Friday, September 2, 2011

சாதித்தது அ.தி.மு.க.வேதனையில் தி.மு.க

தமிழக அரியாசனத்தில் ஜெயலலிதா கோலோச்ச ஆரம்பித்து நூறு நாட்கள் கடந்து விட்டன. இந்த நூறு நாட்களில் அவர் தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதிகள் பலவற்றை நிறைவேற்றியுள்ளார். அவரின் வழமையான பிடிவாதத்தினால் சமச்சீர் கல்வித் திட்டத்தை நிறுத்த முயற்சித்து அவமானப்பட்டõர். இதேவேளை திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர்களையும் தொண்டர்களையும் சட்டத்தின் உதவியுடன் முடக்கும் வேலையை கன கச்சிதமாகச் செய்து வருகிறார்.
தமிழக சட்ட சபை வரலாற்றில் என்றும் இல்லாத புதிய வரலாற்றுப் பெருமையுடன் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்த அவர். மே மாதம் 16 ஆம் திகதி மூன்றாவது முறையாக தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றார். தமி
ழக முதல்வராகப் பொறுப்பேற்க முன்னரே புதிய தலைமைச் செயலகக் கட்டிடத்திலிருந்து மீண்டும் கோட்டைக்கு தலைமைச் செயலகம் மாறும் என்று அறிவித்தார். தமிழக முதல்வராக ஜெயலலிதா பொறுபேற்றதும் தமிழகத்தில் மிகப் பெரிய மாற்றம் ஏற்பட்டது. புதிய அமைச்சர்கள் பொறுப்பேற்று ஆரவாரம் அடங்கு முன்னர் பதவியிலிருந்து சிலர் பந்தாடப்பட்டனர். வேறு சிலர் இலாகா மாற்றப்பட்டனர்.
மதுரையின் மீதான ஜெயலலிதாவின் உக்கிரப் பார்வையால் மதுரை கலகலத்தது. அழகிரிக்குப் பக்கபலமாக இருந்த பலர் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர். அடுத்த குறியார் என்று பரபரப்பான கேள்வியுடனேயே காலைப் பொழுது விடிகிறது. மதுரையைச் சுற்றி இருந்த மாயை இருள் அகன்றுவிட்டது.
தமிழக தேர்தல் காலத்தில் ஜெயலலிதா அறிவித்த திட்டங்களை படிப்படியாக நடைமுறைப்படுத்தி வருகிறார். இலவச அரிசி வழங்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு லப்டொப், கிரைண்டர் மிக்ஸி கொடுப்பதற்காக வேலைத் திட்டம முன்னெடுக்கப்படுகிறது. இலங்கை இனப்பிரச்சினை விவகாரத்தில் ஜெயலலிதாவின் குரல் மிக உச்சத்தில் உள்ளது. வைகோ, பழ. நெடுமாறன், திருமாவளவன், டாக்டர் ராமதாஸ் போன்றவர்களை விட ஜெயலலிதாவின் குரலுக்கு அதிக மதிப்புக் கிடைத்துள்ளது. தமிழக சட்டமன்றத்தில் இலங்கை தொடர்பில் அவர் நிறைவேற்றிய தீர்மானம் மத்திய அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள் ளது. தமிழகத்தில் ஆட்சிபீடம் ஏறியதும் மத்திய அரசியுடன் ஜெயலலிதா சமரசமாகச் செல்வார் என்று எதிர்பார்க்க ப்பட்டது.
ஆனால், மத்திய அரசை எதிர்த்து தமிழக அரசை வழி நடத்துவதற்கு ஜெயலலிதா முடிவெடுத்து விட்டார்.
கச்சதீவு விவகாரத்திலும் ஜெயலலிதா உறுதியாக உள்ளார். கச்சதீவு ஒப்பந்தத்தின்படி இலங்கை நடக்கவில்லை. இலங்கை அரசு ஒப்பந்தத்தை மீறி விட்டது. இந்திய மத்திய அரசு கைகட்டிப் பார்த்துக் கொண்டிருக்கிறது என குற்றம் சுமத்தியுள்ளார். ஜெயலலிதாவைத் திருதிப்படுத்த வேண்டிய கட்டாய நிலைக்கு மத்திய அரசு தள்ளப்பட்டுள்ளது. இலங்கைப் பிரச்சினைக்கு மத்திய அரசு நல்லதொரு தீர்வைப் பெற்றுக் கொடுக்கும் வரை ஜெயலலிதாவின் குரல் ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கும்.
திராவிட முன்னேற்றக் கழகத்தையும் அதன் தலைவர்களையும் மறைமுகமாகவும் வெளிப்படையாகவும் பழிவாங்கும் நடவடிக்கைகளையும் ஒரு பக்கத்தால் நிறைவேற்றி வருகிறார் ஜெயலலிதா. புதிய தலைமைச் செயலகத்தை நவீன மருத்துவமனையாக மாற்றுவது, சித்திரை முதலாம் திகதியே மீண்டும் தமிழ்ப் புதுவருடமாகக் கொண்டாடுவது ஆகிய அறிவிப்புகள் கருணாநிதிக்கு பெரும் அவமானத்தை ஏற்படுத்தியுள்ளன. கருணாநிதியால் கட்டப்பட்ட புதிய தலைமைச் செயலகத்தினுள் நுழையமாட்டேன் என்ற சபதத்தை ஜெயலலிதா நிறைவேற்றியுள்ளார்.
கோட்டையினுள்ள தலைமைச் செயலகத்தில் வசதிகள் போதியளவு இல்லை. தவிர
அந்தக் கட்டிடம் தமிழக அரசுக்குச் சொந்தமானது இல்லை என்ற காரணங்களினால் எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் புதிய தலைமைச் செயலகத்தைக் கட்டுவதற்கு முயற்சி செய்தார்கள். எம்.ஜி.ஆர். ஜெயலலிதா ஆகிய இருவரின் முயற்சி வெற்றிபெறாத நிலையில் கருணாநிதியின் முயற்சியினால் புதிய தலைமைச் செயலகம் கட்டி முடிக்கப்பட்டது.1983 ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர். முதலமைச்சராக இருந்தபோது மெரீனாவுக்கு அருகே தலைமைச் செயலகம் கட்டுவதற்கு முடிவெடுக்கப்பட்டது. பின்னர் அத்திட்டம் கைவிடப்பட்டது. தலைமைச் செயலகத்தை திருச்சிக்கு மாற்றுவதற்கும் முயற்சி செய்யப்பட்டது. நிர்வாகச் சிக்கல் பொது மக்களுக்கு சிரமம் என்பதனால் அந்தத் திட்டமும் கைவிடப்பட்டது.


2002 ஆம் ஆண்டு ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது மகாபலிபுரத்தில் நிர்வாக நகரம் அமைக்க முயற்சி செய்யப்பட்டது. சென்னைக்கு வெளியே தலைமைச் செயலகம் அமைத்தால் ஏற்படும் சிரமங்களைக் கருத்தில் கொண்டு அத்திட்டம் கைவிடப்பட்டது. ராணி மேரி கல்லூரி இடத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டுவதற்கு ஜெயலலிதா முயற்சி செய்தார். ராணி மேரி கல்லூரி மாணவிகளின் எதிர்ப்பினால் அத்திட்டம் கைவிடப்பட்டது. பின்னர் சென்னை கோட்டூர்புரத்தில் அண்ணா பல்கலைக்கழகத்துக்குச் சொந்தமான இடத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டுவதற்கு பூமி பூஜை போடப்பட்டது. இந்த பூமி பூஜையில் ஜெயலலிதாவும் கலந்து கொண்டார். புதிய தலைமைச் செயலகம் கட்டுவதனால் ஏற்படப் போகும் பின் விளைவுகளால் ஏற்படும் ஆபத்துகள் பற்றி சுற்றுப்புறச் சூழல் ஆர்வலர்கள் வழக்குத் தாக்கல் செய்தனர். அடையாறு சுற்று சூழல் பகுதி அண்ணா பல்கலைக்கழகத்துக்குச் சொந்தமான இடங்கள் எல்லாம் பறிபோவதாக குற்றம் சுமத்தப்பட்டது. இதன் காரணமாக இத் திட்டம் கைவிடப்பட்டது.
சகல வசதிகளும் உடைய தலைமைச் செயலகம் தமிழ்நாடு அரசுக்குத் தேவை என்பதை எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் உணர்ந்திருந்தார்கள். அவர்களால் செய்ய முடியாததை கருணாநிதி செய்து முடித்தார். 2008 ஆம் ஆண்டு ஒமாந்தூரார் தோட்டத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டும் பணி ஆரம்பமானது. 2010 மார்ச் மாதம் 13 ஆம் திகதி புதிய தலைமைச் செயலகம் திறந்து வைக்கப்பட்டது. புதிய தலைமைச் செயலகம் கட்டுவதற்காகப் பல கட்டடங்கள் இடித்து அழிக்கப்பட்டன. பல ஆண்டு பழமையான கலைவாணர் அரங்கம், இயற்கை விநாயகர் கோயில், சி.பி.சி.ஐ.டி. பொலிஸ் தலைமை அலுவலகமான எம்பயர் கட்டிடம், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய தலைமை அலுவலக கட்டிடம், திருவல்லிக் கேணி தீ அணைப்பு நிலையம், தலைமைச் செயலக ஊழியர் குடியிருப்பு, பழைய கில்ட் பத்திரிகையாளர் அலுவலகம், பழைய எம்.எல்.ஏக்கள் விடுதி நூற்றுக்கணக்கான மரங்கள் அழிக்கப்பட்டே புதிய தலைமைச் செயலகம் கட்டப்பட்டது.
அவசர அவசரமாக அள்ளித் தெளித்த
கோபத்தில் அரையும் குறையுமாக புதிய தலைமைச் செயலகம் திறந்து வைக்கப்பட்டதால் அப்போதே புகார் எழுந்தது. கருணாநிதியால் வீம்புக்காகத் திறந்து வைக்கப்பட்ட புதிய தலைமைச் செயலகத்தை பழிவாங்கும் நோக்கில் ஜெயலலிதா முடக்கியுள்ளார். புதிய தலைமைச் செயலகத்தை ஜெயலலிதா என்ன செய்யப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் எழுந்தது. புதிய தலைமைச் செயலகத்தில் நவீன மருத்துவமனை அமைக்கப்படும் என்று ஜெயலலிதா அறிவித்துள்ளõர். அலுவலகத்துக்காகக் கட்டப்பட்ட கட்டடத்தில் மருத்துவமனை அமைப்பது சாத்தியமில்லை. மருத்துவமனை அமைப்பதற்குரிய அடிப்படை வசதிகள் எவையும் புதிய தலைமைச் செயலக கட்டிடத்தில் இல்லை. ஆகையினால் இதற்கு பலத்த எதிர்ப்புக் கிளம்பியுள்ளது.
சித்திரை மாத முதலாம் திகதி தமிழ்ப் புதுவருடம் முன்பு ஜெயலலிதாவின் அறிவிப்புக்கு பலத்த வரவேற்புப் கிடைத்துள்ளது. தை மாதம் முதலாம் திகதி தமிழ்ப்புத்தாண்டு என்று 2008 ஆம் ஆண்டு கருணாநிதி அறிவித்தார். கருணாநிதியின் இந்த அறிவிப்பை தமிழ் மக்கள் வரவேற்கவில்லை. அரசு ஆணைப்படி தை மாதம் முதலாம் திகதி புது வருடமாக கொண்டாடப்பட்டது. பழமையில் ஊறித் திளைத்தவர்கள் சித்திரை மாதம் முதலாம் திகதியையே தமிழ்ப் புதுவருடமாகக் கொண்டாடினார்கள். தமிழ் மக்களின் உணர்வுகளை அரசியல் சட்டத்தினால் மாற்ற முடியாது என்பதை கருணாநிதி உணரத் தவறி விட்டார். தை மாதம் முதலாம் திகதி தமிழ்ப் புது வருடம் என்பது எனது முடிவல்ல 500 புலவர்கள் கூடி ஆராய்ந்து எடுத்த முடிவு என்று கருணாநிதி கூறியுள்ளார். கருணாநிதியின் விருப்பப்ப டியே 500புலவர்களும் ஆமோதித்தார்கள் என்பது வெளிப்படையானது.
ஜெயலலிதாவின் ஆட்சியிலே செம்மொழிக்கு இடமில்லை. கருணாநிதியால் ஆரம்பித்து வைக்கப்பட்ட ஒரே ஒரு காரணத்துக்காக இடமின்றித் தடுமாறுகிறது செம்மொழி கோட் டையிலுள்ள புதிய தலைமைச் செயலகத்திலேதான் செம்மொழி நூலகம் இயங்கியது. தலைமைச் செயலகம் கோட்டைக்கு மீண்டும் இடமாற்றம் செய்யப்பட்டதால் அங்கிருந்து துரத்தியடிக்கப்பட்ட செம்மொழி நூலகத்துக்கான நிலையான இடம் இன்னும் ஒதுக்கப்படவில்லை.
ஜெயலலிதாவின் நூறு நாளாட்சியில் பொது மக்களுக்குப் பெரிய பாதிப்பு எவையும் ஏற்படவில்லை. திராவிட முன்னேற்றக் கழகம் தான் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் தமிழக சட்டமன்ற உறுப்பினர் உட்பட நூற்றுக்கணக்கான திராவிட முன்னேற்றக் கழகத்தினர் சிறையில் உள்ளனர். இன்னும் பலர் தேடப்பட்டு வருகின்றனர் எதிர்க்கட்சித் தலைவரான விஜயகாந்த் பொறுப்பான எதிர்க்கட்சித் தலைவராகப் பணியாற்றவில்லை. திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற ஊழல் களையும் முறைகேடுகளையும் கண்டறிவதிலேயே தமிழக அரசு அதிக அக்கறை காட்டுகிறது. திராவிட முன்னேற்றக் கழக அரச அமுல்படுத்திய திட்டங்களை மறுபடியும் முடக்கியுள்ளது. பழிவாங்கும் அரசியலிலிருந்து ஜெயலலிதா இன்னமும் மீளவில்லை.

வர்மா

சூரன்.ஏ.ரவிவர்மா

வீரகேசரிவாவாரவெளியீடு29/08/11


No comments: