Monday, October 19, 2009
தனிமரமான அ.தி.மு.ககுழப்பத்தில் பா.ம.க.
தமிழக அரசியல் தலைவர்கள் தமது கட்சியைப் பலப்படுத்தி வரும் வேளையில் ஓய்வெடுக்கிறேன் என்ற போர்வையில் கொடநாட்டில் தங்கி இருந்து அரசியல் காய்களை நகர்த்தி வந்த ஜெயலலிதா, கடந்த வாரம் சென்னைக்கு திரும்பியதால் அண்ணாதிராவிட முன்னேற்றக் கழகத் தலைவர்களும், தொண்டர்களும் மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கியுள்ளனர்.
திராவிட முன்னேற்றக் கழகம், காங்கிரஸ் கூட்டணியை தோற்கடிப்பதற்காக பாட்டாளி மக்கள் கட்சியுடனும் இடதுசாரிகளுடனும் கூட்டணி அமைத்த ஜெயலலிதா எதிர்பார்த்த வெற்றி கிடைக்காததால் அக்கட்சிகளை ஒதுக்கத் தொடங்கினார். இடதுசாரிகளும் பாட்டாளி மக்கள் கட்சியும் கூட்டணியில் இருந்து வெளியேறியதால் மீண்டும் தனிமரமாக இருக்கும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு பக்கத் துணையாக மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் உள்ளது.
அதிரடியாக பலரை கட்சியில் இருந்து நீக்கியதாலும் சிலரின் பதவியை பிடுங்கியதாலும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினுள் ஜெயலலிதாவின் செல்வாக்கு குறைந்திருக்கும் என்று எதிர்க்கட்சிகளின் எதிர்பார்ப்பு பொய்யாகிப் போனது. நாட்டிலே பல பிரச்சினைகள் இருக்கும் போது கொடா நாட்டில் ஓய்வு என்ற பெயரில் ஜெயலலிதா உல்லாசமாக இருக்கிறார் என்ற எதிர்க்கட்சிகளின் பரப்புரையை அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்கள் பொய்யாக்கி உள்ளனர்.
தமிழக அரசியல் கட்சிகள் அனைத்தும் 2011 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்வைத்தே தமது அரசியல் நடவடிக்கைளை மேற்கொள்கின்றன. திராவிட முன்னேற்றக் கழகம் காங்கிரஸ் கட்சி ஆகியவற்றில் கூட்டணியை தோல்வியடையச் செய்யக் கூடிய பலம் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக கூட்டணியிடம் இல்லை.
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னர் கட்சியைப் பலப்படுத்தி, பலமான கூட்டணியை அமைக்க வேண்டிய கட்டாயம் ஜெயலலிதாவுக்கு உள்ளது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தீவிர அபிமானியாகத் தம்மைக் காட்டிக் கொண்டு, எதிர்க்கட்சிகளுடன் ஒட்டி உறவாடுபவர்களை வெளியேற்ற வேண்டிய அல்லது ஓரம் கட்ட வேண்டிய கடமையும் ஜெயலலிதாவுக்கு உள்ளது.
ஜெயலலிதாவின் கோபப்பார்வையில் சிக்கி இருப்பவர்களை வலை வீசிப் பிடிப்பதற்கு உரிய ஏற்பாடுகளை திராவிட முன்னேற்றக் கழகம் ஆரம்பித்துள்ளது. அரசியல் கட்சிகளிடம் இருந்த செல்வாக்கை அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் இழந்துள்ளது. கூட்டணிக் கட்சித் தலைவர்களைப் புறக்கணிப்பது, அவர்களுக்கு உரிய முக்கியத்துவம் தராதமை ஆகிய காரணங்களினால் ஜெயலலிதாவின் மீதுள்ள நம்பிக்கையை அரசியல் கட்சித் தலைவர்கள் இழந்துள்ளனர்.
நாடாளுமன்றத் தேர்தலின் போது மாநில அரசையும் மத்திய அரசையும் எதிர்ப்பதற்கு ஒரு ஆயுதமாக ஜெயலலிதாவைப் பாவித்த இடதுசாரிகள் தமது எண்ணம் நிறைவேறாததால் கூட்டணியில் இருந்து வெளியேறி விட்டனர். திராவிட முன்னேற்றக் கழகமும் காங்கிரஸ் கட்சியும் படுதோல்வி அடையும் என்று எதிர்பார்த்த டாக்டர் ராமதாஸ், ஜெயலலிதாவுடன் கூட்டணி அமைத்தார். நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வி அடைந்தாலும் தன் மகனுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ஜெயலலிதா தர மாட்டார் என்பதை உணர்ந்ததாலும் கூட்டணியிலிருந்து வெளியேறினார் ராமதாஸ்.
தமிழக அரசியற் கட்சிகள் ஜெயலலிதாவை கைவிட்டாலும் கழகத் தொண்டர்கள் அவர் மீது நம்பிக்கை வைத்துள்ளனர். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீது நம்பிக்கை வைத்துள்ளவர்கள் ஜெயலலிதாவின் கரங்களைப் பலப்படுத்த தயாராக உள்ளனர்.
கட்சிக்குள் இருக்கும் களைகளை அகற்றுவதற்குரிய ஏற்பாடுகளில் ஜெயலலிதா கவனம் செலுத்தத் தொடங்கி விட்டார். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து வெளியேறியவர்களும் வெளியேற்றப்பட்டவர்களும் திராவிட முன்னேற்றக் கழகத்தில் தஞ்சமடைந்தனர். திராவிட முன்னேற்றக் கழகத்தில் அவர்களுக்கு மிகப் பிரமாண்டமான வரவேற்பு அளிக்கப்பட்டது. ஆனால் எதிர்பார்த்த பதவிகளும் பொறுப்புகளும் வழங்கப்படாததனால் அவர்கள் வெறுப்படைந்துள்ளனர்.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணியில் இருந்து வெளியேறிய டாக்டர் ராமதாஸ் தனது கட்சியின் தலைமையில் மூன்றாவது அணி அமைக்கப் போவதாக சூளுரைத்துள்ளார். ஜெயலலிதாவும் இடதுசாரித் தலைவர்களும் மூன்றாவது அணி அமைப்பதற்கு பல முறை முயன்றனர். மூன்றாவது அணி பற்றிய அறிக்கைகளும் கலந்துரையாடல்களும் பரபரப்பாக பத்திரிகையில் இடம்பிடித்ததே தவிர மூன்றாவது அணியால் முழுமையாக எதனையும் சாதிக்க முடியவில்லை. நாடாளுமன்றத் தேர்தலில் படுதோல்வி அடைந்த ராமதாஸின் தலைமையில் மூன்றாவது அணி அமைக்க எந்த ஒரு அரசியல் தலைவரும் தயாராக இல்லை என்பதே யதார்த்தம். என்றாலும் தனது இருப்பை வெளிக்காட்ட வேண்டும் என்பதற்காக மூன்றாவது அணி என்ற வார்த்தையை டாக்டர் ராமதாஸ் பிரயோகித்துள்ளார்.
மூன்றாவது அணியை உருவாக்குவதற்கு இதுவரை மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் வீண் விரயமாகின. அட்டகாசமாக ஆரம்பமான மூன்றாவது அணி பற்றிய அறிக்கைகளும் அணி வகுப்புகளும் ஆரம்பத்திலேயே காணாமல் போயின. திராவிட முன்னேற்றக் கழகம், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆகியவற்றுக்கு சவால் விடும் வகையில் மூன்றாவது அணி அமைக்க முடியாத நிலை தமிழகத்தில் உள்ளது. தேர்தல் நெருங்கும் போது இடதுசும்ரிகளும் டாக்டர் ராமதாஸும் ஏதாவது ஒரு அணியில் ஐக்கியமாவார்கள்.
வர்மா
வீரகேசரிவாரவெளியீடு 18/10/09
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment