Sunday, September 20, 2009
சர்ச்சைகளை ஏற்படுத்தியராகுலின் தமிழக விஜயம்
ராகுல் காந்தியின் தமிழக விஜயம் தமிழகக் காங்கிரஸ் கட்சியினுள் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ள அதேசமயம் ஒரு சிலரிடம் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது. ராகுல் காந்தியின் அணுகு முறை வட மாநிலங்களில் பெரும் வெற்றியைக் கொடுத்துள்ளதுடன் முதுபெரும் அரசியல் தலைவர்களையும் குப்புற வீழ்த்தியுள்ளது. அதே அணுகு முறையை தமிழகத்திலும் பரீட்சித்துப் பார்க்க ராகுல் முயற்சி செய்தார். அந்த முயற்சி எதிர்மாறான கருத்தை விதைத்துள்ளது.
குற்றப் பின்னணி இல்லாதவர்களும் ஊழல் செய்யாதவர்களும் காங்கிரஸில் இணையலாம் என்ற ராகுல் காந்தியின் அழைப்பு தமிழக அரசியல் தலைவர்களை மறைமுகமாகச் சாடியது. திராவிட முன்னேற்றக் கழகம், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆகியவற்றின் தலைவர்கள் மீது ஏகப்பட்ட ஊழல் வழக்குகள் உள்ளன. ஒரு சில தலைவர்கள் குற்றப் பின்னணியில் மறைமுகமாகவும் நேரடியாகவும் ஈடுபட்டதாக விசாரணையை எதிர்நோக்கி உள்ளனர்.
குற்றப் பின்னணி இல்லாதவர்களும் ஊழல் செய்யாதவர்களும் காங்கிரஸ் கட்சியில் இருப்பதாக ஒரு மாயத் தோற்றத்தை ராகுல் காந்தியின் பேச்சு ஏற்படுத்தி உள்ளது. தமிழக காங்கிரஸின் மத்தியில் ஒற்றுமையை ஏற்படுத்துவதில் ராகுல் காந்தி வெற்றி பெற்றுள்ளார்.
தமிழக காங்கிரஸ் தலைவர் நியமனம், நாடாளுமன்ற, தமிழக சட்டமன்றத் தேர்தலில் வேட்பாளர் தெரிவு போன்ற முக்கியமான நேரங்களில் காங்கிரஸ் தலைவர்கள் தமக்குத் தேவையானவர்களின் பெயர்ப் பட்டியலுடன் டில்லியில் முகாமிடுவது வழமை.
தங்கபாலு, இளங்கோவன், ஜி.கே. வாசன், ப. சிதம்பரம் போன்ற தலைவர்கள் டில்லியில் முகாமிட்டு தமக்கு விருப்பமானவர்களைத் தெரிவு செய்வதற்கு முயற்சிப்பார்கள். விருப்பம் நிறைவேறாத பட்சத்தில் அன்னை சோனியாவின் முடிவுக்கு கட்டுப்படுகிறோம் என்று பின் வாங்கி விடுவார்கள். தான் பிரதமராகும் போது அப்படி ஒரு நிலை தனக்கு வரக் கூடாது என்பதில் ராகுல் உறுதியாக இருக்கிறார். வடமாநிலங்களில் அவரது எதிர்பார்ப்பு ஓரளவு பூர்த்தியாகி உள்ளது. தமிழகத்திலும் அப்படி ஒரு நிலையை உருவாக்குவதற்கு ராகுல் முயற்சி செய்கிறார். தமிழக காங்கிரஸை பலப்படுத்தி தனக்கு இசைவானவர்களை அடையாளம் காண்பதற்கு ராகுல் காந்தி மேற்கொண்ட முயற்சி ஓரளவு வெற்றி பெற்றுள்ளது.
தமிழக காங்கிரஸில் கவர்ச்சிகரமான இளைஞர்கள் இல்லை என்பதனால் நடிகர் விஜய் இளைஞர் காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்படலாம் என்ற கருத்து நிலவியது. டில்லியில் ராகுல் காந்தியை விஜய் சந்தித்துப் பேசியதால் விஜயை எதிர்பார்த்திருந்த காங்கிரஸ் தொண்டர்களுக்கு ராகுல் காந்தியின் பேச்சு அதிர்ச்சியை கொடுத்தது. 35 வயதுக்குட்பட்டவர்கள்தான் இளைஞர் காங்கிரஸில் சேலாம். ஏனையவர்கள் காங்கிரஸ் தொண்டர்களாக இருக்கலாம் என்ற ராகுலின் பேச்சு காங்கிரஸ் தொண்டர்களையும் விஜய் ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
ரஜினியைப் பற்றிய கேள்விக்கு குற்றப் பின்னணி இல்லாதவர்களும், ஊழல் செய்யாதவர்களும் சேரலாம் என்று மறைமுகமாக பதில் கூறியதால் ரஜினி ரசிகர்கள் கொதித்துப் போயுள்ளனர்.
ராகுல் காந்தியின் தமிழக விஜயம் காங்கிரஸ் கட்சிக்கு ஒற்றுமையை ஏற்படுத்தியுள்ள அதேசமயம் கட்சிக்கு வெளியே பல எதிர்ப்புக்களை உருவாக்கி உள்ளது. தமிழகத்துக்கு விஜயம் செய்யும் காங்கிரஸ் தலைவர்கள் முதல்வர் கருணம்நிதியை சந்திப்பது வழமையான நிகழ்ச்சிகளில் ஓர் அங்கம். ராகுல்காந்தி முதல்வர் கருணாநிதியைச் சந்திக்காததனால் திராவிட முன்னேற்றக் கழகத்தினர் கோபத்தில் உள்ளனர். திராவிடக் கட்சிகளின் தயவுகளின்றி தமிழகத்தில் காங்கிரஸை கட்டி எழுப்ப வேண்டும் என்ற எண்ணம் இருப்பதனால் முதல்வர் கருணாநிதியைச் சந்திப்பதை ராகுல்காந்தி தவிர்த்தார்.
திராவிடக் கழகங்களின் துணை இன்றி தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்று ராகுல் காந்தி விரும்புகிறார். திராவிடக் கட்சிகளின் ஆதரவு இன்றி தமிழகத்தில் தேர்தலில் வெற்றி பெற முடியாது என்ற யதார்த்தத்தை ராகுல்காந்தி மறந்து விட்டார்.
திராவிடக் கட்சிகளைத் தவிர்த்து விஜயகாந்துடன் இணைந்து தமிழகத்தில் ஆட்சி அமைக்கலாம் என்று ராகுல் காந்தி திட்டமிடுகிறார். விஜயகாந்துடன் இணைந்து ஆட்சியைப் பிடிப்பது சற்று சிரமமான காரியம். அப்படி ஒரு ஆட்சி அமைந்தாலும் அது விஜயகாந்தின் ஆட்சியாக இருக்குமே தவிர காங்கிரஸ் கட்சியினர் எதிர்பார்க்கும் காமராஜர் ஆட்சியாக இருக்காது.
இதேவேளை, கொடா நாட்டில் ஓய்வில் இருந்து கொண்டு அரசியல் நடத்தும் ஜெயலலிதா, தமிழகத்தில் எம். ஜி.ஆர். ஆட்சி மலரும் என்று சூளுரைத்துள்ளார். எம்.ஜி.ஆரின் விசுவாசிகளை ஓரம் கட்டி தனக்குத் தேவையானவர்களுக்கு பதவி கொடுத்து அழகுபார்த்த ஜெயலலிதா திடீரென எம். ஜி. ஆரின் மீது பற்று வைத்து அறிக்கை விட்டுள்ளம்ர்.
பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு விழம் நிறைவை தமிழகத் தலைவர்கள் கொண்டாடி வரும் வேளையில் எம். ஜி. ஆரின் பெயரை ஜெயலலிதா நீண்ட நாட்களின் பின்னர் உச்சரித்தது தமிழக அரசியலில் புதிய திருப்பத்தை ஏற்படுத்த அவர் முயற்சி செய்வதை எடுத்துக் காட்டியுள்ளது.
அண்ணாவின் கொள்கைகள் என்று திராவிட முன்னேற்றக் கழகமும், காமராஜர் ஆட்சி என்று காங்கிரஸ் கட்சியும் போட்டி போட்டு பிரசாரம் செய்யும் வேளையில் எம்.ஜி.ஆரின் ஆட்சி என்று அவர் கூறியது எம்.ஜி.ஆரின் விசுவாசிகளை தன் பக்கம் இழுப்பதற்கான முயற்சி என்பது வெளிப்படை. எம். ஜி. ஆரின் விசுவாசிகளை விஜயகாந்த் ஓரளவு கவர்ந்துள்ளார். எஞ்சி இருப்பவர்களும் விஜயகாந்தின் பக்கம் சாயாமல் இருப்பதற்காக ஜெயலலிதா பெருமுயற்சி செய்கிறார்.
அண்ணாவின் கொள்கைகளை காமராஜரின் ஆட்சி, எம்.ஜி.ஆரின் ஆட்சி என்ற தமிழகத் தலைவர்கள் வாக்குறுதிகளை அள்ளி வழங்கினாலும் ஊழலற்ற ஆட்சியையே தமிழக மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
வர்மா
வீரகேசரிவாரமலர் 20/09/09
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment