Monday, February 24, 2014

அரசியலான நீதிமன்ற தீர்ப்பு


ராஜீவ் காந்தி கொலைவழக்கில் தூக்குத் தண்டனையை  எதிர்பார்த்துக் காத்திருந்த முருகன்,பேரறிவாளன் சாந்தன் ஆகிய மூவருக்குமான  மரணதண்டனைத் தீர்ப்பை இரத்துச் செய்த நீதிமன்றம் அவர்களின் விடுதலையை தமிழக அரசின் தலையில் சுமத்தியது. பெப்ரவரி 18ஆம் திகதி நீதி மன்றம் வழங்கிய சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இத்தீர்ப்பு உலகெங்கும் உள்ள தமிழ் மக்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியது.

மரணத்தின் வருகையை எதிர் பார்த்திருந்த மூவரும் தப்பிவிடுவார்கள் என்ற நிம்மதிப்பெருமூச்சு தமிழர் மத்தியில் நிலவியது. 134 நாடுகள் தூக்குத்தண்டனையை ஒழித்து விட்டன. 58 நாடுகள் தூக்குத்தண்டனையை அமுல்படுத்துகின்றன. தூக்குத்தண்டனையை உலகில் இல்லாமல் செய்யவேண்டும் எனப்  பல இயக்கங்கள் குரல் கொடுத்துவரும் வேளையில்  சத்தியத்தை உலகுக்குப் போதித்த காந்தி மகான் பிறந்த நாட்டை ஆட்சி செய்பவர்கள் மன்னிப்பு வழங்கத் தயாராக இல்லை.

நீதிமன்றத்தீர்ப்பு வெளியானதும் அனைவரினதும் பார்வை தமிழக முதல்வர் ஜெயலலிதாவை நோக்கித் திரும்பயது. ஜெயலலிதா என்ன செய்யவேண்டும் என்று பலரும் ஆலோசனை தெரிவித்தார்கள். சிலர் வேண்டுகோள் விடுத்தனர். கருணாநிதியும் தன் பங்குக்கு ஜெயலலிதாவுக்கு ஆலோசனை கூறினார்.முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூவரையும் உயிருடன் மீட்க வேண்டும் என்பதில் மிகக்கடுமையாக உழைத்தவர் வைகோ. இந்த வழக்குக்காக அவர் டில்லிக்கும் சென்னைக்குமிடையே பறந்த தூரம் மிக அதிகம். இந்தியாவின் மிகப் பிரபலமான சட்டவல்லுனரான ராம்ஜத்மலானியை வாதாடுவதற்காக அழைத்ததில் வைகோவின் பங்கு முக்கியமானது.

அதிரடியாக முடிவெடுக்கும் ஜெயலலிதாவின் அறிவிப்பு முருகன், சாந்தன்,பேரறிவாளன் உட்பட ஆயுள் கைதிகளாக  இருக்கும் நளினி, ரொபேட் பயாஸ், ஜெயக்குமார்,ரவிச்சந்திரன் ஆகிய ஏழு பேரையும் விடுதலைசெய்யத் தீர்மானித்திருப்பதாக அறிவித்து ஜெயலலிதா மத்திய அரசுக்கு மூன்றுநாள் தவணை விதித்தார்.ஜெயலலிதாவின் மிரட்டலை  மத்திய அரசு மிகப் பாரதூரமாகக் கருதியது. மத்திய அரசை மாநில அரசு மிரட்டிப் பணியவைக்கும் முன் மாதிரிக்கு இடம்கொடுக்க விரும்பாத மத்திய அரசு, ஏழு கைதிகளின் விடுதலையை எதிர்த்து மனுத்தாக்கல் செய்துள்ளது. ஜெயலலிதா ஆற அமர்ந்து யோசிப்பதற்காக  இரண்டுவார காலஅவகாசம் கொடுத்த நீதிமன்றம் பதிலளிக்கும்படி
கேட்டுவிட்டது.
1991ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் ஜெயலலிதா, ராஜிவ்காந்தியுடன் கூட்டணி சேர்ந்து போட்டியிட்டார். ராஜிவ்காந்தி யின்  படுகொலை எதிர்பாராத விதமாக ஜெயலலிதாவுக்கு பெரிய வெற்றியைத் தேடிக் கொடுத்தது.ராஜீவின் படுகொலைதான் தன்னை முதல்வராக்கியதென்பதைக் காலப்போக்கில் மறந்துவிட்டார் ஜெயலலிதா. 23 வருடங்களின் பின்னர் ராஜீவ் கொலையில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் விடுதலை தமிழக அரசியலில் இன்னொரு புயலை உருவாக்கப் போகிறது.ராஜீவ் காந்தி கொலை வழக்கை விசாரிப்பதற்கு சிறப்பு புலனாய்வுக்குழு நியமிக்கப் பட்டது. குற்றவாளிகளை இனம் காண்பதற்கு தடய அறிவியல் நிபுணர் கார்த்திகேயன்  தலைமையிலான குழு இரவு பகலாக உழைத்தது. கார்த்திகேயனின் புலன் விசாரனை தான்  தற்கொலைத்தாக்குதல் என்பதை உறுதிசெய்தது.

இந்தியாவின் முன்னாள்  பிரதமர்இந்தியாவின் முன்னாள்  பிரதமரின் மகன், முன்னாள்  பிரதமரின் பேரன்,  இத்தனை சிறப்புகள் மிக்க ராஜிவ் காந்தியைக் கொன்றவர்களுக்குத் தண்டனை வாங்கிக் கொடுக்கவேண்டும் என்பதே இந்திய மக்களின் ஒரே குறிக்கோளாக இருந்தது. இந்த வழக்கை விசாரிப்பதற்காக சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டது. 41 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப் பட்டனர். பிரபாகரன், பொட்டம்மான், அகிலா உட்பட 26பேர் இலங்கையைச் சேர்ந்தவர்கள்.ராஜீவ் காந்தியைக் கொலை செய்த சூத்திரதாரியாக இந்தியாவால் தேடப்பட்ட சிவராசன், சுபா உட்பட ஐவர் தற்கொலை செய்தனர். மேலும் ஒன்பதுபேர்  மரணமானார்கள். 12 பேர் இறந்த குற்றவாளிகளாக  அறிவிக்கப்பட்டு கைதுசெய்யப்பட்ட 26பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு வழக்குத் தொடரப்பட்டது.
ஜெயின் கமிஷன் மூலம் விசாரணை நடத்தப்பட்டது. 1,044 சாட்சிகள், 1,477 ஆவணங்கள், 10 ஆயிரம் பக்கங்களில் அறிக்கை வெளியிடப்பட்டது. 1997ஓகஸ்ட் 14ஆம் திகதி 26பேரும் குற்றவாளிகளாக தீர்ப்பளிக்கப்பட்டு மரணதண்டனை விதிக்கப் பட்டது. மரண தண்டனைக்கு எதிராக மேன் முறையீடு செய்யப்பட்டது.
1998ஆம் ஆண்டு மே மாதம் 27ஆம் திகதி நளினி,சாந்தன், பேரறிவாளன்,முருகன் ஆகிய நால்வருக்கும் மரணதண்டனை விதிக்கப் பட்டது. ரொபேட்பயஸ் , ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு ஏனைய 19பேரும் விடுதலை செய்யப் பட்டனர்.
நளினி,சாந்தன், பேரறிவாளன்,முருகன் ஆகிய நால்வரும் ஜனாதிபதியிடம் கருணை மனு சமர்ப்பித்தனர். அன்றைய  ஜனாதிபதியான பிரதீபா பட்டேல் இவர்களின் கருணை மனுவை நிராகரித்தார். நால்வருக்கும் தூக்கு உறுதி என்ற நேரத்தில் ராம் ஜெத்மலானி மூலம் சென்னை உயர் நீதிமன்றத்தில் இடைக்காலத்தடை மனு சமர்ப்பிக்கப்பட்டது.
2002ஆம் ஆண்டு கருணாநிதி முதல்வராக  இருந்தபோது நளினியின் மரணதண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது. கருணை மனு நிராகரிப்பதற்கு நீண்டகாலம்  எடுத்தது தவறு என்று தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டவர்கள் சார்பாக மனுத்தாக்கல் செய்யப்பட்டது.  இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சதாசிவம்  வரலாற்றுப்புகழ்பெற்ற தீர்ப்பை வழங்கினார். மூவரின் தூக்கையும் இரத்துச் செய்த  நீதிபதி தமிழக அரசு விரும்பினால் அவர்களை  விடுதலை செய்யலாம் என்றார்


நீதிமன்றத் தீர்ப்பைக் கேள்விப்பட்ட தமிழர்கள் இன்னொரு சுதந்திர  தினத்தைக் கொண்டாடினார்கள். காங்கிரஸ் கட்சியைத் தவிர ஏனையவர்கள் அனைவரும் தமது உறவினர்  விடுதலை செய்யப்பட்டதைப் போன்றே உணர்ந்தார்கள். ராஜிவ் காந்தி கொல்லப்பட்டபோது துடித்துப்போன தமிழகம் ராஜிவ் கொலைக் குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டதை பட்டாசு கொளுத்தி இனிப்புப் பரிமாறிக் கொண்டாடியது.
முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் இடித்தழிக்கப்பட்டபோதும், நோயுற்றிருக்கும்  தகப்பனைப் பார்ப்பதற்கு நளினியை அனுமதித்தால் சட்டம் நீதி  அச்சுறுத்தப்படும் என தமிழக அரசு கூறியபோதும் அரசை வசைபாடியவர்கள் இன்று போற்றிப் புகழ் கிறார்கள்.
ஜெயின் கமிஷன், வர்மா கமிஷன், நீதிபதி கேடி தோமஸ், நீதிபதி குத்வரா ஆகியோரின் தீர்ப்பு எல்லாவற்றையும் தாண்டி  வந்த ராஜீவ் கொலை வழக்கில் அவ்வவ்போது பல சந்தேகங்கள் தோன்றின. இவர்கள் அனைவரும் நிரபராதிகள் என்பதை வெளிப்படுத்தும் பல புத்தகங்கள் வெளிவந்தன.  விசாரணையின் போது நடைபெற்ற சில தில்லு முல்லுகளை சில அதிகாரிகள் பின்னாளில் வெளியிட்டனர். பேரறிவாளரின் வாக்கு மூலத்தை திருத்தி எழுதியதாக ஓய்வுபெற்ற சி.ப.ஐ. அதிகாரி மனச்சாட்சியைத் திறந்து  அண்மையில் ஒப்புதல் வாக்குமூலமளித்தார்.

ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சிலர் விசாரிக்கப்படவில்லை. சிலரிடம் வாக்கு மூலம் பெறப்படவில்லை. சந்திரசாமி போன் றோர் மீதான சந்தேகம் தீர்க்கப்படவில்லை. பொதுவாக எழும் இக்கேள்விகளுக்கான பதிலை  எந்தவொரு விசாரணை அதிகாரியும் கொடுக்க வில்லை.
நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிவரும் வேளையில் தமிழக மக்கள் அனைவரையும் ஒட்டுமொத்தமாகத் தன் பக்கம் திருப்பயுள்ளார் ஜெயலலிதா. பலம் இல்லாத கூட்டணியின் மூலம் நாப்பதும் நமக்கே என்ற கோஷம் நிஜமாகுமா என்ற சந்தேகம் எழுந்தது. அந்தச் சந்தேகத்தை ஜெயலலிதா தீர்த்து வைத்துள்ளார்.

ஜெயலலிதாவின் அதிரடியினால்  தமிழக அரசியல் தலைவர்கள் அனைவரும் கதி கலங்கிப் போயுள்ளனர். விஜயகாந்துடனும், கருணாநிதியுடனும் இணைந்து போட்டியிடலாம் என்று கடைசிவரை நம்பக் கொண்டிருந்த காங்கிரஸின் நிலை பரிதாபமாக உள்ளது. ஜெயலலிதாவின்  முடிவுக்கு எதிராக மத்திய அரசு இடைக்காலத்தடை விதித்ததனால் காங்கிரஸ் கட்சியுடன் இணையும் தனது முயற்சியைக் கைவிடவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார் விஜயகாந்த்.காங்கிரஸுடன் கூட்டணி இல்லை என்ற முடிவில் உறுதியாக இருக்கிறார் ஸ்டாலின். ஸ்டாலினின் படிவாதத்துக்கு மறுப்புச் சொல்ல  முடியாத நிலை யில் அனுசரித்துப் போகிறார் கருணாநிதி. காங்கிரஸைத் தாக்காது  மழுப்பலாகப் பேசி வந்த கருணாநிதி அடங்கி ஒடுங்கவேண்டிய நிலை உள்ளது.மோடி அலை மூலம் தமிழ் நாட்டில் ஊன்றிக் கால்பதிக்கலாம் என்ற கனவில் உள்ள  பாரதீய ஜனதாக் கட்சியின் பாடு திண்டாட்டமாக உள்ளது. ராஜீவ் கொலையில் குற்றம் சாட்டப்பட்ட கைதிகள் விடுதலை என்ற ஒன்றைச் சொல்லின் வீரியத்தின்முன் மோடி அலை சிதைந்து போய்விட்டது.


முருகன், பேரறிவாளன், சாந்தன் ஆகியோரின் உயிரைக் காப்பாற்ற அல்லும் பகலும் போராடிய வைகோவின் நிலை பரிதாபமாக உள்ளது.  கைதிகளின் விடுதலைக்கு ஜெயலலிதா உரிமை கோருவதனால் வைகோவை யாரும் ஏறெடுத்தும் பார்க்கவில்லை. திராவிட முன்னேற்றக்கழகத்தில் கருணாநிதிக்கு அடுத்த தலைவராக இருந்த போது ஓரம்கட்டப்பட்டார். தனிக்கட்சி ஆரம்பித்து அரசியலின் கடைசி நிலைக்குச் சென்றபின் ஜெயலலிதாவுடனும், கருணாநிதியுடனும்  மாறிமாறி கைகோத்தார்.ஏளனமும் அவமரியாதையும் வாட்டியதால் கூட்டணியிலிருந்து விலகினார்.பாரதீய ஜனதாக்கட்சியுடன் இணைந்து நாடாளுமன்றத் தேர்தலைச் சந்திக்க உள்ளார். அரசியலில் பல சித்து விளையாட்டுகளைச் செய்த சுப்ரமணிய சுவாமி தனது கட்சியுடன்  பாரதீய ஜனதாக் கட்சியில் சேர்ந்துள்ளார். வைகோவின் கொள் கையும், சுப்பரமணிய சுவாமியின் கொள்கையும் எதிரும் புதிருமானவை. வைகோவிடம் காணப்படும் தமிழ் உணர்வு  சுப்பரமணிய சுவாமியிடம் இல்லை. கீரியும் பாம்பும் ஒரே கட்சியில் இணைந்துள்ளன.

தூக்குத் தண்டனைக் கைதிகளை விடு தலை செய்யவேண்டும் என்று தமிழகம் எங்கும் போராட்டம் நடைபெற்றது. இலங்கைத் தமிழர்களுக்கு  நீதி கிடைக்கவேண்டும் என்று தமிழகம் எங்கும் போராட்டங்களும், ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்றன. காங்கிரஸ் கட்சி யைத் தவிர சகல கட்சிகளும் இப் போராட்டத்தை முன்னெடுத்தன. அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் இப்போராட்டங்களில் அதிக ஆர்வம் காட்டவில்லை.
 செங்கொடியின் தியாகம் அனைவரையும் கதிகலங்கவைத்தது. மரணதண்டனை ஒழிக்கப்படவேண்டும்; மூவரும் விடுதலை செய்யப்படவேண்டும்  என்று தன் உயிரைத் தியாகம் செய்தார் செங்கொடி. மூன்று உயிர் களைக் காப்பாற்றுவதற்காக  தன் உடலைக் கருக்கி விழிப்பை ஏற்படுத்தினார். செங்கொடி யின் தியாகம் வீண்போகவில்லை. செங்கொடி யின் ஆசை நிறைவேறும் என்ற வாலியின் வாக்கு பலித்தது.
ராஜீவ் கொலையில் குற்றஞ்சாட்டப்பட்ட ஏழு பேரையும் விடுதலை செய்வதற்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ராகுல்,மன்மோகன் ஆகியோர் கடும் தொனியில் குரல்கொடுத்துள்ளனர். இதன் காரணமாக தமிழகத்தில் காங்கிரஸ் அந்நியப்பட்டுப் போயுள்ளது.

ஜெயலலிதா, வைகோ, கருணாநிதி ஆகிய மூவரும் ஏழுபேரின் விடுதலைக்காக ஒருமித்து குரல் கொடுத்துள்ளனர். ஏழு பேரின் விடுதலை காங்கிரஸ் கட்சிக்கு கெளரவப் பரச்சினையாக மாறியுள்ளது. பழிக்குப் பழிவாங்கவேண்டும் என்பதில் காங்கிரஸ் கட்சி உறுதியாக உள்ளது.
முருகன், பேரறிவாளன், சாந்தன் ஆகியோரின்  மரண தண்டனையைக் குறைத்த நீதிமன்றம் தமிழக அரசு அவர்களை விடுதலை  செய்யலாம் என்று கூறியது. ஜெயலலிதா விரும்பினால் அவர்களை விடுதலை செய்யலாம் என்ற கருத்தே அனைவரிடமும் இருந்தது. மத்திய அரசு தலையிட்ட பின்னரே இதில் உள்ள சட்டப்பிரச்சினை வெளியே தெரிய ஆரம்பித்தது.
சிறைத்துறை ஆணையாளர், வேலூர் சிறை கண்காணிப்பாளர்  உட்பட ஆறு பேர் கொண்ட குழு ஒன்றை தமிழக அரசு நியமித்து   கருத்துக்கேட்கவேண்டும். அக்குழுவின் பரிந்துரையை  மத்திய அரசுக்கு அனுப்ப வேண்டும். மத்திய அரசு உள்துறை அமைச்சுடன் ஆலோசனை செய்து  முடிவை அறிவிக்கும். இந்த நடைமுறையைப் பின்பற்றாமல் தன்னிச்சையாக ஜெயலலிதா நடந்துள்ளதாக மத்திய அரசு குற்றம் சாட்டுகிறது.
தமிழக அரசுக்கு நீதிமன்றம் இரண்டு வார அவகாசம் கொடுத்துள்ளது. தமிழக அரசின் பதிலிலேதான் ஏழுபேரின் எதிர்காலமும் தமிழ் மக்களின் உணர்வும் அடங்கியுள்ளது. மத்திய அரசுக்கு செக் வைத்து வீழ்த்திய ஜெயலலிதாவுக்கு செக்வைக்கும் சந்தர்ப்பத்துக்காக காத்திருக்கிறது மத்திய அரசு

வர்மா
 சுடர் ஒளி 13/02/14 

4 comments:

தி.தமிழ் இளங்கோ said...

ஒரு இயல்பான அரசியல் விமர்சனம்!

karu said...

Proper way of writing. Thanks.

வர்மா said...

தி.தமிழ் இளங்கோ
. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
அன்புடன்
வர்மா

வர்மா said...

karu

. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
அன்புடன்
வர்மா