Tuesday, September 15, 2009

கிண்ணம் வென்றது இந்தியா



ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் நடைபெற்ற கொம்பக் கிண்ண பரபரப்பான இறுதிப்போட்டியில் இந்திய அணி 46 ஓட்டங்களினால் வெற்றி பெற்று கிண்ணத்தைப் பெற்றுக்கொண்டது.
இலங்கை, நியூசிலாந்து, இந்திய அணிகளுக்கிடையே நடைபெற்ற தகுதிகாண் போட்டியில் முதல் இரண்டு இடங்களைப் பிடித்த இந்தியாவும், இலங்கையும் இறுதிப்போட்டியில் மோதின.
இந்தியா, நியூசிலாந்து ஆகிய அணிகளை வீழ்த்திய இலங்கை அணி நம்பிக்கையுடன் இறுதிப்போட்டியை எதிர்கொண்டது. நியூசிலாந்தை தோற்கடித்து இலங்கையிடம் தோல்வியடைந்த நிலையில் டோனி தலைமையில் சாதனைபடைக்கும் நோக்குடன் களமிறங்கிய இந்திய அணி இலங்கை மண்ணில் நடைபெற்ற மூன்றாவது ஒரு நாள் போட்டிகளில் தொடர்ச்சியாக கிண்ணத்தை பெற்றுக்கொண்டது.
நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடி 50 ஓவர்களில் ஐந்து விக்கெட்களை இழந்து 319 ஓட்டங்களை எடுத்தது. மிக நீண்ட நாட்களின் பின் சச்சினும், ட்ராவிட்டும் ஆரம்பத்துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கினர். ஷேவாக், கம்பீர் ஆகிய இருவரும் இல்லாத குறையை சச்சினும் ட்ராவிட்டும் நிவர்த்தி செய்தனர்.
ட்ராவிட் நிதானமாக விளையாட சச்சினும் அதிரடியாக ஓட்டங்களைக் குவித்தார். 10 ஓவர்களில் இந்திய அணி 50 ஓட்டங்களை எட்டியது, 24, 27, 32 ஓட்டங்கள் எடுக்கும்போது ட்ராவிட்டை ஆட்டமிழக்கச் செய்யும் வாய்ப்பை இலங்கை அணி தவறவிட்டது. 17.2 ஓவர்களில் இந்திய அணி 95 ஓட்டங்கள் எடுக்கும்போது முதலாவது விக்கெட்டை இழந்தது.
56 பந்துகளுக்கு முகம்கொடுத்து 39 ஓட்டங்கள் எடுத்த ட்ராவிட், ஜயசூரியவின் பந்தை டில்ஷானிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். ட்ராவிட் வெளியேறியதும் அணித்தலைவர் டோனி களம் புகுந்தார் இந்த ஜோடி களத்தில் நின்றபோது இந்திய அணியின் ஓட்ட வீதம் ஒரு ஓவருக்கு ஆறு ஓட்டங்களாக இருந்தது. ஒவ்வொரு பந்தையும் ஒன்று, இரண்டு ஒட்டங்களாகவும் வசதி ஏற்பட்டபோது பவுண்டறிக்கு அடித்தும் இருவரும் ஒட்டங்களைக் குவித்தனர்.
இவர்கள் இருவரும் 50 பந்துகளில் 50 ஓட்டங்களையும் 105 பந்துகளில் 100 ஓட்டங்களையும் அடித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினர்.
சச்சின், டோனி இணைந்து 110 ஓட் டங்கள் எடுத்தனர். இந்திய அணியின் இரண்டாவது விக்கட் 36.3 ஓவர்களில் 205 ஓட்டங்கள் எடுத்த போது வீழ்ந்தது. 62 பந்துகளில் 56 ஓட்டங்கள் எடுத்த டோனி மலிங்கவின் பந்தை கண்டம்பே யிடம் பிடி கொடுத்து ஆட்டமிழந்தார்.
சிறந்த முறையில் துடுப்பெடுத்தாடிய டென்டுல்கர் ஒரு நாள் போட்டியில் 44 ஆவது சதமடித்தார். 133 பந்துகளில் 138 ஓட்டங்கள் எடுத்த டென்டுல்கர் மென்டிஸின் பந்தில் எல்.பி.டபிள்யூ. முறையில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த பதான் ஓட்டமெதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். அதிரடியில் கலக்கிய யுவராஜ் சிங் ஆட்டமிழக்காது 41 பந்துகளில் 56 ஓட் டங்கள் எடுத்தார். டோனி 52 ஆவது சதத் தையும் யுவராஜ் 41 ஆவது சதத்தையும் பூர்த்தி செய்தனர்.
துஷார இரண்டு விக்கட்டுக்களையும் மலிங்க, மென்டிஸ், ஜயசூரிய ஆகியோர் தலா ஒரு விக்கட்டையும் வீழ்த்தினர். 320 என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய இலங்கை வீரர்கள் இந்திய அணியை மிரட்டின. இலங்கை வீரர்களின் அதிரடி இந்தியாவின் வெற்றியை தடுத்து விடுமா என்று இந்திய ரசிகர்கள் தடுமாறினர்.
டில்சானின் அதிரடி, இந்திய பந்து வீச்சாளர்களை நிலை குலைய வைத்தது. 39 பந்துகளில் இலங்கை அணி 50 ஓட்டங்கள் குவித்தது. டில்சானின் அதிரடியில் கலங்கிய டோனி எட்டாவது ஓவரை வீச ஹர்பஜனை அழைத்தார். டில்ஷானை வெளிறேற்றி தலைவனின் ஆசையை பூர்த்தி செய்தார் ஹர்பஜன். 29 பந்துகளில் 42 ஓட்டங்கள் எடுத்த டில்சான் ஹர்பஜனின் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.
29 பந்துகளில் 36 ஓட்டங்கள் எடுத்து ஜயசூரியா ஆட்டமிழந்தார். மஹேல ஒரு ஓட்டத்துடன் வெளியேறினார். சங்கக்கார, துஷார, மத்தியூஸ் ஆகி யோர் இந்திய வீரர்களை திக்குமுக்காட வைத்தனர். ஹிட் விக்கெட் முறையில் 33 ஓட்டங்கள் எடுத்த சங்கக்கார பரிதாபமாக ஆட்டமிழந்தார்.
இந்தியாவை மிரட்டிய கண்டம்பேயை ஹர்பஜன் ஆட்டமிழக்கச் செய்ததும் இலங்கையர் ஆதிக்கம் முடிவுக்கு வந்தது.
கண்டம்பே ஆட்டமிழக்காது 66 ஓட்டங்கள் எடுத்தார். இலங்கை அணி 46.4 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 273 ஓட்டங்கள் எடுத்தது. ஹர்பஜன் ஐந்து விக்கெட்டுக்களையும் இஷாந்த் சர்மா, ஆர்.பி. சிங், இர்பான் பத்தான் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர். ஆட்டநாயகனாகவும் ஆட்டத் தொடர் நாயகனாகவும் டெண்டுல்கர் தெரிவு செய்யப்பட்டார்.

No comments: