Thursday, June 14, 2012

தடம் மாறிய தமிழ்ப்படங்கள் 35


திருமணம் முடித்து ஒரு வருடம் வாழ்ந்து பார்ப்பது பிடித்திருந்தால் தொடர்வது இல்லையேல் விவாகரத்துச் செய்வது என்ற விபரீதங்களுடன் 2000 ஆம் ஆண்டு வெளியான படம் பிரியமானவளே. தமிழ்க் கலாசாரத்தைக் குழிதோண்டிப் புதைத்த இந்தக் கதையை விஜய் ரசிகர்கள் ஏற்றுக்கொண்டதால் வெற்றி பெற்றது. தமிழ்க் கலாசாரத்தைக் கொச்சைப்படுத்தும் கதையை நேர்த்தியுடன் திரைக்கதை அமைத்து இயக்கி பாராட்டுப் பெற்றவர் கே. செல்வபாரதி.
திருமணத்துக்கு ஆணின் விருப்பமே தேவை, பெண் என்பவள் பெற்றோர் காட்டும் ஆணுக்குக் கீழ்ப்படிந்து நடக்க வேண்டும் என்ற சம்பிரதாயங்களை உடைத்தெறிந்து வித்தியாசமான கோணத்தில் திருமண உறவை அணுகியுள்ளார் இயக்குனர் கே.செல்வபாரதி.
 பல நிறுவனங்களின் உரிமையாளர் கோடீஸ்வரர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம். அவரது ஒரே மகன் விஜய். சிறுவயதில் தாயை இழந்த விஜய் அமெரிக்காவில் படிக்கிறார். படிப்பு முடித்து இந்தியாவுக்குத் திரும்பும் விஜய்க்கு இந்தியக் கலாசாரம் புதுமையாகத் தெரிகிறது. விஜய்க்குத் திருமணத்தை நடத்திவிட்டு தான் ஓய்வெடுக்க வேண்டும் என்று விரும்புகிறார் எஸ்.பி.பாலசுப்பிரமணியம். திருமணத்துக்கு ஒப்புக்கொள்ள மறுத்த விஜய் தனது நிபந்தனையைக் கூறுகிறார். விஜயின் நிபந்தனை யைக் கேட்ட எஸ்.பி. பாலசுப்பிரமணியம் அதிர்ச்சியடைகிறார். எந்தப் பெண்ணும் சம்மதிக்காத ஒரு நிபந்தனையை கூறுகிறார் விஜய்.
திருமணம் முடிந்து ஒரு வருடம் வாழ்ந்து பார்ப்பது, பிடித்திருந்தால் திருமணத்தைத் தொடர்வது பிடிக்கவில்லை என்றால் ஒரு வருடத்தின் பின் விவாகரத்துச் செய்வது.
தனது அலுவலகத்தில் பணிபுரியும் சிம்ரனைத் தனது மகனுக்குத் திருமணம் செய்து வைக்க விரும்புகிறார் எஸ்.பி.பாலசுப்பிரமணியம். வசதி இல்லாதகுடும்பத்துப் பெண்கனான. சிம்ரனுக்குத் திடீரென அதிர்ஷ்டக்காற்று அடிக்கிறது. எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கூறியபடி விஜயைச் சந்திக்கிறார் சிம்ரன். அப்போதுதான் ஒப்பந்தம் பற்றிய விபரம் சிம்ரனுக்கு தெரிய வருகிறது. திருமணம் என்ற பெயரில் நடைபெற இருக்கும் மோசமான நிலையை உணர்ந்து பெண் சிங்கமாக கொதித்தெழுகிறார் சிம்ரன். விஜயிடமும் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்திடமும் தனது ஆத்திரம் அத்தனையையும் கொட்டித் தீர்க்கிறார் சிம்ரன்.
இருதய சத்திர சிகிச்சைக்காக வீட்டிலே தங்கி உள்ள மூத்த சகோதரி. சத்திரசிகிச்சை முடிந்ததும் வீட்டுக்கு அனுப்பி வைக்கும்படி கூறியுள்ள மூத்த சகோதரியின் கணவர். காதலித்தவனிடம் தன்னை இழந்த தங்கை. இந்தத் திருமணம் நடைபெற வேண்டுமானால் நகை, வீடு, கார் என்று அளவுக்கதிகமாக வரதட்சணை கேட்கும் காதலனின் பெற்றோர். படித்து விட்டு வேலை இல்லாமல் இருக்கும் தம்பி. கணவன் இல்லாது மூன்று பெண்களையும் ஒரு ஆண் மகனைப் பாதுகாக்கும் தாய். வீட்டுச் சூழ்நிலை சிம்ரனின் மனதை மாற்றுகிறது. ஒரு வருட ஒப்பந்தத் திருமணத்துக்கு ஒப்புக்கொள்கிறார்.
ஒரு வருடத்தில் விஜய் மனம் மாறி விடலாம் என்று எஸ்.பி. பாலசுப்பிரமணியமும், சிம்ரனும் எதிர்பார்க்கிறார்கள். கழுத்தில் தாலி ஏற முன்னரே விவாகரத்து ஒப்பந்தத்தில் கையெழுத்திடுகிறார் சிம்ரன். சிம்ரனின் குடும்பக் கஷ்டம் படிப்படியாக மறைகிறது.

விஜயை மிகவும் அக்கறையுடன் கவனிக்கிறார்கள் சிம்ரன் அமெரிக்கக் கலாசாரத்தில் வளர்ந்த விஜய்க்கு இந்திய பண்பாடு கொஞ்சமும் தெரியவில்லை. சிம்ரனை மனைவியாக ஏற்றுக்கொள்ள விஜயின் மனம் துணியவில்லை.
அலுவலகத்தில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக லொறி விபத்தில் விஜயைக் கொல்ல முயற்சிக்கிறார்கள். அதிர்ஷ்ட வசமாக விஜய் உயிர் பிழைக்கிறார். விஜயின் உயிர் பிழைத்து மீண்டும் ஆரோக்கியமடைவதற்காக சிம்ரன் ஆலயங்களில் நேர்த்தி வைக்கிறார். இரவு பகலாக விஜயுடன் இருந்து வேண்டிய உதவிகளை செய்கிறார் சிம்ரன்.

விஜய் சிம்ரன் திருமணம் முடிந்து ஒரு வருடம் பூர்த்தியாகிறது. சிம்ரனை விட்டுக்கு அனுப்ப வேண்டாம் என்று எஸ்.பி. பாலசுப்பிரமணியம் மகன் விஜயிடம் கெஞ்சுகிறார். ஒப்பந்தம் முடிந்ததால் போய் விட வேண்டும் என்பதில் விஜய் உறுதியாக உள்ளார். விஜயின் குணத்தைப் பற்றி நன்கு தெரிந்த சிம்ரன் தன் வீட்டுக்குப் போகிறார். சிம்ரனின் நிலை அறிந்து அவரது குடும்பத்தவர்கள் அதிர்ச்சியடைகின்றனர். விஜயைப் பிரிந்து வந்த பின் வைத்திய பரிசோதனையில் சிம்ரன் கர்ப்பம் என்ற உண்மை தெரிய வருகிறது.

வீட்டில் இருக்க விரும்பாத சிம்ரன் வேறு ஒரு அலுவலகத்தில் வேலை செய்கிறார். காலம் தாழ்த்தி சிம்ரனின் தியாகத்தைத் தெரிந்து கொள்கிறார் விஜய். ஒப்பந்தத்தைக் கிழித்துப் போட்டுவிட்டு தன்னுடன் வீட்டுக்கு வருமாறு சிம்ரனை அழைக்கிறார் விஜய்.
விஜயினால் பாதிக்கப்பட்ட சிம்ரன் மறுக்கிறார். சிம்ரன் வேலை செய்யும் அலுவலகம் நஷ்டத்தில் இயங்குவதால் விøரவில் மூடு விழா நடக்கும் என்ற தகவல் வெளியானதும் அந்த அலுவலகத்தை விலைக்கு வாங்குகிறார் விஜய்.

சிம்ரனைக் கவர்வதற்கு விஜய் செய்யும் அனைத்தும் தோல்வியிலேயே முடிகிறது. விஜய் மீது இரக்கம் காட்ட மறுக்கிறார் சிம்ரன். தன் தவறை உணர்ந்து சிம்ரனுடன் இணைந்து வாழ வேண்டும் என்பதற்காக சிம்ரனால் ஏற்படும் அவமானங்களைத் தாங்குகிறார் விஜய்.

விவேக், தாமு, சிம்ரனின் தம்பி ஆகியோர் விஜயையும் சிம்ரனையும் சேர்த்து வைப்பதற்கு முயற்சி செய்கின்றனர். இறுதியில் விஜயை மன்னித்து ஒன்றிணைகிறார் சிம்ரன்.

விஜய், சிம்ரன் , எஸ்.பி.பாலசுப்பிரமணியம், விவேக், தாமு ஆகியோர் நடித்தனர். இசை எஸ்.ஏ.ராஜ்குமார். வெல்கம் போய்ஸ், வெல்கம் கேள்ஸ், என்னவோ என்னவோ என் வசம் நானில்லை, கல்யாணம் என்பது பூர்வ பந்தம் அழகே அழகே உன்னை மீண்டும் மீண்டும் ஆகிய பாடல்கள் ரசிகர்களைக் கவர்ந்தன.

விஜய், சிம்ரன் ஆகிய இருவரும் போட்டி போட்டு நடித்தனர். முன் பாதியில் விஜயின் கை ஓங்கியிருந்தாலும் பிற்பகுதியில் சிம்ரன் கைதட்டல் பெறுகிறார். விஜயை அவமானப்படுத்தும் காட்சிகளில் பாத்திரத்தை உணர்ந்து நடித்துள்ளார் சிம்ரன். விஜய்க்கு சமமாக சிம்ரனுக்கும் கதை அமைக்கப்பட்டுள்ளது.
ரமணி
மித்திரன்10/06/12

No comments: