Tuesday, May 21, 2019

கனவைக் கலைத்த கருத்துக் கணிப்பு


இந்திய நாடாளுமன்றத் தேர்தல்  முடிவடைந்த பின்னர் வெளியான கருத்துக் கணிப்பில் ஆளும் பாரதீய ஜனதாக் கட்சி மீண்டும் அட்சியை பிடிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 10 நிறுவனங்கள் வெளியிட்ட கருத்துக் கணிப்புகளால், மோடியையும் பாரதீய ஜனதாவையும் வீட்டுக்கு அனுப்புவோம் என சபதம் செய்த அரசியல்த் தலைவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். 2014 ஆம் ஆண்டு வீசிய மோடி அலையில் எதிர்க்கட்சிகள் அனைத்தும் சின்னாபின்னமாயின. மோடி எனும் ஒற்றைச்சொல் பரதீய ஜனதாக் கட்சியை ஆட்சியில் அமர வைத்தது.

மோடியின் தலைமையிலான பாரதீய ஜனதாக் கட்சியில் ஐந்தாண்டு கால ஆட்சிக்கு எதிராக மக்கள் அணி வகுத்து  நின்றதால் இந்தத் தேர்தலில் பாரதீய ஜனதாக் கட்சி தோல்வியடையும் என்ற கருத்து நிலவியது. ஆனால், கருத்துக் கணிப்புகள்  அத்தனையையும்  பொய்யாக்கியுள்ளன. பண மதிப்பிழப்பு, ஜிஎஸ்டி வரிவிதிப்பு என்பன மோடிக்கு எதிரான வலுவான அஸ்திரமாகக் பார்க்கப்பட்டன. மோடியின் ஆட்சியில் அனுபவித்த அத்தனை அவலங்களையும் பாகிஸ்தானில் பயங்கரவாதிகளின் முகாம் மீது நடைபெற்ற தாக்குதல் முறியடித்து விட்டதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

பாரதீய ஜனதசக் கட்சி 300 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறும் என நான்கு கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. இரண்டு கருத்துக் கணிப்புகள் மட்டும் அறுதிப் பெரும்பான்மைக்குக் குறைவான தொகுதிகளில் பாரதீய ஜனதா வெற்றி பெறும் எனக் கூறியுள்ளன. அறுதிப் பெரும்பான்மையுடன் பாரதீய ஜனதாக் கட்சி வெற்றி பெறும் எனக் கருத்துக் கணிப்புகள் தெரிவித்தாலும் மோடி மகிழ்ச்சியாக இல்லை. பாரதீய ஜனதாவின் பிரத்ட்மரைத் தீர்மானிக்கும் ஆர்.எஸ்.எஸ், மோடிக்கு ஆதரவாக இல்லை. மோதி பிரதமராவதை தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள ஐக்கிய ஜனதாத் தளத் தலைவர் நிதீஷ் குமார் விரும்பவில்லை. அத்வானி போன்ற மூத்த தலைவர்களை மோடி, அமித்ஷா கூட்டணி ஒதுக்கியதால் அவர்களின் மீது விசுவாசம் கொண்ட ஏனைய தலைவர்களும் மோடிக்கு எதிராக வெளிப்படையாகக் களம் இறங்கும் நிலை ஏற்படலாம்.

மோடியைக் கடுமையாக எதிர்த்த ராகுல், மாம்தா, அகிலேஷ் யாதவ் போன்ற தலைவர்கள் ஓரணியில் இல்லாமல் தேர்தலில்  போட்டியிட்டது பாரதிய ஜனதாவுக்கு சாதகமாகி இருக்கலாம். மாநிலக் கட்சிகளின் ஆதரவு இல்லாமல் மத்தியில் ஆட்சி அமைக்க முடியாது என்ற நிலைப்பாட்டில் இருக்கும் கட்சிகள் பிரதான எதிர்க் கட்சியான காங்கிரஸுடன் இணைந்து செயற்படவில்லை. இதுவும் பாரதீய ஜனதாக் கட்சிக்கு சாதகமாக அமையும் சாத்தியம் உள்ளது
.
தமிழகத்தை பொறுத்த வரையில் எதிர் பார்த்தது போல திராவிட முன்னேற்றக் கழகம் அதிகளவு தொகுதிகளில் வெற்றி பெறும் எனக் கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. தமிழ்கக் கருத்துக் கணிப்பை நம்பும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கட்சிகள் மத்தியில் பாரதீய ஜனதாக் கட்சி மீண்டும் ஆட்சி அமைக்கும் என்பதை நம்பத் தயாராக  இல்லை. தமக்குச் சாதகமாக கருத்துக் கணிப்பு வரவில்லை என்றால் அது கருத்துக் கணிப்பு அல்ல. கருத்துத் திணிப்பு என்கிறார்கள். 200 4 ஆம் ஆண்டு வாஜ்பாய் தலைமையிலா ஆட்சி மீண்டும் உருவாகும் எனக்  கருத்துக் கணிப்புத் தெரிவித்தது. அப்போது கருத்து கணிப்பைப் பொய்யாக்கி ஆட்சிபீடமேறிய காங்கிரஸ்  தொடர்ந்து 10 வருடங்கள் ஆட்சி அமைத்தது. அதேபோன்று இம்முறையும்கருத்துக் கணிப்பு பொய்யாகும் என காங்கிரஸார் நம்புகின்றனர்.

கருத்துக் கணிப்பு என்பது மாயை.  சில நிறுவனங்களை விலைக்கு வாங்கி விட்டதாக சிலர் கருதுகிறார்கள்.  பாரதீய ஜனதா மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் எனக் கருத்துக் கணிப்புத் தெரிவித்ததால் பங்குச் சந்தைகளி அதிகரித்ததை இவர்கள் சுட்டிக் காட்டுகின்றனர். வக்களித்தவர்கள் பொய்யான தகவலைச் சொல்லியிருக்கலாம் எனவும் ஒரு கருத்து நிலவுகிறது. அவுஸ்திரேலிய்த் தேர்தலின் பின்னரான கருத்துக் கணிப்பை அந்நாட்டு மக்கள் பொய்யாக்கிவிட்டனர். அப்படி ஒரு நிலை இந்தியாவிலும் ஏற்படும் என்ற கருத்தையும்  புறந்தள்ளி விட முடியாது. மே 23 ஆம் திகதி  இதற்கான விடை தெரிந்துவிடும்.


No comments: