Friday, May 1, 2009
திரைக்ககுவராதசங்கதி 10
சினிமாவில் நடிக்கும் ஆர்வத்துடன் முயற்சி செய்த கே.வி மகாதேவன் இசை அமைப்பாளர் ஏஸ்.வி.வெங்கட்ராமனிடம் உதவியாளராக சேர்ந்தார். பின்னர் டி.ஆர்.சுப்பராவ், டி.ஏ. கல்யாணம் அகியோரிடம் உதவியாளராகப் பணியாற்றினார். அவர் மூலம் மாடன் தியேட்டரில் சேர்ந்தார். கே.வி மகாதேவனின் வாழ்க்கையில் திருப்பு முனையை ஏற்படுத்தியது மார்டன் தியேட்டர். அங்கு இருந்த டி.ஜி லிங்கப்பா, டி.ஆர் பாப்பா ஆகியோர் அவரின் திறமையை கண்டு முதலாளி டி.ஆர். சுந்தரத்திடம் அவரைப்பற்றி கூறி கே.வி மகாதேவனை இசை அமைப்பாளராக்கினார்கள். கே.வி மகாதேவனின் இசையில் மயங்கிய பி.யூ.சின்னப்பாவும் இதற்கு உடந்தையாக இருந்தார்.
பி.யூ.சின்னப்பா, டி.ஆர் மகாலிங்கம், டி.ஆர் ராஜகுமாரி ஆகியோரின் நடிப்பில் மனோன் மணி என்ற படத்தை மார்டன் தியேட்டர் தயாரித்தது அப்படத்தில் பி.யூ சின்னப்பா பாடிய மோகனாங்கமதினி என்ற பாடலே அவர் முதல் முதல் இசையமைத்த பாடல். முதல் பாடலிலேயே தமிழ் திரை உலக ரசிகர்களைக் கவர்ந்தார்.
சினிமாப்படத்தில் பின்னணி பாடகராக விரும்பிய இளைஞர்கள் பலர் மார்டன் தியேட்டர்சுக்கு படையெடுத்தõர்கள் அவர்களை இசை அமைப்பாளர் கே.வி. மகாதேவனிடம் அனுப்புவார் மாடன் தியேட்டர்ஸ் அதிபர் சுந்தரம். குரல் தரமானதாக இருந்தால் பின்னணிபாடுவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படும்.
பின்னணிப் பாடகராகும் ஆசையில் கே.வி. மகாதேவனை ஒருவர் சந்தித்தார். அவருடன் சிறிது நேரம் பேசிவிட்டு வழிச் செலவுக்கு இரண்டு ரூபாவும் ஒரு சட்டையும் கொடுத்தனுப்பினார் இசை அமைப்பாளர் கே.வி. மகாதேவன். கே.பி. மகாதேவனால் திருப்பி அனுப்பப்பட்டவர் பின்னர் மெல்லிசை மன்னர் என்ற பட்டப் பெயருடன் கே.வி. மகாதேவனுக்கு இணையாக தமிழ்த்திரை உலகில் வலம் வந்தவர்.
எம்.ஜி.ஆர். நடித்த குமாரி என்ற படத்திற்கு கே.வி. மகாதேவன் இசை அமைத்தார். அதன் பின்னர் இருவருக்குமான உறவு இறுக்கமடைந்தது. நால்வர் படத்தில் நாகராஜனுடன் ஏற்பட்ட தொடர்பினால் அவருடைய ஆஸ்தான இசை அமைப்பாளரானார் கே.வி. மகாதேவன். தாய்க்குப்பின் தாரம் என்ற படத்தின் பின்னர் கே.வி. மகாதேவனுக்கு சாண்டோ சின்னப்பா தேவருக்குமான உறவு வலுப்பெற்றது.
சிவாஜி எம். ஜி.ஆர். நடித்த கூண்டுக்கிளி என்ற படத்துக்கு கே.வி. மகாதேவன் இசை அமைத்தார். இந்தப்படத்தில் தான் சிவாஜி கணேசனுக்கும் சௌந்தராஜன் முதன் முதலில் குரல் கொடுத்தார். கொஞ்சம் கிளியான பெண்னே என்ற அப்பாடலைக் கேட்ட எம்.ஜி.ஆர். தனது படத்திலும் ரி.எம். சௌந்தராஜன் பாட வேண்டும் என்று விரும்பினார்.
எம்.ஜி.ஆரின் விருப்பப்படி மலைக்கள்ளன் படத்தில் எம்.ஜி.ஆருக்கு முதல் முதலில் ரி.எம். சௌந்தரராஜன் பாடினார். அதன் பின்னர் எம்.ஜி.ஆருக்கும் சிவாஜிக்கும் பொருத்தமான குரலில் பாடி ரசிகர்களின் பேராதரவைப் பெற்றார் டி.எம்.சௌந்தராஜன்.
கே.வி. மகாதேவனின் பாடல்கள் ரசிகர்களின் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றன. கே.வி. மகாதேவனின் இசை அமைப்பில் வெளியான முதல் வெற்றிப் படம் டவுண் பஸ். எம்.எஸ்.ராஜேஸ்வரி பாடிய சிட்டுக்குருவி சிட்டுக்குருவி, திருச்சிலோக நாதன், ஜெயலஷ்மி பாடிய பொன்னான வாழ்வே ஆகிய பாடல்கள் இன்றும் மனதை வருடுகின்றன.
எம்.ஜி.ஆருக்கு முதன் முதலில் எஸ்.பி. பாலசுப்பிரணியம் பாடிய பாடல் "ஆயிரம் நிலவே வா' அப்பாடல் இடம்பெற்ற அடிமைப் பெண் படத்தின் இசை அமைப்பாளர் கே.வி. மகாதேவன்.
(தொடரும்)
அடிமைப் பெண் படத்தின் கதாநாயகி ஜெயலலிதா பாட வேண்டும் என்று எம்.ஜி.ஆர் விரும்பினார். அம்மா என்றால் அன்பு எனும் பாடலை மெட்டமைத்து ஒலிநாடாவில் ஜெயலலிதாவிடம் கொடுக்கப்பட்டது. அவர் பாடிப் பயிற்சி பெற்ற பின்னர் ஏ.வி.எம். ஸ்டூடியோவில் ஒலிப்பதிவு செய்யப்பட்டது.
கே.வி. மகாதேவனின் உதவியாளரான புகழேந்தி, கவியரசு கண்ணதாசனின் பல கவிதைகளை பொருத்தமான இடங்களில் திரைப்படப் பாடலாக்கினார். ஒரு கிண்ணத்தை ஏந்துகிறேன் என்ற கவிதையை வசந்த மாளிகையில் திரைப்படப் பாடலாக்கினார் புகழேந்தி. இரண்டு மனம் வேண்டும் என்ற பாடலின் இடையே வரும் கடவுளைத் தண்டிக்க என்ன வழி என்ற வரியை புகழேந்தி தான் கூறினார்.
சங்கராபரணம் படப் பாடல்களுக்காக கே.வி. மகாதேவனுக்கு தேசிய விருது வழங்கப்பட்டது. அப்படத்தில் பாடல்களைப் பாடுவதற்கு எஸ்.பி. பாலசுப்பிரமணியம் தயங்கினார். அவரே ஊக்கப்படுத்தி பாட வைத்தவர் கே.வி. மகாதேவனின் உதவியாளர் புகழேந்தி.
தெலுங்குப் படமான சங்காரபரணத்தின் பாடல்கள் மொழி தெரியாதவர்களையும் ரசிக்க வைத்தது. கிராமியப் பாடல்களை அப்படியே மனதில் பதிய வைத்தவர் கே.வி. மகாதேவன்.
ரமணி
மித்திரன் 03/05/2009
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
சம்பூர்ண ராமாயணம் படம் சொல்லவில்லையே. ராவணன் டி.கே.பகவதிக்காக சி.எஸ்.ஜயராமன் அவையில் எல்லோரும் என்ன ராகத்தில் என்ன பாடவேண்டும் என கேட்க, ஸ்வரம் பாடி, பூபாளம், வஸந்தா, சங்கராபரணம், தோடி, கல்யாணி, தன்யாசி, நிறைவில் மண்டோதரி அவரிட்ம கைலைநாதனை தங்கள் கானத்தால் கவர்ந்த ராகம் எது என்று கேட்டதும் காம்போதி என்று பாடுவாரே ராகமாலிகையில் அமைந்த அந்த பாட்டும் காட்சியும் மறக்க முடியாதது. அரக்கனிடம் இப்படி ஒரு இசை ஞானமா?
சகாதேவன்
Post a Comment