இலங்கைப் பிரச்சினையில் இந்திய அரசியல் களம் சூடாகியுள்ளது. தமது அரசியல் இருப்பை வெளிப்படுத்துவதற்காக தமிழக அரசியல் தலைவர்கள் சிலர் அவ்வப்போது இலங்கைப் பிரச்சினைபற்றி உரத்து குரல் கொடுப்பார்கள். இலங்கை தமிழ் மக்களுக்காக தமிழக மாணவர்கள் தமது உணர்வுபூர்வமான போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
இலங்கைத்தமிழ் மக்களின் உரிமைக்காகவும் இலங்கை அரசை எதிர்த்தும் சென்னை லயோலாக் கல்லூரியின் எட்டு மாணவர்கள் சாகும் வரையான உண்ணாவிரதப் போராட்டத்தை தமிழக அரசு சிதறடித்துள்ளது. நள்ளிரவு உண்ணாவிரதத்திடலினுள் புகுந்து பொலிஸார் மாணவர்களை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தி வைத்தியசாலையில் சேர்த்தனர். இலங்கைப் பிரச்சினையில் கருணாநிக்குப் போட்டியாக செயற்படும் ஜெயலலிதாவுக்கு இது கரும்புள்ளியை ஏற்படுத்தியுள்ளது.
மாணவர்களின் உண்ணாவிரதம் மக்களின் ஆதரவைப் பெற்று விடுமோ என அஞ்சிய அரசியல்வாதிகள் உண்ணாவிரதம் இருக்கும் மாணவர்களை சந்தித்து தமது ஆதரவினைத் தெரிவித்தனர். திராவிட முன்னேற்றக்கழக நாடாளுமன்ற உறுப்பினர் இளங்கோவன், சு.ப.வீரபாண்டியன் ஆகியோர் சென்றபோது மாணவர்கள் கடும் எதிர்ப்பைக் காட்டினர். தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவருக்கும் பலத்த எதிர்ப்புக் காட்டப்பட்டது. அரசிய லுக்கப்பால் மாணவர்களின் உணர்வு உள்ளது.
தமிழக அரசியல் கட்சிகள் அனைத்தும் இந்திய மத்திய அரசின் மீது கடும் அழுத்தத்தைக் கொடுத்து வருகின்றன. காங்கிரஸ் தலைமையிலான இந்திய அரசு அசைந்து கொடுப்பதாகத் தெரியவில்லை. ஜெனீவாவில் அமெரிக்கா சமர்ப்பித்த தீர்மானத்துக்கு இந்தியா ஆதரவு தெரிவிக்கவில்லை என்றால் தமிழக மக்கள் மத்தியில்காங்கிரஸ் தலை எடுக்க முடியாத நிலை ஏற்படும் என்பதை ராகுல்காந்தி உணரத்தொடங்கியுள்ளார்.
இலங்கையின் இறுதிக்கட்ட யுத்தம் தொடர்பாக உலக நாடுகள் பலவும் தமது கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றன. இதுபற்றி இதுவரை வாயைத் திறக்காத ராகுல்காந்தியின் மனதில் பாலச்சந்திரனின் மரணம் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக தமிழக காங்கிரஸ் தலைவர்கள் தெரிவிக்கின்றனர். இலங்கைக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுப்பதற்காக இந்திய அரசு ஆதரவு தெரிவிக்காவிடினும் இதுபோன்ற சம்பவங்களுக்கு மனம் வருந்துவதாகத் தெரிவித்தாலே போதும் என தமிழக காங்கிரஸ் தலைவர்கள் கருதுகின்றனர்.
இந்திய அரசுக்கு எதிராக டெசோ மூலம் தனது கடுமையான அதிருப்தியை வெளிப்படுத்துகிறார் கருணாநிதி. சென்னை துணைத்தூதரகம் முற்றுகைப்போராட்டம், டெல்லியில் டெசோ மாநாடு என்பவற்றைத் தொடர்ந்து தமிழகத்தின் முழு அடைப்பு போராட்டம் நடத்தி தனது கட்சியின் பலத்தை மீண்டும் ஒரு முறை நிரூபித்துள்ளார் கருணாநிதி.
வைகோ, நெடுமாறன், சீமான் போன்றவர்கள் இலங்கைத் தமிழகர்களுக்கு ஆதரவை தமிழகத்தில் பல போராட்டங்களை நடத்தியுள்ளனர். ஆனால், திராவிட முன்னேற்றக்கழகத்தின் போராட்டம் ஏனையவற்றைவிட பிரமாண்டமானதாக உள்ளது.
கருணாநிதியின் கட்டளையை சிரமேற்கொண்டு நிறைவேற்றும் தொண்டர்கள் உள்ள கட்சி என்பதை திராவிட முன்னேற்றக்கழகம் நிரூபித்துள்ளது. திராவிட முன்னேற்றக்கழகத்தின் தலைவர்கள் உட்பட பல தொண்டர்கள் கைது செய்யப்பட்டனர். சென்னை துணைத் தூதரக முற்றுகையின் போதும் பொலிஸார் எதிர்ப்பார்த்ததைவிட அதிகமானவர்கள் கைது கைது செய்யப்பட்டனர். கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற முழு கடை அடைப்பும் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு வெற்றியைத் தேடி கொடுத்துள்ளது.
மத்திய அரசில் கூட்டணியாக இருக்கும் திராவிட முன்னேற்றக்கழகம் வெளியேற வேண்டும் என்ற நெடுமாறன் அறிவித்துள்ளார். இதையே தான் கருணாநிதியும் எதிர்ப்பார்க்கிறார். மத்திய அரசுக்கு எதிராக நடைபெறும் இப்போ ராட்டங்கள் புறக்கணிக்கப்பட்டால் அமைச்சுப் பதவிகளை இராஜினாமாச் செய்து விட்டு மத்திய அரசில் இருந்து திராவிட முன்னேற்றக்கழகம் வெளியேறிவிடும். ஆனால் அப்படி ஒரு நிலை ஏற்படுவதற்கு காங்கிரஸ் கட்சி சந்தர்ப்பம் வழங்குவதற்கு தயாராக இல்லை.
திராவிட முன்னேற்றக்கழகம், அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் ஆகியவற்றின் மீது சவாரி செய்து தேர்தலைச் சந்திப்பதே காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு. திராவிட முன்னேற்றக்கழகத்தைக் கைவிட்டு அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத்திடம் சரணடைய முடியாத நிலையில் உள்ளது காங்கிரஸ். ஆகையினால் திராவிட முன்னேற்றக்கழகத்தின் கோபத்தைக் குறைக்கும் முயற்சியேலேயே காங்கிரஸ் கட்சி உள்ளது. ஜெனீவா பிரச்சினை இந்த மாதத்துடன் முடிவுக்கு வந்துவிடும். இந்திய நாடாளுமன்றம் பொதுத்தேர்தல் வரை கருணாநிதி மிரட்டுவார்.
No comments:
Post a Comment