Monday, October 12, 2009

முறிந்ததுஅ.தி.மு.க. உறவுவெளியேறியது பா.ம.க



பாட்டாளி மக்கள் கட்சி நிறுவுனர் டாக்டர் ராமதாஸ், அவருடைய மகன் அன்புமணி ஆகியோருக்கு உரிய மரியாதை கொடுக்காமல் அவமானப்படுத்தியதனால் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணியில் இருந்து பாட்டாளி மக்கள் கட்சி வெளியேறியுள்ளது.
தமிழக அரசியல் கட்சிகள் கூட்டணி சேர்வதும், உறவு கசந்த பின்னர் வெளியேறுவது அல்லது வெளியேற்றப்படுவது புதிய விடயமல்ல. தலைவரின் விருப்பம் பொதுக் குழுத் தீர்மானம் என்ற பெயரில் வெளிவருவது வழமையான சம்பவங்களில் ஒன்று.
மேடைகளில் ஆக்ரோசமாகப் பேசி சூடான அறிக்கைகளை விடும் தமிழக காங்கிரஸ் தலைவர்கள், அன்னை சோனியாவின் முடிவுக்கு கட்டுப்படுவோம் என்று கூறி பிரச்சினையில் இருந்து ஒதுங்கி விடுவார்கள்.
தமிழக முதல்வரிடம் சில பிரச்சினைகளின் முடிவைப் பற்றிக் கேட்கும் போது பொதுச் சபை கூடி முடிவெடுக்கும் என்பார். பொதுச் சபை கூட முன்னரே இதுதான் முடிவு என்று கோடி காட்டி விடுவார்.
விஜயகாந்தின் தீர்மானத்திற்கு அவரது கட்சியில் உள்ள அனைவரும் ஆமாம் போட்டு கட்டுப்படுவார்கள்.
ஜெயலலிதா என்ன கூறினாலும் காலில் விழுந்து பணிவுடன் ஏற்றுக் கொள்வார்கள் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் இரண்டாம் கட்டத் தலைவர்கள்.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணியில் இருந்த இடது சாரிகளும், பாட்டாளி மக்கள் கட்சியும் இந்திய நாடாளுமன்றத் தேர்தலின்போது அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி சேர்ந்தன. திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணியில் இருந்து வெளியேறுவதை அன்புமணியும் வேறு சில தலைவர்களும் விரும்பவில்லை. தேர்தல் நேரத்தில் வாயார வாழ்த்தி வரவேற்கும் ஜெயலலிதா, தேர்தல் முடிந்ததும் கண்டு கொள்ள மாட்டார் என்பது அரசியல்வாதிகள் அனைவருக்கும் தெரிந்த விடயம். பாட்டாளி மக்கள் கட்சி நிறுவுனர் டாக்டர் ராமதாஸுக்கும் அது தான் நடந்தது.
திராவிட முன்னேற்றக் கழக தலைமையிலிருந்த இடதுசாரிகளும், பாட்டாளி மக்கள் கட்சியும் இந்திய நாடாளுமன்றத் தேர்தலின் போது அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துடன் கைகோர்த்தன. திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணியிலிருந்து இடதுசாரிகளும் பாட்டாளி மக்கள் கட்சியும் வெளியேறினால் அக்கூட்டணியின் பலம் குன்றி விடும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழக கூட்டணியின் பலம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அரசியல் விமர்சகர்கள் எதிர்பார்த்தது போன்று திராவிட முன்னேற்றக் கழக கூட்டணி பலவீனமடையவில்லை. மாறாக அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு முண்டு கொடுத்த வைகோவும், ராமதாஸும், இடதுசாரிகளும் படுதோல்வியடைந்தனர். இவர்களுடன் கூட்டணி சேர்ந்ததால் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஒன்பது தொகுதிகளில் வெற்றி பெற்றது.
திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணியில் இருந்து பாட்டாளி மக்கள் கட்சி வெளியேறுவதற்கு காரணமாக இருந்தவர் காடுவெட்டி குரு. டக்டர் ராமதாஸின் மகன் அன்புமணி உட்பட பலரின் எதிர்ப்புக்கு மத்தியிலேயே பாட்டாளி மக்கள் கட்சி அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துடன் இணைந்தது.அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பிரமுகரம்ன முருகானந்தத்தின் கொலை வழக்கில் டாக்டர் ராமதாஸையும் அன்புமணியையும் குற்றவாளிகளாகச் சேர்க்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்ததே கூட்டணி முறிவுக்கு முக்கிய காரணம்.
வன்னியர்களின் உரிமைகளுக்காக ஆரம்பிக்கப்பட்ட வன்னியர் சங்கம், பாட்டாளி மக்கள் கட்சி என்ற பெயரில் அரசியல் கட்சியாக மாற்றம் பெற்றது. சாதிப் பெயர்களில் அரசியல் கட்சிகள் செயற்பட முடியாது என்பதனால் வன்னியர் என்ற பெயர் இல்லாமல் வன்னியர் சமூகத்துக்காக பாட்டாளி மக்கள் கட்சி என்ற அரசியல் கட்சி உதயமாகியது. வன்னியர் அனைவரும் பாட்டாளி மக்கள் கட்சியின் பின்னால் அணி வகுத்து இருப்பதை உணர்ந்த திராவிட கட்சிகள், பாட்டாளி மக்கள் கட்சியுடன் கூட்டணி அமைப்பதை விரும்பின. வன்னியரின் நம்பிக்கையை பாட்டாளி மக்கள் கட்சி இழந்ததனால் முன்னர் இருந்த மதிப்பும் மரியாதையும் பாட்டாளி மக்கள் கட்சிக்கு இப்போது இல்லை.
பாட்டாளி மக்கள் கட்சியின் பலம் மிக மோசமாகக் குன்றியதால் அதனுடன் இணைவதற்கு எந்த ஓர் அரசியல் கட்சியும் இப்போதைக்கு தயாராக இல்லை. இன்றைய அரசியல் சூழ்நிலையில் கூட்டணி இல்லாது தேர்தலில் தனித்து போட்டியிட்டு எந்த ஓர் அரசியல் கட்சியும் வெற்றி பெற முடியாது. பிரதான அரசியல் கட்சிகளின் வெற்றியை தடுத்து நிறுத்தக் கூடிய வல்லமை பெற்றிருந்த பாட்டாளி மக்கள் கட்சியின் இன்றைய நிலை பரிதாபமாக உள்ளது.
தலைவரின் புகழுக்கு பங்கம் விளைவித்ததாகக் கூறி அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் உறவை பாட்டாளி மக்கள் கட்சி முறித்துக் கொண்டது. அடுத்து என்ன செய்வது என்று தெரியாதநிலையில் பாட்டாளி மக்கள் கட்சி தடுமாறுகிறது. தமிழக முதல்வர் கருணாநிதி, விஜயகாந்த் ஆகிய இருவரும் டாக்டர் ராமதாஸின் பிரதான எதிரிகளாக உள்ளனர். தமிழக நாடாளுமன்றத் தேர்தல் 2011 ஆம் ஆண்டு நடக்க உள்ளதால், அதுவரை கூட்டணி பற்றி சிந்திக்காது கட்சியைப் பலப்படுத்துவதற்கு டாக்டர் ராமதாஸ் முக்கியத்துவம் கொடுப்பார்.
பாரதிய ஜனதாக் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கட்சி ஆகியன தமிழகத்தில் செல்வாக்கிழந்துள்ளன. அவற்றுடன் கூட்டணி அமைத்து தனது மதிப்பை மேலும் குறைப்பதற்கு ராமதாஸ் தயாராக இல்லை. நாடாளுமன்றத்திலும், சட்ட சபையிலும் உறுப்பினர்கள் இருந்தால்தான் மக்களின் செல்வாக்கைப் பெற முடியும் என்ற உண்மையும் ராமதாஸுக்குத் தெரியும். ஆகையினால், தமிழக சட்ட மன்றத் தேர்தல் வரை எதிரணிகளை விமர்சிக்காது தனது கட்சியைப் பலப்படுத்துவதில் முக்கிய கவனம் செலுத்துவார்.
தமிழக முதல்வர் கருணாநிதி, சோனியா, ராகுல்காந்தி ஆகியோர் அன்புமணி மீது மதிப்பும் மரியாதையும் வைத்திருப்பதனால் அக்கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி இணையும் சாத்தியம் உண்டு. அதற்கு முன்னர் தனது கட்சியின் பலத்தை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் ராமதாஸிடம் உள்ளது. பிரமாண்டமான பேரணிகளும் கூட்டங்களும் நடத்தி, தனது பலத்தை பகிரங்கப்படுத்திய பின்னர் கூட்டணி சேர்வது பற்றிய அறிக்கையை ராமதாஸ் வெளியிடுவார்.
வர்மா
வீரகேசரிவாரவெளியீடு 11/10/09

No comments: