Sunday, October 4, 2009
ஓய்வெடுக்கிறார் ஜெயலலிதாமுந்துகிறார் விஜயகாந்த்
தமிழக அரசையும் மத்திய அரசையும் எதிர்த்து அரசியல் நடத்தும் விஜயகாந்த் தனது பலத்தை டில்லியில் காட்டி விட்டு திரும்பியுள்ளார். இலங்கையில் நடைபெற்ற யுத்தம் முடிவுக்கு வந்துவிட்டதாக இலங்கை அரசாங்கம் அறிவித்திருக்கிறது. இதன் பின்னரும் இலங்கையை மையப்படுத்தியே தமிழகத்தில் ஆங்காங்கே போராட்டம் நடைபெறுகிறது.
இலங்கையின் கடற்படையினரால் இராமேஸ்வரத்தில் உள்ள மீனவர்கள் தாக்கப்படுவதைக் கண்டித்து அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் இராமேஸ்வரத்தில் போராட்டம் நடத்தியது. தமிழக அரசுக்கு எதிரான போராட்டம் நடத்துவதற்கு இலங்கைப் பிரச்சினையையே எதிர்க்கட்சிகள் ஒரு துருப்புச் சீட்டாகப் பயன்படுத்துகின்றன.
தமிழக அரசையும் மத்திய அரசையும் எதிர்த்து தனது பலத்தைக் காட்டுவதற்கு டில்லியில் விஜயகாந்த் நடத்திய போராட்டம் அவருக்கு ஓரளவு பலனைக் கொடுத்துள்ளது. கச்சதீவை இலங்கைக்கு கையளித்ததையும், தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் நடத்துவதையும் கண்டித்தே டில்லியில் விஜயகாந்த் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார்.
கருணாநிதி, ஜெயலலிதா, வைகோ, ராமதாஸ், பழ.நெடுமாறன், த. பாண்டியன், வரதராஜன் போன்ற தமிழகத் தலைவர்களைப் பார்த்த டில்லியின் ஊடகங்கள் விஜயகாந்த் என்ற புதிய தலைவரையும் பார்த்து வியந்தது. டில்லியில் போராட்டம் நடத்துவதற்காக கட்சி தொண்டர்கள் விமானத்திலும் ரயிலிலும் சென்றனர்.
டில்லியில் உள்ள அரசியல் கட்சிகளுக்கு தனது பலத்தைக் காட்டுவதற்கு இந்தப் போராட்டத்தை ஒரு கருவியாகப் பாவித்துள்ளம்ர் விஜயகாந்த். தமது தலைவர் டில்லி வரை சென்று போராட்டம் நடத்தினார் என்று கட்சித் தொண்டர்கள் பெருமைப்பட்டுக் கொண்டனர்.
தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியான அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் செய்ய வேண்டிய பணிகளை விஜயகாந்த் செய்து வருகிறார். திராவிட முன்னேற்றக் கழகத்தை எதிர்க்கும் முக்கியமான கட்சியாக இருக்கும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தனது எதிர்ப்பு நடவடிக்கையை மந்தமாக்கியுள்ளது. அந்த இடத்தைப் பிடிப்பதற்கு விஜயகாந்த் முயற்சி செய்கிறார். மத்திய அரசுக்கு எதிரான பிரச்சினையை டில்லியிலே அரங்கேற்றியதன் மூலம் தேசிய அளவில் அவர் மீது ஒரு எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்தியாவின் கட்டுப்பாட்டில் உள்ள கச்சதீவை இலங்கைக்குத் தாரைவார்த்ததைக் கண்டித்து டில்லியில் விஜயகாந்த் நடத்திய உண்ணாவிரதப் போராட்டத்தினால் அவருடைய கட்சித் தொண்டர்கள் பெரிதும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். திராவிட முன்னேற்றக் கழகம், அண்ணாதிராவிட முன்னேற்றக் கழகம் ஆகியவற்றின் தேர்தல் வெற்றியை பாதிக்கும் சக்தியாக விஜயகாந்த் விளங்குவதால் அவருடைய பேரம் பேசும் சக்தி அதிகரித்துள்ளது.
திராவிட முன்னேற்றக் கழகம், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆகிய இரண்டையும் புறந்தள்ள வேண்டும் என்ற எண்ணம் தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர்களிடம் உள்ளது. முதல்வர் கருணாநிதியையும் ஜெயலலிதாவையும் விமர்சித்து அரசியலில் தனது நிலைப்பாட்டைப் பகிரங்கப்படுத்தும் விஜயகாந்த்துடன் கூட்டணி சேர வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர்கள் விரும்புகின்றனர்.
இந்திய மத்திய அரசின் தோழமைக் கட்சியாக இருக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் அமைச்சர்களாக இருக்கின்றனர். காங்கிரஸின் தயவில் தமிழகத்தை ஆட்சி செய்து கொண்டிருக்கும் திராவிட முன்னேற்றக் கழகம் தனது அமைச்சரவையில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ப்பதில்லை என்பதில் உறுதியாக உள்ளது. தமிழக அமைச்சராக வலம் வரவேண்டும் என்று விரும்பும் தமிழக காங்கிரஸ் பிரமுகர்கள் விஜயகாந்துடன் கூட்டணி சேர வேண்டும் என்று விரும்புகின்றனர்.
காமராஜரின் ஆட்சியைத் தமிழ்நாட்டில் அமுல்படுத்துவோம் என்று மேடைதோறும் காங்கிரஸ் கட்சி முழக்கமிடுகிறது. ராகுல் காந்தி தமிழகத்தின் மீது அக்கறை செலுத்துவதனால் இளைஞர்கள் உற்சாகமாக உள்ளனர். தமிழகத்தில் செல்வாக்கு மிக்க கட்சியின் உதவியின்றி ஆட்சியைப் பிடிக்க முடியாது என்பதை தமிழக காங்கிரஸ் தலைவர்கள் நன்கு உணர்ந்துள்ளனர். ஆகையினால் தாம் அமைச்சராவதற்காக விஜயகாந்தை தமிழக முதல்வராக்கலாம் என்று கருதுகின்றனர்.
தமிழக காங்கிரஸின் இந்தத் திட்டம் பற்றித் தெரிந்து கொண்ட முதல்வர் கருணாநிதி, திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பலப்படுத்தும் நடவடிக்கையில் முனைப்புக் காட்டுகிறார். திராவிட முன்னேற்றக் கழகத்தின் மூத்த தலைவர்களின் பணிகள் இளைய தலைவர்களிடம் வழங்கப்பட்டு வருகிறன்றன. தனக்குப் பின்னர் துணை முதல்வராக இப்போது பதவி வகிக்கும் ஸ்டாலின் முதல்வராகும் போது அவருக்கு உறுதுணையான அமைச்சரவையையும் அமைப்பதற்காக இந்த ஏற்பாடு நடைபெறுகிறது.
அண்ணா நூற்றாண்டு விழாவை தமிழக அரசு ஒரு வருடமாகக் கொண்டாடியது. கட்சிப் பெயருக்கு முன்னால் அண்ணாவின் பெயரை ஒட்டிக் கொண்டிருக்கும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் அண்ணா நூற்றாண்டு விழாவை பிரமாண்டமாகக் கொண்டாடவில்லை. திராவிட முன்னேற்றக் கழகம் நடத்திய அண்ணா நூற்றாண்டு விழா முதல்வர் கருணாநிதியின் புகழ்பாடும் விழாவாக நடைபெற்றது.
திராவிட முன்னேற்றக் கழகமும், விஜயகாந்தும் விழாக்களையும் போராட்டங்களையும் நடத்தி மக்கள் மத்தியில் தமது செல்வாக்கை வளர்த்துக் கொண்டிருக்கையில் தமிழக எதிர்க்கட்சித் தலைவி ஜெயலலிதா கொடாநாட்டில் அஞ்ஞாதவாசம் செய்கிறார்.
கொடாநாட்டில் ஓய்வெடுத்துக் கொண்டு அறிக்கைவிடும் ஜெயலலிதா அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிர்வாகிகளை மாற்றுகிறார்.
திருச்செந்தூர் சட்ட சபைக்கான தேர்தலை தமிழகம் எதிர்நோக்கி உள்ளது. திருச்செந்தூர் இடைத் தேர்தலிலும் வெற்றி பெறுவோம் என்று திராவிட முன்னேற்றக் கழகம் சூளுரைத்துள்ளது. தமிழக அரசை எதிர்ப்பதற்குத் திராணியற்ற நிலையில் எதிர்க்கட்சியான அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் இருப்பதனால் திராவிட முன்னேற்றக் கழகமே வெற்றியைப் பெறும் சாத்தியம் உள்ளது.
ஜெயலலிதாவின் அஞ்ஞம்தவாசமும், களை எடுப்பும் விஜயகாந்தின் வளர்ச்சிக்கு உறுதுணை புரிகின்றன
வர்மா
வீரகேசரிவார்வெளியீடு 04/10/09
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment