Thursday, October 29, 2009

சாதனைகளுடன் வென்றது இந்தியா


அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக நாக்பூர் விதர்பா மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் 99 ஓட்டங்களினால் இந்திய அணி வெற்றி பெற்றது.
நாக்பூரில் அமைக்கப்பட்ட மைதானத்தில் நடைபெற்ற முதலாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி தனது முதலாவது வெற்றியை பதிவு செய்தது.
நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய அணித் தலைவர் ரிக்கி பொண்டிங் இந்திய அணியைத் துடுப்பெடுத்தாடும்படி பணித்தார். அவுஸ்திரேலிய அணித் தலைவர் ரிக்கி பொண்டிங்கின் முடிவு தவறானது என்பதை இந்திய அணியின் துடுப்பாட்ட வீரர்கள் நிரூபித்தனர். முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 50 ஓவர்களில் ஏழு விக்கட்டுகளை இழந்து 354 ஓட்டங்கள் எடுத்தது.
அவுஸ்திரேலிய அணி வீரர்களான பிரட் லீ, ஹோர்ஸ் ஆகிய இருவரும் காயம் காரணமாக விளையாடம்ததனால் கிபர் ரைஸ்,ஷான் மாஸ், ஆகிய இருவரும் அணியில் சேர்க்கப்பட்டனர். இந்தியாவின் அதிரடி மன்னன் யுவராஜ் சிங் குணமடைந்து அணியில் சேர்க்கப்பட்டதனால் விராட் கோஹ்லி நீக்கப்பட்டார்.
ஷேவாக், சச்சின் டெண்டுல்கர் ஆகிய இருவரும் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களாகக் களமிறங்கினர். அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான இத் தொடரில் 83 ஓட்டங்கள் அடித்து 17,000 ஓட்டங்களை குவித்த முதல் வீரர் என்ற பெருமையை சச்சின் டெண்டுல்கர் பெறுவார் என்று ரசிகர் காத்திருந்த வேளையில் நான்கு ஓட்டங்களுடன் சச்சின் ஆட்டமிழந்தார். சிட்டிலின் பந்தை வைட்டிடம் பிடிகொடுத்த சச்சின் வெளியேறியதும் களம் புகுந்தார் கம்பீர்.
ஷேவாக் தனது வழக்கமான அதிரடி மூலம் அவுஸ்திரேலிய வீரர்களுக்கு நெருக்கடியைக் கொடுத்தார். ஷேவாக்கின் ருத்திர தாண்டவத்தினால் கலங்கிய அவுஸ்திரேலிய அணித் தலைவர் பொண்டிங் பந்து வீச்சு பவர் பிளேயை எடுப்பதைத் தள்ளிப் போட்டர். ஷேவாக் ஆட்டமிழந்த பின்னரே பந்துவீச்சுபவர் பிளையை பொண்டிங் பயன்படுத்தினார்.
31 பந்துகளுக்கு முகம் கொடுத்த ஷேவாக் ஒரு சிக்ஸர், ஆறு பௌண்டரிகள் அடங்கலாக 40 ஒட்டங்கள் எடுத்தார். ஜோன்சனின் பந்தை ஹில்பனாசிடம் பிடிகொடுத்து ஷெவாக் ஆட்டமிழந்தார். ஷெவாக் வெளியேறியதும் களம் புகுந்த யுவராஜ் சிங் தனது வழமையான அதிரடி மூலம் எதிரணி வீரர்களை திக்கு முக்காடச் செய்தார். 24 பந்துகளுக்கு முகம் கொடுத்த யுவராஜ் சிங் ஒரு சிக்ஸர் இரண்டு பௌண்டரிகள் அடங்கலாக 23 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
97 ஓட்டங்களுக்கு மூன்று விக்கட்டுகளை இந்திய அணி எடுத்திருந்தவேளை களம் புகுந்த அணித் தலைவர் டோனி தனது பழைய அதிரடியை வெளிப்படுத்தினார்.
நான்காவது இணைப்பாட்டத்தில் விளையாடிய கம்பீர், டோனி ஜோடி நிதானமாகக் துடுப்பெடுத்தாடி ஓட்ட எண்ணிக்கையை உயர்த்தியது. 15.3 ஓவர்களில் 100 ஓட்டங்கள் எடுத்த இந்திய அணி 30.3 ஓவர்களில் 200 ஓட்டங்களைத் தாண்டியது. இந்த ஜோடியைப் பிரிக்க முடியாது அவுஸ்திரேலிய வீரர்கள் திணறிக்கொண்டிருந்தவேளை கம்பீர் ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார்.
80 பந்துகளுக்கு முகம் கொடுத்த கம்பீர் ஆறு பௌண்டரிகள் அடங்கலாக 76 ஓட்டங்கள் எடுத்தார்.
முதலாவது போட்டியில் அரைச் சதம் கடந்த கம்பீர் இரண்டாவது போட்டியிலும் அரைச் சதம் கடந்து 18 ஆவது அரைச் சதத்தைப் பூர்த்தி செய்தார். கம்பீர், டோனி ஜோடி 119 ஓட்டங்கள் எடுத்தது.
டோனியுடன் ரைனா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியும் அவுஸ்திரேலிய வீரர்களின் பந்துகளை நொறுக்கித் தள்ளியது. டோனியும் ரைனாவும் அடித்து ஆடியதால் இந்திய அணியின் ஓட்ட எண்ணிக்கை மளமளவென உயர்ந்தது.
மிக நீண்ட நாட்களின் பின்னர் அடித்தாடிய டோனி தனது ஐந்தாவது சதத்தை பூர்த்தி செய்தார். டோனிக்கு போட்டியாக அடித்து ஆடிய ரைனா தனது 11 ஆவது அரைச் சதத்தைப் பூர்த்தி செய்தார்.
50 ஆவது ஓவரில் இந்திய அணியின் மூன்று விக்கட்டுகள் வீழ்ந்தன. 49.3 ஆவது ஒவரில் ஜோன்சனின் பந்தை பெயினிடம் பிடிகொடுத்து டோனி ஆட்டமிழந்தார். 107 பந்துகளுக்கு முகம் கொடுத்த டேம்னி மூன்று சிக்ஸர், ஒன்பது பௌண்டரிகள் அடங்கலாக 124 ஒட்டங்களை எடுத்தார். டோனி, ரெய்னா ஜோடி ஐந்தாவது இணைப்பாட்டத்தில் 93 பந்துகளில் 136 ஒட்டங்கள் எடுத்து புதிய சாதனை படைத்தது. அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக இந்திய வீரர்களான ஜடேஜா, ரொபின் சிங் ஜோடி ஐந்தாவது இணைப்பாட்டத்தில் 141 ஓட்டங்கள் எடுத்ததே இதுவரை சாதனையாக இருந்தது. 49.5 ஆவது பந்தில் ஜோன்சனின் பந்தை பெயினிடம் பிடிகொடுத்து ரைனா ஆட்டமிழந்தார். 50 பந்துகளுக்கு முகம் கொடுத்த ரைனா ஒரு சிக்ஸர் ஆறு பௌண்டரிகள் அடங்கலாக 62 ஓட்டங்கள் எடுத்தார். 50 ஆவது கடைசிப் பந்தில் பிரவீன் குமார் ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார். 50 ஒவர்கள் முடிவில் இந்திய அணி ஏழு விக்கட்டுகளை இழந்து 354 ஓட்டங்கள் எடுத்தது.
உடற்தகுதி இல்லா நிலையிலும் விளையாடிய ஜோன்சன் 75 ஓட்டங்களைக் கொடுத்து மூன்று விக்கட்டுகளை வீழ்த்தினார். ஹில்பனாஸ் 83 ஓட்டங்களைக் கொடுத்து ஒரு விக்கட்டை வீழ்த்தினார். 55 ஓட்டங்களை கொடுத்த சிட்டில் ஒரு விக்கட்டை வீழ்த்தினார்.
355 என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய அவுஸ்திரேலிய அணி 48.3 ஓவர்களில் சகல விக்கட்டுகளையும் இழந்து 255 ஓட்டங்கள் எடுத்தது. துடுப்பாட்டத்தில் பிரகாசித்த இந்திய வீரர்கள் பந்து வீச்சிலும் அசத்தினார்கள்.
அவுஸ்திரேலிய வீரர்களில் ஹஸி மட்டும் 53 ஒட்டங்கள் எடுத்தார். ஏனைய வீரர்கள் குறைந்த ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர். வொட்சன் 19, பெயின் 8, பொண்டிங் 12, வைட் 23, வெகாஸ் 36, மார்ஸ் 21, ஜோன்சன் 21 ஓட்டங்கள் எடுத்தனர். ஹாரிட்ஸ் ஆட்டமிழக்காது 30 ஓட்டங்கள் எடுத்தார்.
ஜடேஜா மூன்று விக்கட்டை வீழ்த்தினார். பிரவீன் குமார், இஷாந்த் சர்மா ஆகியோர் தலா இரண்டு விக்கட்டுகளையும். நெஹ்ரா, யுவராஜ் ஆகியோர் தலா ஒரு விக்கட்டையும் வீழ்த்தினர். ஆட்ட நாயகனாக டோனி தேர்வு செய்யப்பட்டார்.
இலங்கை இங்கிலாந்தது அணிகளுக்கு எதிராக தலா மூன்று முறையும் அவுஸ்திரேலியா, பாகிஸ்தான், கென்யா, பெர்முடா, ஹொங்கொங் ஆகிய அணிகளுக்கு எதிராக தலா ஒரு முறையும் இந்திய அணி 350 ஓட்டங்களுக்கு மேல் எடுத்துள்ளது.
அவுஸ்திரேலியாவுக்கு எதிராக அதிக சிக்சர் அடித்து சதத்தைப் பூர்த்தி செய்த டோனி மேலும் சில சாதனைகளுக்கும் சொந்தக்காரர் ஆனார். உலக சம்பியன் அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக சதம் அடித்த முதல் இந்திய தலைவர் என்ற சிறப்பை அவர் பெற்றார். அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக அதிக ஓட்டங்கள் குவித்த தலைவர் (124 ஓட்டங்கள்) என்ற பெருமையும் அவருக்கு கிடைத்தது. முன்னதாக 2003 ஆம் ஆண்டு சிட்னியில் நடந்த அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் இலங்கை அணியின் தலைவராக இருந்த ஜயசூரிய 122 ஓட்டங்கள் எடுத்தது அதிகபட்சமாக இருந்தது.
மேலும் அவுஸ்திரேலியாவுக்கு எதிராக அதிக ஓட்டங்கள் சேர்த்த விக்கட் காப்பாளர் என்ற சாதனையும் நேற்று டோனி வசம் ஆனது.
டோனி பாகிஸ்தானின் கம்ரன் அக்மல் (116 ஒட்டம் 2009 ஆம் ஆண்டு) நியூஸிலாந்தின் வாட்ஸ்வொர்த் (104 ஓட்டங்கள் 1974 ஆம் ஆண்டு) இலங்கையின் சங்கக்கார (101 ஓட்டங்கள் 2004 ஆம் ஆண்டு) ஆகியோர் மட்டுமே அவுஸ்திரேலியாவுடன் சதம் கண்ட விக்கட் காப்பாளர் ஆவர்.
""டோனி ஒருநாள் போட்டியில் 1 1/4 ஆண்டுக்கு பிறகு சதம் கண்டுள்ளார். கடைசியாக 2008 ஆம் ஆண்டு ஜூன் மாதம் கராச்சியில் நடந்த ஆசிய கிண்ண கிரிக்கட்டில் ஹாங்காங் அணிக்கு எதிராக சதம் அடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
""ஒரு நாள் போட்டியில் அவுஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா குவித்த அதிகபட்ச ஒட்டங்கள் (354 ஓட்டம்) இதுவாகும். இதற்கு முன்பு 2001 ஆம் ஆண்டு பெங்களூரில் நடந்த அவுஸ்திரேலியாவுக்கு எதிரான மோதலில் 315 ஒட்டங்கள் எடுத்திருந்தது. மேலும் அவுஸ்திரேலியாவுக்கு எதிராக முதலில் துடுப்பெடுத்தாடிய அணி குவித்த அதிகபட்சமாகவும் இது பதிவாகி இருக்கிறது. இதற்கு முன்பு 2003 ஆம் ஆண்டு சிட்னியில் நடந்த அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் இலங்கை அணி முதலில் துடுப்பாட்டம் செய்து அதிகபட்சமாக 343 ஓட்டங்கள் எடுத்திருந்தது.
""ஒருநாள் போட்டியில் இந்திய அணி 350 ஓட்டங்களுக்கு மேல் குவித்திருப்பது இது 12 ஆவது முறையாகும். வேறு எந்த அணியும் இத்தனை முறை இந்த இலக்கை கடந்ததில்லை. அது மட்டுமின்றி இந்த 12 ஆட்டத்திலும் இந்திய அணியே வெற்றி வாகை சூடியுள்ளது. இந்த சாதனை பட்டியலில் அடுத்த இடங்களில் உள்ள தென்னாபிரிக்கா 8 முறையும் அவுஸ்திரேலியா 6 முறையும் 350 ஓட்டங்களுக்கு மேல் கடந்துள்ளன

No comments: