Sunday, May 24, 2009

வெற்றிக்கு வழிகாட்டிய முதல்வரைகைவிட்ட சோனியா காந்தி


பலமான கூட்டணி, வாக்கு வங்கி, பிரசாரப் பீரங்கி போன்ற மாயையுடன் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட தமிழக வேட்பாளர்கள் பலருக்கு அதிர்ச்சி வைத்தியமளித்துள்ளனர் தமிழக வாக்காளர்கள்.
திராவிட முன்னேற்றக் கழகம், காங்கிரஸ் கட்சி ஆகியவற்றின் கூட்டணி தமிழகத்தில் படுதோல்வியடையும் என்ற எதிர்பார்ப்புக்களை மீறி வெற்றிக்கனியைப் பறித்துக் கொடுத்த தமிழக முதல்வர் எதிர்பார்த்த அமைச்சுப் பதவிகளைக் கொடுக்காது தட்டிக் கழித்து விட்டார் காங்கிரஸ் கட்சித் தலைவி சோனியா காந்தி. இதனால், வெளியிலிருந்து ஆதரவு கொடுக்க தி.மு.க. முடிவு செய் துள்ளது.
எதிர்பார்த்ததை விட அதிகளவில் ஆசனங்களுடன் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றுள் ளது. புதிய அமைச்சரவையில் இடம்பெறப்போகிறவர்கள் பற்றிய விபரங்களை அறிய கட்சித் தொண்டர்கள் ஆவலாக உள்ளனர். தமிழகத்துக்கு எத்தனை மந்திரிப் பதவிகளை சோனியா ஒதுக்குவார், திராவிட முன்னேற்றக்கழகத்துக்கு எத்தனை மந்திரிப் பதவி ஒதுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு மேலோங்கி இருந்தது.
காங்கிரஸ் கட்சியின் சார்பில் தமிழகத்தில் இருந்து 9 பேர் நாடாளுமன்றத்துக்குத் தெரிவாகியுள்ளனர். மத்திய மந்திரி பதவியை அலங்கரிக்கும் மணிசங்கர் அய்யர் போன்றவர்கள் தோல்வியடைந்தனர். மந்திரிப் பதவியில் குறி வைக்கும் பாட்டாளி மக்கள் கட்சி அணி மாறி படுதோல்வியடைந்தது. பா.ம.க. கட்சிக்கு கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஒதுக்கப் பட்ட அமைச்சுப் பதவிகளில் ஒன்றாவது தனக்குக் கிடைக்கும் என முதல்வர் கருணாநிதி எதிர்பார்த்தார்.தயாநிதி மாறன், டி.ஆர்பாலு, ராசா ஆகியோருக்கு மந்திரிப் பதவி கொடுக்க வேண்டும். முதல்வர் கருணாநிதியின் மகன் மு.க. அழகிரி, மகள் கனிமொழி ஆகியோரின் பெயரும் அமைச்சுப் பதவிக்கு பலமாக அடிபட்டது. டி.ஆர்.பாலு. ராசா ஆகியோர் அமைச்சராவதை காங்கிரஸ் கட்சியிலுள்ளவர் கள் சிலர் விரும்பவில்லையெனத் தெரிகிறது.
9 அமைச்சர்கள் வேண்டுமென்பதில் தி.மு.க. உறுதியாக இருந்தது. பேச்சுவார்த்தையின் பின்னர் 7அமைச்சர்கள் என்ற நிலைக்கு திராவிட முன்னேற்றக்கழகம் இறங்கி வந்தது. 6 அமைச்சர்கள் தரலாமென்ற காங்கிரஸின் முடிவால் வெளியிலிருந்து ஆதரவு தெரிவிப் பதாக தி.மு.க. அறிவித்துள்ளது.
ரயில்வே, கப்பல்துறை, ஆகியவற்றை தன்னிடம் தர வேண்டுமென்று தி.மு.க. கோரிக்கை விடுத்தது. கடந்த ஆட்சிக்காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட ரயில்வே அபிவிருத்திகளை விரைந்து முடிக்கவும் சேது சமுத்திரத் திட்டத்தை தடையின்றி நிறைவேற்றவும் அத்து றைகள் இரண்டையும் தனக்கு ஒதுக்கும்படி டாக்டர் ராமதாஸ் தி.மு.க. வேண்டுகோள் விடுத்தது.
மிகுந்த நெருக்கடிகளின் மத்தியில் தமிழ கத்தில் எதிர்பார்க்காத வெற்றியைத் தேடிக் கொடுத்த தனது கோரிக்கை உதாசீனம் செய் யப்பட்டதால் முதல்வர் கருணாநிதி அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி உயர்மட்டத் தலைவர் களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். எதிர்பார்க்காத பிரமாண்டமான வெற்றியைப் பெற்றதால் காங்கிரஸ் கட்சி தம்மை உதாசீனம் செய்கி றது என தி.மு.க. கருதுகிறது.
1967ஆம் ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தலில் கர்ம வீரர் காமராஜரை தோல்வியடையச் செய்து தனது பெயரை அரசியல் அரங்கில் ஆழமாகப் பதித்த விருது நகர் 2009 ஆம் ஆண்டு நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் வைகோவை புறந்தள்ளி மீண்டும் ஒரு முறை தனது பெயரை ஆழமாகிப் பதித்துள்ளது.
விருது நகரில் வைகோ வீழ்ந்த அதேவேளை தமிழகத்தில் அவருடைய கட்சி தோல்வியைச் சந்தித்துள்ளது. 2004 ஆம் ஆண்டு திராவிட முன்னேற்றக்கழகத்தின் கூட்டணியில் போட்டியிட்ட மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழக உறுப்பினர்கள் நான்கு பேரும் வெற்றி பெற்றனர்.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் கூட்டணியில் நான்கு பேர் வைகோவின் கட்சியின் சார்பில் போட்டியிட்டனர். அவர்களில் ஒருவர் மட்டும் வெற்றி பெற்றார். அவரை கட்சி மாற்றும் முயற்சியை சிலர் செய்யலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
நாடாளுமன்ற தேர்தலில் மிக மோசமாக அடிவாங்கிய கட்சி பாட்டாளி மக்கள் கட்சியாகும். வன்னிய சமூகத்தின் பலம் என்ற மாயையுடன் திராவிடக் கட்சிகள் இரண்டையும் தனது ஒப்பந்தத்துக்கு இணங்கச் செய்தவர் டாக்டர் ராமதாஸ். கூட்டணியில் இருந்து இறுதி நேரத்தில் இடம்மாறி நினைத்ததைச் சாதித்த டாக்டர் ராமதாஸின் கட்சியைச் சேர்ந்த ஏழு வேட்பாளர்களும் தோல்வியடைந்தனர்.
தனது மகன் அன்பு மணிக்காக தனது கட்சிக்கு ராஜ்ய சபா உறுப்பினர் பதவியை ஜெயலலிதாவு டனான ஒப்பந்தத்தில் கோரியி ருந்தார் ராமதாஸ். படுதோல்வியடைந்த கட்சிக்கு ராஜ்ய சபா உறுப்பினர் பதவியை கொடுப்பதற்கு ஜெயலலிதா விரும்பமாட்டார்.
தமிழகத்திலும், மத்தியிலும் ஆட் சியை அமைக்கும் சக்தி மிக்க கட்சி என்ற பெருமையை பாட்டாளி மக்கள் கட்சி இழந்துள்ளது. தான் இழைத்த தவறைத் திருத்துவதற்கு அடுத்த தமிழக சட்டமன்றத் தேர்தல்வரை காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.
வைகோ, டாக்டர் ராமதாஸ் ஆகியோருடன் ஒப்பிடுகையில் விஜயகாந்த் வளர்ச்சியடைந்துள்ளார். 40 தொகுதிகளிலும் போட்டியிட்ட அவரின் கட்சி 10 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளது. தமிழகத்தில் ஆட்சியைப் பிடிப்பதற்கு 10 சதவீத வாக்கு போதுமானதல்ல. மாநிலத்தில் உள்ள கட்சியுடன் அல்லது மத்தியில் ஆட்சி அமைக்கும் கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டால்தான் விஜயகாந்தின் கனவு நிஜமாகும். அவர் தனித்து போட்டியிடுவதால் பிரதான கட்சிகளின் வெற்றி விகிதாசாரம் குறையுமே தவிர, அவற்றை தோல்வியடையச் செய்ய அவரால் முடியாது.
வர்மா
வீரகேசரி 24/05/2009

No comments: