Sunday, September 4, 2011

மரணத்தை வெல்லபோராடுகிறது தமிழகம்

ராஜீவ் காந்தியின் கொலைக் குற்றச்சாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய மூவரின் கருணை மனு இந்திய ஜனாதிபதியினால் நிராகரிக்கப்பட்டதையடுத்து தமிழகம் கொந்தளித்துப் போயுள்ளது. தமக்கு வழங்கப்பட்ட மரண தண்டனையிலிருந்து விடுதலையாவதற்கு மூவரும் மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் தோல்வியிலேயே முடிந்தன. ராஜீவைக் கொலை செய்தவர்களுக்கு மன்னிப்பு வழங்கக் கூடாது என்ற எழுதப்படாத சட்டம் ஒன்று இம் மூவரின் பின்னால் இயங்கிச் செயற்பட்டது. ஜனாதிபதியின் அலுவலகத்தில் 11 வருடங்கள் தூங்கி வழிந்த கருணை மனு கடந்த வாரம் தூசுதட்டி எடுக்கப்பட்டது.
பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் கருணை மனு நிராகரிக்கப்பட்ட தகவல் கடந்த மாதம் 12 ஆம் திகதி தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தமிழக முதல்வர் ஜெயலலிதா தனது வாழக்கையில் சந்தித்திராத மிகப் பெரிய நெருக்கடிக்கு முகங் கொடுத்தார். ஜனாதிபதியின் முடிவை வேலூர் சிறைக்குத் தெரியப்படுத்த வேண்டியது தமிழக உள்துறையின் கடமை. கருணை மனு நிராகரிக்கப்பட்ட தகவல் உத்தியோகபூர்வமாகத் தெரிந்ததும் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூவரின் மரண நாள் நிச்சயிக்கப்படும்.
தூக்குத் தண்டனை என்பது சட்டப்படி செய்யும் கொலை. தூக்குத் தண்டனையை நடைமுறைப்படுத்தக் கூடாது என்று மனித உரிமை ஆர்வலர்கள் குரல் எழுப்பி வருகின்றனர். குற்றம் செய்தவர்களுக்குத் தண்டனை வழங்கவேண்டும். தண்டனைக் காலம் முடிந்த பின்னர் அவர்கள் திருந்தி வாழ்வதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் என்பது மனித உரிமை ஆர்வலர்களின் வாதம். பேரறிவாளன் சாந்தன், முருகன் ஆகிய மூவருக்கும் மரண தண்டனை விதிக்கக் கூடாது. 20 வருடங்களாக சிறை வாசத்தை அவர்கள் அனுபவித்துவிட்டார்கள். ஆகவே, அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்பது தமிழ் ஆர்வலர்களின் வாதம்.
ராஜீவ் கொலை வழக்கை விசாரிப்பதற்கு சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டது. இந்த வழக்கில் முக்கியமான சில தகவல்கள் மறைக்கப்பட்டு விட்டன. இக்கொலையின் சூத்திரதாரிகள் யார்? என்று அடையாளம் காணப்படவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. இந்தக் குற்றச்சாட்டுகள் செவிடன் காதில் ஊதிய சங்கு போல் உரியவர்களுக்குக் கேட்கவில்லை. மத்திய உள்துறை அமைச்சு அனுப்பிய தகவல் சிறைச்சாலைக்கு அனுப்பப்பட்டால் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் மரணத்துக்கான நாள் குறிக்கப்படடு விடும் என்பதனால் தமிழக முதலமைச்சர் மிகவும் நிதானமாக ஆராய்ந்து பார்த்து முடிவெடுத்தõர்.
ராஜீவ் கொலைக் குற்றவாளிகளில் கருணை மனு நிராகரிக்கப்பட்டதும் சகலரும் ஜெயலலிதாவை நோக்கித் திரும்பினார்கள். தமிழக முதல்வர் நினைத்தால் பொது மன்னிப்பு வழங்கலாம் என்று பரவிய செய்தி தமிழக அரசுக்கு மேலும் நெருக்கடியைக் கொடுத்ததும் காமராஜர் காலத்தில் மரண தண்டனை ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது. காமராஜரைப் போன்று ஜெயலலிதாவும் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்கலாம் என்ற கோஷம் வலுப்பெற்றது.
அரசியல் ரீதியாக நெருக்கடியை ஜெயலலிதாவுக்குக் கொடுப்பதற்காகவே 11 வருடங்களின் பின் கருணை மனு நிராகரிக்கப்பட்டிருக்கலாம் என்று கருத இடமுண்டு. ராஜீவ் கொலைக் குற்றச்சாட்டில் மரணதண்டனை விதிக்கப்பட்டிருப்பவர்கள் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள். புலி உறுப்பினர்கள் மூவரின் உயிரை ஜெயலலிதா காப்பாற்றிவிட்டார் என்ற குற்றச்சாட்டு ஜெயலலிதாவின் மீது சுமத்தப்படலாம். இரு தலைக் கொள்ளி எறும்பான நிலையில் தவித்த தமிழக முதல்வர் ஜெயலலிதா சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை செய்து மத்திய உள்துறை அமைச்சின் முடிவை வேலூர் சிறை அதிகாரிக்கு அறிவித்தார்.


பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியேõரின் தூக்குத் தண்டனை உறுதியானதும் தமிழ் ஆர்வலர்கள் அனைவரினதும் பார்வை ஜெயலலிதாவின் மீது திரும்பியது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், காங்கிரஸ் கட்சி ஆகியவற்றைத் தவிர ஏனைய கட்சிகள் அனைத்தும் ஓரணியில் நின்று மரண தண்டனை விதிக்கப்பட்ட மூவரின் உயிரைக் காப்பாற்ற வேண்டும் என்று ஜெயலலிதாவிடம் கோரிக்கை வைத்தன. தமிழகத்தின் உணர்வலைகள் ஜெயலலிதாவுக்கு கடும் நெருக்கடியைத் தோற்றுவித்தன. மரண தண்டனை ஒழிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறத்தி தஞ்சையில் செங்கொடி என்ற இளம் பெண் தீக்குளித்து தற்கொலை செய்தார். மேலும் இருவர் தீக்குளித்து தற்கொலை செய்ய முயற்சித்தனர்.
பேரறிவாளன், முருகன், சாந்தன், ஆகிய மூவரும் தமக்கு உயிர்ப் பிச்சையளிக்குமாறு உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்குதல் செய்தனர். ஜெயலலிதாவால் செய்ய முடியாததைத் நீதிமன்றம் செய்யும் என்ற நம்பிக்கை தமிழ் உணர்வாளர்களுக்கு ஏற்பட்டது. ஜெயலலிதாவின் மீது நம்பிக்கை இழந்தவர்கள் நீதிமன்றத்தின் முடிவை எதிர்பார்த்தார்கள்.
மத்திய அரசின் காய் நகர்த்ததலை நன்கு புரிந்து கொண்ட ஜெயலலிதா, ராஜீவ் கொலைக் குற்றவாளிகளின் மரணதண்டனையை ஆயுள்தண்டனையாக மாற்றவேண்டும் என சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றினர். ஜெலலிதாவின் மீது நம்பிக்கை இழந்தவர்களுக்கு தமிழ கசட்ட சபையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானம் சற்று ஆறுதலைக் கொடுத்தது. 2002 ஆம் ஆண்டு பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியேõரின் கருணை மனுவை அன்று தமிழக முதல்வராக இருந்த கருணாநிதியின் அமைச்சரவை நிராகரித்தது என்ற தகவலை ஜெயலலிதா வெளியிட்டு அம் மூவரின் மரண தண்டனையை உறுதிப்படுத்தியவர் கருணாநிதி என்று சுட்டிக் காட்டினார்.
பேரறிவாளன், சந்தன், முருகன் ஆகியோரின் சார்பின் இந்தியாவின் மிகப் பிரபலமான வழக்கறிஞராகிய ராம் ஜெத்மலானி ஆகியோர் ஆஜரானார்.
ராஜீவ் கொலைக் குற்றவாளிகளின் அப்பீல் மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் எட்டு வாரங்களுக்கு அவர்களின் மரண தண்ட னையை தள்ளிப் போட்டது. ஒன்பதாம் திகதி இறப்பதற்கு நாள் குறிக்கப்பட்ட மூவரின் உயிர் தற்காலிகமாகக் காப்பாற்றப்பட்டது. நீதிமன்றத்தில் இடைக்காலத் தடை தமிழக மக்களுக்கு நம்பிக்கையூட்டியுள்ளது.
மரண தண்டனை விவகாரத்தில் ஜெயலலிதாவுக்கு இன்னொரு நெருக்கடி காத்திருக்கிறது. ஊழல் வழக்கு ஒன்றில் குற்றவாளியாகக் காணப்பட்ட ஜெயலலிதாவுகு இரண்டுவருட சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அப்போது அதை எதிர்த்து அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆதரவாளர்கள்ஆர்ப்பாட்டம் செய்தார்கள். சில இடங்களில் ஆர்ப்பாட்டம் வன்செயலாக மாறியது. கோவை, வேளாண் கல்லூரி மாணவிகள் சுற்றுலா சென்ற பஸ் தர்மபுரியில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆதரவாளர்களினால் தீக்கிரையாக்கப்பட்டது. அந்தச் சம்பவத்தில் கோகிலவாணி, காயத்திரி, ஹேமலதா என்ற மூன்று மாணவிகள் பஸ்ஸினுள் கருகி பலியானார்கள்.
தர்மபுரி எரிப்பு வழக்கில் குற்றவாளிகளாகக் காணப்பட்ட நெடுஞ்செழியன், மாது, முனியப்பன் ஆகிய மூவருக்கும் சேலம் நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. இம்மூவரின் மேன்முறையீடுகள் அனைத்தும் நிராகரிக்கப்பட்டன. இவர்களின் கருணை மறு ஜனாதிபதியின் அலுவலகத்தில் உள்ளது. இவர்களின் கருணை மனு ஜனாதிபதியால் நிராகரிக்கப்பட்டால் ஜெயலலிதாவின் நகர்வு எப்படி இருக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது. தனது கட்சிக்காரர்களைக் காப்பாற்றுவதா? கைவிடுவதா? என்ற இக்கட்டான சூழல் அவருக்கு எழக்கூடும்.
இந்திய நாடாளுமன்றத் தாக்குதலில் சம்பந்தப்பட்ட குற்றவாளியான அப்சல் குருவின் கருணை மனு நிராகரிக்கப்பட்டு விட்டது. இது இந்திய அரசியலின் அடுத்து வரப்போகும் புயலுக்கு எதிர்வு கூறலாக உள்ளது. மும்பைத் தாக்குதல் குற்றவாளி அஜ்மலின் கருணை மனு ஜனாதிபதி மாளிகையில் தூங்குகிறது. அஜ்மலின் கருணை மனு நிராகரிக்கப்பட்டால் இந்தியா பாகிஸ்தான் முறுகல் நிலை மேலும் தீவிரமடையும்.

வர்மா
சூரன்.ஏ.ரவிவர்மா
வீரகேசரிவாவாரவெளியீடு04/09/11






No comments: