்படுகிறது.
விஜயகாந்துடன் கூட்டணி சேரவேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர்கள் சிலர்
விரும்புகின்றனர். யாருடனும் கூட்டணி சேருவதில்லை என்று உறுதியாகக் கூறிவந்த விஜயகாந்த் அன்று மனமிரங்கி அறிக்கைவிட்டார். கூட்டணி பற்றி யாராவது பேசினால் பேசுவதற்கு தயார் என்று விஜயகாந்த் அறிவித்தார். விஜயகாந்தின் அறிக்கை வெளியானதும் காங்கிரஸுடன் விஜயகாந்த் சேர்வார் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. ஆனால், விஜயகாந்தை முந்திக்கொண்டு விஜய் ராகுல் சந்திப்பு நடந்து முடிந்து விட்டது.
விஜய் அரசியலுக்கு வரவேண்டும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பு மக்கள் நற்பணி மன்றத்தின் மூலம் இளைஞர்களுக்கும் முதியவர்களுக்கும் உதவி செய்கிறார் விஜய். விஜயின் ரசிகர் மன்றத்தின் ஆதரவு தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை வளர்க்க உதவும் என்று எண்ணத்தில் விஜய்க்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
அரசியல் கட்சி ஆரம்பித்த நடிகர்களில் எம்.ஜி.ஆரை மட்டும்தான் தமிழக மக்கள் ஏற்றுக்கொண்டார்கள். ஏனையோர் தேர்தலில் படுதோல்வி அடைந்தனர். ஆகையினால் விஜயின் அரசியல் பிரவேசத்திற்கு பலமான கட்சியின் பின்னணி வேண்டும் என்று அவரது தந்தை விரும்பினார்.
விஜய் ரசிகர்களும் காங்கிரஸ் கட்சியினரும் மகிழ்ந்திருந்த வேளையில் கனடாவில் இருந்து விஜய்க்கு எதிரான குரல் முதலில் எழுந்துள்ளது. காங்கிரஸ் கட்சியில் விஜய் சேர்ந்தால் அவருடைய படங்களைப் பகிஷ்கரிப்போம் என்று அக்குரல் உலகெங்கும் எதிரொலிக்கத் தொடங்கி உள்ளது. இந்த எதிர்ப்புக்குரலை முறியடிப்பது எப்படி என்று விஜய் தரப்பில் ஆராயப்பட்டு வருகிறது.
திராவிட முன்னேற்றக் கழகம், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆகியவற்றின் துணை இன்றி தமிழகத்தில் வலுப்பெறவேண்டும் என்ற ஆசை காங்கிரஸ் கட்சியிடம் உள்ளது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துடன் காங்கிரஸ் கட்சி இணைவற்கான வாய்ப்பு மிக மிகக் குறைவு. இன்றைய நிலையில் திராவிட முன்னேற்றக்கழகத்தை கைவிட்டால் அது காங்கிரஸுக்கு பெரிய தாக்கமாக அமையும்.
அதற்கு மாற்றீடாக விஜயகாந்தையும், விஜயையும் காங்கிரஸுக்குள் இழுப்பதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. காங்கிரஸ் கட்சியுடன் விஜய் இணைந்தால் அவருக்கு எதிராக வெளிநாடுகளில் வாழும் தமிழ் மக்களின் குரல் ஒலிக்கும் இலங்கைத் தமிழ் மக்களின் மீது அதிக அக்கறை கொண்டிருக்கும் விஜயகாந்த் தனது அரசியல் ஆதாயத்துக்காக காங்கிரஸ் கட்சியில் இணைய மாட்டார் என்ற கருத்து உலகெங்கும் வாழும் தமிழ் மக்களிடம் உள்ளது.
நடிகர் பிரபுவுக்கும் காங்கிரஸ் தரப்பில் இருந்து தூதுவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை வளர்ப்பதற்கு பாடுபட்டவர்களில் சிவாஜிகணேசனும் ஒருவர். பெருந்தலைவர் காமராஜரின் மீது மதிப்பும் மரியாதையும் வைத்திருந்த சிவாஜி கணேசனை காங்கிரஸ் கட்சி தூக்கி எறிந்ததால் அரசியலில் இருந்து ஒதுங்கினார் சிவாஜிகணேசன். அவருடைய பெருமைகளைக் கூறி மகன் பிரபுவுக்கு தூது விட்டுள்ளது காங்கிரஸ் கட்சி.
ரஜினியின் ரசிகர்கள் அரசியல் அனாதைகள் என்று ப. சிதம்பரத்தின் மகன் கூறியதால் தமது பலத்தை நிரூபிக்க வேண்டும் என்று ரஜினி ரசிகர்கள் ரஜினிக்கு நெருக்குதல் கொடுக்கின்றனர். ரஜினி அரசியலில் இறங்கினால் திராவிட முன்னேற்றக் கழகத்தின் வளர்ச்சியில் முட்டுக்கட்டை ஏற்படும் என்று காங்கிரஸ் தலைவர்கள் கருதுகின்றனர். அதனால் தான் ரஜினி ரசிகர்களை தூண்டிவிட்டுள்ளனர்.
வெள்ளையரை எதிர்த்து போராடிய காங்கிரஸ் கட்சி, சினிமாப் புள்ளிகளை எதிர்பார்த்து கதவைத் திறந்து வைத்துள்ளது.
வர்மா
வீரகேசரிவாரவெளியீடு 06/09/09
Subscribe to:
Post Comments (Atom)
7 comments:
செம காமெடி பதிவு.. வயிறு குலுங்க சிரிச்சேன். நன்றி. :))
//அவரின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் சகல திறமையும் விஜய்க்கு இருப்பதால் விஜய் பற்றி அவருக்கு கூறப்பட்டது.//
ஹாஹாஹா.. ராகுல் எதிர்பார்ப்பு என்னன்னு தெரியுமா? ஓசில இடம் கிடைக்கிதுன்னு எழுதித் தள்ளாதிங்க ஜி :)
//SanjaiGandhi said...
செம காமெடி பதிவு.. வயிறு குலுங்க சிரிச்சேன். நன்றி. :))//
ஏன் உங்கள் காங்கிரஸ் கட்சியினர் செய்யும் சண்டைகளை விட இந்தப் பதிவில் என்ன காமெடி. அப்ப ஏன் விஜய் ராகுல் காந்தியைச் சந்தித்தார். வலையில் போடுகின்ற கொமெண்டை விகடனில் போடுவீர்களா? அங்கேயும் இதே செய்தி வந்ததே.
அன்புடன்
வர்மா.
//SanjaiGandhi said...
செம காமெடி பதிவு.. வயிறு குலுங்க சிரிச்சேன். நன்றி. :))//
ஏன் உங்கள் காங்கிரஸ் கட்சியினர் செய்யும் சண்டைகளை விட இந்தப் பதிவில் என்ன காமெடி. அப்ப ஏன் விஜய் ராகுல் காந்தியைச் சந்தித்தார். வலையில் போடுகின்ற கொமெண்டை விகடனில் போடுவீர்களா? அங்கேயும் இதே செய்தி வந்ததே.
அன்புடன்
வர்மா.
//SanjaiGandhi said...
ஹாஹாஹா.. ராகுல் எதிர்பார்ப்பு என்னன்னு தெரியுமா? ஓசில இடம் கிடைக்கிதுன்னு எழுதித் தள்ளாதிங்க ஜி :)//
மன்னிக்கவும் மிஸ்டர் நீங்கள் பதிவை முழுமையாகப் படிக்கவில்லை என நினைக்கின்றேன். இது ஒரு பத்திரிகையில் எழுதிய கட்டுரை. காங்கிரஸ் அல்லக்கைகளுக்கு மூளை இல்லை என்பதை நிருபித்துவிட்டீர்கள். விரைவில் விஜய் காங்கிரஸில் இணைய உங்கள் முகத்தை எங்கே வைப்பீர்கள் என நாங்களும் பார்ப்போம்.
ஓசியில் எழுதுவதற்க்கும் காசுக்காக ஓட்டுப்போடவும் நாங்கள் காங்கிரசின் கூலிகள் இல்லை.
அன்புடன்
வர்மா
விஜய் மட்டுமில்லை நீங்க கூட சேரலாம். மன்னித்து சேர்த்துக் கொள்வோம். ஆனால் விஜய் ராகுலின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வார் என்று சொல்வதைதான் காமெடி என்றேன். இந்த உலக மகா கட்டுரையை முழுவதுமாக வேற படிக்கனுமா?. கடைசியில் பார்த்தேன். அடுத்தவர் எழுதி இருப்பதை சுட்டுப் போடும் நீங்கள் மூளைப் பற்றி பேசியது காலையில் நல்ல நகைச்சுவையுடன் நாள் ஆரம்பிக்கிறது. :)
வலையில் போடும் கமெண்டை விகனில் மட்டுமில்லை. விகடன் ஆசிரியரை சந்திக்க முடிந்தால் அவரிடமும் சொல்வேன் இதை விட கடுமையாக. எதையும் தைரியமாக எழுதியும் பேசியும் பழக்கப் பட்டவன். யாருக்கும் பயப் பட மாட்டேன்.
மேலும், வார்த்தைகளில் கவனம் தேவை. தேவையில்லாமல் வார்த்தைகள் இனியும் வந்தால் , உங்களுக்கு எந்த வகையிலும் சளைத்தவன் இல்லை என்பதை காட்ட வேண்டி இருக்கும்.
//கடைசியில் பார்த்தேன். அடுத்தவர் எழுதி இருப்பதை சுட்டுப் போடும் //
அந்த கட்டுரையை எழுதியதே நான் தான் வாழ்க உங்கள் வாசிப்பு. தயவு செய்து உங்கள் காங்கிரஸ் விசுவாசத்தை உங்கள் வலையில் காட்டுங்கள்.
Post a Comment