Tuesday, September 27, 2011

குழம்பியது கூட்டணிகுழப்பத்தில் கட்சிகள்

திருச்சி மேற்கு இடைத் தேர்தல் உள்ளாட்சி தேர்தல் என்பனவற்றினால் தமிழக அரசியல் சூடுபிடித்துள்ளது. தமிழக சட்ட மன்றத் தேர்தலில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி சேர்ந்து வெற்றி பெற்ற கட்சிகள் உள்ளாட்சி தேர்தலிலும் இதே கூட்டணியில் போட்டியிட்டு வெற்றி பெறலாம் என கனவில் இருந்தனர். கூட்டணித் தலைவர்களின் கனவைத் தவிடு பொடியாக்கியுள்ளார் முதல்வர் ஜெயலலிதா. கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தாமல் மாநகரசபை மேயர் வேட்பாளர்களை அறிவித்தார். அந்த அதிர்ச்சியில் இருந்து கூட்டணித் தலைவர்கள் விடுபட முன்னர் 72 நகராட்சிகளுக்கும் 52 பேரூராட்சிகளுக்கும் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை அறிவித்துள்ளார்.
திருச்சி மேற்கு இடைத் தேர்தல் ஒக்டோபர் 13 ஆம் திகதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உள்ளாட்சித் தேர்தல் திகதி அறிவிக்க முன்பே வேட்பாளர்களை அறிவித்து விட்டார் ஜெயலலிதா. தேர்தல் திகதி அறிவிக்கப்பட்ட பின்னர் தான் வேட்பாளர்கள் பட்டியலை கட்சிகள் வெளியிடுவது வழமை. வழமையை மீறி தேர்தல் திகதி பற்றிய உத்தியோகபூர்வமான அறிவிப்பு வெளிவரும் முன்பே தனது கட்சியின் சார்பில் போட்டியிடுபவர்கள் பற்றிய விபரங்களை ஜெயலலிதா வெளியிட்டதனால் கூட்டணிக் கட்சிகள் அதிர்ந்து போயுள்ளன.
தமிழகத்தில் 10 மாநகர சபைகள், 98 நகரசபைகள் 555 பேரூராட்சி மன்றங்கள், 385 உள்ளூராட்சி ஒன்றியங்கள் உள்ளன. மேயர், நகராட்சித் தலைவர், பேரூராட்சித்தலைவர், கவுன்சிலர் உட்பட ஒரு இலட்சத்து இருபதாயிரம் பேர் தேர்தல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். ஒவ்வொரு கட்சியிலும் இருந்து அதிகமானோர் தேர்வு செய்யப்படும் சந்தர்ப்பம் உள்ளதால் கூட்டணிக் கட்சிகளை ஒதுக்கிவிட்டு தமது கட்சியினரை முன்னிலைப்படுத்த ஜெயலலிதாவும் கருணாநிதியும் விரும்புகின்றனர்.
தேசிய முற்போக்கு திராவிடக் கழகம், மார்க்ஸிஸ்ட் கொம்யூனிஸ்ட் கட்சி, இந்தியக் கொம்யூனிஸ்ட் கட்சி, புதிய தமிழகம், மனித நேய மக்கள் கட்சி, இந்தியக் குடியரசுக் கட்சி, கொங்கு இளைஞர் பேரவை, மூவேந்தர் முன்னணிக் கழகம் ஆகியன அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையில் தமிழக சட்ட சபைத் தேர்தலைச் சந்தித்தன. உள்ளõட்சித் தேர்தலில் கூட்டணிக் கட்சிகளை ஜெயலலிதா புறக்கணித்ததனால் என்ன செய்வதென்று தெரியாது விஜயகாந்த் தடுமாறுகிறார். ஜெயலலிதாவின் முடிவு தவறானது எனத் தெரிந்தும் அதனைக் கண்டிக்காது அவருடன் பேச்சுவார்த்தை நடத்தக் காத்திருக்கின்றனர் ஏனைய கட்சித் தலைவர்கள்.
காங்கிரஸ் கட்சி, பாட்டாளி மக்கள் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள், முஸ்லிம் லீக், மூவேந்தர் முன்னேற்றக் கழகம் ஆகியவை திராவிட முன்னேற்றக் கழகத் தலைமையில் தமிழக சட்ட சபைத் தேர்தலில் போட்டியிட்டன. இந்தக் கூட்டணி தமிழக சட்ட சபைத் தேர்தலில் படுதோல்வி அடைந்தது. முதல் ஆளாக டாக்டர் ராமதாஸ் இந்தக் கூட்டணியில் இருந்து வெளியேறினார். தங்கபாலு கோஷ்டி திராவிட முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி என்று துதிபாடியது. இளங்கோவன் நடராஜா போன்றவர்கள் அமைதி காத்தனர். திராவிட முன்னேற்றக் கழகமே கதி என திருமாவளவன் இருந்தார்.
கருணாநிதியின் தனி வழி முடிவு காங்கிரஸுக்கும் திருமாவளவனுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. தனித்துப் போட்டியிட காங்கிரஸும் திருமாவளவனும் விரும்பவில்லை. தனித்துப் போட்டியிட போவதாக காங்கிரஸ் அறிவித்தாலும் விஜயகாந்தின் வருகைக்காக கதவைத் திறந்து வைத்துள்ளது. உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிட விஜயகாந்தும் விரும்பவில்லை. முகத்தில் அடித்தது போல் அவமானப்படுத்திய ஜெயலலிதாவுடன்சமரசம்பேச‌ விஜயகாந்தின் கௌரவம் இடம்கொடுக்கவில்லை.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துடன் மாக்ஸிஸ்ட் கொம்யூனிஸ்ட் பேச்சுவõர்த்தை நடத்த தயாராகவுள்ளது. கொடுப்பதைத் திருப்தியாக ஏற்றுக் கொள்ள கொம்யூனிஸ்ட் கட்சி விரும்புகிறது.

திருமாவளவனுடன் இணைவதற்கு ராமதாஸ் விரும்புகிறார். தனித்துப் போட்டியிடும் ஆயத்த நடவடிக்கைகளை வைகோ ஆரம்பித்துள்ளார். திராவிட முன்னேற்றக் கழகம், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், காங்கிரஸ் விஜயகாந்த், வைகோ, ராமதாஸ், திருமாவளவன், பாரதீய ஜனதாக் கட்சி என பல்முனை போட்டி உள்ளாட்சி தேர்தலை கலகலப்பாகப் போகிறது.
திருச்சி மேற்கு இடைத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகமும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும் நேரடியாக மோதும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. கூட்டணிக் கட்சிகளின் ஆதரவு இல்லாமல் இரண்டு கட்சிகளும் நேரடியாக மோதவுள்ள இத் தேர்தல் பற்றிய எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. திருச்சி மேற்கு தொகுதியில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மரியம்பிச்சை வெற்றிடமாக உள்ள அத்தொகுதியின் இடைத் தேர்தல் ஒக்டோபர் 13 ஆம் திகதி நடைபெறவுள்ளது.
திருச்சி மேற்கு தொகுதியில் போட்டியிடுவதா இல்லையா என்பதை முடிவு செய்ய தடுமாறிய கருணாநிதி திருச்சி மேற்கு இடைத் தேர்தலில் போட்டியிடும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளரின் பெயர் அறிவிக்கப்பட்டதும் உஷாராகி விட்டார் கருணாநிதி.
மரியம் பிச்சையின் உறவினர் ஒருவரான முஸ்லிம் ஒருவரை ஜெயலலிதா வேட்பாளராக அறிவிப்பார் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஜெயலலிதா பரம்ஜோதி என்பவரை வேட்பாளராக அறிவித்தார். மரியம் பிச்சையின் வெற்றிக்கும் பெரிதும் பங்காற்றிய தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் ஜெயலலிதாவுடன் இது பற்றி பேச்சுவார்த்தை நடத்தியது. ஜெயலலிதா அசைந்து கொடுக்கவில்லை.
இதேவேளை குஜராத் முதல்வர் நரேந்திர மோடி நடத்திய உண்ணாவிரதத்துக்கு வாழ்த்துத் தெரிவித்த நரேந்திர மோடி தனது கட்சியின் பிரதிநிதிகளாக நாடாளுமன்ற உறுப்பினர் மைத்திரேயன் தம்பித்துரை ஆகியோரை குஜராத்துக்கு அனுப்பி வைத்தார். இந்தச் சம்பவம் தமிழக முஸ்லிம்கள் மத்தியில் எதிர்ப்பு அலைகளை ஏற்படுத்தியுள்ளது. உள்ளாட்சித் தேர்தலில் ஜெயலலிதா தன்னிச்சையாக செயற்படுவதால் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவு இல்லாத நிலை ஏற்படும். இது திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் சாதகமான சூழ்நிலையை ஏற்படுத்தி விடலாம்.
திருச்சி மேற்கு சட்ட சபைத் தேர்தலில் போட்டியிடுவதா வேண்டாமா என்று குழம்பியிருந்த கருணாநிதி மரியம்பிச்சை தோல்வியடைந்த முன்னாள் அமைச்சர் நேருவை மீண்டும் வேட்பாளராக அறிவித்துள்ளார்.
கருணாநிதிக்கும் மத்திய அரசியல்வாதிகளின் அணிவகுப்பு ஸ்பெக்ட்ரம் ஆகியவற்றுக்குப் பலியானவர்களில் தமிழகத்தின் முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவும் ஒருவர். திராவிட முன்னேற்றக் கழகத்தில் தலைவர்கள் கைது செய்யப்படுவதை நடு நிலையாளர்கள் விரும்பவில்லை. நடு நிலையாளர்களின் வாக்குகள் நேருவை வெற்றி பெறச் செய்யும் என்று கருணாநிதி நம்புகிறார். கடந்த சட்டமன்ற தேர்தலின் போது ஏழாயிரம் வாக்குகளினால் நேரு தோல்வியடைந்தார். சமச்சீர் கல்வித் திட்டத்தை ஜெயலலிதா நிறுத்த முயற்சித்தது, பரம குடியில் பொலிஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டுச்சம்பவம் நரேந்திர மோடிக்கு ஜெயலலிதா வழங்கிய ஆதரவு என்பன திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு சாதகமாக உள்ளன.
வர்மா

சூரன்.ஏ.ரவிவர்மா

வீரகேசரிவாவாரவெளியீடு25/09/11


No comments: