Wednesday, January 14, 2026

2025-ல் கண்ணீருடன் விடைபெற்ற விளையாட்டு ஜாம்பவான்கள்

  2025-ம் ஆண்டு  ஆண்டு விளையாட்டு உலகம் சந்தித்த பல ஓய்வுகள் வலியை அளிப்பதாக இருந்தன. பல ஆண்டுகளாகத் தங்கள் ராஜ்ஜியத்தை ஆண்ட விளையாட்டு உலகின் ஜாம்பவான்கள் இந்த ஆண்டு ஓய்வு அறிவித்து ரசிகர்களைக் கண்ணீரில் மூழ்கடித்தனர். ஒரு தலைமுறை மாற்றத்தை உணர்த்திய 2025-இல் பல்வேறு விளையாட்டுக்களில் இருந்து ஓய்வு பெற்ற ஜாம்பவான்கள் பட்டியல் -

ரோஹித் சர்மா (இந்தியா - டெஸ்ட் கிரிக்கெட்)

  2025 ஆம் ஆண்டு மே மாதம் 7 ஆம் திகதி  டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து நிரந்தரமாக விலகுவதாக அறிவித்தார் 'ஹிட்மேன்' ரோஹித் சர்மா. இக்கட்டான நேரங்களில் இந்திய டெஸ்ட் அணியைத் தாங்கிப் பிடித்த ரோஹித், 4300+ ரன்களுடன் விடைபெற்றார். "டெஸ்ட் போதும், ஆனால் 2027 உலகக் கிண்ணக் கனவுக்காக ஒருநாள் போட்டிகளில் மட்டும் ஆடுவேன்" என அவர் கூறியது ரசிகர்களுக்குச் சற்றே ஆறுதல். இயற்கையான திறமை கொண்ட உலகின் மிகச்சிறந்த ஓப்பனர்களில் ஒருவரை இனி டெஸ்ட் அரங்கில் இழப்போம்.

  விராட் கோலி (இந்தியா - டெஸ்ட் கிரிக்கெட்)

 ரோஹித் கொடுத்த அதிர்ச்சி மறைவதற்குள்,   2025  ஆம் ஆண்டு மே   12 ஆம் திகதி  அடுத்த இடியை இறக்கினார் 'கிங்' கோலி. அவுஸ்திரேலியாவுக்கு எதிராக சிட்னி மைதானத்தில் நடந்த போட்டியுடன் டெஸ்ட் கிறிக்கெட்ருக்கு குட்-பை சொன்னார். இந்திய அணியில் உடற்தகுதி, ஆக்ரோஷம் என மொத்த முகத்தையும் மாற்றியவர் விராட். 29 டெஸ்ட் சதங்கள், இந்தியாவின் மிக வெற்றிகரமான டெஸ்ட் கப்டன் என்ற பெருமையுடன் வெளியேறினார் விராட் கோலி. அவரும் 2027 ஒருநாள் போட்டி உலகக்  கிண்ணத் தொடருக்காக தயாராகி வருகிறார்.

 ஜான் சீனா (அமெரிக்கா - WWE பொழுதுபோக்கு மல்யுத்தம் )

90ஸ் கிட்ஸுகளின் குழந்தைப் பருவ ஹீரோ ஜான் சீனாவும்  டிசம்பர் 13 ஆம் திகதி  ஓய்வு பெற்றார். டிசம்பர்  அன்று நடந்த முக்கிய போட்டியில் குந்தர் (Gunther) வசம் தோல்வியைத் தழுவி, தனது 23 ஆண்டுகால சாம்ராஜ்யத்தை முடித்துக்கொண்டார். "யூ கான்ட் ஸீ மீ (You Can't See Me)" எனச் சொல்லி மிரட்டிய ஜான் சீனாவை, இனி போட்டிகளில் பார்க்கவே முடியாது.

 ரஃபேல் நடால் (ஸ்பெயின் - டென்னிஸ்)

 டென்னிஸ் உலகின் மாபெரும் ஜாம்பவான்களில் ஒருவரான ரஃபேல் நடால், இந்த ஆண்டு முழுமையாக ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.. 2024 டேவிஸ் கோப்பையிலேயே அவர் கடைசிப் போட்டியை ஆடிவிட்டாலும், 2025 முழுவதும் அவருக்கான பிரியாவிடை வைபவமாகவே இருந்தது. 22 கிராண்ட் ஸ்லாம் பட்டங்கள்... அதில் 14 பிரெஞ்சு ஓபன் பட்டங்கள்! "இனி என் உடல் ஒத்துழைக்காது" எனச் சொல்லி நடால் விடைபெற்றபோது, பரிஸ் நகரமே சோகத்தில் ஆழ்ந்தது.

 கிளென் மேக்ஸ்வெல் (அவுஸ்திரேலியாகிறிக்கெற்)

அவுஸ்திரேலியாவின் 'மேட் மேக்ஸ்' கிளென் மேக்ஸ்வெல், சம்பியன்ஸ் டிராபி 2025-க்கு பிறகு ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார். ஆப்கானிஸ்தானுக்கு எதிராக ஒற்றைக்காலில் நின்று அவர் அடித்த அந்த 201*  ஓட்டங்கள் இன்னும் 100 ஆண்டுகளுக்குப் பேசப்படும். இனி ரி20 லீக்குகளில் மட்டுமே அவரைப் பார்க்க முடியும்.

 ஹென்ரிக் கிளாசன் (தென்னாப்பிரிக்கா -கிறிக்கெற்)

இந்த ஆண்டின் மிகப்பெரிய அதிர்ச்சி இதுதான். உலகின் மிக ஆபத்தான ஃபினிஷரான ஹென்ரிக் கிளாசன், 34 வயதிலேயே அனைத்து விதமான சர்வதேசப் போட்டிகளிலிருந்தும் ஓய்வு அறிவித்தார். ரி20 லீக், குடும்பத்திற்காக அவர் எடுத்த இந்த முடிவு, தென்னாப்பிரிக்க அணிக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு.


சைமன் கியர் (டென்மார்க்உதைபந்தாட்டம்)

டென்மார்க் , ஏசி மிலன் ஆகிய  அணிகளின்  தடுப்புச் சுவர் சைமன் கியர், ஜனவரி 13 அன்று ஓய்வு பெற்றார். யூரோ கோப்பையில் எரிக்சன் சுருண்டு விழுந்தபோது, ஒரு கப்டனாக அவர் செயல்பட்ட விதம் அவரை என்றென்றும் நினைவுகூர வைக்கும்.

 

ரமணி

11/1/26 

No comments: