Sunday, June 24, 2012



ஜனாதிபதித் தேர்தல் ஜெயலலிதாவையும் கருணாநிதியையும் சுற்றி இருப்பதைப் பொறுக்க முடியாத விஜயகாந்த், இந்திய ஜனாதிபதித் தேர்தலைப் புறக்கணிக்கப் போவதாக அறிவித்துள்ளார். சோனியாவும் காங்கிரஸ் தலைவர்களும் ஜனாதிபதி வேட்பாளர் பற்றி கருணாநிதியுடன் ஆலோசனை செய்கிறார்கள். ஜெயலலிதாவை அத்வானி சந்தித்ததும் மிக முக்கியமான சம்பவமே. அவர்கள் இருவரும் ஜனாதிபதி வேட்பாளரைப்பற்றி ஆலோசனை செய்ததாகவே செய்திகள் வெளிவந்தன.
இந்திய ஜனாதிபதித் தேர்தல் பற்றி விஜயகாந்துடன் யாரும் ஆலோசனை செய்யவில்லை. ஆகையினால் தன்னை நோக்கி மற்றவர்களைத் திசை திருப்பும் நோக்கில் பகிஷ்கரிப்பு என்ற கல்லைத் தூக்கிப் போட்டுள்ளார் விஜயகாந்த்.

மத்திய அரசில் உள்ள அரசியல் தலைவர்கள் விஜயகாந்தைக் கண்டு கொள்ளவில்லை. ஆந்திரா, கர்நாடக மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு முறைப்படி கொடுக்க வேண்டிய நீரைக் கொடுப்ப தற்கு மத்திய அரசு எதுவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இலங்கைக் கடற்படையால் இந்திய மீனவர் கொல்லப்படுவது, தாக்கப்படுவது போன்றவற்றைத் தடுப்பதற்கு கண்டிப்பான நடவடிக்கையை மத்திய அரசு எடுக்கவில்லை.
இலங்கைக்குத் தாரை வார்த்த கச்சத்தீவுக்கு இந்திய மீனவர் செல்ல முடியாத நிலை என்பவற்றைக் காரணம் காட்டி இந்திய ஜனாதிபதித் தேர்தலைப் புறக்கணிக்கப் போவதாக அறிவித்துள்ளார் விஜயகாந்த்.

விஜயகாந்தின் அறிவிப்புக்கு கை மேல் பலன் ஏற்பட்டுள்ளது. பிரணாப் முகர்ஜியை வியகாந்த் ஆதரிக்க வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் ஞானதேசிகன் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழக சட்ட சபைத் தேர்தலில் எதிர்பார்த்ததை விட அதிகூடிய உறுப்பினர்கள் உள்ளனர். தனது கட்சியைச் @Œர்ந்தவர்களின் குரல் இந்திய நாடாளுமன்றத்திலும் ஒலிக்க வேண்டும் என்று விஜயகாந்த் விரும்புகிறார். தனிந்து நின்று நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற முடியாது என்பதை காலம் கடந்து உணர்ந்துள்ளார் விஜயகாந்த். நாடாளுமன்றத் தேர்தலில் புதிய கூட்டணியில் சேர வேண்டிய அவசியம் விஜயகாந்துக்கு உள்ளது. ஆகையினால் ஜனாதிபதித் தேர்தலைக் காரணம் காட்டித் தூண்டில் போட்டுள்ளார் விஜயகாந்த்.

விஜயகாந்துடன் கூட்டணி சேர வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர்கள் பலர் விரும்புகிறார்கள். ஸ்டாலினின் பார்வையும் விஜயகாந்தை நோக்கியே உள்ளது. ஜெயலலிதா நட்டாற்றில் விட்டதால் கரை ஒதுங்க வேண்டிய அவசியம் விஜயகாந்துக்கு உள்ளது. ஆகையினால் காங்கரஸ் கூட்டணியில் இணைவதற்கான சந்தர்ப்பமாக இந்திய ஜனாதிபதித் தேர்தலை நோக்குகிறார் விஜயகாந்த்.இந்திய ஜனாதிபதித் தேர்தல் ஜெயலலிதாவின் கையை விட்டுப்போயுள்ளது. தமிழக சட்ட சபையில் திராவிடமுன்னேற்றக் கழகத்தினரின் எண்ணிக்கை குறைவு என்றாலும் கருணாநிதிக்குரிய முக்கியத்துவத்தைக் கொடுத்துள்ளார் சோனியா காந்தி. தமிழக அரசியலில் கருணாநிதியின் செல்வாக்கு இன்னமும் மங்கவில்லை என்பதை சோனியா உணர்ந்துள்ளார்.

தமிழக அரசியலில் மிக முக்கிய புள்ளியாக விளங்கிய டாக்டர் ராமதாஸ் தனது கட்சி பிரணாப் முகர்ஜியை ஆதரிக்கும் என்று அறிவித்துள்ளார். கூட்டணிக் கட்சிகளின் முதுகில் சவாரி செய்து பலனை அனுபவித்த டாக்டர் ராமதாஸின் செல்வாக்கு அதலபாதாளத்தில் விழுந்ததனால் ஜெயலலிதாவும் கருணாநிதியும் அவரை ஒதுக்கி வைத்தார்கள். யாருடனும் கூட்டணி சேரமாட்டேன் தனித்து நின்று தேர்தலில் வெற்றி பெற்று தமிழக சட்ட சபையைக் கைப்பற்றவேன் என்று சூழுரைத்த டாக்டர் ராமதாஸ், காங்கிரஸ் கட்சி முறைப்படி ஆதரவு கேட்கபதற்கு முன் தனது கட்சி ஆதரவளிக்கும் என்று அறிவித்துள்ளார்.
இந்திய நாடாளுமன்றத் தேர்தல் ராமதாஸின் கண்ணைத் திறந்துள்ளது. காங்கிரஸுடன் கூட்டணி சேர்வதற்கான விருப்பத்தை மறைமுகமாக வெளிப்படுத்தியுள்ளார் டாக்டர் ராமதாஸ். இந்த விசயத்தில் கருணாநிதி கண் அசைத்தால் தான் சோனியா காந்தி பச்சைக் கொடி காட்டுவார்.
இந்திய கொம்யூனிஸ்ட் கட்சி ஜெயலலிதாவின் வேட்பாளரையே கண்ணை மூடிக் கொண்டு ஆதரிக்கும். வைகோ மௌனம் காக்கிறார். ஜனாதிபதித் தேர்தல் நெருங்கும் வேளையில் நாடõளுமன்றத் தேர்தலைக் குறிவைத்து புதிய கூட்டணி ஏற்படும் சாத்தியம் உள்ளது.
முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமைச் சுற்றி இந்திய ஜனாதிபதித் தேர்தல் சுழன்றதனால் காங்கிரஸ் கட்சி பதற்றமாக இருந்தது. இந்திய அரசியல் ச‌துரங்கத்தைப் பற்றி நன்கு தெரிந்த அப்துல் கலாம் பகடைக் காயாக விரும்பாது ஒதுக்கி விட்டார். தனது சுய நலனுக்காக கலாமின் பெயரை முன்மொழிந்தார் மம்தா பனர்ஜி. அரசியல் குட்டையில் விழுந்தவர்கள் அதில் மூழ்குவதிலே பெரும் ஆனந்தம் கொள்வார்கள்.

இந்திய ஜனாதிபதியாக இருந்த வேளை ச‌ராச‌ரி அரசில் வாதியாக இல்லாது நேர்மையான மனிதனாக செயற்பட்ட அப்துல் கலாம் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட மனச்சாட்சி இடம் தரவில்லை என்று கூறி தான் அரசியல்வாதி இல்லை என்பதை நிரூபித்துள்ளார்.
வர்மா
சூரன்.ஏ.ரவிவர்மா
வீரகேசரிவாரவெளியீடு 24/06/12

No comments: