கொள்ளைக்கோஷ்டி, சதிகாரர்கள், குடும்பச் சொத்துக்காக அலைபவர்கள் பெண் பித்து பிடித்த வில்லன்களை போன்றவர்களை அடித்துத் துவம்சம் செய்யும் கதாநாயகனான ரஜினி காந்த் பெண் பித்துப்பிடித்த பாத்திரத்தில் நடிப்பதை அவரது ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்களா? என்ற சந்தேகத்தை ஒரு புறம் தள்ளிவைத்துவிட்டு பிரதான வில்லன் பாத்திரத்தை ரஜினிக்குக் கொடுத்தார். படத்தைத் தயாரித்த பிரபல இயக்குநர் கே.பாலசந்தர்.
பெண்களை சீரழிக்கும் தந்தையாகவும் ரஜினியை திருத்தும் மகனாகவும் இரட்டை வேடத்தில் ரஜினி நடித்தார். கதாநாயகனும் வில்லனும் தமது அபிமான நடிகர் என்பதனால் வில்லன் ரஜினியை அவரது ரசிகர்கள் ஏற்றுக் கொண்டார்கள். பெண் பித்தனாக பெண்களை சீரழிக்கும் கொடுமைக்கார வில்லனாக ரஜினி நடித்தார். ரஜினியின் ரசிகர்கள் அவரை வில்லனாகப் பார்க்கவில்லை. ரஜினியாகவே பார்த்தனர். வில்லன் என்ற பாத்திரம் அடிப்பட்டு கதாநாயகனுக்கு சமமான பாத்திரமாக ரஜினி மிளிர்ந்தார்.
அபூர்வராகங்களில் அப்பாவிக் கணவனாக அறிமுகமாகினார் ரஜினி. ரஜினியின் மனைவியை காதலிப்பவர் கமல். மூன்று முடிச்சுப் படத்தில் கமலின் காதலி ஸ்ரீதேவியை ஒருதலைப்பட்சமாகக் காதலிக்கிறார் ரஜினி. ரஜினியின் பாலியல் பார்வையை உணர்ந்த ஸ்ரீதேவி காதலன் கமலிடம் உண்மையை கூறுகிறாள். நண்பனைப்பற்றித் தன் காதலி கூறிய உண்மைகளைக் கமல் நம்பவில்லை. ரஜினியின் சதியால் விபத்து என்ற பெயரால் கமல் கொல்லப்படுகிறார். விதி வசத்தால் ரஜினியின் தகப்பனை இரண்டாந்தாரமாக ஸ்ரீதேவி மணக்கிறார். பல படங்களில் வில்லனாக நடித்து கதாநாயகனான ரஜினி மீண்டும் வில்லனாக மாறியபடம் தான் நெற்றிக்கண்.
சபலத்தீ கொண்ட ரஜினி தன்னிடம் வேலைப்பார்க்கும் ஒரு பெண்ணைக் கெடுத்தவிடுகிறார். இதனை அறிந்த மகன் ரஜினி அவளைத்தான் வீட்டுக்கு அழைத்துவந்து தன் மனைவி என அறிமுகப்படுத்துகிறார். என் குழந்தையை அவள் வயிற்றில் சுமக்கிறாள் என்று கூறுகிறார். தன்னால் கெடுக்கப்பட்ட பெண் தனக்கு மருமகளாக வருவதா என்று சீறுகிறார் தந்தை. உண்மையை அறிந்த மனைவி வேதனைப்படுகிறாள். நடப்பது நாடகம் என அறியாத மகன் ரஜினியின் காதலி தன் காதலனை வெறுக்கிறாள். தாய், தகப்பன், காதலி ஆகிய மூவரின் உணர்வுப் போராட்டதில் சிக்கித்தவிக்கிறார் ரஜினி. இறுதியில் தந்தை ரஜினி திருந்துகிறார். மகன் ரஜினி காதலியுடன் சேர்கிறார். தந்தையால் கெடுக்கப்பட்ட பெண் வெளிநாட்டுக்குச் செல்கிறாள்.
1981 ஆம் ஆண்டு வெளிவந்த நெற்றிக்கண் திரைப்படத்தை கே.பாலசந்தரின் கவிதாலயா நிறுவனம் தயாரித்தது. விசு கதை, வசனம் எழுதினார். ரஜினி, லக்சுமி, சரிதா, மேனகா, சரத்பாபு, விஜயசாந்தி, தேங்காய்சீனிவாசன், கவுண்டமணி, ஐ.எஸ்.ஆர் ஆகியோர் நடிததனர். கவியரசு கண்ணதாசனின் பாடல்களுக்கு இசைஞானி இளையராஜா இசையமைத்தார். ரஜினியின் வெற்றிப்படங்களில் ஒன்றாக நெற்றிக்கண் பதிவானது. பெண் பித்துப்பிடித்து அலையும் ரஜினியின் நடிப்புக்கு பலத்த வரவேற்பு கிடைத்தது. தமிழில் வெற்றிபெற்ற இப்படம் முசலோடிசி தசார பண்டுகர் என்ற பெயரில் தெலுங்கில் வெளியாகி அங்கும் வெற்றிக்கொடி நாட்டியது.
மித்திரன்11/09/11
No comments:
Post a Comment