Sunday, May 10, 2009
கைவிடுமா காங்கிரஸ்கலக்கத்தில் தி.மு.க
தமிழக தேர்தல் களத்தில் அ.தி.மு.க. தேர்தல் பிரசாரம் மக்களின் மனதில் பட்டென்று ஒட்டிக் கொண்டுள்ளதனால் திராவிட முன்னேற்றக் கழகமும் காங்கிரஸும் தடுமாறிக் கொண்டிருக்கின்றன. அக்கட்சிகள், காங்கிரஸ் தலைவி சோனியா காந்தியின் வருகையை பெரிதும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்தன.
காங்கிரஸ் தலைவி சோனியா காந்தியும் முதல்வர் கருணாநிதியும் ஒரே மேடையில் தோன்றி பிரசாரம் செய்தால் மக்களின் மனதில் மாற்றம் ஏற்படும் என்று எதிர்பார்த்தவர்களின் நம்பிக்கையில் இடி விழுந்துள்ளது.
காய்ச்சல் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் முதல்வர் கருணாநிதி ஓய்வு எடுக்க வேண்டும் என்று வைத்தியர்கள் அறிவுறுத்தி உள்ளனர். முதல்வர் கருணாநிதியின் உடல் நிலை முன்னரைப் போல் சுறுசுறுப்பாக இல்லாததனால் அவரால் சூறாவளிப் பிரசாரம் எல்லாம் செய்ய முடியாத நிலை உள்ளது.
மிக முக்கியமான தொகுதிகளில் மட்டும் பிரசாரம் செய்வதற்கு முதல்வர் கருணாநிதி திட்டமிட்டிருந்தார். காங்கிரஸ் தலைவி சோனியா காந்தியுடனான பிரசாரத்தின் பின்னர் தமிழகத்தில் எழுச்சி அலை தோன்றும் என்று எதிர்பார்த்தவர்களுக்கு சோனியாவின் தமிழக விஜயம் ரத்தானது அதிர்ச்சியளித்துள்ளது.
பழ. நெடுமாறன், பாரதிராஜா போன்றவர்கள் சோனியாவின் தமிழ்நாட்டு விஜயத்துக்கு கடும் எதிர்ப்புத் தெரிவிக்கப் போவதாக அறிவித்தனர். சோனியாவுக்கு எதிரான கறுப்புக் கொடிப் போராட்டம் நடத்த அவர்கள் அழைப்பு விடுத்தனர். இலங்கையில் தமிழ் மக்கள் கொல்லப்படும் இவ்வேளையில் அங்கு போர் நிறுத்தத்துக்குரிய ஏற்பாடு செய்யாமல் சோனியா தமிழகத்துக்கு வரக் கூடாது என்ற கோரிக்கையால் சோனியாவின் தமிழக விஜயம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
சோனியாவின் தமிழக விஜயம் ரத்தானதற்கான காரணம் குறித்து பல கருத்துக்கள் வெளி யிடப்பட்டன. சோனியாவின் தமிழக விஜயம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அவர் வரும் திகதி பின்னர் அறிவிக்கப்படும் என்று குலாம் நபி ஆசாத் தெரிவித்தார்.
தமிழக முதல்வருடன் இணைந்து பிரசாரம் செய்ய முடியாததால் சோனியாவின் விஜயம் ஒத்தி வைக்கப்பட்டதா? சோனியாவுக்கு எதிரான தமிழக உணர்வலைகளினால் சோனியாவின் தமிழக விஜயம் ஒத்தி வைக்கப்பட்டதா என்ற கேள்விக்கான விடை தெரியாதுள்ளது.
கர்நாடகம், ஆந்திரா ஆகிய மாநிலங்களுடன் தமிழகம் பல விஷயங்களில் முரண்பட்டுள்ளது. பெங்களூரில் தமிழர்கள் மீது பல தடவைகள் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தமிழர்களின் கடைகளும் தமிழ்ப் படம் ஓடிய பட மாளிகைகள் அடித்து நொருக்கப்பட்டன. அந்த நிலையிலும் ஆந்திர, கர்நாடக அரசியல்வாதிகளும் தமிழகம் வரக் கூடாது என்று யாரும் தடை போடவில்லை.
இந்திய தேசியக் கட்சியின் தலைவி தமிழ்நாட்டுக்கு வரக்கூடாது என்று தமிழகத்தில் உள்ள சில மக்கள் எதிர்ப்பது காங்கிரஸ் கட்சித் தலைவி மீது அவர்கள் கொண்டிருக்கும் வெறுப்புணர்வை வெளிப்படுத்துகிறது.
இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவு தெரிவிப்பவர்கள் காங்கிரஸ் கட்சியின் மீதே தமது கோபத்தை வெளிப்படுத்துகின்றனர். காங்கிரஸ் கட்சி போட்டியிடும் 18 தொகுதிகளிலும் தமது எதிர்ப்புப் பிரசாரத்தை மேற்கொள்கின்றனர். காங்கிரஸ் கட்சி தோல்வியடைய வேண்டும் என்பதே இவர்களது பிரதான நோக்கம்.
தமது நோக்கம் நிறைவேறுவதற்காக அண்ணா திரõவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்றும் இவர்கள் விரும்பவில்லை.
காங்கிரஸ் கட்சி போட்டியிடும் தொகுதிகளில் யார் வெற்றி பெற வேண்டும் என்று இவர்கள் அடையாளம் காட்டவில்லை.
இலங்கைத் தமிழ் மக்களுக்கு ஆதரவான தமிழ் உணர்வாளர்களின் பிரசாரம் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணிக்கு தெம்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜெயலலிதாவும் வைகோவும் இலங்கைப் பிரச்சினையை கையிலெடுத்து தமது பிரசாரத்தில் உணர்ச்சிகளை வெளிப்படுத்துகின்றனர். இலங்கை விவகாரத்தில் இந்திய மத்திய அரசும் தமிழக அரசும் தப்புச் செய்து விட்டன என்ற இவர்களின் குற்றச்சாட்டால் வலுவா காரணங்களுடன் திராணியற்ற திராவிட முன்னேற்றக் கழகமும் காங்கிரஸ் கட்சியும் தடுமாறுகின்றன.
தமிழக முதல்வர் கருணாநிதியும் சோனியாவும் ஒரே மேடையில் பிரசாரம் செய்யாதது திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. தேர்தலுக்கு முன்னர் இருவரும் இணைந்து ஒரே மேடையில் தோன்ற வேண்டும் என்ற ஆசை இரண்டு கட்சித் தலைவர்களிடமும் உள்ளது. தேர்தலுக்கு இன்னமும் மூன்று நாட்கள் இருக்கும் இவ்வேளையில் அது சாத்தியமாகுமா என்பது தெரியவில்லை.
திராவிட முன்னேற்றக் கழகம் இதுவரை செய்த சாதனைகளையும் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்போகும் திட்டங்களையும் பட்டியலிடுவதற்கு எதிர்க்கட்சிகள் இடமளிக்கவில்லை. ஜெயலலிதா, வைகோ, டாக்டர் ராமதாஸ், தா.பாண்டியன் ஆகியோரின் குற்றச்சாட்டுக ளுக்குப் பதிலளிப்பதிலேயே திராவிட முன்னேற்றக் கழகம் அதிக நேரத்தைச் செலவிடுகிறது.
தோல்விகளின்போது துவண்டு விழாது வீறு கொண்டு எழுந்த முதல்வர் கருணாநிதி தற்போது சக்கர நாற்காலியில் முடங்கி உள்ளார். வீறுகொண்டு எழ வேண்டும் என்று அவரது மனம் நினைத்தாலும் உடல் நிலை ஒத்துழைக்கவில்லை.
இந்திய நாடாளுமன்றத்துக்கான தமிழகத் தேர்தல் முடிவு திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணிக்குப் பாதகமாக அமைந்தால் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்படும். அந்த விரிசல் சில வேளை தமிழக சட்டமன்றத்தை ஆட்டம் காண வைக்கும் ஏது நிலை உருவாகும். திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு எதிரான காங்கிரஸ் தலைவர்களின் கை அப்போது ஓங்கி விடும்.
சோனியாவின் தமிழக விஜயம் ரத்தானதும் முதல்வர் கருணாநிதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதும் திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான கூட்டணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளன.
ஜெயலலிதா கையில் எடுத்துள்ள "தமிழீழம்' என்ற பிரமாஸ்திரம் தமிழகத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சலசலப்பின் மூலமே நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று விடலாமென ஜெயலலிதா நினைக்கிறார். தேர்தல் முடிந்ததும் இந்தப் பிரமாஸ்திரத்தை ஜெயலலிதா வைத்திருப்பாரா? தூக்கி எறிந்து விடுவாரா? என்பதை யாராலும் கணித்துக் கூற முடியாதுள்ளது.
தமிழகத் தேர்தல் களமும் உடல் நிலையும் முதல்வர் கருணாநிதிக்கு சவாலாக உள்ளது. இந்தத் தேர்தல் களத்தில் ஜெயிக்கப்÷பாவது யார் என்பது அடுத்த வாரம் தெரிந்துவிடும்.
வர்மா
வீரகேசரி வாரவெளீயீடு 10/05/2009
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
salem areavuku cd varalainga. athukku maara congressla erunthu voteku 100 rupees amount nethiku fulla supply ayiduchu. Yenunga antha cd erunthu salem areavuku sikram anupunga. illana thangabalu winbaluva ayiuvaaru.
Post a Comment