Sunday, March 8, 2009

கொள்கையை மறந்து கூட்டணி சேரும் கட்சிகள்



இந்திய நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும் திகதிகள் அறிவிக்கப்பட்டதால் கட்சிகள் சுறுசுறுப்படையத் தொடங்கிவிட்டன. திராவிட முன்னேற்றக்கழகமும் காங்கிரஸ் கட்சியும் ஒரே அணியில் போட்டியிடுவது உறுதியாகிவிட்டது.
அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம், கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்ஸ்சிஸ்ட் கட்சி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழகம் ஆகியன ஓரணியில் இணைந்து தேர்தலைச் சந்திக்கத் தயாராகிவிட்டன.
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழகத்தில் இருந்து பிரிந்த செஞ்சி ராமச்சந்திரனும், எல். கிருஷ்ணனும் தமது கட்சியை திராவிட முன்னேற்றக்கழகத்துடன் இணைக்கத் தயாராகிவிட்டனர்.
திராவிட முன்னேற்றக்கழகக் கூட்டணியில் சேருவதற்கான பேச்சுவார்த்தையை சரத்குமார் ஆரம்பித்து விட்டார். அவருடைய மனைவி ராதிகா பேச்சுவார்த்தையை நடத்துவதால் பேச்சுவார்த்தை வெற்றி பெறும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
விஜயகாந்தும், டாக்டர் ராமதாஸும் யாருடன் கூட்டு சேர்வது என்று இன்னமும் முடிவு செய்யவில்லை. காங்கிரஸ் கட்சியுடன் இணைவதற்கான பேச்சுவார்த்தையை விஜயகாந்த் ஆரம்பித்து விட்டதாக செய்திகள் கசியத் தொடங்கியுள்ளன. மக்களுடன்தான் கூட்டணி என்ற விஜயகாந்த் சற்று இறங்கிவந்து விட்டார் போல் தோன்றுகின்றது.
திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணியா, அண்ணா திராவிட முன்னேற்றக் கழக கூட்டணியா வெற்றி பெறும் என்று தெரியாது குழம்பியுள்ள டாக்டர் ராமதாஸ், சோனியா மீதும் முதல்வர் கருணாநிதி மீதும் மிகுந்த மதிப்பும் மரியாதையும் வைத்திருப்பதால் ஜெயலலிதாவின் பக்கம் செல்லும் வாய்ப்பு மிக மிகக் குறைவு.
இலங்கைத் தமிழ் மக்களுக்காக ஒருமித்து குரல்கொடுக்கும் கட்சிகள் அனைத்தும் பிரிந்து நின்று தேர்தலைச் சந்திக்க உள்ளன.
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழகமும், கம்யூனிஸ்ட் கட்சியும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையில் போட்டியிடுகின்றன. விடுதலைச் சிறுத்தைகள், திராவிட முன்னேற்றக் கழகத்தை விட்டுப் பிரியப் போவதில்லை.
இலங்கைப் பிரச்சினையை முன்னெடுத்து பிரசாரம் செய்ய முடியாத நிலையில் இக்கட்சிகள் உள்ளன. இலங்கைத் தமிழ் மக்கள் படும் இன்னல்களினால் பெரிதும் கவலையடைந்திருக்கும் பாரதீய ஜனதாக் கட்சிக்கு தமிழக அரசியல் கட்சிகள் எவையும் ஆதரவு தெரிவிக்கவில்லை. நாம் ஆட்சி அமைத்தால் இலங்கைத் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு கௌரவமான தீர்வு காணப்படும் என்று பாரதீய ஜனதாக் கட்சித் தலைவர்கள் கூறிவருகின்றனர். அவர்களின் குரலுக்கு தமிழக அரசியல் கட்சிகள் எவையும் செவிசாய்க்கவில்லை.
இந்திய மத்திய அரசை தீர்மானிக்கும் மாநிலங்களில் தமிழ் நாடும் ஒன்று. தமிழகத்தில் இருந்து 40 பிரதிநிதிகள் நாடாளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்படுவார்கள். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தின் 40 தொகுதிகளையும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணி கைப்பற்றியது. கடந்த பொதுத் தேர்தலைப் போன்று 40 தொகுதிகளிலும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணி வெற்றி பெறுவது இயலாத காரியம்.
மத்திய அரசினதும், தமிழக அரசினதும் இன்றைய நிலைப்பாட்டை தமிழக மக்களில் பலர் ஏற்றுக் கொள்ளவில்லை. அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வும், இலங்கைத் தமிழ் மக்களின் துயர் தீர்ப்பதற்கு காத்திரமான பங்களிப்பு வழங்காமை, மும்பைத் தாக்குதலின் பின்னர் அதற்குக் காரணமான பாகிஸ்தானை அச்சுறுத்தாது உலக நாடுகளின் அனுதாபத்தைப் பெறுவதற்கான முயற்சியில் இருப்பவை போன்ற காரணங்களினால் மத்திய அரசின் மீதும் தமிழக அரசின் மீதும் தமிழக மக்கள் வெறுப்படைந்துள்ளனர். ஆகையினால் 40 தொகுதிகளிலும் திராவிட முன்னேற்றக்கழகம் வெற்றி பெற முடியாத நிலை உள்ளது.
திராவிட முன்னேற்றக் கழகம், அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் ஆகியவற்றின் வெற்றியையும் தோல்வியையும் தீர்மானிக்கும் சக்தியாக விஜயகாந்த் தலைமையிலான கட்சி உள்ளது.
தமிழக சட்ட மன்றத்தேர்தலின் போது அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத்தின் பின்னடைவுக்கு விஜயகாந்தின் கட்சியும் ஒரு காரணம். அதேபோன்று திராவிட முன்னேற்றக்கழகம் அறுதிப் பெரும்பான்மை பெறாதமைக்கும் விஜயகாந்தின் கட்சிதான் காரணம்.
தனது தலைமையிலான கூட்டணிக்குள் விஜயகாந்தைக் கொண்டுவரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார் முதல்வர் கருணாநிதி. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களும் விஜயகாந்தின் கட்சித் தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். இந்தப் பேச்சுவார்த்தை வெற்றி பெற்றால் திராவிட முன்னேற்றக்கழகத்தின் தலைமையிலான கூட்டணி பெருவெற்றி பெறும்.
தமிழக அரசியல் கட்சிகள் தமது செல்வாக்கை நிரூபிப்பதற்காக பேச்சுவார்த்தை நடத்திவரும் இவ்வேளையில் இலங்கைத் தமிழ் மக்களுக்காக குரல் கொடுக்கும் தமிழக அமைப்புகள் ஒன்றிணைந்து இயக்குநர் சீமானை வேட்பாளராக்க முயற்சி செய்கின்றன.
இந்திய மத்திய அரசும் தமிழக அரசும் இலங்கைத் தமிழ் மக்களின் துயரைத் தீர்ப்பதற்கு ஆக்கபூர்வமான நடவடிக்கை எதனையும் எடுக்கவில்லை, இராமநாதபுர மீனவர்களை கடலில் சுட்டுக்கொலை செய்ததற்காக இலங்கை அரசுக்கு சிறு எச்சரிக்கை கூட விடுக்கவில்லை என்பன போன்ற காரணங்களை முன்வைத்து சீமானை களமிறக்க இந்த அமைப்புகள் முயற்சி செய்கின்றன.
இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசிய குற்றச்சாட்டில் இயக்குநர் சீமான் சிறையில் உள்ளார். அவர் தேர்தலில் போட்டியிடுவதற்கு தடையாக சட்டப் பிரச்சினை ஏதாவது இருக்கிறதா என்று ஆராய்ச்சி செய்கிறார்கள். சீமான் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டால் அவரது ஆதரவான ஒருவரை களமிறக்க இந்த இயக்கங்கள் முயற்சி செய்கின்றன.
இலங்கைத் தமிழ் மக்களுக்காகக் குரல் கொடுக்கும் இயக்கத்தின் சார்பில் ஒருவர் தேர்தலில் போட்டியிட்டால் வைகோ, டாக்டர் ராமதாஸ், திருமாவளவன் போன்றவர்கள் அந்தத் தொகுதியில் எப்படிப் பிரசாரம் செய்வார்கள். அந்தத் தொகுதி தமக்கு ஒதுக்கப்பட்ட தொகுதி என்றால் தமது வேட்பாளரை வாபஸ் பெறுவார்களா? என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
மொழிப் பிரச்சினையை முன்வைத்துத் தான் திராவிட கட்சிகள் தமிழகத்தில் ஆழமாகக் காலூன்றியுள்ளன. அவர்களின் முன்னால் இலங்கைத் தமிழ் இனப்பிரச்சினை முன்வைக்கப்பட்டுள்ளது.
தலைவர்களினதும் கட்சிகளினதும் கொள்கைக்காகவே இதுவரை தமிழக மக்கள் வாக்களித்தார்கள். இந்தத் தேர்தலில் தமிழக தலைவர்களின் கருத்துகளும் வாக்காளர்களின் உணர்வுகளும் வேறுவேறு திசையில் உள்ளன.
கொள்கைக்கும் உணர்வுக்கும் இடையேயான போட்டியில் ஜெயிக்கப்போவது யார் என்பதை இந்திய நாடாளுமன்ற பொதுத் தேர்தலின் முடிவுகள் வெளிப்படுத்தும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

வர்மா

1 comment:

சிவாஜி த பாஸ் said...

கொள்கை கொள்ளை அடிப்பது, அதை மறந்து விட்டதாகவா நினைக்கிறீர்கள்?
விஜயகாந்த், யாருடனும் கூட்டனி வைக்கவில்லை என்றால் மட்டுமே அவருக்கு விழும் வாக்குகள் வளரும் அல்லது தொடரும், எங்கு கூட்டனி வைத்தாலும் அந்த கூட்டணிக்கு அவரால் வாக்குகள் கூடாது!
இலங்கை தமிழர்கள் விடயத்தில் உறங்கி கொண்டிருக்கும் திராவிட கட்சிகளை கண்டிக்க, தண்டிக்க இந்த விடயத்தில் ஆர்வம் கொள்ள ஆரம்பித்திருக்கும் பாரதிய ஜனதா கட்சியை தனியாக நின்றாலும் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற செய்ய வேண்டும்! தமிழகத்தை சேரந்த இ.ல.கணேசன் இந்த விடயத்தை ஆரம்பத்திலிருந்தே தெளிவாக அணுகி வருகிறார்! தமிழர்கள் புதிய பாதையை ஆரம்பிக்க வேண்டிய தருணமாக இந்த தேர்தலை கருத வேண்டும்!