Saturday, September 3, 2011

தடம் மாறிய தமிழ்ப்படங்கள் 2

நடிப்புக்கு சிவாஜி, சண்டைக்கு எம்.ஜி.ஆர் என தமிழ் சினிமா கோலோச்சிக் கொண்டிருந்த காலத்தில் காதலில் தனி முத்திரைப் பதித்தவர் ஜெமினி கணேசன். நடிகர் திலகம் மக்கள் நடிகர் என்ற பட்டங்களுக்கு இணையாக காதல் மன்னன் என்ற பட்டப்பெயர் வெள்ளித்திரையில் மின்னியது. இளம் பெண்களின் காதல் நாயகனாக மிளிர்ந்தார் ஜெமினி கணேசன். அவர் தனது காதலை படத்தில் மட்டுமல்லாது நிஜத்திலும் தொடர்ந்தார். காதல் மன்னன் ஜெமினியின் இடத்தை காதல் இளவரசன் கமல் பிடித்தார்.
கமலை அன்புடன் மாப்பிள்ளை என அழைப்பார் ஜெமினி. மாப்பிள்ளை நீயும் என்னைப்போல காதலில் விழுந்திடாதே என அடிக்கடி எச்சரிப்பார். ஜெமினியின் வழியைப் பற்றிப்பிடித்த கமல் காதலில் தனி முத்திரைப் பதித்தார். கமலின் படத்தில் முத்தக் காட்சி கட்டாயம் இருக்கும் என்ற நிலை உருவானது. கமலுடன் இணைந்து நடிக்கும் கதாநாயகியின் உதடு கவனம் என்று கிசு கிசுக்கள் வெளியானது. ஜெமினியின் மடியில் தவழ்ந்து சினிமாவில் அறிமுகமான ராசியால் காதலில் விழுந்தார் கமல்.
ஸ்டூடியோக்களில் உருவான தமிழ் சினிமாவை கிராமத்துக்கு அழைத்துச் சென்றவர் பாரதிராஜா. சினிமா எப்படி உருவாகிறது எனத் தெரியாத பாமரனுக்கும் சினிமா பற்றிய மாயப்படத்தை சொல்லிக் கொடுத்த பாரதிராஜாவின் வித்தியாசமான திரைப்படம் சிகப்புரோஜாக்கள், யார் அவள், அதே கண்கள் போன்ற மர்மப்படங்களைப் பார்த்த தமிழ் ரசிகர்களுக்கு சினிமா புதியதொரு அனுபவத்தைக் கொடுத்தது. சிகப்புரோஜாக்கள் இளம் வயதில் பெண்களால் பாதிக்கப்பட்டு மனநிலை பாதிக்கப்பட்ட இளைஞனின் கொலை வெறி என்ற ஒருவரி கதையை திகிலூட்டும் விதத்தில் திரையில் தந்தார் பாரதிராஜா. பெண்களால் பாதிக்கப்பட்டு பெண்கள் மீது உண்டாகும் வெறுப்பினால் பெண்களை கொலைச் செய்யும் இளம் தொழிலதிபர் திலீபனாக கமல் நடித்தார். தனிமையான பங்களா, ரோஜாத்தோட்டம் பார்ப்பவர்களை அச்சமடையச் செய்யும் கருமை நிறமான பூனை. மனதில் திகில் உண்டாக்கும் மனிதர்கள், பெண்களின் அவலக்குரல் என்பன படத்துக்கு வலுவூட்டின. கருமை நிறமான அந்தப் பூனை திடீரெனத் தோன்றி மீயாவ் என்று அலறும்போது நூற்றுக்கணக்கான ரசிகர்களுடன் தியேட்டரில் இருக்கின்றோம் என்ற எண்ணம் அகன்று தனிமையில் கறுப்பு பூனையிடம் சிக்கிவிட்டோமோ என்ற திகிலில் படபடவென இதயம் துடித்தது.
பெண்களைக் கொல்ல வேண்டும் என்ற வெறி நாயகனுக்கு ஏற்படும்போது அதை நிறைவேற்றுவதற்காக கமல் மேற்கொள்ளும் முயற்சிகள் இயக்குநரின் வித்தியாசமான கற்பனை பெண்களை கொல்ல வேண்டும் என்று துடித்த மனதினுள் ஒரு மூலையில் உறைந்துக் கிடந்தகாதல் துளிர்விடும் போது அந்த பாத்திரமாகவே மாறிவிடுகிறார் கமல். கொலைக்காரனின் மனதில் இப்படி ஒரு காதலா? என்று ஏக்கம் ஏற்படுகிறது. காதலி சாரதாவாக நடித்த ஸ்ரீதேவியின் நடிப்பும் இளமையும் படத்திற்கு மேலும் மெருகூட்டின.
காதல் திருமணத்தில் முடிகிறது. அன்பு மனைவியை தனது அந்தரங்க பங்களாவுக்கு அழைத்துச் செல்கிறார் கமல். பிரபல தொழிலதிபரின் மனைவியாக ஸ்ரீதேவி புதிய வாழ்க்கையை எதிர்பார்த்து புகுந்த வீட்டுக்குச் செல்கிறாள். அங்கு சென்ற பின்னர் தான் தனது கணவனின் சுயரூபம் தெரிகிறது. தனது உண்மையான பக்கத்தை மனைவி தெரிந்தால் அவளையும் கொலை செய்யத் துணிகிறார் கமல். ஸ்ரீதேவி கொல்லப்படுவாரா இல்லையா என்ற பதைப்பு ரசிகர்களிடையே எழுந்தது. இடையில் புகுந்த பொலிஸ் கமலை கைது செய்கிறது. சிறையில் அவருக்கு மனநல சிகிச்சை வழங்கப்படுகிறது. கமலின் வருகைக்காக காத்திருக்கிறாள் ஸ்ரீதேவி.
1978 ஆம் ஆண்டு வெளிவந்த இப்படம் ஆங்கிலப்படங்களுக்கு நிகராக இருந்தது. கதை திரைக்கதை இயக்கம் பாரதிராஜா. கிராமத்து படங்கள் மூலம் மண் வாசம் தந்த பாரதிராஜா சிவப்பு ரோஜாக்கள் மூலம் ரசிகர்களை திகிலடைய வைத்தார். இசைஞானியின் இசை படத்துக்கு மேலும் மெருகூட்டியது. பின்னனி இசை கதைக்கு மேலும் வலுவூட்டியது. ஆங்கிலப்படம் பார்ப்பது போன்ற உணர்வை இசைஞானி ஏற்படுத்தினார்.
பாக்கியராஜாவின் வசனம் படத்துக்கு வலுவூட்டியது. கண்ணதாசனும் வாலியும் பாடல்களை எழுதியிருந்தார்கள். நியாஸின் ஒளிப்பதிவு மனதில் பதிந்தது.
கமல் ஸ்ரீதேவி கவுண்டமனி வடிவுகரசி ஜீ.சீனிவாசன் எல்.காஞ்சனா நடித்தனர். இவர்களுடன் கே.பாக்கியராஜா சிறிய வேடத்தில் தோன்றினார். 25 வாரங்களுக்கு மேல் ஒடி வெள்ளிவிழவையும் எட்டியது. ஏர்ந்தாகுலாபிலு எனும் பெயரில் தெலுங்கிலும், ரெட்ரோஸஸ் எனும் பெயரில் ஹிந்தியிலும் வெளியாகி ரசிகர்களின் பாராட்டைப் பெற்றது.
மித்திரன் 04/09/11

1 comment:

Bommiah said...

You know something? that is one of the copy cut of an Hollywood movie. No one notice that.