திராவிட முன்னேற்றக் கழகத்திடமிருந்து தமிழக ஆட்சியைக் கைப்பற்றிய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு கடந்த வாரம் சிக்கல் விழுந்த வாரமாக அமைந்துள்ளது. பெங்களூரில் நடைபெறும் டான்சி நிலப்பேர வழக்கில் ஜெயலலிதா நேரில் ஆஜராக வேண்டும் என்று உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு ஜெயலலிதாவுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தியுள்ளது. பரமகுடியில் நடைபெற்ற கலவரத்தில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு ஏழு பேர் பலியானது தமிழக அரசுக்கு கரும்புள்ளியை ஏற்படுத்தியுள்ளது.
செப்டெம்பர் 11ஆம் திகதி பரமகுடியில் இருக்கும் தேவேந்திரகுல மக்களின் தலைவரான இமானுவேல் சேகரனின் நினைவிடத்தில் தேவேந்திரகுல மக்கள் வழிபாடு செய்வார்கள். இமானுவேல் சேகரனின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தச் சென்ற ஜான்பாண்டியனுக்கு பொலிஸார் அனுமதி வழங்கவில்லை. பரமகுடிக்கு அவர் சென்றால் வன்முறை ஏற்படும் என்று பொலிஸார் தெரிவித்தனர். பரமகுடி இராமநாதபுர மாவட்டத்தில் உள்ளது. இராமநாதபுர மாவட்டத்துக்கு ஜான்பாண்டியன் சென்றால் கலவரம் ஏற்படும். ஆகையினால் அவர் இராமநாதபுர மாவட்டத்துக்கு வரக்கூடாது என்று நீதிமன்றத்தில் தடை உத்தரவு வாங்கப்பட்டுள்ளது. நீதிமன்றத் தடையை மீறி ஜான் பாண்டியன் செல்ல முயன்றபோது கைது செய்யப்பட்டார்.
ஜான் பாண்டியன் கைது செய்யப்பட்டதை அறிந்த பரமகுடி மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். ஆர்ப்பாட்டக்காரர்களைப் பொலிஸார் கலைக்க முயன்றபோது கலவரம் அடிதடி என்ற நிலைமை கட்டுக்கடங்காமல் போகவே துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது. இதன் காரணமாக ஏழு பேர் உயிரிழந்தனர். பொலிஸார் உட்பட 35 பேர் காயமடைந்தனர்.
ஜான்பாண்டியன் இராமநாதபுர மாவட்டத்துக்குச் சென்றால் கலவரம் ஏற்படும் என்று காரணம் காட்டி அவரைக் கைது செய்தார்கள். ஆனால் ஜான் பாண்டியன் இராமநாதபுரத்துக்குச் செல்லாமலே கலவரம், உயிரிழப்பு, தமிழக அரசுக்குக் கெட்ட பெயர் ஏற்பட்டுள்ளது. கலவரத்தை அடக்கிய பொலிஸார் எச்சரிக்கைவிடாது பொதுமக்களை நோக்கி நேரடியாகத் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகத் தெரிய வருகிறது. பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையேயான மோதலில் பொலிஸார் தவறு செய்துவிட்டதாக அரசியல் தலைவர்கள் அனைவரும் கண்டித்துள்ளனர். ஆனால் முதல்வர் ஜெயலலிதா இதனை சாதிக் கலவரமாக வர்ணித்துள்ளார். பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும் மோதல் ஏற்படவில்லை என்ற ரீதியிலாக அறிக்கை மூலம் பொலிஸாரைக் காப்பாற்ற முதல்வர் ஜெயலலிதா முயற்சி செய்துள்ளார்.
இமானுவேல் சேகரனின் நினைவு தினத்தின்போது பரமகுடியில் பதற்றம் அதிகரிக்கும். இந்த ஆண்டு கலவரம் ஏற்படாமல் தடுப்பதற்காக முன் எச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அசம்பாவிதம் எதுவும் ஏற்படக்கூடாது என்பதற்காக சுமார் ஒரு மாதமாகத் திட்டமிட்டுப் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இவ்வளவு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டும் பொலிஸாரால் கலவரத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை. பரமகுடியில் ஆரம்பித்த கலவரம் மதுரையிலும் எதிரரொலித்தது. அரசாங்கத்தின் சொத்துக்களும் பொதுமக்களின் சொத்துக்களும் சேதமாக்கப்பட்டு தீக்கிரையாக்கப்பட்டன.
பரமகுடியில் என்ன நடந்தது என்பதைப் பற்றி ஊடகங்கள் விலாவாரியாக எடுத்துரைத்தன. இதை எல்லாம் கணக்கில் எடுக்காத முதல்வர் ஜெயலலிதா இதனை சாதிக் கலவரமாக அடையாளப்படுத்தியுள்ளார். பரமகுடியில் பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையில்தான் மோதல் இடம்பெற்றது. இரண்டு சாதிகளுக்கிடையே மோதல் நடைபெறவில்லை. பரமகுடியில் அசம்பாவிதம் ஏற்படுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு தலித் மாணவன் ஒருவன் கொல்லப்பட்டான். அந்தக் கொலையின் பின் எதுவித அசம்பாவிதமும் பரமகுடியில் ஏற்படவில்லை. தலிக் மாணவனின் கொலையையும் பரமகுடிக் கலவரத்தையும் முடிச்சுப் போட்டு பொலிஸாரையும் அரசாங்கத்தையும் காப்பாற்ற ஜெயலலிதா முயற்சி செய்கிறார்.
பரமகுடிச் சம்பவம் தமிழக எதிர்க்கட்சிகளுக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. தமிழக அரசைச் சாடுவதற்கு இது வாய்ப்பாக அமைந்துள்ளது. தமிழக உள்ளாட்சித் தேர்தலின்போது பரமகுடிச் சம்பவம் எதிர்க்கட்சிகளுக்கு மிகப் பெரிய பலத்தைக் கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை. தமிழக உள்ளாட்சித் தேர்தலும் ஜெயலலிதாவுக்கு எதிரான டான்சி நிலபேர வழக்கும் ஒரே நேரத்தில் வருவது ஜெயலலிதாவுக்குப் பாதகமாக உள்ளது. தமிழக சட்ட மன்றத் தேர்தலில் ஸ்பெக்ரம் விவகாரம் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தியது. ஜெயலலிதாவுக்கு எதிரான டான்சி நிலபேபர வழக்கும் பரமகுடி கலவரமும் எதிர்க்கட்சிகளுக்கு பலத்தைக் கொடுத்துள்ளன. மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற ஸ்பெக்ரம் வழக்கு தற்போது சோர்வடைந்துள்ளது. சோர்ந்து போயிருந்த டான்சி நிலப்பேர விவகாரம் சூடு பிடித்துள்ளது. பெங்களூரில் நடைபெறும் வழக்கில் ஒக்டோபர் 20ஆம் திகதி ஆஜராகப் போவதாக ஜெயலலிதா உறுதியளித்துள்ளார். உள்ளாட்சி தேர்தல் முடிந்த பின்னரே நீதிமன்றத்தில் ஆஜராவதற்கு திகதி கொடுத்துள்ளார் ஜெயலலிதா. உள்ளாட்சி தேர்தல் பிரசாரத்தின்போது ஜெயலலிதா நீதிமன்றத்தில் ஆஜராவதைத் தவிர்த்துள்ளார். ஆனாலும் எதிர்க்கட்சிகள் இந்த விவகாரத்தை தமக்கு சாதகமாகவே கருத்தில் கொள்ளும் இந்தப் பிரசாரத்தை ஜெயலலிதா எப்படி முறியடிக்கப் போகிறார் எனத் தெரியவில்லை.
அண்ணா திராவிட முன்னேற்றக் கூட்டணியில் எதுவித குழப்பமும் இல்லை. திராவிட முன்னேற்றக் கழகம் கூட்டணியிலிருந்து பாட்டாளி மக்கள் கட்சி வெளியேறிவிட்டது. மதில் மேல் பூனையாக பிடிகொடாது உள்ளார் திருமாவளவன். திராவிட முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி இல்லை என்ற இளங்கோவன் கோஷ்டியும் திராவிடமுன்னேற்றக் கழகத்துடனான கூட்டணி தொடர்வதாக தங்கபாலு கோஷ்டியும் பரப்புரை செய்து வருகின்றன.
இந்தக் குழப்பமான நிலையிலிருந்து கருணாநிதி வெளியேறி விட்டார்.
உள்ளாட்சித்தேர்தலில் தனித்துப்போட்டியி டப் போவதாக கருணாநிதி அறிவித்துள்ளார். கருணாநிதியின் இந்த அறிவிப்பு திராவிட முன்னேற்றக் கழகத்துக்குப் புதுத்தெம்பை அளித்துள்ளவேளையில் காங்கிரஸ் தலைவர் களுக்கு அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. தமிழக சட்டமன்றத்தேர்தலின் போது காங்கி ரஸின் மிரட்டலுக்குப் பணிந்த கருணாநிதி உள்ளாட்சித்தேதர்தலில் தன்னிச்சையாக முடி வெடுத்துள்ளார். தமிழகத்தில் திராவிடக் கட்சிகளுடன் இணைந்துபோட்டியிடுவதுதான் காங்கிரஸ் கட்சியின் பலம். தனித்துப் போட்டியிட்டால் வெற்றி பெறமுடியாதது அதன் பலவீனம். காங்கிரஸ் கட்சியின் பலத் தையும், பலவீனத்தையும் நன்கு தெரிந்த கருணாநிதி சந்தர்ப்பம் பார்த்து காங்கிரஸைத் தூக்கி எறிந்துள்ளார்.
அன்னா ஹசாரேயின் போராட்டத்தினால் வட மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கு அதலபாதாளத்தில் வீழ்ந்துள்ளது. அடுத்த பொதுத்தேர்தல் காங்கிரஸ் கட்சியின் வெற்றி க்குக்குந்தகத்துக்கிடமாக உள்ளது. மத்திய அரசில் இருந்து வெளியேறுவதன் முதல் கட்டமாகவே காங்கிரஸ் கட்சியைப் புறக் கணித்துள்ளார். கருணாநிதி, திராவிட முன் னேற்றக் கழகத்துக்கு எதிராக வாய்ச்சவடால் விடும் இளங்கோவன்போன்றவர்களுக்குத் நல்ல பாடம் புகட்டுவதற்கு கருணாநிதி தயாராகி விட்டார்.
நாடாளுமன்ற,சட்டமன்றத் தேர்தல்களை விட வித்தியாசமான உள்ளாட்சித் தேர்தல் சிறு கிராமத்தில் செல்வாக்கு மிக்கவர்களின் வெற்றி மூலம் கட்சி பலப் படுத்தப்படுகிறது. உள்ளாட்சித்தேர்தலில் கட்சியின் வெற்றியை விட செல்வாக்கு மிக்கவரின் வெற்றியே பெரிதாகப் பேசப்படும். கூட்டணி இல்லாமல் திராவிட முன்னேற்றக் கழகத்தினால் வெற்றி பெறமுடியாது. என்று கூறுபவர்களுக்குப் பதிலளிக்கும் முகமாகவே உள்ளாட்சித்தேர்தலை நோக்குகிறார் கருணாநிதி.
கருணாநிதியின் முடிவு அண்ணா திராவிட முன்@னற்றக் கழகத்துக்கு மகிழ்ச்சியை ஏற் படுத்தியுள்ளது. அசுர பலத்துடன் இருக்கும். அண்ணாதிராவிட முன்னேற்றக் கழகம் உள் ளாட்சித்தேர்தலில் வெற்றி பெறும் நம்பிக் கையில் உள்ளது.
சட்ட மன்றத் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக ஜெயலலிதாவும் கருணாநிதியும் கூட்டாளிக் கட்சிகளுக்குத் தாராளமாகத் தொகுதிகளை ஒதுக்கினார்கள். அப்படி அதிகளவில் விட்டுக் கொடுக்க வேண்டிய நிலை இப்போதைக்கு இல்லை. உள்ளக மன்றங்களில் பலமாக இருக்க வேண்டும் என்றே அரசியல் கட்சிகள் விரும்புகின்றன. தமது பலத்தை நிரூபிப்பதற்கு பலப் பரீட்சையில் இறங்கத் தயாராகிவிட்டன தமிழக அரசியல் கட்சிகள்.
வர்மா
சூரன்.ஏ.ரவிவர்மா
வீரகேசரிவாவாரவெளியீடு18/09/11
No comments:
Post a Comment