இந்திய நாடாளுமன்றத் தேர்தலை முன்னிலைப்படுத்தி தமிழக அரசியல் கட்சிகள் காய் நகர்த்த தொடங்கி விட்டன. காங்கிரஸ் கூட்டணியிலிருந்து வெளியேறிய திராவிட முன்னேற்றக்கழகம் தனது மதிப்பை உயர்த்துவதற்கு முயற்சி செய்கிறது. இலங்கைக்கு எதிரான ஜெனீவாப் பிரேரணைக்கு ஆதரவாக இந்தியா வாக்களிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுத்த கருணாநிதி, திடுதிப்பென காங்கிரஸ் கூட்டணியிலிருந்து வெளியேறி காங்கிரஸுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தார்.
இலங்கையில் நடைபெற்ற யுத்தத்தில் இந்திய மத்திய அரசு அதிக பங்களிப்பு வழங்கியதால் மத்திய அரசில் இருந்து திராவிட முன்னேற்றக்கழகம் வெளியேறியதை மகிழ்ச்சியுடன் தொண்டர்கள் கொண்டாடினார்கள். திராவிட முன்னேற்றக்கழக ஆதரவாளர்களின் எதிர்பார்ப்பை கருணாநிதி நிறைவு செய்து விட்டார் என்ற மகிழ்ச்சி நீடிப்பதற்கிடையில் மிகப் பெரியதொரு திருப்பத்தை ஏற்படுத்தி விட்டார் ஜெயலலிதா. தமிழீழத்திற்கான பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று சட்ட சபையில் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பி வைத்துள்ளார் ஜெயலலிதா. இந்தத் தீர்மானத்தினால் தமிழ் ஆர்வலர்களின் பார்வை ஜெயலலிதாவின் மீது விழுந்துள்ளது. ஜெயலலிதாவின் தீர்மானத்தை மத்திய அரசு அவசர அவசரமாக நிராகரித்து விட்டது. தமிழக அரசு நிறைவேற்றிய தீர்மானத்தை மத்திய அரசு நிராகரித்ததையிட்டு ஜெயலலிதாவும் தமிழ் ஆர்வலர்களும் கவலைப்படவில்லை.
இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணை தேவை. ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் விளையாடும் இலங்கை வீரர்கள் தமிழகத்தில் விளையாடக்கூடாது போன்ற அறிவிப்புகளால் ஜெயலலிதா தனது செல்வாக்கினை உயர்த்தியுள்ளார். இந்திய நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் தமிழகத்திலும் புதுவையிலும் தனித்துப் போட்டியிடப் போவதாக அறிவித்த ஜெயலலிதா கடைசி நேரத்தில் கூட்டணி சேர்வதற்கான வாய்ப்பை நிராகரிக்க மாட்டார். தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு எதிரான நிலைப்பாட்டில் மிக உறுதியாக இருந்த ஜெயலலிதா தமிழீழம் அமைய வேண்டும் என்று உரத்துக் குரல் கொடுத்து வருகிறார்.
காவேரி முல்லைப்பெரியாறு அணைப்பிரச்சினை ஆகியவற்றின் காரணமாக மக்கள் மத்தியில் ஜெயலலிதாவின் செல்வாக்கு உயர்ந்துள்ளது. அத்தியாவசியப் பொருட்களின் விலை ஏற்றம், மின் வெட்டு ஆகியவற்றினால் ஜெயலலிதாவுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
வைகோவுடனும் இடது சாரிகளுடனும் இணைந்து நாடாளுமன்றப் பொதுத் தேர்தலுக்கு ஜெயலலிதா முகம் கொடுக்கலாம்கூட்டணி இல்லாது
தேர்தலில் வெற்றி பெற முடியாது என்பதை ஜெயலலிதா உணர்ந்து விட்டார்.
இந்தியாவின் அடுத்த பிரதமர் என்ற கனவில் மிதக்கும் ஜெயலலிதாவுக்கு வில்லனாக மாறியுள்ளார் நரேந்திரமோடி. இந்தியாவின் அடுத்த பிரதமராகும் தகுதி யாருக்கு உள்ளது என்று தமிழகத்தின் பிரபல சஞ்சிகை நடத்திய கருத்துக்கணிப்பில் மோடி முதலிடத்தில் உள்ளார். இரண்டாவது இடத்தில் ஜெயலலிதாவும் மூன்றாவது இடத்தில் அத்வானியும் உள்ளனர். காங்கிரஸ் கட்சியின் நம்பிக்கை நட்சத்திரமான ராகுல்காந்தி நான்காவது இடத்தில் உள்ளார். தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு செல்வாக்கு இல்லை என்பதை இக்கருத்துக்கணிப்பு வெளிக்காட்டுகிறது.
காங்கிரஸ் கூட்டணியிலிருந்து வெளியேறிய கருணாநிதி விஜயகாந்தை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார். இலங்கைக்கு ஆதரவான மாணவர்களின் எழுச்சி அலையினால் தமிழக அரசியல் கட்சிகள் காங்கிரஸுடன் கூட்டணி சேர முடியாத நிலை உள்ளது. ஆகையால் விஜயகாந்த் திராவிட முன்னேற்றக்கழகத்துடன் கூட்டணி சேர்வார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் தலை எடுக்க முடியாத சூழ்நிலை தோன்றியுள்ளது.
இந்திய விடுதலைக்காக குரல் கொடுத்த காங்கிரஸ் கட்சி இலங்கைத் தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தை நசுக்க உதவியதால் தமிழக மக்களிடமிருந்து அந்நியப்பட்டுள்ளது காங்கிரஸ் கட்சி.
ஸ்பெக்ரம் முறைகேடு ஊழல் என்பனவற்றினால் தான் திராவிட முன்னேற்றக்கழகம் தமிழக அரசைப்பறிகொடுத்தது. இந்த முறைகேட்டுக்கு முன்னாள் மத்திய அமைச்சர் ஆர்.ராசா மட்டும் பொறுப்பல்ல என்பதை வெளிப்படுத்துவதற்கு திராவிட முன்னேற்றக்கழகம் முயற்சி செய்கிறது. மத்திய அரசின் வழிகாட்டலில் தான் ராசா செயற்பட்டார் என்ற ரீதியிலேயே திராவிட முன்னேற்றக்கழகம் கருத்துத் தெரிவித்து வருகிறது. திராவிட முன்னேற்றக்கழகத்தின் நடவடிக்கையினால் காங்கிரஸ் கட்சி அதிர்ச்சியடைந்துள்ளது.
மத்திய பிரதேசம், சத்தீஷ் கார், சண்டிகார் ஆகிய சட்ட சபைத் தேர்தல்கள் இந்த ஆண்டு நடைபெற உள்ளது. நாடாளுமன்றப் பொதுத்தேர்தலுக்கு முன் நடைபெறும் இத்தேர்தலில் வெற்றியே. எதிர்கால இந்திய மத்திய அரசை உறுதி செய்யும் தேர்தலாக அமையும். ராகுல் காந்தியை நம்பி காங்கிரஸ் கட்சி நாடாளுமன்றம் பொதுத்தேர்தலைச் சந்திக்கத் தயாராக உள்ளது. காங்கிரஸ் கூட்டணியிலிருந்து திராவிட முன்னேற்றக்கழகம் வெளியேறியதற்கு ராகுல் காந்தியும் ஒரு காரணம்.
திராவிட முன்னேற்றக்கழகத்தலைவர் கருணாநிதிக்கு மதிப்புக் கொடுக்காமை கூட்டணிக் கட்சித் தலைவருக்கு உரிய மரியாதை கொடுக்காமை என்பன ராகுல் காந்தி மேல் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களாகும்.
குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை முன்னிறுத்தி பொதுத்தேர்தலுக்குத் தயாராகிறது பாரதீய ஜனதாக் கட்சி. முக்கிய முடிவு எடுக்கும் நாடாளுமன்றக்குழு உறுப்பினராக மோடி நியமனம் பெற்றுள்ளார். ராகுல் காந்தி உமாபாரதி ஆகியோருக்கும் முக்கிய பதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
மூத்த தலைவரான ஜஸ்வந்த்சிங்காவுக்கு முக்கிய பதவி வழங்கப்படவில்லை.
இந்திய மத்திய அரசுக்கும் இலங்கை அரசுக்கும் எதிராக பாரதீய ஜனதாக்கட்சி நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பியதால் தமிழக மக்களின் பார்வை பாரதீய ஜனதாக்கட்சியின் மீது விழுந்துள்ளது.
No comments:
Post a Comment