Saturday, February 15, 2014

சுதேச மருத்துவம் பற்றிய இலங்கைத்தமிழ் நூல்கள்


நோய்க்கான காரணம், நோயின் தன்மை, நோய் இல்லாது வாழ்வது எப்படி?, நோயைத் தீர்க்கும் வழிமுறை என்பன பற்றிய குறிப்புகள்  ஏட்டுச்சுவடுகளில் இருந்தன. அவற்றை ஆராய்ந்து நூல் வடிவில் பதிப்பத்ததில் சி.வை.தாமோதரம்பிள்ளை, உ.வே.சாமிநாதய்யர் போன்ற பல அறிஞர்கள் முன்னிலை வகிக்கின்றனர். சுதேச மருத்துவ நூல்கள் பற்றிய ஆய்வு மூலம் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கலாநிதிப்பட்டம் பெற்றவர் கனகசபாபதி நாகேஸ்வரன். அவருடைய ஆய்வுக்கட்டுரை "சுதேச மருத்துவம் பற்றிய இலங்கைத்தமிழ் நூல்கள்  பொருள் மரபும் இலக்கிய வளர்ச்சியில் அவற்றின் பங்கும்" என்னும் நூலாக வெளிவந்துள்ளது.
பரராசசேகரம், செகராசசேகரம், அமுதாகரம், இருபாலைச் செட்டியார், சர்ப்பசாஸ்திரம் போன்ற தமிழ் நூல்களைப் பற்றிய இவரது ஆய்வு இலக்கியம், மருத்துவம், சாஸ்திரம் ஆகியவற்றின் பெருமையை உணர்த்துகிறது.

ஆரியச்சக்கரவர்த்திகள் காலம்வரையான இலங்கைத் தமிழர் வரலாறும் தமிழ் இலக்கிய முயற்சிகளும், பரராசசேகரம் அமைப்பும், பொருளடக்கமும், இந்திய மருத்துவ  நூலாசிரியர்களும், மருத்துவ நூல்கள் குறித்த சிறு விளக்கமும், ஈழத்து மருத்துவ நூல்களில் அவற்றின் தாக்கமும், செகரராசசேகரம், பரராசசேகரம் ஒரு ஒப்பீடு, பரராசசேகரத்தின் இலக்கிய நோக்கு, பயில் முறையில் செகரராசசேகரம், பரராசசேக ரம், அமுதாகரம் ஆகியவை வகிக்கும் முக்கியத்துவம்   பற்றியே இவர் ஆய்வு செய்துள்ளார். 
மருத்துவ நூல்களின்  ஆய்வு என்றில் லாது இலங்கை வரலாற்றையும் தொட்டுள் ளார். ஆரியச்சக்கரவர்த்தி கால இலங்கைத் தமிழர் இலக்கியம் என்பனவற்றை  விரிவாக எடுத்துரைக்கிறார்.

 திருமந்திரம், தேவாரம், திருப்புகழ்  ஆகியவற்றில் உள்ள நோய் தீர்க்கும் பாடல்கள் மூலம் அன்றைய மருத்துவ முறைகளைத் தெரியக்கூடிய சந்தர்ப்பம் உள்ளது என்பதை ஆசிரியர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆயுள்வேதம், சித்தவைத்தியம், யுனானி வைத்தியம் என வைத்தியவகை வேறுபட்டிருந்தாலும் தமிழர்களின்  சுதேச வைத்திய முறையே முதன்மையானது. காதுகுத்துதல், முடி இறக்குதல் போன்றவையும் வைத்தியத்துடன் சம்பந்தப்பட்டவையே. ஆண்  குழந்தைக்கும் பெண் குழந்தைக்கும்  காதுக்குத்துவதில் வித்தியாசம் உள்ளது. ஆண்  குழந்தைக்கு முதலில் வலது காதையும் பெண் குழந்தைக்கு  முதலில் இடது காதையும்  குத்தவேண்டும் என்பதை அறியமுடிகிறது.

தாகம் கொண்டவன் உடனே சாப்படுவது கூடாது. பசித்தவன் தண்ணீர் குடிக்கக் கூடாது. தாகம் கொண்டவனுக்கு   சாப்படுவ தால்  குல்ம நோய் (வயிற்றில் உண்டாகும் ஒருவித கட்டி)  உண்டாகும். பசித்தவன் தண்ணீர் குடித்தால் ஐலோதரவியாதி (வயிற்றில் நீர்க்கோர்வை) உண்டாகும்.
நோயற்ற வாழ்வுக்கு

காலை இஞ்சி கடும் பகல் சுக்கு  
மாலை  கடுக்காய் மண்டலம் தின்போர் 
கோலை ஊன்றி குறுக நடப்பனும் 
காலை வீசி கடுகநடப்பரே 

மருத்துவர்களின் வாயில்  நிலவும் பாடல்.

வெங்காயம் சுக்கானால் வெந்தயத்தால் ஆவதென்ன
  இங்கார் சுமந்திருப்பாரின் சரக்கை 
மங்காத சீரகத்தைத் தந்தீரேல் தேடேல்   
பெருங்காயம் ஏரகத்துச் செட்டி யாரே.

மருத்துவத்துடன் தொடர்புடைய பதினெண் சித்தர்கள், முனிவர்கள் பற்றிய குறிப்புகளையும் ஆய்வு செய்துள்ளார். மருத்துவம் சம்பந்தமான பழமொழிகள் சிலவற்றையும் பட்டியலிட்டுள்ளார்.
யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, திருகோண மலை மரபுவழி வைத்தியர்கள் பற்றிய தகவல்கள் உள்ளன.
நோயை துல்லியமாகக் கண்டறிவதற்கு சுதேச வைத்தியர்கள்  சிலமுறைகளை வைத்துள்ளனர். அவற்றின் மூலம் நோயை யும் அதன் வீரியத்தையும் துல்லியமாகக் கணிப்படுவார்கள். நாடிபடித்து அறிதல், ஸ்பரிச உணர்ச்சி  மூலம் அறிதல், உடலின் தன்மை காணல் (வெப்பம், குளிர்ச்சி, பருமன்) ஒலி, பேச்சின் ஒலி கொண்டு அறிதல், கண்தோற்றம் ! கண்நிற மாற்றத் தைக்கொண்டு நோயறிதல், நாக்கின் மூலம் நாக்கில் வெண்மை படிந்திருப்பதன் மூலம் அறிதல், மலத்தின் தன்மை கொண்டறிதல்.
சுதேச மருத்துவம் பற்றிய இலங்கைத் தமிழ் நூல்கள் பொருள் மரபும் இலக்கிய வளர்ச்சியில் அவற்றின் பங்கும் எனும் இந்த நூல் போற்றிப் பாதுகாக்கவேண்டிய பொக்கிஷம். 

சூரன்  
சுடர் ஒளி 09/02/14


No comments: