Friday, January 13, 2012

தென்னாபிரிக்கா இமாலய வெற்றி

இலங்கை தென் ஆபிரிக்க ஆகியவற்றுக்கிடையே நேற்று முன்தினம் பார்லில் நடைபெற்ற முதலாவது ஒருநாள்போட்டியில் 285 ஓட்டங்களினால் மிகப் பிரமாண்டமான வெற்றியைப் பெற்றது. தென்னாபிரிக்கா. 43 ஓட்டங்களில் தென் ஆபிரிக்காவிடம் சரணடைந்த இலங்கை தனது கிரிக்கெட் வரலாற்றில் மிகக் குறைந்த ஓட்ட எண்ணிக்கையைப் பதிவு செய்தது. இந்த ஆண்டின் முதலாவது போட்டியை தென் ஆபிரிக்கா வெற்றியுடன் ஆரம்பித்தது. நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற தென் ஆபிரிக்க அணித் தலைவர் டிவில்லியஸ் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தார். முதலில் துடுப்பெடுத்தாடிய தென் ஆபிரிக்க 50 ஓவர்களில் எட்டு விக்கெட்டுகளை இழந்து 301 ஓட்டங்கள் எடுத்தது.
ஸ்மித் ஆறு ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். இரண்டாவது விக்கெட்டில் இணை ந்த அம்லா கலிஸ் ஜோடி மிக நிதானமாகத் துடுப்பெடுத்தாடியது. 25.5 ஓவர்கள் விளையாடிய இவர்கள் இருவரும் 144 ஓட்டங்கள் எடுத்தனர். 72 ஓட்டங்கள் எடுத்த கலிஸ் ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார். மூன்றாவது விக்கெட்டில் இணைந்த அம்லா, டிவில்லியஸ் ஜோடி அதிரடியாகத் துடுப்பெடுத்தாடியது. 12 ஓவர்கள் விளையாடிய இவர்கள் 91 ஓட்டங்கள் எடுத்தனர். முதல் முதல் அணித் தலைவராக விளையாடிய டிவில்லியர்ஸ் அரைச் சதம் கடந்தார். வில்லியஸ் 52 ஓட்டங்களில் ஆட்டமிழந்ததும் மார்ஸல் களம் புகுந்தார். அம்லா, மார்சல் ஜோடியும் இலங்கையின் பந்து வீச்சைத் துவம்சம் செய்தது. 4.5 ஓவர்கள் விளையாடிய இவர்கள் 35 ஓட்டங்கள் எடுத்தனர். 17 பந்துகளுக்கு முகம் கொடுத்த மார்சல் 29 ஓட்டங்கள் எடுத்தார். அம்லா 112 ஒட்டங்களில் ஆட்டமிழந்தார். இந்த ஆண்டின் முதல் சதமடித்த வீரராகத் திகழ்கிறார் அம்லா. அடுத்து வந்தவர்கள் குறைந்த ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர். மலிங்க ஐந்து விக்கெடடுகளை வீழ்த்தினார். இலங்கை அணியைச் சேர்ந்த ஏழு வீரர்கள் பந்து வீசியும் தென் ஆபிரிக்காவின் ஓட்ட எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த முடியவில்லை. இந்த ஆண்டின் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்திய முதல்வனாக மலிங்க திகழ்கிறார்

302 என்ற இமாலய இலக்கை நோக்கிக் களமிறங்கிய இலங்கை 20.1 ஓவரில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 43 ஓட்டங்களில் ஆட்டமிழந்தது. 46 பந்துகளுக்கு முகம் கொடுத்த குலசேகர 19 ஓட்டங்கள் எடுத்தார். ஏனையயோர் ஒற்றை இலக்கத்துடன் ஆட்டமிழந்தனர்.
மார்கல் நான்கு விக்கெட்டுகளையும் டிŒõட்Œ@ப மூன்று விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இலங்கை அணி சார்ஜாவில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக 1986 இல் 53 ஓட்டங்கள் எடுத்ததே குறைந்த ஓட்டமாக இருந்தது.
குறைந்த ஓட்டங்களில் ஆட்டமிழந்த அணியாக முதலிடத்தில் சிம்பாப்பே உள்ளது. 2004 ஆம் ஆண்டு ஹராரேயில் இலங்கைக்கு எதிராக 35 ஓட்டங்கள் எடுத்தது. இரண்டாவது இடத்தில் கனடா 36 ஓட்டங்களுடனும் (2003) சிம்பாப்வே 38 ஓட்டங்களுடனும் (2001) உள்ளன. மூன்று நாடுகளையும் குறைந்த ஓட்டத்தில் வீழ்த்திய இலங்கை இன்று தனது குறைந்த ஓட்ட எண்ணிக்கையுடன் நான்காவது இடத்தில் உள்ளது.
அதிகூடிய ஓட்டங்களுடன் வெற்றிபெற்ற மூன்றாவது அணியாக தென் ஆபிரிக்கா உள்ளது. முதலிடத்தில் நியூசிலாந்து அயர்லாந்துக்கு எதிராக 290 ஓட்டங்களில் வெற்றி பெற்றது. 272 ஓட்டங்களில் சிம்பாப்வேயை வீழ்த்திய தென் ஆபிரிக்கா இரண்டாவது இடத்தில் உள்ளது.
ரமணி
சூரன்.ஏ.ரவிவர்மா

மெட்ரோநியூஸ்13/01/12


No comments: