Sunday, May 3, 2009
ஜெயலலிதாவின் பிரசாரத்தால்தடுமாறுகிறார் தமிழக முதல்வர்
இலங்கையில் நடைபெறும் யுத்தத்தினால் தமிழக தேர்தல் களம் சூடாகி உள்ளது. இந்திய மத்திய அரசும், தமிழக அரசும் தமது சாதனைகளை ஒருபுறம் ஒதுக்கிவைத்துவிட்டு இலங்கை விவகாரத்தில் தமக்கு எதிராக் கிளப்பப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுக்களுக்கு பதிலைத் தேடுவதிலேயே அதிக நேரத்தைச் செலவிடுகின்றன.
இந்திய மத்திய அரசும், தமிழக அரசும் செய்த தவறுகளையும் இடையில் கைவிட்ட திட்டங்களையும் பட்டியலிட வேண்டிய ஜெயலலிதா இலங்கை விவகாரத்தைக் கையில் எடுத்துக் கொண்டு பிரசாரக் களத்தைத் திசை திருப்பி உள்ளார்.
17 வருடங்களுக்கு முன்னர் ராஜீவ் காந்தியின் கொலையின் மூலம் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு படுதோல்வியையும் காங்கிரஸ் கட்சிக்கு அமோக வெற்றியையும் பெற்றுக் கொடுத்த இலங்கை விவகாரம், இப்போது திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் சவாலாக உள்ளது.
இலங்கைப் பிரச்சினையில் அதிக அக்கறை காட்டாத ஜெயலலிதா திடீரென இலங்கைத் தமிழ் மக்களுக்காக உண்ணாவிரதங்கள் இருந்ததுடன் இலங்கைத் தமிழ் மக்கள் நிம்மதியாக வாழ்வதற்கு தமிழ் ஈழமே ஒரே தீர்வு என்று கூறினார்.
ஜெயலலிதாவின் நடவடிக்கைகளும் உணர்ச்சி மயமான பேச்சும் தமிழக மக்களைக் கவர்ந்துள்ளதால் தமிழக அரசு அதிர்ச்சியடைந்தது.
ஜெயலலிதாவின் பிரசாரத்தை முறியடிப்பதற்காக இலங்கையில் போர் நிறுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையுடன் திடீரென உண்ணாவிரதம் இருந்தார். தமிழக முதல்வர் கருணாநிதி இலங்கைத் தமிழ் மக்களுக்காக தள்ளாத வயதிலும் உண்ணாவிரதம் இருந்தார் என்ற கருத்துடன் அந்த உண்ணாவிரத நிகழ்ச்சி முடிவுக்கு வந்தது.
திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் தமிழகத்தில் உள்ள செல்வாக்கு வீழ்ச்சியடைந்து கொண்டிருக்கிறது. நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தில் இலங்கையில் யுத்தம் முடிவுக்கு வரவேண்டும் என்ற இரட்டைத் தோணியில் தமிழக முதல்வர் கால்வைத்துள்ளார். அதனால் இவர் தடுமாறுகிறார்.
வெற்றி என்ற இலக்குடன் தேர்தல் களத்தில் இறங்கியுள்ள ஜெயலலிதா வெற்றிக்காக தன்னால் செய்ய முடியாதவற்றையும் பட்டியலிடுகிறார். வைகோ, டாக்டர் ராமதாஸ், இடது சாரித் தலைவர்கள் ஜெயலலிதாவுக்கு பக்கபலமாக உள்ளனர்.
காங்கிரஸ் கட்சியின் கொள்கை திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு எதிராக உள்ளது. இலங்கையில் போரை நிறுத்தும் வல்லமை காங்கிரஸ் கட்சிக்கு உண்டு. இலங்கையில் போரை நிறுத்துவதற்கு காங்கிரஸ் கட்சி அழுத்தம் கொடுக்கவில்லை என்ற ஆதங்கம் திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்களிடம் உள்ளது.
கலைஞர் கருணாநிதியின் வசனங்கள் தமிழ்த்திரை உலகை ஒருகாலத்தில் ஆட்டிப்படைத்தன. அதே வசனங்கள் இன்று முதல்வர் கருணாநிதிக்கு எதிராக பிரசார இறுவட்டுக்களாக வலம் வருகின்றன. பராசக்தி, மனோகரா ஆகிய படங்களுக்காக கலைஞர் கருணாநிதி எழுதி நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பேசிய வசனங்கள் முதல்வர் கருணாநிதிக்கு எதிரான வசனங்களாக மாற்றப்பட்டு விநியோகிக்கப்படுகின்றன.
அந்த இறுவட்டில் உள்ள காட்சிகளும் வசனங்களும் முதல்வர் கருணாநிதியை குற்றவாளிக் கூண்டில் நிறுத்தியுள்ளன.
தமிழக அரசுக்கு எதிராக இப்படிப்பட்ட இறுவட்டு தயாரிக்கப்படுவதாக உளவுத்துறை அறிந்திருந்தும் அதனைத் தடுக்க முடியாமல் போயுள்ளது.
மனிதாபிமான அடிப்படையில் இலங்கைத் தமிழ் மக்களின் துயரைத் துடைக்க வேண்டும். அதற்காக காங்கிரஸ் கட்சி தனது கொள்கையில் இருந்து இறங்கி வர வேண்டும் என்ற திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்கள் எதிர்பார்க்கின்றனர். தமிழக மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளாத காங்கிரஸ் கட்சியுடனான கூட்டணியைத் துறப்பதற்கு முதல்வர் ஏன் தயங்குகிறார்.
திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்களில் பலர் காங்கிரஸ் கட்சியின் பிடிவாதத்தை விரும்பவில்லை. காங்கிரஸ் கட்சி தவறு செய்கிறது எனத் தெரிந்தும் அதனை எதிர்ப்பதற்கு திராணி அற்றவர்களாக திராவிட முன்னேற்றக் கழகத்தினர் உள்ளனர்.
காங்கிரஸ் கட்சி தலைமையிலான அரசுடன் ஐந்து வருடங்கள் சகல வசதிகளையும் அனுபவித்து விட்டு தேர்தல் வெற்றிக்காக அணி
மாறிய டாக்டர் ராமதாஸ் இன்று காங்கிரஸ் கட்சியின் கொள்கைகளை தூற்றுகிறார். காங்கிரஸ் கட்சியின் தலைமையிலான அரசு அமைவதற்கு காரணமாக இருந்த இடது சாரிகள் தமது கொள்கையுடன் காங்கிரஸ் கட்சி ஒத்துப் போகவில்லை என்பதனால் ஆதரவை விலக்கிக் கொண்டன.
டாக்டர் ராமதாஸும் இடது சாரித் தலைவர்களும், தமிழக அரசையும், மத்திய அரசையும் விமர்சித்து தமது கருத்துகளைக் கூறுகின்றனர். இவர்களின் பிரசாரம் தமிழக மக்களிடம் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தனக்கும் தனது கட்சிக்கும் எதிரான பிரசாரங்களை முறியடிக்க வழிவகை தெரியாது தடுமாறுகிறார் தமிழக முதல்வர் கருணாநிதி.
தமிழ் மக்களின் உணர்வுகளின் முன்னால் தமிழக அரசின் சாதனைப் பட்டியல் அடங்கிப்போகும் சூழ்நிலை எழுந்துள்ளது. தமிழக அரசின் அல்லது மத்திய அரசின் சாதனைப்பட்டியலைப் பார்க்கும் நிலையில் தமிழக மக்கள் இல்லை. இலங்கையில் யுத்தம் நிறுத்தப்பட்டு விட்டதென்ற செய்தியையே தமிழக மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
தேர்தல் நேரத்தில் முடிவெடுக்கும் வாக்காளர்களை இலங்கைப் பிரச்சினை வெகுவாகப் பாதித்துள்ளது. தமிழகத் தேர்தல் முடிவு அவர்களின் கையிலேயே தங்கியுள்ளது. அவர்களைத் திருப்திப்படுத்துவதற்கான சூழ் நிலைக்கு தமிழக முதல்வர் தள்ளப்பட்டுள் ளார். இந்திய அரசியலில் மாற்றம் ஏற்பட்டால் தமிழக அரசு தப்பிப்பிழைப்பது கடினம். ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் தமிழக அரசுக்கு பெரும் நெருக்கடி ஏற்படும். அந்த நெருக்கடியிலிருந்து வெளியேறும் வழிகளை தமிழக முதல்வர் ஆராய்கிறார். தமிழக அரசுக்கும் முதல்வருக்கும் நெருக்கடி கொடுக்கும் திட்டங்களுடன் தேர்தல் பிரசாரம் செய்கிறார் ஜெயலலிதா.
வர்மா
வீரகேசரிவாரவெளியீடு 03/05/2009
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
தெளிவாக, சரியாக, சிறப்பாக எழுதப்பட்டுள்ள அலசல்!
Post a Comment