Tuesday, June 12, 2012

ஜெயலலிதா விஜயகாந்த் மோதல் வேடிக்கை பார்க்கும் கருணாநிதி



புதுக்கோட்டை இடைத் தேர்தலினால் தமிழக அரசியல் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. தமிழக முதல்வருக்கு தமிழக சட்ட சபை எதிர்க்கட்சித் தலைவருக்குமிடையில் நேரடிப் போட்டியாக மாறியுள்ள இந்த இடைத் தேர்தலைத் தமிழகத்தின் ஏனைய கட்சிகள் மௌனமாகப் பார்த்துக் கொண்டிருக்கின்றன. தமிழக முதல்வர் பதவியிலிருந்து தன்னை இறக்குவதற்குக் கைகோர்த்த ஜெயலலிதாவும் விஜயகாந்தும் முட்டி மோதுவதை ஒதுங்கி நின்று வேடிக்கை பார்க்கிறார் கருணாநிதி.
தமிழக சட்ட சபைத் தேர்தலின் பிரமாண்டமான வெற்றியைப் பெற்ற ஜெயலலிதாவும் விஜயகாந்தும் மிகுந்த மகிழ்ச்சியடைந்தனர். கருணாநிதியின் அரசியல் அஸ்தமனமாகி விட்டது என்று நினைத்தார்கள். அரசியலில் பொது எதிரியான கருணாநிதியை வீழ்த்துவதற்காக ஒரே ஒரு கொள்கையிலேயே இருவரும் கை கோர்த்தார்கள். தமிழக முதல்வர் பதவியைத் தக்க வைக்க வேண்டும் என்பதற்கான காய்களை நகர்த்தி வருகிறார் ஜெயலலிதா. இன்றைய எதிர்க்கட்சித் தலைவர் நாளைய முதல்வர் என்ற கனவுடன் இருக்கும் விஜயகாந்துக்கு அரசியல் சதுரங்கம் இன்னும் சரியாகப் பிடிபடவில்லை.
விஜயகாந்தையும் அவர் கட்சி உறுப்பினர்களையும் அவமானப்படுத்தும் காரியங்களை வெகு கச்சிதமாக செய்து வருகிறார் ஜெயலலிதா. ஜெயலலிதாவை நம்பி ஏமாந்த உண்மையைக் காலம் தாழ்த்தி உணர்ந்து கொண்டார் விஜயகாந்த். திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியின் போது நடைபெற்ற இடைத் தேர்தல்களில் அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தை ஓரம் கட்டி இரண்டாவது இடைத் தைப் பிடித்த விஜயகாந்த் இப்போ நடைபெற்ற இடைத் தேர்தல்களில் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு அடுத்த இடத்தையே பிடித்தது. விஜயகாந்தின் இரண்டாவது இடம் பறிபோய் விட்டது.
புதுக்கோட்டை இடைத் தேர்தலில் ஒரு இலட்சத்துக்கும் அதிகமான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும். எதிர்த்துப் போட்டியிடுபவர்கள் கட்டுப்பணத்தை இழக்க வேண்டும் என்ற மேலிடத்து உத்தரவுடன் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அமைச்சர்களும் தொண்டர்களும் பிரசாரம் செய்கின்றனர். புதுக்கோட்டை இடைத் தேர்தலில் தோல்வி நிச்சயம் என்ற முடிவுடன் வேட்பாளரை நிறுத்தி இருக்கும் விஜயகாந்த் கௌரவமான தோல்வியையே எதிர்பார்க்கிறார். சங்கரன்கோயில் இடைத் தேர்தலில் ஏற்பட்ட அவமானத்துக்கு பரிகாரம் காண வேண்டும் என்ற நோக்கம் விஜயகாந்திடம் உள்ளது. புதுக்கோட்டை இடைத் தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்தி பலத்தைப் பரீட்சித்துப் பார்க்க கருணாநிதி விரும்பவில்லை. தமிழக சட்ட சபைத் தேர்தலில் அடைந்த படுதோல்வியிலிருந்து மீள்வதற்கு நாடாளுமன்றத் தேர்தலை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார் கருணாநிதி. அதற்கான ஒரு களமாகவே புதுக்கோட்டை இடைத் தேர்தலைப் பயன்படுத்துகிறார் கருணாநிதி. ஜெயலலிதாவை விட்டு விஜயகாந்த் வெளியேற வேண்டும் என்று எதிர்பார்க்கிறார் கருணாநிதி.
கருணாநிதியின் எதிர்பார்ப்பு ஓரளவு நிறைவேறியுள்ளது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை நம்பிக் கூட்டணி வைத்து ஏமாந்து விட்டோம் என்று விஜயகாந்தின் மனைவி பிரேமலதா கூறியுள்ளார். ஜெயலலிதாவின் மீதான வெறுப்பு பிரேமலதாவின் வாயிலாக வெளி வந்துள்ளது. புதுக்கோட்டை யில் பிரசாரம் செய்த பிரேமலதா கருணாநிதியின் பிறந்த நாளன்று அவருக்குப் பிறந்த நாள் வாழ்த்துக் கூறித் தனது பிரசாரத்தினை ஆரம்பித்தார். கருணாநிதிக்கு விஜயகாந்த் விடுத்த சாதக சமிக்ஞையாகவே இது கருதப்படுகிறது.
மாநிலத்தில் ஆட்சி அதிகாரம் இல்லா விட்டாலும் மத்திய அரசில் பங்காளியாக இருந்தால் மாநிலத்தில் செல்வாக்குச் செலுத்தலாம். தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியை இழந்துள்ளது. மத்திய அரசில் திராவிட முன்னேற்றகக் கழகம் பங்காளி இருப்பதனால் திராவிட முன் னேற்றக் கழக அமைச்சர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் செல்வாக்குடன் உள்ளனர். அடுத்த நாடாளுமன்றத் தேர்தலின் பின்னரும் இந்த நிலை நீடிக்க வேண்டும் என்று கருணாநிதி விரும்புகிறார். அதனால் தான் மத்திய அரசுக்கு எதிரான போராட்டங்களைத் திராவிட முன்னேற்றக்கழகம் முன்னெடுக்கிறது.
காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கு குறைவடைந்துள்ளது. அண்மையில் வட மாநில சட்ட சபைத் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. காங்கிரஸ் கட்சியின் கூட்டணிக் கட்சிகள் அடுத்த நாடாளுமன்றத் தேர்தல்களிலும் கூட்டணி சேர்வதற்கான வாய்ப்பு இல்லை. காங்கிரஸ் கட்சியை கைவிடும் எண்ணத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் உள்ளது. மத்திய அரசுக்கு எதிராக பாரதீய ஜனதாக் கட்சி கூறிய சில கருத்துகளைத் திராவிட முன்னேற்றம் கழகம் ஆதரித்துள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு திராவிட முன்னேற்றக் கழகம் விடும் மறைமுக எச்சரிக்கையாக இது உள்ளது.
தமிழக சட்ட சபைத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் படுதோல்வியடைந்ததற்கு ஸ்பெக்ரம் ஊழலே மிக முக்கிய காரணம். ராசா, கனிமொழி ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறைவாசம் அனுபவித்த போது காங்கிரஸ் கட்சி கண்டு கொள்ளவில்லை என்ற கோபம் கருணாநிதியிடம் உள்ளது. தமிழகத்தில் ஆட்சியை இழந்த நிலையில் மத்திய அரசில் இருந்தும் வெளியேறினால் நிலைமை விபரீதமாகி விடும் என்பதனால் பொறுமையாக உள்ளார் கருணாநிதி.
வர்மா
சூரன்.ஏ.ரவிவர்மா
வீரகேசரிவாரவெளியீடு 10/06/12

2 comments:

ரஹீம் கஸ்ஸாலி said...

சார்...உங்களுக்கு ஒரு வேண்டுகோள். ஒரு பதிவெழுதும்போது ஒரு பத்திக்கும், அடுத்த பத்திக்கும் இடையில் போதிய இடைவெளி விடவும். அப்போதுதான் படிப்பதற்கு வசதியாக இருக்கும்..இல்லாவிட்டால் கன்களுக்கு அயர்ச்சியாக இருக்கும். உங்கள் பதிவு சுவாரஸ்யமாக இருந்தாலும் அயர்ச்சியாக இருக்கு.....

வர்மா said...

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.அடுத்தபதிவில் குறையை நீக்க முயற்சி செய்கிறேன்.
அன்புடன்
வர்மா