Wednesday, May 6, 2009
டோனி அதிரடி ஜகாதி மிரட்டல்
டோனி அதிரடி ஜகாதி மிரட்டல்
சென்னையிடம் வீழ்ந்தது டொக்கான்
ஈஸ்ட் லண்டனில் டெக்கானுக்கு எதிரான போட்டியில் டோனியின் அதிரடியும் ஜகாதியின் மிரட்டலும் கை கொடுக்க டெக்கான் அணி 78 ஓட்டங்களினால் தோல்வியடைந்தது.
நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற டோனி துடுப்பாட்டத்தைத் தேர்வு செய்தார். முதலில் துடுப்பெடுத்தாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் 20 ஓவர்களில் மூன்று விக்கட்டுகளை இழந்து 178 ஓட்டங்கள் எடுத்தது.
ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களான முரளி விஜய், ஹைடன் ஜோடி சென்னை அணிக்கு நல்லதொரு ஆரம்பத்தைக் கொடுத்தது.
ஹைடன் தனது வழமையான அதிரடியில் மிரட்ட விஜய் பந்தைத் தேர்வு செய்து விளையாடினார். 6.5 ஓவர்கள் களத்தில் நின்ற இந்த ஜோடி 61 ஓட்டங்கள் எடுத்தது. 43 ஓட்டங்கள் எடுத்த ஹைடன் பந்தை ஆர்.பி. சிங்கிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். 33 பந்துகளுக்கு முகங் கொடுத்த ஹைடன் மூன்று சிக்ஸர் ஐந்து பௌண்டரிகள் அடங்கலாக 43 ஓட்டங்கள் எடுத்தார்.
ஹைடன் ஆட்டமிழந்ததும் களமிறங்கிய டோனி இறுதிவரை களத்தில் நின்று தனது பழைய அதிரடியை வெளிக்காட்டினார். முன்னைய போட்டிகளில் சோபிக்காத டோனி கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் தனது வழமையான அதிரடியை வெளிக்காட்டினார்.
12.1 ஓவரில் சென்னை அணி 99 ஓட்டங்கள் எடுத்தபோது முரளி விஜய் 31 ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர். 33 பந்துகளுக்கு முகம் கொடுத்த விஜய் ஒரு சிக்ஸர் இரண்டு பெளண்டரிகள் அடங்கலாக 31 ஓட்டங்கள் எடுத்தார்.
அணித் தலைவர் டோனியுடன் ரைனா இணைந்தார். இருவரும் தமது அதிரடியை வெளிக்காட்ட டெக்கான் அணி வீரர்கள் திக்கு முக்காடினர். டெக்கான் அணிக்கு தலையிடியைக் கொடுத்த இந்த ஜோடியை ஆர்.பி. சிங் பிரித்தார். 19 பந்துகளுக்கு முகம் கொடுத்த ரைனா இரண்டு சிக்ஸர், ஒரு பௌண்டரி மூலம் 32 ஓட்டங்கள் எடுத்தார்.
ஆட்ட நேர முடிவின் போது சென்னை அணி மூன்று விக்கட்டுகளை இழந்து 178 ஓட்டங்களை எடுத்தது. மர்கம் நான்கு ஓட்டங்கள் எடுத்தார். 37 பந்துகளுக்கு முகம் கொடுத்த டோனி ஒரு சிக்ஸர் ஆறு பௌண்டரிகள் மூலம் 58 ஓட்டங்கள் எடுத்தார்.
ஆர்.பி. சிங், சொஹைப், தமர் ஆகியோர் தலா ஒரு விக்கட்டை வீழ்த்தினர்.
179 என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய டெக்கான் அணிக்கு மொர்கனும் தியாகியும் அதிர்ச்சியளித்தன. மொர்கலின் முதல் பந்தில் அணித் தலைவர் கில்கிறிஸ்ட் ஓட்டமெதுவும் எடுக்காது வெளியேறினார்.
அடுத்து வந்த லக்ஷ்மன் மொர்கலின் பந்தை ஜகாதியிடம் பிடி கொடுத்து ஓட்டமெதுவும் எடுக்காது வெளியேறினார். 2.2 ஓவர்களில் வைற் மூலம் பெறப்பட்ட ஒரே ஒரு ஓட்டத்தைப் பெற்று மூன்று விக்கட்டுகளை இழந்தது டெக்கான். ஆரம்பப் போட்டிகளில் வெற்றியைப் பெற்ற எதிரணிகளை கலக்கிய டெக்கான் சென்னை அணிக்கு முன்னால் தடுமாறியது.
நான்காவது இணைப்பாட்டத்தில் விளையாடிய ரோஹித் சர்மா ஸ்மித் ஜோடி சென்னை வீரர்களுக்கு சவால் விட்டது. ஸ்மித்தின் அதிரடி டெக்கான் அணிக்கு தெம்பை ஏற்படுத்தியது. சென்னை அணிக்கு தொல்லை கொடுத்த ஜோடியை ஜகாதி பிரித்தார். ஜகாதியின் பந்தை பத்திரி நாத்திடம் பிடி கொடுத்த ரோஹித் சர்மா ஆட்டமிழந்தார். 20 பந்துகளுக்கு முகம் கொடுத்த ரோஹித் சர்மா ஒரு சிக்ஸர் இரண்டு பௌண்டரிகள் அடங்கலாக 21 ஓட்டங்கள் எடுத்தார்.
சென்னை அணியை மிரட்டிய ஸ்மித்தை ஜகாதி எல்.பி.டபிள்யூ. முறையில் வெளியேற்றினார்.
23 பந்துகளுக்கு முகம் கொடுத்த ஸ்மித் ஐந்து சிக்ஸர் இரண்டு பௌண்டரி அடங்கலாக 49 ஓட்டங்கள் எடுத்தார்.
ஸ்மித்தின் இரண்டு பிடிகளை சென்னை வீரர்கள் தவறவிட்டனர். ஒரு ரன் அவுட்டையும் சென்னை வீரர்கள் கோட்டை விட்டனர். சென்னை வீரர்களின் களத் தடுப்பு மிக மோசமாக இருந்தது. அடுத்து வந்த வீரர்கள் அனைவரும் ஒற்றை ஓட்டங்களுடன் வெளியேறினர்.
14.4 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்த டெக்கான் 100 ஓட்டங்களை மட்டும் பெற்று பரிதாபமாக தோல்வியடைந்தது. ஆட்ட நாயகனாக டோனி தெரிவு செய்யப்பட்டார். எட்டாவது போட்டியில் விளையாடிய சென்னை நான்காவது வெற்றியைப் பெற்றது. ஏழாவது போட்டியில் விளையாடிய டெக்கான் மூன்றுபோட்டிகளில் தோல்வியடைந்தது.
ரமணி
00000
கொல்கத்தாவின் பரிதாபம் தொடர்கிறது
கொல்கத்தா நைட்ரைடர், டெல்லி டேர் டெவில்ஸ் அணிகளுக்கிடையே டேர்பனில் நடைபெற்ற போட்டியில் டெல்லி அணி ஒன்பது விக்கெட்களால் வெற்றி பெற்றது.
நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற கொல்கத்தா முதலில் துடுப்பெடுத்தாடியது. முன்னைய போட்டிகளில் பிராகாசிக்காத மக்கலம் சிறந்த அடித்தளத்தை அமைத்தார். மக்கலம் வன்விக் 6.6 ஓவர்களில் 58 ஓட்டங்கள் எடுத்து டில்லிக்கு நெருக்கடியையும் கொடுத்தது. சவ்லா வின் பந்தை ஹெராவிடம் பிடிகொடுத்த மக்கலம் 29 பந்துகளில் மூன்று சிக்ஸர் ஒரு பவுண்டரி அடங்கலாக 35 ஓட்டங்கள் எடுத்தார். அடுத்து களமிறங்கிய ஹெட்ஜ் 10 ஓட்டங்களுடன் வெளியேறினார்.
சிறந்த முறையில் துடுப்பெடுத்தாடி கொல்கத்தாவுக்கு நம்பிக்கையை ஏற்படுத்திய வன் விக் நெஹ்ராவின் பந்து வீச்சில் 74 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். 48 பந்துகளுக்கு முகம் கொடுத்த இவர் 11 பௌண்டரிகள் அடங்கலாக 74 ஓட்டங்கள் எடுத்தார். ஹொகுனிஸ் ஆட்டமிழக்காது 30 ஓட்டங்கள் எடுத்தார். 20 ஓவர்களில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் மூன்று விக்கெட்டுகளை இழந்து 15 ஓட்டங்கள் எடுத்தது.
காயம் காரணமாக ஷேவாக் விளையாடாததனால் கம்பீர் அணித்தலைவராக செயற்பட்டார்.
155 என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய டெல்லி டேர்டெவில்ஸ் 19 ஓவர்களில் ஒரே ஒரு விக்கெட்டை இழந்து 157 ஓட்டங்கள் அடித்து வெற்றி பெற்றது.
ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களான கம்பீர் டேவிட் வார்னர் ஜோடி 6. 6 ஓவர்களில் 60 ஓட்டங்கள் எடுத்து நம்பிக்கை ஊட்டியது. 23 பந்துகளுக்கு முகம் கொடுத்த டேவிட் வர்னர் ஒரு சிக்ஸர் ஐந்து பௌண்டரிகள் அடங்கலாக 36 ஓட்டங்கள் எடுத்தபோது அகர்கரின் பந்தை வன்விக்கிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். கம்பீர் டில்ஷான் ஜோடி டெல்லி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றது. கொல்கத்தாவின் களத்தடுப்பு மிக மோசமாக இருந்தது. கம்பீர் 21 ஒட்டங்கள் எடுத்திருந்தபோது மிக எளிதான பிடியை கொல்கொத்தா வீரர்கள் தவற விட்டனர். கம்பீர் 32 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது ரன் அவுட்டிலிருந்து தப்பினார். டில்ஷான் 24 ஓட்டத்தின் போது அவரைஆட்டமிழக்கச் செய்ய இருந்த சந்தர்ப்பத்தை கோடி நழுவவிட்டார்.
19 ஓவர்களில் டெல்லி அணி ஒரு விக்கட்டை இழந்து 15 ஓட்டங்கள் எடுத்தது.
57 பந்துகளுக்கும் முகம் கொடுத்த கம்பீர் ஏழு பௌண்டரிகள் அடங்கலாக 71 ஓட்டங்கள் அடித்தார்.
23 பந்துகளுக்கு முகம் கொடுத்த டில்ஷான் ஒரு சிக்ஸர் ஐந்து பௌண்டரிகள் அடங்கலாக 36 ஓட்டங்கள் எடுத்தார்.
ஆட்டநாயகனாக கம்பீர் தெரிவு செய்யப்பட்டார். டெல்லி அணி ஐந்தாவது வெற்றியைப் பெற்றது. கொல்கத்தா ஏழாவது தோல்வியைச்சந்தித்து புள்ளிப்பட்டி யலில் கடைசியில் உள்ளது.
ரமணி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment