ரவிவர்மாவின் வடக்கே போகும் மெயில் சிறுகதைத் தொகுதி வெளியீட்டு விழா 20 ஆம் திகதி சனிக்கிழமை கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்றபோது வீ.தேவராஜ் ஆற்றிய தலைமை உரை…
தர்க்கங்களால் வெல்ல முடியாமல் தோற்றுப்போகின்றவன் அவதூறுகளை ஆயுதமாகக் கையில் எடுக்கின்றான்.
- சோக்கிரட்டீஸ்.
சாக்கிரட்டீஸ் கூறியது போன்று தர்க்கங்களால் வெல்ல முடியாது தோற்றுப் போகின்றவன் அவதூறுகளை மாத்திரம் கைகளில் எடுக்கவில்லை.இனந் தெரியாதோர் என்ற முகமூடிக்குள் மறைந்து கொண்டு கருத்தியல் உருவாக்கத்திற்கெதிரான போரினையும் பிரகடனப்படுத்தியுள்ள காலகட் டத்திற்குள் ஊடகத்துறை இலங்கையில் பயணித்துக் கொண்டிருக்கின்றது.
இவ்வாறான கருத்தியல் உருவாக்கத்திற்கு எதிரான போருக்கு உதயன் பத்திரிகை இலக்காகியுள்ளது.
தமிழ் மக்கள் புதுவருடப் பிறப்பை “இனந்தெரியாதேரால் பிரகடனப் படுத்தப்பட்டுள்ள” தமிழர் சார்ந்த கருத்தியல் உருவாக்கத்திற்கு எதிரான போருடன் தொடங்கியுள்ளனர்.
அத்தகைய ஒரு சூழ் நிலையில்தான் நாம் இன்று திரு.ரவிவர்மா அவர்களின் கருத்துருவாக்கத்தில் பிரசவித்துள்ள “வடக்கே போகும் மெயில்” என்ற நூல் குறித்த நிகழ்வில் ஒன்று கூடியுள்ளோம்.
இன்று இரு நிகழ்வுகள் ஒன்றிணைத்து நடத்தப்படுகின்றன.
பத்திரிகை ஆசிரியா,; மொழி பெயர்ப்பாளர், இலக்கிய கர்த்தா என பன்முக ஆளுமை கொண்ட தினகரன் பத்திரிகையின் முன்னாள் பிரதம ஆசிரியர் மறைந்த ராஜ ஸ்ரீ காந்தன் அவர்களின் நினைவு நிகழ்வும்; நண்பர் சூரன் ஏகாம்பரம் ரவிவர்மா அவர்களின் “வடக்கே போகும் மெயில்” என்ற சிறுகதைத் தொகுதி நூல் வெளியீடும் ஒன்று சேர நடைபெறுகின்றது.
மறைந்த ராஜ ஸ்ரீ காந்தன் அவர்களுடன் பத்திரிகைத் துறை சார்ந்த குறுகிய கால பரிச்சயமே எனக்கு உண்டு. ஆனால் அவர் குறித்து நிறையவே அறிந்து வைத்துள்ளேன்.
சிறுகதை எழுத்தாளர், மொழி பெயர்ப்பாளர், இலக்கியவாதி, கவிஞன், விமர்சகர், மதிப்பாய்வாளர் என பல தளங்களில் பணியாற்றி பன்முக ஆளுமைகளுக்குச் சொந்தக்காரன் இவர் இத்தகைய பன்முக ஆளுமைகளுடனேயே அவர் பத்திரிகைத் துறைக்குள் நுழைந்தார்.
அவர் தனது சமகாலத்தில் வாழ்ந்த ஆங்கில இலக்கிய மேதையான அழகு சுப்ரமணியத்தின் ஆங்கிலச் சிறுகதைகளையும் வெளிவராத “மிஸ்ரர் முன்” நாவலையும் தமிழ் உலகுக்குத்தந்தவர்.
அவர் பற்றிய நினைவுப் பேருரையை அவரது நெருங்கிய நண்பரும் பிரபல எழுத்தாளரும் கவிஞருமான மேமன் கவி நிகழ்த்தவுள்ளார்.
திரு .மேமன் கவியும் நண்பர் முருகபூபதியும் மறைந்த ராஜ ஸ்ரீ காந்தனின் நெருங்கிய நண்பர்கள்.
“நினைவுகளுக்கு மரணமில்லை என்பதை மீண்டும் அனுபவப+ர்வமாக உணர்த்தியது நண்பரின் இழப்பு என நண்பர் முருகப+பதி ராஜ ஸ்ரீ காந்தன் நினைவுகள் என்ற தனது நூலில் குறிப்பிட்டுள்ளார்.
இதே நூலின் கடைசிப் பக்கத்தில் மேமன் கவி அவர்கள் எழுதியுள்ள அணிந்துரையில்
“ஒரு உயிரை மரணம் உடலால் அழைத்துச் சென்றாலும் அந்த உயிர் வாழும் நெஞ்சங்களில் அழியாத ஞாபகமாய் இருந்து வாழ்ந்து கொண்டே இருக்கும். அப்படியும் அந்த உயிர் இலக்கிய நெஞ்சமாக அமைந்துவிட்டால் அந்த உயிர் எழுத்து உடலை அணிந்து ஓர் ஆவண வடிவில் மேலும் ஓர் அமரத்துவநிலை அடைந்து மரணத்தை தோல்வியடையச் செய்கின்றது” என குறிப்பிடுகின்றார்.
அதாவது மரணத்தை வென்று வாழும் மனிதனாக மறைந்த ராஜ ஸ்ரீ காந்தன் வாழ்கின்றார் என்று கூறுகின்ற மேமன் கவி அவர்களின் நினைவுப் பேருரையில் நிறையவே நாம் அறிந்து கொள்ளலாம்.
மேமன் கவி அவர்களின் நினைவுப் பேருரை இருப்பதால் ராஜ ஸ்ரீ காந்தன் பற்றி ஒரு விடயத்தை மாத்திரம் இங்கு குறிப்பிட விரும்புகின்றேன்;.
மறைந்த ராஜ ஸ்ரீ காந்தன் அவர்கள் தினகரன் பத்திரிகையின் பிரதம ஆசிரியராகப் பதவியேற்றபோது
“நேற்று எம்மிடம் இல்லை, நாளை எப்படியோ தெரியாது. ஆனால் கைவசம் இருப்பது “இன்று”.
இன்று இப்படி ஒரு பதவி கிடைக்கும் என எதிர்பார்க்கவில்லை.
நெருங்கிய இலக்கிய நண்பர்களுடன் ஆலேசித்துவிட்டே பொறுப்பேற்கின்றேன் என்று கூறியதாக ராஜ ஸ்ரீ காந்தன் நினைவுகள் என்ற நூலில் நண்பர் முருகபூபதி குறிப்பிட்டுள்ளார்.
நான் அடிக்கடி ஆண்டவனிடம் விண்ணப்பித்துக் கொள்வதுண்டு.
“ஆண்டவரே நான் எனது எதிரிகளைப் பார்த்துக் கொள்கின்றேன்.நீ எனது நண்பர்களைப் பார்த்துக்கொள்” என்பதுதான் அந்த விண்ணப்பம்.
இதுபற்றி நான் எனது பத்தியிலும் எழுதியுள்ளேன்.
இதனை இங்கு குறிப்பிடுவதற்கு காரணம் உள்ளது.
அதாவது மறைந்த ராஜ ஸ்ரீ காந்தன் அவர்கள் மறைவதற்கு முன்பே சக பத்திரிகை நண்பர்களால் சாய்க்கப்பட்டவர் என்ற உண்மையை இங்கு பதிவு செய்ய விரும்புகின்றேன்.அதாவது இலக்கிய நண்பர்கள் கைகொடுக்க பத்திரிகை நண்பர்கள் காலை வாரிவிட்டனர் என்ற உண்மை சாகடிக்கப்படக் கூடாது என்பதற்காக இங்கு இதனைக் குறிப்பிடுகின்றேன்.
இனி நான் இன்றைய இந்த நிகழ்வின் கதாநாயகன் பற்றிப் பார்ப்போம்.
நண்பன் சூரன் ஏகாம்பரம் ரவிவர்மா போர்க்குணம் கொண்ட சமூக நீதிக்காகவும் வேள்விகளுக் எதிராகவும் போர்க் கொடி தூக்கிய சூரன் அவர்களின் பேரனாகும். சூரன் அவர்கள் சைவத்தை நிலைநிறுத்தவும் பாடுபட்டவராவார். சூரன் அவர்களின் வழித்தோன்றலாகையினால் இயற்கையாகவே ரவிவர்மாவுக்கு போர்க் குணம் மிகுந்து காணப்படுகின்றது.
நான் இங்கு சூரன் ஏகாம்பரம் ரவிவர்மா என்று குறிப்பிட்டதற்கு முக்கிய காரணம் உண்டு.
நாம் அனைவரும் அம்பேத்காரர் பற்றி நிறையவே கேள்விப்பட்டுள்ளோம். இந்திய அரசியல் யாப்பின் பிதாமகன் அவர். அவர் தனது “யால்டா” பிரகடனத்தில்.
“நான் தாழ்த்தப்பட்ட இந்துவாகப் பிறந்தேன் இதைத் தடுத்து நிறுத்துவது என்பது என் ஆற்றலுக்கு அப்பாற்பட்டது. ஆனால் உறுதியாக நான் உங்களுக்கு ஒரு விடயத்தைக் கூறுகின்றேன். நூன் இறக்கும்பொழுது இந்துவாக இறக்கமாட்டேன்” என்று குறிப்பிட்டு இலட்சக்கணக்கான தனது மக்களோடு பௌத்த மதத்தைத் தழுவினார்.
அம்பேத்கரைப் பொறுத்து சமூக அடக்கு முறைக்கு எதிரான போராட்டத்தில் மதம் மாறுவதே மாற்றுவழி எனக் கூறி பௌத்த மதத்தைத் தழுவிக்கொண்டார்.
ஆனால் யாழ். வடமராட்சி கரவெட்டியில் பிறந்த சூரன் சமூக அநீதிகளுக்கு எதிராகவும் மிருக வதை வேள்விக்கு எதிராகவும் குரல் கொடுத்ததுடன் இவற்றுக்கு எதிராக தீரமுடன் போராடினார்.
சூரன் அவர்கள் சமூக அநீதிகளுக்கு எதிராகவும் அடக்கு முறைக்கு எதிராகவும் மதம் மாறுவதற்கு முன்வரவில்லை. ஒருபுறம் ஆறுமுக நாவலர்களின் வழித்தோன்றல்களின் கொடூரமான உரிமை மறுத்தல்கள் மறுபுறம் ஆட்சி அதிகாரத்தைக் கொண்டிருந்த கிறிஸ்தவ மத மாற்றங்கள் ஆகிய இருபக்க நெருக்குதல்களுக்கு மத்தியில் சைவத்தை உறுதியாகக் கடைப்பிடித்து வாழ்ந்தவர்.
சூரன் அவர்கள் அம்பேத்காரரைப் போன்று சமூக அநீதி அடக்கு ஒடுக்கு முறைகளுக்கு எதிராக மதம் மாற முன்வரவில்லை. இவர் வழி வந்தவர் தான் ரவி வர்மா என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
ரவிவர்மா 1997 ஆம் ஆண்டு தினக்குரலில் ஒப்பு நோக்காளராக இணைந்து பின் பத்திரிகையாளராக பணிபுரிந்தார். பின்னாலில் இடி, சுடரொளி ஆகிய பத்திரிகைகளிலும் பணியாற்றியுள்ளார்.
2003 ஆம் ஆண்டு மெட்ரோ நியூஸ் பத்திரிகையில் இணைந்து கொண்டார்.
என்னைப் பொறுத்து திறமை எங்கிருக்கின்றதோ அதனை இனங்கண்டு தூண்டுகோலாக இருந்து ஊக்குவிப்பதில் நான் அதிக சிரத்தை எடுப்பவன். அவ்வாறானவர்கள் தமது திறமைகளை வெளிக்காட்ட ஏதுவாக பத்திரிகைகளின் பக்கங்களைத் திறந்து விடுவதும் அவர்களுக்கு உற்சாகம் ஊட்டி ஊக்குவிப்பதிலும் நான் மிகுந்த அக்கறை காட்டுபவன்.
அதற்கு வசதியாக வீரகேசரி வாரவெளியீடு, மித்திரன் வாரமலர், மெட்ரோ நியூஸ் தினசரி, வாரவெளியீடு ஜுனியஸ் என 5 பத்திரிகைகள் கைவசம் இருந்தன. நண்பர் ரவிவர்மாவைப் பொறுத்து அனைத்துப் பத்திரிகைகளிலும் தனது பங்களிப்பைச் செய்து வந்தார்.
உள் நாட்டு அரசியல், தமிழக அரசியல் என அரசியல் கட்டுரைகளை எழுதியுள்ளார்.
சினிமா விளையாட்டு ஆகிய துறைகளில் அவர் நடமாடும் தகவற் களஞ்சியம்.
தமிழ் சினிமாவை வித்தியாசமான நோக்கில் பார்ப்பவர்.
மித்திரனில் வெளிவரும் சினிப்பிரியன் கேள்வி பதில்கள் பகுதிக்குச் சொந்தக்காரன்.
அரசியல் சினிமா விளையாட்டு ஆகிய துறைகளுக்கப்பால் ஆன்மீகம் இலக்கியம் என பல துறைகளில் அகலக் கால் பதித்தவர்.
மேற்படி துறைகளில் வெறுமனே கால்களை மட்டும் பதிக்கவில்லை. அந்தத் துறைகளில் முத்திரையையும் பதித்தவர்.
அதற்குச் சான்றாக பல விருதுகளைப் பெற்றவர். அதே வேளையில் பலர் விருது பெற காரண கர்த்தாவாகவும் இருந்துள்ளார்.
இவரது எழுத்துக்கள் சுடர், வீரகேசரி, தினக்குரல், சுடரொளி, இடி, ஈழநாடு, தாயகம், மல்லிகை, ஜீவநதி, மெட்ரோ நியூஸ், ஆகிய சஞ்சிகைகளிலும் பத்திரிகைகளிலும் வெளிவந்துள்ளன.
ஆனந்த விகடன், யுத் புல் இணையத்தளம், கனடாவில் இருந்து வெளிவரும் யாதும் சஞ்சிகை ஆகியவற்றிலும் இவர் எழுதியுள்ளார்.
வடக்கே போகும் மெயில் என்ற ரவி வர்மாவின் சிறுகதைத் தொகுப்பில் 16 கதைகள் இடம் பெற்றுள்ளன.
கதைகளின் அமைப்பு, ஓட்டம், முடிவு என்பன அபாரமாக உள்ளன.
அனைத்துக் கதைகளுமே எதிர் பாராத முடிவுகளையும் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
மொத்தத்தில் ரவி வர்மாவின் இந்தக் கதைத் தொகுதியில் இடம் பெற்றுள்ள பெரும்பாலான கதைகள் படிப்பினையூட்டுவதாக் தமிழ் மக்களின் அரசியல், சமூக வக்கிரங்களை போட்டுடைப்பதாக உள்ளன.
ஒரு முறை இந்தக் கதைகளை வாசித்தால் இக் கதைகளில் வரும் பாத்திரங்களும், சம்பவங்களும் நினைவலைகளில் என்றும் நிழலாடிக் கொண்டிருக்கும்.
இந்தச் சிறுகதைத் தொகுதி நண்பர் ரவிவர்மாவை ஒரு முழுமையான இலக்கியக் கர்த்தாவாக இனம் காட்டியுள்ளது.
ஆனால் அவரது திறமைகளை பத்திரிகை உலகம் விழுங்கிவிட்டது.
இனிவரும் காலங்களில் ரவிவர்மா தனது எஞ்சிய காலத்தின் பெரும் பகுதியை இலக்கியத்திற்கென அர்ப்பணித்து நல்ல ஒரு இலக்கிய கர்த்தாவாக முத்திரை பதிக்க வேண்டுமென வாழ்த்துகின்றேன்.
No comments:
Post a Comment