Sunday, October 25, 2009

அலட்சியப்படுத்துகிறது மத்திய அரசுதடுமாறுகிறது தமிழக அரசு


முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் மூக்குடைந்து போயுள்ள தமிழக அரசு, தனது இயலாமையை வன்மையாகக் கண்டிக்கிறோம் என்ற அறிக்கையுடன் நிறுத்திக் கொண்டுள்ளது. தமிழக அரசுக்கும் கேரள அரசுக்கும் இடையேயான பிரச்சினையில் முதன்மையானது முல்லைப் பெரியாறு அணை விவகாரம். முல்லைப் பெரியாறு அணையை உயர்த்த வேண்டும் என்று கேரளா விரும்புகிறது. தமிழக அரசு அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வருவதால் முல்லைப் பெரியாறு அணையை உயர்த்தும் நடவடிக்கையில் தாமதம் காட்டி வந்தது கேரள அரசு.
முல்லைப் பெரியாறு அணையை உயர்த்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்த தமிழக அரசு, மத்திய அரசில் தனக்கு இருக்கும் செல்வாக்கு மூலமும் நீதிமன்றம் மூலமும் அதனைத் தடுத்து நிறுத்த பலமுறை முயற்சி செய்தது. தமிழக அரசின் எதிர்ப்பின்போது பணிந்திருந்த கேரள அரசு இப்போது மத்திய அரசின் அனுமதியுடன் ஆய்வுப் பணியை மேற்கொள்கிறது.
முல்லைப் பெரியாறு அணையை உயர்த்துவதற்குரிய ஆய்வை மேற்கொள்வதற்கு மத்திய அரசு கேரள அரசுக்கு அனுமதி அளித்துள்ளது. பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி ஆகியோரின் ஒப்புதலின்றி மத்திய சுற்றுச் சூழல் அமைச்சு அனுமதி வழங்கி இருக்க முடியாது. இந்த விவகாரத்தில் பிரதமர் மன்மோகனும் சோனியா காந்தியும் கேரள அரசை எதிர்த்து தமிழக அரசுக்கு ஆதவாக இதுவரை வாய் திறக்கவில்லை.
மத்திய அரசை ஆட்டிப் படைக்கும் சக்தி தனக்கு இருப்பதாகப் பெருமைப்படும் தமிழக முதல்வர் கருணாநிதியின் வேண்டுகோளை மத்திய அரசு புறக்கணித்துள்ளது. மத்திய அரசின் சகல திட்டங்களுக்கும் தமிழக அரசு தனது பூரண ஆதரவை வழங்கி வருகிறது. மத்திய அரசின் உள்நாட்டு, வெளிநாட்டுக் கொள்கைகளுக்கு தமிழக அரசு துணை போகிறது. மத்திய அரசின் கொள்கைகள் விமர்சிக்கப்படும் போது மத்திய அரசுக்கு முண்டு கொடுத்து தனது ஆதரவை வெளிப்படுத்தி வருகிறது தமிழக அரசு.
மத்திய அரசின் மீது நம்பிக்கை இழந்த தமிழக அரசு நீதிமன்றத்தின் உதவியை நாடியது. நீதிமன்றம் கேரள அரசுக்கு சார்பாக தீர்ப்பு வழங்கி உள்ளது. முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்டுவதற்கு இடைக்காலத் தடை விதிக்கும் படி தமிழக அரசு நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தது. ஆய்வு மேற்கொள்ள மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. புதிய அணை கட்டப்படும் என்று தமிழக அரசு பயப்பட வேண்டாம் என்று நீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியுள்ளது.
முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்டுவதை எதிர்த்து தமிழக அரசு நீதிமன்றம் சென்றதும் தமிழக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு வசதியாக இந்த வழக்கை இரண்டு மாதங்கள் பிற்போட வேண்டும் என்று கேரள அரசு சார்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. கேரள அரசின் மனுல்வயும் நீதிபதிகள் நிராகரித்து விட்டனர்.
முல்லைப் பெரியாறு அணையை உயர்த்த உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. அந்த உத்தரவை கேரள அரசு மீறி விட்டது. அணையை உயர்த்தும் உத்தரவை ஏற்றுக் கொள்வதாக கேரள அரசு எழுத்து மூலம் நீதிமன்றத்துக்கு உறுதிமொழி தரவில்லை என்று காரணம் கூறிய நீதிமன்றம் கேரள அரசின் மனுவை நிராகரித்தது.
முல்லைப் பெரியாறு அணையை உயர்த்துவதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது. நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்தினால் தமிழக, கேரள மாநிலங்களுக்கிடையே பிரச்சினை உருவாகும். மத்திய அரசுக்கு சங்கடம் ஏற்படும் என்பதனால் நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றுவதற்கு கேரள அரசு தயங்குகிறது.
ஜெயலலிதா, டாக்டர் ராமதாஸ் ஆகியோர் கேரள அரசுக்கு எதிரம்கவும் தமிழக அரசுக்கு ஆதரவாகவும் குரல் கொடுத்துள்ளனர். தமிழக காங்கிரஸ் கட்சியும் கம்யூனிஸ்ட் கட்சியும் இந்த விடயம் பற்றி இதுவரை எதுவும் கூறவில்லை. உண்ணாவிரதம் இருக்கப் போகிறேன், மத்திய அரசின் ஆதரவை விலக்கப் போகிறேன் என்று மிரட்டும் தமிழக முதல்வர் எதுவும் செய்ய முடியாத நிலையில் மிரண்டு போயுள்ளம்ர். மத்திய அரசில் இருந்து வெளியேறினால் காங்கிரஸின் தயவில் ஆட்சி நடத்தும் தமிழக அரசை இழக்க வேண்டிய நிலை ஏற்படும். கேரள அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டிய சூழ்நிலைக்கு தமிழக முதல்வர் தள்ளப்பட்டுள்ளார்.
இதேவேளை, உலகத் தமிழ் இனத்தின் தலைவர் என்ற பெருமையுடன் வாழும் தமிழக முதல்வர் கருணாநிதி தமிழக அரசின் ஆதவுடன் பிரமாண்டமாக நடத்த திட்டமிட்ட ஒன்பதாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டுக் கனவு முளையிலேயே கிள்ளி எறியப்பட்டு விட்டது.
அண்ணாத்துரை, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் தமிழக முதல்வராக இருந்தபோது, தமிழகத்தில் தமிழாராய்ச்சி மாநாடுகள் நடைபெற்றன. உலகத் தமிழினத் தலைவரான தான் முதல்வராக இருக்கும் போது உலகத் தமிழராய்ச்சி மாநாடு நடைபெறவில்லை என்ற ஆதங்கம் முதல்வர் கருணாநிதியின் மனதை உறுத்தியதால் ஒன்பதாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு ஜனவரி மாதம் கோவையில் நடைபெறும் என்று தன்னிச்சையாக அறிவித்தார்.
தமிழக முதல்வர் கருணாநிதியின் அறிவிப்புக்கு தமிழகத்திலும் உலகெங்கும் உள்ள தமிழர்களிடம் இருந்தும் எதிர்ப்புக் கிளம்பியது. உலகத் தமிழம்ராய்ச்சி மாநாடு நடைபெறும் இடத்தையும் திகதியையும் உத்தியோகபூர்வமாக அறிவிப்பதற்கு உரிமை உடைய அகில உலகத் தமிழியல் ஆய்வு நிறுவனத் தலைவரான நெபொரூ சுரோஷிமாவின் எதிர்ப்பினால் ஒன்பதாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு என்ற வாசகத்துக்குப் பதிலாக 2010 ஆம் ஆண்டு ஜூன் மாதம் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடைபெறும் என்று தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்.
ஒன்பதாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டை தமிழகத்தில் நடத்துவதற்கு நெபொரூ சுரோஷிமா ஒரு வருட கால அவகாசம் கேட்டார். ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிப்பதற்கு நீண்ட காலம் வேண்டும் என்பது ஜப்பானிய தமிழ் அறிஞரான நெபொரூ சுரோஷிமாவின் வாதம். ஆனால், அவசர அவசரமாக தமிழாராய்ச்சி மாநாட்டை நடத்தி முடிக்க வேண்டும் என்பது தமிழக அரசின் நோக்கம்.
தமிழகத்தில் நடைபெற்ற மூன்று தமிழாராய்ச்சி மாநாடுகளின் போதும் தமிழக அரசின் கொள்கைகளும் சாதனைகளும் தான் அதிகம் பேசப்பட்டன. தமிழக முதல்வர் கருணாநிதியின் சாதனைகளைப் பட்டியலிடும் மாநாடாக அது மாறிவிடுமோ என்ற ஐயமும் தமிழ் உலகில் எழுந்தது.
ஈழத் தமிழறிஞர் தனிநாயகம் அடிகளாரால் 1964 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட அகில உலக தமிழியல் ஆய்வு நிறுவனத்தின் சார்பிலேயே உலகத் தமிழம்ராய்ச்சி மாநாடு நடத்தத் திட்டமிடப்பட்டது. இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை நடத்தப்பட வேண்டிய தமிழாராய்ச்சி மாநாடு பல வருடங்களாக நடத்தப்படவில்லை.
ஒன்பதாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டை நடத்தும் சந்தர்ப்பத்தை தவற விட்ட தமிழக முதல்வர், உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை நடத்தி தனது ஆசையைப் பூர்த்தி செய்வதற்கு முயற்சி செய்கிறார்.
வர்மா
வீரகேசரிவாரவெளியீடு 25/10/09

No comments: