Thursday, March 21, 2013

மத்திய அரசை மிரட்டிய மாணவர் போராட்டம்


இலங்கைக்கு எதிராக ஜெனீவாவில் அமெரிக்கா சமர்ப்பித்தபிரேரணைக்கு இந்தியா ஆதரவு வழங்க வேண்டும்என்று தமிழக அரசியல் கட்சிகள் அனைத்தும் ஒருமித்து விடுத்த வேண்டுகோளுக்கு சாதகமான பதிலளிக்க இந்திய அரசு  தயங்கி வரும் வேளையில் தமிழக மாணவர்கள் இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாகப் போராட்டக் களத்தில் குதித்துள்ளனர்.
இலங்கை விவகாரத்தில் தனது வழமையான அரசியலையே மத்திய அரசு முன்னெடுத்தது. திராவிட முன்னேற்றக் கழகம், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், பாரதீய ஜனதாக் கட்சி,  இடது சாரிக் கட்சிகள் ஆகியவற்றின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், இந்திய நாடாளுமன்றத்திலும் லோக் சபாவிலும் இலங்கைக்கு  எதிராகப் பேசிய பேச்சுக்களை    கிடப்பில் போட்டது மத்திய அரசு. மத்திய அரசின் செயற்பாட்டினால் விசனமடைந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்புச் செய்து  தமது விசனத்தை வெளிக் காட்டினர். அரசியல் கட்சிகளின் எதிர்ப்புக்கள் ஒருவரையறைக்குட்பட்டதாகவே உள்ளன. தமிழக அரசியல் கட்சிகளின் வசம் இருந்த இலங்கைக்கு எதிரான போராட்டத்தை மாணவர்கள் தம் கைகளில் எடுத்துள்ளனர்.
இலங்கை விவகாரத்தில் இந்திய மத்திய அரசின் செயற்பாட்டில் திருப்தியடையாத  சென்னை லயோலாக் கல்லூரி மாணவர்கள் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தனர். உண்ணாவிரதம்இருந்தமாணவர்கள்பொலிஸாரினால்வலுக்கட்டாயமாகஅப்புறப்படுத்தப்பட்டனர். தமிழக அரசின் அடாவடியினால் கிளர்ந்தெழுந்த மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர்.
தமிழீழ தனி அரசுக்கான பொது வாக்கெடுப்பு, இலங்கை மீது பொருளாதாரத் தடை ஆகியவற்றை முதன்மைப்படுத்தி தமிழீழ விடுதலைக்கான  மாணவர் கூட்டமைப்பு போராட்டங்களை முன்னெடுக்கத் தொடங்கியது. மாணவர் போராட்டங்கள்  தினமும் வலுவடைவதைக் கண்ட தமிழக அரசு, அரச  கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்தது. அரசு அறிவித்த விடுமுறையையும் கருத்தில் எடுக்காத மாணவர்கள் தமது போராட்டங்களை வலுப்படுத்தினர். பொது இடங்களிலும் கல்லூரி வ ளாகங்களிலும் உண்ணாவிரதமிருந்த மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். உண்ணாவிரதம் இருந்த மாணவர்கள் கைது செய்யப்பட்டதைத் தெரிந்தும் மேலும் பல மாணவர்கள்  உண்ணாவிரதம்  இருந்தனர்.

தமிழக மாணவர்களின்  போராட்டம் இந்திய மத்திய  அரசை  கிலி கொள்ள வைத்தது. சென்னை, புதுவை, திருவாரூர், புதுக்கோட்டை, திண்டுக்கல், காஞ்சிபுரம், பெரும்பலூர், சேலம், மதுரை, திருச்சி, திருவண்ணாமலை,  கேவில்பட்டி ஆகிய நகரங்களில் மாணவர் போராட்டம்  உச்சமடைந்தது.  கோவை சட்டக் கல்லூரி பாரதியார் பல்கலைக்கழகத்தின்  எட்டு மாணவர்களும்  புதுவை பல்கலைக்கழக வளாகத்தில் 40 மாணவர்களும்  சாகும்வரையான உண்ணாவிரதப் போராட்டம்  இருக்கின்றனர். பாடசாலை  வளாகத்தில் இருந்து போராட்டம் நடத்திய மாணவர்கள் கடந்த திங்கட்கிழமை வீதியில் இறங்கிப் போராட்டம் நடத்தினர்.

சென்னை ஆளுநர் மாளிகை,  சென்னையிலுள்ள இலங்கைத் துணைத் தூதரகம், சென்னை விமான நிலையம் ஆகியவற்றை முற்றுகையிட முனைந்த மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். மாணவர்களின் எழுச்சிமிக்க இப் போராட்டத்தை கடுமையான முறையில் அடக்க முடியாத நிலையில் உள்ளது தமிழக அரசு.  மாணவர்கள் மீது வன்முறை பிரயோகித்தால் அதன் பின் விளைவு மிகப் பாரதூரமானதாக இருக்கும் என்பதை தமிழக அரசும் மத்திய அரசும் மிகத் தெளிவாக உணர்ந்து கொண்டுள்ளன. மாணவர்களது  இந்தப் போராட்டத்தை  தமிழக அரசியல் கட்சிகள் உன்னிப்பாக அவதானித்துக் கொண்டிருக்கின்றன.

அரசியல்  பின்புலம் எதுவும்  இல்லாமல் மாணவர் நடத்தும் போராட்டங்களினால்  சில  இடங்களில்  இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது. முன் அறிவித்தல் இன்றி மாணவர்கள் நடத்தும் போராட்டங்களினால் பொலிஸார் திக்கு முக்காடி வருகின்றனர். ஊர்வலம் சென்ற மாணவர்களைப் பொலிஸார் தடுத்து நிறுத்தியதால் நடு வீதியில் மாணவர்கள் அமர்ந்து போராட்டம் நடத்தியதால் போக்குவரத்து ஸ்தம்பிதமடைந்தது.

மாணவர்களின் போராட்டம் வலுப்பெற்று வரும் இவ்வேளையில்  திராவிட  முன்னேற்றக் கழகம் தனது கடைசி அஸ்திரத்தைப் பிரயோகித்துள்ளது. இலங்கையில் நடந்தது இனப்படுகொலை என்ற திருத்தத்தை இந்தியா கொண்டு வர வேண்டும், இலங்கைப் போர்க்  குற்றம் தொடர்பாக சர்வதேச  சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும், குறுகிய கால வரம்புக்குள் விசாரணை நடத்தி முடிக்கப்பட வேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன் வைத்த திராவிட முன்னேற்றக் கழகம் காங்கிரஸ் கட்சிக்குக் கெடு வைத்துள்ளது. இக்கோரிக்கைகளை மத்திய அரசு  புறந்தள்ளினால் மத்திய  அமைச்சரவையிலிருந்தும் கூட்டணியிலிருந்தும் வெளியேறப் போவதாக கருணாநிதி மிரட்டியு னார். 
கருணாநிதியைத் திருப்படுத்துவதற்காக மத்திய அமைச்சர்களான ஏ.கே. அந்தோனி, குலாம் நபி ஆசாத், ப. சிதம்பரம் ஆகியோர்  கடந்த திங்கட்கிழமை தமிழகத்துக்கு விரைந்தனர். கருணாநிதியுடனான பேச்சுவார்த்தையின் பின்னர் வழமை போன்று சோனியா  முடிவெடுப்பார் எனக்  கூறிவிட்டுப் புறப்பட்டுச்  சென்றனர். மத்திய அரசு உறுதியான ஒரு முடிவை எடுக்காததினால் ஐக்கிய முற்போக்கு கூட்டணியிலிருந்து விலகுவதாக கருணாநிதி திடீரென அறிவித்தார். 

திராவிட முன்னேற்றக் கழகம், காங்கிரஸ் ஆகியவற்றுக்கிடையே இதுவரை நடைபெற்று வந்த பனிப்போர் பகிரங்கத்துக்கு வந்துள்ளது. 2009 ஆம் ஆண்டு உண்ணாவிரத  நாடகம் ஆடிய கருணாநிதி இப்போது கூட்டணியிலிருந்து விலகுவதாகஅறிவித்துள்ளார்.ஐக்கிய முற்போக்குக்கூட்டணிக்கானதனது ஆதரவை விலக்குவதாக திராவிடமுன்னேற்றக்கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியிடம் கடித்தைக்கொடுத்தனர். திராவிட முன்னேற்றக்கழக அமைச்சர்களும் தமது இரஜினாமாக்கடிதங்களை பிரதமரிடம் கொடுத்தனர்.இதனால் காங்கிரஸ் அதிர்ச்சியடைந்துள்ளது.   ஜனநாயக முற்போக்கு  கூட்டணியிலிருந்து திராவிட முன்னேற்றக் கழகம் வெளியேறியதால் காங்கிரஸ் கட்சியின் ஆட்சிக்கு  எந்தவிதமான ஆபத்தும் ஏற்படப் போவதில்லை.

ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர்கள் 18 பேர் உள்ளனர். இவர்களுடன் திருமாவளவனும் வெளியேறிவிட்டார்.  முலாயம், மாயாவதி ஆகியோரின் ஆதரவுடன் எஞ்சிய காலத்தை காங்கிரஸ் பூர்த்தி செய்து விடும். இலங்கைப் பிரச்சினையை முன்வைத்து இரண்டு தடவை தமிழக அரசைப் பறிகொடுத்த கருணாநிதி இப்போ மத்திய  அரசில் இருந்து வெளியேறி உள்ளார். தனது கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்றினால் மறு பரிசீலனை செய்யத் தயார் என குண்டொன்றைத் தூக்கிப் போட்டுள்ளார்.

மத்திய அரசைப் பணிய வைப்பதற்குரிய சந்தர்ப்பங்களைத் தவறவிட்ட கருணாநிதி காலம் தாழ்த்தி முடிவெடுத்துள்ளார்.

No comments: