Friday, May 22, 2009

கைவிடுமா காங்கிரஸ்? கலக்கத்தில் தி.மு.க!?இந்திய நாடாளூமன்றத்தேர்தலின்போது சோனியாகாந்தியின் தமிழகப்பிரசாரம் ஒத்திவைக்கப்பட்டதையடுத்து தேர்தலுக்கு இரண்டுநாட்கள் முன்பு விகடன் யுத்ஃபுல் தேர்தல்களத்தில் வெளிவந்த எனதுகட்டுரையை காலத்தின் தேவைகருதி பதிவிடுகிறேன்
கைவிடுமா காங்கிரஸ்? கலக்கத்தில் தி.மு.க!?
- சூரன். ஏ.ரவிவர்மா
தமிழக தேர்தல் களத்தில் அ.தி.மு.க. பிரசாரம் மக்களின் மனதில் பட்டென்று ஒட்டிக் கொண்டுள்ளதனால் திராவிட முன்னேற்றக் கழகமும் காங்கிரஸும் தடுமாறியிருக்கின்றன.
காங்கிரஸ் தலைவி சோனியா காந்தியின் வருகையை பெரிதும் அவர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்தனர். காங்கிரஸ் தலைவி சோனியா காந்தியும் முதல்வர் கருணாநிதியும் ஒரே மேடையில் தோன்றி பிரசாரம் செய்தால் மக்களின் மனதில் மாற்றம் ஏற்படும் என்று எதிர்பார்த்தவர்களின் நம்பிக்கையில் முதலில் இடி விழுந்தது.
காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் முதல்வர் கருணாநிதி ஓய்வு எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தியிருந்தனர்.
முதல்வர் கருணாநிதியின் உடல் நிலை முன்னரைப் போல் சுறுசுறுப்பாக இல்லாததனால் அவரால் சூறாவளிப் பிரசாரம் எல்லாம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.
மிக முக்கியமான தொகுதிகளில் மட்டும் பிரசாரம் செய்வதற்கு முதல்வர் கருணாநிதி திட்டமிட்டிருந்தார். காங்கிரஸ் தலைவி சோனியா காந்தியுடனான பிரசாரத்தின் பின்னர் தமிழகத்தில் எழுச்சி அலை தோன்றும் என்று எதிர்பார்த்தவர்களுக்கு சோனியாவின் தமிழக விஜயம் ஒத்திவைக்கப்பட்டது அதிர்ச்சியளித்தது.
பின்னர், சோனியா தமிழகம் வந்து முதல்வருடன் ஒரே மேடையில் பிரசாரம் மேற்கொண்டார். அதனால், மக்களின் மனநிலையில் எவ்வித மாற்றமும் அடையவில்லை என்பதை ஊடகங்களின் வாயிலாக அறிந்து கொள்ள முடிந்தது.
இதனிடையே, இலங்கையில் தமிழ் மக்கள் கொல்லப்படும் இவ்வேளையில் அங்கு போர் நிறுத்தத்துக்குரிய ஏற்பாடு செய்யாமல் சோனியா தமிழகத்துக்கு வரக் கூடாது என்ற கூறி கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் செய்த பழ.நெடுமாறன், பாரதிராஜா போன்றவர்கள் கைது செய்யப்பட்டதும் மக்களிடையே அதிருப்தியையே ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகம், ஆந்திரா ஆகிய மாநிலங்களுடன் தமிழகம் பல விஷயங்களில் முரண்பட்டுள்ளது. பெங்களூரில் தமிழர்கள் மீது பல தடவைகள் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தமிழர்களின் கடைகளும் தமிழ்ப் படம் ஓடிய பட மாளிகைகள் அடித்து நொருக்கப்பட்டன. அந்த நிலையிலும் ஆந்திர, கர்நாடக அரசியல்வாதிகளும் தமிழகம் வரக் கூடாது என்று யாரும் தடை போடவில்லை.
இந்திய தேசியக் கட்சியின் தலைவி தமிழ்நாட்டுக்கு வரக்கூடாது என்று தமிழகத்தில் உள்ள சிலர் எதிர்ப்பது காங்கிரஸ் கட்சித் தலைவி மீது அவர்கள் கொண்டிருக்கும் வெறுப்புணர்வை வெகுவாக வெளிப்படுத்தியது.
இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவு தெரிவிப்பவர்கள் காங்கிரஸ் கட்சியின் மீதே பெரும்பாலும் தமது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளனர். அத்தகையோர் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் அனைத்து தொகுதிகளிலும் தமது எதிர்ப்புப் பிரசாரத்தை மேற்கொண்டனர். அண்மையில் புதுச்சேரியில் நடந்த எதிர்ப்பு பிரசாரத்தில் இயக்குனர் சீமானின் பேச்சு குறிப்பிடத்தக்கது.
இலங்கைத் தமிழ் மக்களுக்கு ஆதரவான தமிழ் உணர்வாளர்களின் பிரசாரம் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணிக்கு தெம்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜெயலலிதாவும் வைகோவும் இலங்கைப் பிரச்னையை கையிலெடுத்து தமது பிரசாரத்தில் உணர்ச்சிகளை வெளிப்படுத்தியுள்ளனர்.
இலங்கை விவகாரத்தில் இந்திய மத்திய அரசும் தமிழக அரசும் தவறு செய்து விட்டன என்ற இவர்களின் குற்றச்சாட்டுகள் வலுவான காரணங்களால் திராணியற்று திராவிட முன்னேற்றக் கழகமும் காங்கிரஸ் கட்சியும் தடுமாறுகின்றன.
திராவிட முன்னேற்றக் கழகம் இதுவரை செய்த சாதனைகளையும் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்போகும் திட்டங்களையும் பட்டியலிடுவதற்கு எதிர்க்கட்சிகள் இடமளிக்கவில்லை.
ஜெயலலிதா, வைகோ, ராமதாஸ், தா.பாண்டியன் ஆகியோரின் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிப்பதிலேயே திராவிட முன்னேற்றக் கழகம் அதிக நேரத்தைச் செலவிட்டது.
தோல்விகளின்போது துவண்டு விழாது வீறு கொண்டு எழுந்த முதல்வர் கருணாநிதி தற்போது சக்கர நாற்காலியில் முடங்கி உள்ளார். வீறுகொண்டு எழ வேண்டும் என்று அவரது மனம் நினைத்தாலும் உடல் நிலை ஒத்துழைக்கவில்லை.
இந்திய நாடாளுமன்றத்துக்கான தமிழகத் தேர்தல் முடிவு திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணிக்குப் படு பாதகமாக அமைந்தால், திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்படும். அந்த விரிசல் சில வேளை தமிழக சட்டமன்றத்தை ஆட்டம் காண வைக்கும் ஏது நிலை உருவாகும். திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு எதிரான காங்கிரஸ் தலைவர்களின் கை அப்போது ஓங்கி விடும்.
ஜெயலலிதா கையில் எடுத்துள்ள 'தமிழீழம்' என்ற பிரமாஸ்திரம் தமிழகத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சலசலப்பின் மூலமே நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று விடலாமென ஜெயலலிதா நினைக்கிறார்.
தேர்தல் முடிந்ததும் இந்தப் பிரமாஸ்திரத்தை ஜெயலலிதா வைத்திருப்பாரா? தூக்கி எறிந்து விடுவாரா? என்பதை யாராலும் கணித்துக் கூற முடியாதுள்ளது.
தமிழகத் தேர்தல் களமும் உடல் நிலையும் முதல்வர் கருணாநிதிக்கு சவாலாக உள்ளது. இந்தத் தேர்தல் களத்தில் ஜெயிக்கப்போவது யார் என்பது மே 16-ல் தெரிந்துவிடும்.
அப்போது நமது சந்தேகங்கள் எல்லாம் நிவர்த்தியாகிவிடும்.
ஆனால்...
இலங்கைத் தமிழர்களின் நிலை..???
அப்பிரச்னையில் மட்டும் கேள்விக்குறிகள் தொடரும்!

No comments: