Friday, March 8, 2013

ஜெயலலிதாவின் சாதனையும் கருணாநிதியின் எச்சரிக்கையும்



தமிழகத்தில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவதற்கான சகல நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருகிறது திராவிட முன்னேற்றக்கழகம். மத்திய அரசை மிரட்டுவதற்காக டெசோவைக் கையில் எடுத்த திராவிட முன்னேற்றக்கழகம் ஜெ னீவாவில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரவளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது.
இந்திய மத்திய அரசுக்கு  கிடுக்குப்பிடி போடவேண்டிய நேரத்தில் அமைதியாக இருந்து விட்டு இந்திய நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில் காங்கிரஸ் அரசுக்கு எச்சரிக்கை விடுக்கிறது திராவிட முன்னேற்றக் கழகம். ஜெ னீவாவில் இந்தியா என்ன செய்யப் போகிறது  என்ற கேள்வியே இன்று பலரின் மனதில் உள்ள கேள்வியாகும். இந்தக் கேள்விக்கு இந்திய அரசு  வெளிப்படையாக பதிலளிக்கவில்லை. வெங்கையா நாயுடு, மைத்திரேயன், டி.ராஜா,  திருச்சி சிவா ஆகிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்திய நாடாளுமன்றத்தில் நடைபெற்ற கவன ஈர்ப்பு விவாதத்தில் பங்குபற்றி இலங்கையின் இறுதிப்போரில் நடைபெற்றவற்றை விளக்கிப் பேசினார். திராவிடமுன்னேற்றக் கழக நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா இலங்கை யா இந்தியாவின் தென் பகுதியில் உள்ள தமிழரா வேண்டும் என முடிவு செய்யுங்கள் என எச்சரிக்கை விடுத்தார்.
இலங்கைக்கு எதிராக ஜெனீவாவில் சமர்ப்பிக்கப்பட்ட குற்ற பிரேரணைக்கு ஆதாரவாக இந்தியா வாக்களிக்க வேண்டும் என்று தமிழக அரசியல் கட்சிகளும் பாரதீய ஜனதாக்கட்சி போன்ற தேசியக்கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றன. இது தொடர்பில் கருணாநிதி கை வலிக்க பல கடிதங்களை பிரதமர் மன்மோகன் சிங்குக்கும் காங்கிரஸ் தலைவி சோனியா காந்திக்கும் பல கடிதங்களை எழுதி விட்டார். இலங்கைக்கு எதிரான குற்றப்பிரேரணைக்கு ஆதரவு தெரிவிக்கவேண்டும் என்று கருணாநிதி வலியுறுத்துகிறாரே தவிர குற்றப்பிரேரணையை ஆதரிக்காவிட்டால் கூட்டணியிலிருந்து வெளியேறி விடுவோம் என்று ஒரு வார்த்தை கூறவில்லை. காங்கிரஸ் கட்சிக்கு எச்சரிக்கை விடுக்கிறாரே தவிர காங்கிரஸ் கட்சியை எதிர்த்து முடிவெடுக்க முடியாது தடுமாறுகிறார் கருணாநிதி.
இலங்கைக்கு எதிரான போராட்டங்களை தமிழக அரசியற் தலைவர்கள் பல இடங்களிலும் தொடர்ச்சியாக நடத்தி வருகின்றனர். வைகோ, பழ, நெடுமாறன், சீமான்  போன்றோரும் முன்னிலை வகித்து  பல போராட்டங்களை நடத்தி வருகின்றனர். சென்னையிலுள்ள  இந்தியத்துணைத் தூதரகத்துக்கு முன்னால் டெசோவின் சார்பில்  முற்றுகை போராட்டம் நடைபெற்றது.
இந்திய மத்திய அரசாங்கத்துக்கு ஆதரவு அளித்து வந்த நிலையில் திடீரென தனி வழி செல்ல தீர்மானித்துள்ளது திராவிட முன்னேற்றக்கழகம். இந்திய நாடாளுமன்றத் தேர்தலின்போது  தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கு குறைவடைவதற்கு வாய்ப்பு உண்டு. காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கு குறைந்தால் கூட்டணியிலிருந்து வெளியேறுவதே திராவிட முன்னேற்றக்கழகத்தின் நோக்கம். அதற்காகவே சந்தர்ப்பம் கிடைக்கும் போது காங்கிரஸ் கட்சிக்கு எதிராக போராட்டங்கள் நடத்தி வருகிறது.
தமிழகத்தில் பல கோஷ்டிக ளாக‌ப் பிரித்து இருக்கும் காங்கிரஸ் கட்சிக்கு இன்னும் ஒரு சோதனை வந்துள்ளது. இளைஞர் அணித்தலைவர் பதவியிலிருந்து யுவராஜா தூக்கி எறியப்பட்டுள்ளார். மகளிர் அணியைச் சேர்ந்த ஐஸ்வர்யாவின் தற்கொலைக்கு யுவராஜ் தான் காரணம் என்ற குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டுள்ளது. யுவராஜாவின் பதவி பறிக்கப்பட்டதனால்  ஜி.கே.வாசன் கடுப்பில் உள்ளார். சிதம்பரத்தின் மகன் கார்த்திக் கோஷ்டி மிகுந்த சந்தோஷத்தில் உள்ளது.

ராகுல் காந்தியின் நேரடிக்கண்காணிப்பிலேயே தமிழக இளைஞர் அணி தலைவர் போட்டி நடைபெற்றது. ஜி.கே வாசனின் நம்பிக்கைக்குரிய யுவராஜா வெற்றி பெற்றார். இதனால் ஜி.கே.வாசனுக்கும் கார்த்திக்குமிடையிலான  பூசல் அதிகமாகியது. யுவராஜின் பதவி பறிக்கப்பட்டதன் மூலம் ஜி.கே வாசன் அடுத்து என்ன செய்வார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தனது செல்வாக்கை வெளிப்படுத்த கட்சியிலிருந்து வெளியேறுவாரா அல்லது அமைதி காப்பாரா வாசனின்  முடிவைப் பொறுத்தே திராவிட முன்னேற்றக்கழகம் தனது வியூகத்தை அமைக்கும்.

தமிழக முதல்வர் ஜெயலலிதா ஒன்பதாவது முறையாக மந்திரி சபையை மாற்றி அமைத்து புதிய சாதனை படைத்துள்ளார். அண்ணா திராவிட முன்னேற்றக்கழக அமைச்சர்களின்பதவிக்காலம் மிகவும் குறுகியது.  எப்போது பதவி பறிபோகும் என்பது அவர்களுக்கு தெரியாத புதிராக உள்ளது.   சிவபதி, இந்திரா, விஜய் ஆகிய மூன்று அமைச்சர்களைத் தூக்கி எறிந்து விட்டு பூனாட்சி, வைகைச்செல்வன் ,கே.சி.வீரமணி ஆகிய மூவரை புதிதாக  அமைச்சர்களாக்கியுள்ளார் ஜெயலலிதா.

ஊழல், இலஞ்சம் திராவிட முன்னேற்றக்கழகத்துடன் உறவு போன்ற குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டதால் மூன்று அமைச்சர்கள் பதவியை இழந்துள்ளனர். தமிழக அமைச்சர்கள் தூக்கி எறியப்பட்ட சம்பவம்முன்னரும் நடைபெற்றுள்ளது.அப்போது கழகத்தில் அமைதி காணப்பட்டது. இப்போது சல‌சல‌ப்பு எழுந்துள்ளது. பதவியில் உள்ள அமைச்சர்களின் தில்லு முல்லு பற்றிய விபரங்கள் ஜெயலலிதாவின் பார்வைக்கு அனுப்பப்பட்டுள்ளன.

இந்திய பிரதமர் கனவில் மிதக்கும் ஜெயலலிதா கட்சிக்குள் சில அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். தமிழகத்திலும் புதுøவயிலும் உள்ள 40  தொகுதிகளையும் கைப்பற்ற வேண்டும் என்பதே ஜெயலலிதாவின் விருப்பம். காவிரி நடுவர் மன்றத்தீர்ப்பை அரசு  இதழில் கடந்த வாரம் வெளியானது. அதனைப்பெரிய சாதனையாக அறிவித்தார் ஜெயலிதா 19 மாதங்களில் ஒன்பதாவது அமைச்சரவையை மாற்றி அமைத்ததை பெரும் சாதனையாக எதிர்க்கட்சிகள் வர்ணித்துள்ளன.

புதிய  தலைமைச் செயலகம்  அண்ணா நூலகம்  ஆகியவற்றிலிருந்து திராவிட முன்னேற்றக்கழகத்தின் பெயரை இல்லாமல் செய்வதும் சாதனை தான் என்று எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளன.ஒரு ரூபாவுக்கு இட்லி,  ஐந்து ரூபாவுக்கு சாதம் வழங்கும் ஜெயலலிதாவின் திட்டத்தை அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத்தினர் சாதனையாக கருதுகின்றனர். ஜெயலலிதாவின் அடுத்த கட்ட நடவடிக்கை எல்லாம் இந்திய நாடாளுமன்றம் பொதுத்தேர்தலை முன்னிறுத்தியே அறிமுகப்படுத்தப்படுகின்றன.

கருணாநிதி ஜெயலலிதா ஆகிய இருவரும் இலங்கைப் பிரச்சினையில் அதிக அக்கறை காட்டுகின்றனர். 2009 ஆம் ஆண்டு வன்னியில் யுத்தம் நடைபெற்ற போது இலங்கைப் பிரச்சினையைக் கையில் எடுத்து இந்திய நாடாளுமன்றத்தேர்தலைச் சந்தித்தார் ஜெயலலிதா. அவரது தேர்தல் வியூகம் கைகொடுக்கவில்லை. புதிய வியூகங்களையும் புதிய சாதனைகளையும் நம்பி இந்திய நாடாளுமன்றத் தேர்தலுக்குத் தயாராகிறார் ஜெயலலிதா. 

No comments: