மினி உலகக் கிண்ணப் போட்டியின் முடிவுகளால் கனவான் விளையாட்டு என்று வர்ணிக்கப்படும் கிரிக்கெட்டில் கறைபடிந்துள்ளதாக வெளியாகும் விமர்சனங்களினால் கிரிக்கெட்டின் மீதுள்ள நம்பிக்கை குறைந்துள்ளது. மினி உலகக்கிண்ண அரை இறுதியில் விளையாடும் என எதிர்பார்க்கப்பட்ட இந்தியாவும், இலங்கையும் பரிதாபமாக வெளியேறின. அவுஸ்திரேலியாவுடனான போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்றால் இந்திய அணி அரை இறுதியில் விளையாடும் சந்தர்ப்பம் ஏற்பட்டிருக்கும்.
பாகிஸ்தான் பந்து வீச்சாளர்கள் அவுஸ்திரேலியாவை வீழ்த்திடுவார்கள் என்றே ரசிகர்கள் எதிர்பார்த்தனர். பாகிஸ்தானின் வேகங்களுக்கு அவுஸ்திரேலியா பந்து வீச்சாளர்களான பிரட்லீயும், ஹரிஸும், முகம் கொடுத்து வெற்றியைப் பெற்றுக் கொடுத்தனர்.
நியூஸிலாந்துக்கு எதிரான அரை இறுதியி“ல பாகிஸ்தான் தோல்வியடைந்தது. இலகுவான பிடியை தான் தவறவிட்டதால் தான் பாகிஸ்தான் தோல்வியடைந்தது என்பதையும் பாக். அணித்தலைவர் யூனுஸ்கான் ஒப்புக் கொண்டுள்ளார்.
இந்த இரண்டு போட்டிகளிலும் பாகிஸ்தான் அணியின் செயற்பாடு சிறப்பாக இருக்கவில்லை.
இந்திய அணி அரை இறுதியில் விளையாடக் கூடாது என்பதனாலேயே அவுஸ்திரேலியாவுடனான போட்டியில் பாகிஸ்தான் தோல்வி அடைந்தது என்ற கருத்து பரவலாக உள்ளது. இந்திய சூதாட்ட முகவர்களின் விருப்பத்துக்காக அரை இறுதியில் நியூஸிலாந்திடம் பாகிஸ்தான் வேண்டுமென்றே தோல்வியடைந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
முதல் போட்டியிலேயே இந்திய அணியைப் புரட்டி எடுத்து வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி மினிக் கிண்ணத்தைப் பெறுவதற்கு தகுதியான அணி என்று நிரூபித்தது.
பாகிஸ்தான் அவுஸ்திரேலியாவும் இறுதிப் போட்டியில் மோதினால் சூதாட்டக் காரர்களுக்கு பலகோடி ரூபா நஷ்ட மேற்பட்டிருக்கும். அதøனாலேயே பாகிஸ்தான் விலை பேசப்பட்டதாக சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
பாகிஸ்தான் அணித் தலைவர் யூனுஸ்கான் இதனை முற்றாக மறுத்துள்ளார். பாகிஸ்தான் கிரிக்கெட் சபை விளக்கம்கோரி அணித்தலைவருக்கும், பயிற்சியாளருக்கும் கடிதம் அனுப்பி உள்ளது.
பாகிஸ்தான் கிரிக்கெட் நிர்வாகம் சந்தேகப்பட்டிருப்பதால் தனது அணியின் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு பொய் என்று நிரூபிக்க வேண்டிய கடமை அணித்தலைவர் யூனுஸ்கானின் கையில் உள்ளது.
பயங்கரவாதம், குண்டு வெடிப்பு ஆகியவற்றினால் பாதிக்கப்பட்டிருக்கும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தன்மீது சுமத்தப்பட்டிருக்கும் கறையை நீக்குமா அல்லது அப்படியே அமுக்கிவிடுமா என்பது விசாரணையின் பின்னர் தான் வெளி உலகத்துக்கு தெரியும்.
ரமணி
No comments:
Post a Comment