Monday, May 13, 2019

ஒரு ஓட்டத்தால் தோல்வியடைந்து மும்பையிடம் கிண்ணத்தைக் கொடுத்த சென்னை


ஒன்றரை மாதமாக நடைபெற்ற ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் மும்பை இந்தியன்ஸும், சென்னை சூப்பர் கின்ஃப்ஸும் மோதின. நாணயச்சுழற்சியில் வெற்ற பெற்ற மும்பை முதலில் துடுப்பெடுத்தாடி 20 ஒவர்களில் எட்டு விக்கெற்களை இழந்து 149 ஓட்டங்கள் எடுத்தது.  150 ஓட்டங்கள் என்ற இலகுவான இலக்கை விரட்டிய சென்னை, 20 ஓவர்களில் ஏழு விக்கெற்களை இழந்து 148 ஓட்டங்கள் எடுத்து ஒரு ஓட்டத்தால் தோல்வியடைந்தது.

சென்னையும், மும்பையும் தலா மூன்று முறை சம்பியனாகின. நான்காவது முறையாக சம்பியனாகி  சாதனை செய்ய களம் இறங்கின. சென்னையும் மும்பையும்  மூன்று முறை இறுதிப்போட்டியில் விளையாடின. மும்பை  இரண்டுமுறையும், சென்னை ஒரு முறையும் வெற்றி பெற்று சம்பியனாகின. இந்த ஐபிஎல் சீசனில் சென்னையை இரண்டு முறை எதிர்கொண்ட மும்பை இரண்டு முறையும் வெற்றி பெற்றது. இறுதிப் போட்டிக்கான முதலாவது தகுதிச்சுற்றில் சென்னையை மும்பை  வெற்றி கொண்டது.

ஐபிஎல் தொடரில் ஏழு இறுதிப்போட்டிகளில் விளையாடிய சென்னை மூன்று முறை சம்பியனாகியது. நான்கு முறை தோல்வியடைந்தது. சூதாட்டத் சர்ச்சையில் சிக்கி இரண்டு  வருட தடைக்குப் பின்னர் கடந்த ஆண்டு மீண்டும் விளையாடியபோது முதியோர் அணி எனக் கூறப்பட்டது. அந்த கேலியையும் கிண்டகளையும் உடைத்தெறிந்து தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக இறுதிப்போட்டியில் விளையாடத் தகுதி பெற்றது. 2010 ஆம் ஆண்டு மும்பையுடனான போட்டியில் வெற்றை பெற்ற சென்னை, அதற்குப் பின்னரான அனைத்துப் போட்டிகளிலும் தோல்வியடைந்தது. 150  என்பது இலகுவான இலக்கு என்பதால் சென்னை ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

மும்பையில் ஜெயந்த் யாதவ் நீக்கப்பட்டு மிட்ச் மெக்லேகன் சேர்க்கப்பட்டார். சென்னை அணியில் மாற்றம் எதுவும் இல்லை. கடந்த போட்டியில் ஒரு ஓவரில் 13 ஓடங்களைக்  கொடுத்த ஷர்துர் தாகூர் , நீக்கப்பட்டு முரளி விஜய் சேர்க்கப்படலாம் என எதிர் பார்க்கப்பட்டது. ஷர்துர் தாகூரை டோனி நீக்கவில்லை. டோனியின் நம்பிக்கையை தாகூர் காப்பாற்றிவிட்டார். மும்பையிலும் சென்னையிலும் சிரந்த துடுப்பாட்ட வீரர்கள் இருந்தாலும் இறுதிப்போட்டியை பந்துவீச்சாளர்கள் தம் வசம் எடுத்துக்கொண்டனர். இலகுவான கச்களைத் தவறவிட்டவை, முஸ்பீல்டால் ரன் அவுட்களைக் கோட்டைவிட்டு நான்கு ஓடங்களை வழங்கியமை என ஏகப்பட்ட தவறுகளை இரண்டு அணிகளும் செய்தன.
குயிண்டன் டீக்காக்கும், ரோகித் சர்மாவும் ஆரம்பத்துடுப்பாட்ட வீரர்களாகக் களம் இறங்கினர்.  இந்த ஜோடி ஓட்ட சராசரியை ஐந்து ஓவர்வரை 10 ஆக வைத்திருந்தது தீபக் சாகரின் முதல் ஓவரில் டிகாக் இரண்டு ஓட்டங்கள் மட்டும் எடுத்தார். ஷர்துர் தாகூர் வீசிய இரண்டாவது ஓவரில் ரோகித் சர்மா சிக்ஸர் அடிக்க மும்பை ரசிகர்கள் ஆரவாரப்பட்டனர். தீபக் சாஹரின் மூன்றாவது ஓவரில் டி காக், மூன்ன்றி சிக்ஸர்கள் அடிக்க அரங்கம் அதிர்ந்தது. ஹர்பஜனின் ஓவரில் ரோகித் சர்மா பவுண்டரியும், ஷர்துர் தாகூரின் ஒவரில் குயிண்டன் டிகாக் சிக்ஸரும் அடிக்க மும்பையின் ஓட்ட விகிதம் உயர்ந்தது. மும்பை ரசிகர்களின் இந்த சந்தோசம் அதிக நேரம் நீடிக்கவில்லை. தாகூரின் அடுத்த பந்தை டோனியிடம் பிடிகொடுத்த டிகாக் 29 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.

ரோகித்துடன் சூரியகும்மர் யாதவ் இணைந்தார்.  தீபக் சாஹரின் அடுத்த ஓவரில் டோனியிடம் பிடிகொடுத்த ரோகித் சர்மா15 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.  சூரியகுமார், இஷான் கிஷான் ஜோடியின் மீது நம்பிக்கை ஏற்பட்டது. முதல் ஆறு ஓவர்கள் பவர் பிளேயில் மும்பை இரண்டு விக்கெற்களை இழந்து 45 ஓட்டங்கள் எடுத்தது.  சூரியகுமார் யாதவ், இஷாந்த் கிஷான் ஆகிய இருவரும் நிதானமாகத் துடுப்பெடுத்தாடினர். 11.2 ஒவர்களில் மும்பையின்  ஓட்ட எண்ணிக்கை 82 ஓட்டங்களாக இருந்தபோது இம்ரான் தாஹிரின் பந்து வீச்சில் 15 ஓட்டங்கள் எடுத்த சூரியகுமார் யாதவ் விக்கெற்றைப் பறிகொடுதார். அடுத்து வந்த க்ருனால் பாண்டியா ஷர்துரின் பந்தி அடித்து அவரிடமே பிடிகொடுத்து ஏழு ஓட்டங்களுடன் வெளியேறினார்.

புதிய வீரராகக் களம் இறங்கிய பொலாட்,தனது அதிரடியை வெளிக்காட்டினார். 14.1 ஓவர்களில் மும்பை 100 ஓட்டங்களை எட்டியது.   இம்ரான் தாகூரின் பந்தை தூக்கி அடித்த இஷான் கிஷான், ரெய்னாவிடம் பிடிகொடுத்து 23  ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். பொலட், ஹார்த்திக் பண்டையா ஜோடி சிக்சர் அடித்து மும்பை ரசிகர்களை உற்சாகப் படுத்தியது. மும்பை ரசிகர்களின் மகிழ்ச்சி அதிக நேரம் நீடிக்கவில்லை. தீபக் சாஹரின் பந்து வீச்சில் பண்டையா எல்பிடள்ள்யூ முறையில் ஆட்டமிழந்தார். அதனி எதிர்த்து பண்டையா அப்பீல் செய்தார். மூன்ராவது நடுவரின் தீர்ப்பினால்  16 ஓட்டங்களுடன் வெளியேறினார். 

அடுத்துவந்த ராகுல் சாஹர், டுபிளிசிஸம் பிடிகொடுத்து ஓட்டமெடுக்காது ஆட்டமிழந்தார். கடசி ஓவரை பிராவோ வீசிய போது வைட் கொடுக்கவில்லை என்பதால் அதற்கெதிராக பற்றை தூக்கி எறிந்த பொலாட்,  விக்கெற்றை விட்டு விலகி நின்று போக்குக் காட்டினார். நடுவர்கள் எச்சரித்ததால் அமைதியானார்.
 அடுத்து களம் இறங்கிய மிட்ச் மெக்லேகனன் ஒட்டமெதுவும் எடுக்காது ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார்.  20 ஒவர்கள் விளையாடிய மும்பை எட்டு விக்கெற்களை இழந்து 149 ஓட்டங்கள் எடுத்தது. பொலாட் ஆட்டமிழக்காது 41 ஓட்டங்கள் எடுத்தார். பொலாட் அதிக பட்சமாக 41 ஓட்டங்கள் எடுத்தார். தீபக் சாஹர் மூன்று விக்கெற்களையும்  ஷர்துர் தாகூர், இம்ரான் தாஹீர் ஆகியோர் தலா இரண்டு விக்கெற்களையும் கைப்பற்றினர்.

150  என்ற இலகுவான இலக்குடன் வெற்றி களம்  இறங்க்ய சென்னை, ரசிகர்களை ஏமாற்றியது. டிபிளிசிஸ், வட்சன் ஜோடி நிதானமாக வெற்றியை  நோக்கி துடுப்பெடுத்தாடியது. அதிரடியாக விளையாடிய டுலிளசிஸ் 13 பந்துகளில் 26 ஓட்டங்கள் எடுத்தபோது க்ருணாலின் பந்தை டிகாக்கிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து களம் இறங்கிய ரெய்னா எட்டு ஓட்டங்களுடனும் ராயுடு ஒரு ஓட்டத்துடனும் ஆட்டமிழந்தனர். வட்சனுடன் டோனி ஜோடி சேர்ந்தபோது சென்னை ரசிகர்கள்  உற்சாகமானார்கள்.  மும்பை ரசிகர்களின்  ஆரவாரம் அடங்கியது. இரண்டாவது ஓட்டத்தை எடுக்க முற்பட்ட டோனி ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார்.  மிக நீண்ட  நேரம் பலகோணங்களில் பார்த்த நடுவர் டோனி ஆட்டமிழந்ததாக அறிவித்தார். சென்னை ரசிகர்கள் அந்த முடிவை ஏற்றுக்கொள்ளவில்லை. 15.4 ஒவரில் சென்னை 100 ஓட்டங்களைத் தொட்டது. வட்சனுடன் பிராவோ இணைந்தார்.

மலிங்க வீசிய 16 ஆவது ஓவரை வட்சன் துவம்சம் செய்தார், அந்த ஓவரில் 20 ஓட்டங்கள் எடுக்கப்பட்டது. 17 ஆவது ஓவரை வீசிய பும்ரா நான்கு ஓட்டங்களை மட்டெமே  விட்டுக் கொடுத்தார். க்ருணாலின் 18 ஆவது ஓவரிலும் 20 ஓட்டங்கள் எடுக்கப்பட்டது.  க்ருனாலில் ஓவரில் 15 ஓட்டங்கள் எடுத்த பிராவோ ஆட்டமிழந்தார். சென்னை வீரர்கள் ஒற்றை இலக்கத்துடன் ஆட்டமிழக்க வட்சன் நம்பிக்கையுடன் விளையாடினார். ஜடேஜா வட்சனுடன் ஜோடி சேர்ந்தார்.

பும்ரா வீசிய 19 ஆவது ஓவரில் 9 ஓட்டங்கள் எடுக்கப்பட்டது. கடசி ஓவரில் ஆறு ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை ஏற்பட்டது. நான்காவபந்தில் இரண்டாவது ஓட்டம் எடுக்க முற்பட்டு வட்சன் ஆட்டமிழந்தார்.  59 பந்துகளில் 80 ஓட்டங்கள் அடித்த வட்சன் ஆட்டமிழந்ததும் மும்பையின் வெற்றி உறுதியானது. மலிங்கவின் பந்தை ஷத்துர் தாகூர் எதிர் கொண்டார் இரண்டு பந்துகளில் நான்கு ஓட்டங்கள் தேவை. ஐந்தாவது பந்தில் இரண்டு ஓட்டங்கள். கடைசிப்பந்தில் வெற்றி பெற இரண்டு ஓட்டங்கள் தேவை. அனுபவ வீரர் மலிங்க்வின் பந்தில் ஷர்துர் தாகூர் ஆட்டமிழந்தார். ஒரு ஓட்டத்தால் மும்பை வெற்றி பெற்றது.

No comments: