Sunday, October 25, 2009

போராடித் தோற்றது இந்தியா

அவுஸ்திரேலிய இந்திய அணிகளுக்கிடையே வரோதாவில் நடைபெற்ற முதலாவது ஒருநாள் போட்டியில் 4 ஓட்டங்களால் அவுஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலியா முதலில் துடுப்பெடுத்தாடி 50 ஓவர்களில் எட்டு விக்ய்கட்டுகளை இழந்து 292 ஓட்டங்கள் எடுத்தது.
ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கிய வட்சன், பெய்ன் ஜோடியை நெஹ்ரா பிரித்தார். ஐந்து ஓட்டங்களை எடுத்த வட்சன் நெஹ்ராவின் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.
இரண்டாவது விக்கெட் இணைப்பாட்டத்திற்கு விளையாடிய பெய்ன், பொண்டிங் ஜோடி சிறந்த அடித்தளத்தை ஏற்படுத்தியது. இருவரும் இணைந்து 97 ஓட்டங்கள் எடுத்தனர். 50 ஓட்டங்கள் எடுத்த பெய்ன் இஷாந்த் சர்மாவின் பந்தை டோனியிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். பெய்ன் ஆட்டமிழந்ததும் பொண்டிங்குடன் வைட் ஜோடி சேர்ந்தார்.
சிறந்த முறையில் துடுப்பெடுத்தாடிய பொண்டிங் 74 ஓட்டங்கள் எடுத்திருந்த வேளை ஜடேஜாவின் பந்துவீச்சில் எல்.பி.டபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். 51 ஓட்டங்கள் எடுத்த வைட் நெஹ்ராவின் பந்தை ரைனாடிவும் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.
அதிரடியாக விளையாடிய ஹசி 54 பந்துகளில் ஒரு சிக்சர், எட்டு பௌண்டரி அடங்கலாக 73 ஓட்டங்களை எடுத்தார். இஷாந்த் சர்மாவின் பந்தை கொக்கியிடம் பிடிகொடுத்து ஹசி ஆட்டமிழந்தார். ஹோப்ஸ், ஜோன்சன் ஆகியோர் ஆட்டமிழக்காது தலா 14 ஓட்டங்கள் எடுத்தனர். பொண்டிங், ஹசே, வைட், பெய்ன் ஆகியோரின் அபாரத் துடுப்பாட்டத்தின் மூலம் அவுஸ்திரேலிய அணி இமாலய இலக்கை அடைந்தது.
இந்தியப் பந்துவீச்சாளர்கள் விட்ட தவறுகளை தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திய அவுஸ்திரேலிய அணி 50 ஓவர்களில் எட்டு விக்ய்கட்டுகளை இழந்து 292 ஓட்டங்கள் எடுத்தது.
பிரவீன்குமார் 77, நெஹ்ரா 58, இஷாந்த் சர்மா 50, ஹர்பஜன் சிங் 57, ஜடேஜா 39 ஓட்டங்களைக் கொடுத்தனர். ஒரே ஒரு ஓவர் வீசிய ரைனா ஒன்பது ஓட்டங்களைக் கொடுத்தார்.
இஷாந்த் சர்மா மூன்று விக்கட்டுகளையும் நெஹ்ரா இரண்டு விக்ய்கட்டுகளையும் ஹர்பஜன் , ஜடேஜா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
293 என்ற பிரமாண்டமான வெற்றி இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர்களில் எட்டு விக்கெட்டுக்களை இழந்து 288 ஓட்டங்களை எடுத்து நான்கு ஓட்டங்களினால் தோல்வியடைந்தது.
ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கிய ஷேவாக்கும் சச்சினும் ஏமாற்றிவிட்டனர். மிக நீண்ட நாட்களின் பின்னர் களமிறங்கிய ஷேவாக் 13 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். சச்சின் டெண்டுல்கர் 14 ஓட்டங்களுடன் வெளியேறினார். மூன்றாவது இணைப்பாட்டத்தில் களமிறங்கிய கம்பீர், கோக்லி ஜோடி ஓரளவுக்குத் தாக்குப் பிடித்தது.
கோஹ்லி 30 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். சிறந்த முறையில் துடுப்பெடுத்தாடிய கம்பீர் 68 ஓட்டங்கள் எடுத்த வேளை ஜோன்சனின் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரைனா 9 ஓட்டங்களுடனும் வெளியேறினார். அணித் தலைவர் டோனி 30 ஓட்டங்களில் வட்சனின் பந்தை பிரட் லீயிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.
ஏழு விக்கெட்டுகளை இழந்து 210 ஓட்டங்கள் எடுத்திருந்த வேளை எட்டாவது இணைப்பாட்டத்தில் விளையாடிய ஹர்பஜன் சிங்கும் பிரவீன் குமாரும் நம்பிக்கை ஊட்டும் வகையில் போராடினார்கள். இவர்கள் இருவரும் இணைந்து அதிரடியாக ஓட்டங்களைக் குவித்தபோது இந்திய அணி வெற்றி பெற்று விடும் என்ற நிலை உண்டானது.
இந்திய அணியின் பந்து வீச்சாளர்கள் அவுஸ்திரேலிய பந்து வீச்சாளர்களுக்கு சவால் விட்டனர். கடைசி ஆறு பந்தில் ஒன்பது ஓட்டங்கள் என்ற இலக்கு இருந்தபோது இரண்டாவது பந்தில் சிடிலின் பந்தில் ஹர்பஜன் சிங் ஆட்டமிழந்ததும் இந்திய அணியின் தோல்வி உறுதியானது.
31 பந்துகளுக்கு முகம் கொடுத்த ஹர்பஜன் சிங் மூன்று சிக்சர் நான்கு பௌண்டரிகள் அடங்கலாக 49 ஓட்டங்கள் எடுத்தார். 50 ஓவர்களில் எட்டு விக்ய்கட்டுகளை இழந்த இந்திய அணி 288 ஓட்டங்கள் எடுத்து நான்கு ஓட்டங்களினால் தோல்வி அடைந்தது.
பிரவீண் குமார் ஆட்டமிழக்காது 40 ஓட்டங்கள் எடுத்தார். அவுஸ்திரேலிய வீரர்கள் 24 உதிரிகளை விட்டுக் கொடுத்தனர். வட்சன், ஜோன்சன் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளையும் பிரட் லீ, சிட்டில், வொகாஸ், ஹரிட்ஸ் ஆகியோர் தலா ஒரு விக் கெட்டையும் வீழ்த்தினர். ஆட்ட நாயகனாக அவுஸ்திரேலிய வீரர் ஹசி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

No comments: