Sunday, January 1, 2012

களை எடுக்கிறார் ஜெயலலிதாகலக்கத்தில் அமைச்சர்கள்


உடன்பிறவா சகோதரி சசிகலாவின் திருமணத்தை கருணாநிதி நடத்தி வைத்தார். தமிழக அரசியல் சூறாவளி ஜெயலலிதாவின் பக்கத்தில் அவரை நிறுத்தியது
தி.மு.க. வில் அரசியல் தலைவர்களின் வாரிசுகள் தான் முன்னணியில் உள்ளனர். அ.தி.மு.க. மன்னார்குடி

பிரமுகர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது. இப்போ வெளிச்சத்துக்கு வந்துள்ளது

உடன்பிறவாச் சகோதரி சசிகலாவையும் அவரது பரிவாரங்களையும் தமிழக முதல்வர் ஜெயலலிதா விரட்டியடித்த பின்னர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருக்கும் சசிகலாவின் விசுவாசிகளுக்கு உதறல் எடுக்க ஆரம்பித்துவிட்டது. அரசியல் ரீதியாக ஜெயலலிதா படுதோல்வியடைந்த அவமானப்படுத்தப்பட்ட நேரங்களில் அவருக்கு உறுதுணையாக நின்று "நிமிர்ந்து நில் தொடர்ந்து செல்' என்று தைரியத்தை சசிகலாவும் அவரது கணவர் நடராஜனும் வழங்கினார்கள்.
சசிகலாவுக்கு அரசியலைப் பற்றி எதுவுமே தெரியாது. அவரது கணவன் நடராஜனுக்கு அரசியல் அறிவும் மக்களுடன் நெருங்கிப் பழகும் சூட்சுமமும் தெரியும். திராவிட முன்னேற்றக் கழக மாணவர் இயக்கங்கங் போராட்டங்கள் பலவற்றில் கலந்து கொண்டவர் நடராஜன். ஜெயலலிதாவின் உடன்பிறவாச் சகோதரி சசிகலாவின் திருமணம் திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் கருணாநிதியின் தலைமையில் நடைபெற்றது. கருணாநிதி முதல்வரான போது மக்கள் தொடர்பாடல் அதிகாரியாக நியமிக்கப்பட்டவர் நடராஜன். அரசியல் சூறாவளி சசிகலாவை ஜெயலலிதாவின் பக்கத்தில் நிறுத்தியது.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழக கொள்கை பரப்புச் செயலாளராக ஜெயலலிதா நியமிக்கப்பட்டபோது அவரது பிரசார நிகழ்ச்சிகளைப் படம் பிடிப்பதற்காக நடராஜனின் வீடியோ நிறுவனம் ஒப்பந்தம் செய்யப்பட்டது. அந்த நிறுவனத்தைக் கவனித்து வந்த நடராஜனின் மனைவி சசிகலா, வீடியோத் தொகுப்புக்கள் சம்பந்தமாக அடிக்கடி ஜெயலலிதாவைச் சந்தித்தார். அந்தச் சந்திப்பும் நெருக்கமும் ஜெயலலிதாவின் மனதில் நிரந்தர இடம்பிடிக்க உதவியது.
எம்.ஜி.ஆர். இறந்தபோது அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் இரண்டாக உடைந்தது. ஜெயலலிதா தலைமையிலும் எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி தலைமையிலும் தமிழக சட்டமன்றத் தேர்தலைச் சந்தித்தது அண்ணா திராவிட முன்னேற்றக் கழக இரண்டு அணிகளும் படுதோல்வியடைந்தன. அப்போது அரசியலைவிட்டு ஒதுங்கலாம் என்று ஜெயலலிதா முடிவெடுத்தார். சசிகலாவும் நடராஜனும் அவருக்கு ஆறுதல் கூறி அரசியலில் தொடர்ந்து ஈடுபட வேண்டும் என்று வலியுறுத்தினர். ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குப் பாத்திரமான சசிகலா தனது உறவினர்களை அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைத்தார்.
ஜெயலலிதா எப்போது என்ன செய்வார் என்று யாருக்குமே தெரியாது. அதிரடியாகச் சில முடிவுகளை எடுப்பார். அதன் பின் விளைவுகள் பற்றி சற்றும் சிந்திக்கமாட்டார். அவ்வப்போது முக்கிய பதவி வகித்த ஜெயலலிதாவின் உறவினர்களை பதவியை விட்டு தூக்கினார். அந்த நேரத்தில் சற்றும் தளராத விக்கிரமாதித்தன் போல் தனது இன்னொரு உறவினரை அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திலும் ஜெயலலிதாவின் வீட்டிலும் அறிமுகப்படுத்தினார். தன் கணவர் நடராஜனை ஜெயலலிதா விரட்டியடித்தபோதே ஜெயலலிதாவை நம்பி????? கைவிட்டார் சசிகலா.
திராவிட முன்னேற்றக் கழகத்தில் தோல்விக்கு அரசியல் வõதிகளும் ஊழலும் முக்கிய காரணம். திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர்களின் பிள்ளைகளில் அநேகர் அரசியலில் உள்ளனர். ஆனால் அழகிரியின் பெயர்தான் அதிகமாக அடிபடுகிறது. அழகிரி மதுரையில் மட்டும் தான் ஆட்சி செய்தார். சசிகலாவின் ஊரான மன்னார்குடியைச் சேர்ந்தவர்கள் தமிழகம் முழுவதும் குறு நில மன்னர்கள் போல் ஆட்சி செய்கின்றனர். முக்கியமான பல ஒப்பந்தம் சசிகலாவின் கண் அசைவின் பின்னரே நிறைவேற்றப்பட்டன. சத்தம் இன்றி நடந்த இந்த ஊழல்கள் பகிரங்கப்படுத்தப்படவில்லை.
தமிழக சட்டமன்றத் தேர்தலின் போது கூட்டணிக் கட்சிகளைப் புறக்கணித்து விட்டு அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வெளியிட்ட வேட்பாளரின் பட்டியலில் சசிகலாவின் கையே ஓங்கி இருந்தது. கூட்டணிக் கட்சிகளுடன் கலந்து பேசாது வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டதால் கூட்டணியே உடைந்து போகும் நிலை ஏற்பட்டது. ஜெயலலிதாவை நம்பிய விஜயகாந்தையும் இடதுசாரிகளையும் சசிகலா ஏமாற்றினார். அந்தப் பழி ஜெயலலிதாவின் தலையிலேயே விழுந்தது.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்களில் அதிகமானோர் புதிய வர்களின் அரசியல் அனுபவம், முதிர்ச்சி இல்லாத பலர் அமைச்சர்களாகியுள்ளனர். இவர்களின் வெற்றிக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீதான மக்களின் வெறுப்புக்களே காரணம். சசிகலாவுக்கு வேண்டப்பட்ட அமைச்சர்கள் எப்போது வெளியேற்றப்படுவார்கள் என்று தெரியாது தவிக்கிறார்கள். தாம் சசிகலாவின் விசுவாசிகள் அல்ல என்பதை வெளிக்காட்டுவதற்கான சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.
சசிகலாவை ஜெயலலிதா விரட்டியதால் எம்.ஜி.ஆரின் விசுவாசிகள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். சசிகலாவின் வெளியேற்றத்தை அறிந்து இனிப்பு வழங்கி வெடி கொளுத்தி, மொட்டை அடித்து தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வளர்ச்சிக்கு எந்தவித பங்களிப்பும் வழங்காது நிழல் முதல்வர் போல் செயற்பட்ட சசிகலாவின் போக்குப்பிடிக்காத எம்.ஜி.ஆரின் விசுவாசிகள் பலர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து வெளியேறினார்கள். அவர்கள் மீண்டும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணையும் சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துள்ளனர்.
தமிழக அரசியல் மற்றும் முல்லைப்பெரியாறு பிரச்சினை கூடங்குளம் போராட்டம் என்பனவற்றுக்கு மத்தியில் பிரதமர் மன்மோகன்சிங் கடந்த வாரம் தமிழகத்துக்கு விஜயம் செய்தார். திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியின் போது பிரதமர் மன்மோகன் சிங்கை வரவேற்பதற்கு திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர்களும் காங்கிரஸ் கட்சியினருமே விமான நிலையத்துக்குச் சென்றனர். பிரதமரை விமான நிலையத்தில் வரவேற்பது மாநில முதல்வரின் கடமை என்பதனால் ஜெயலலிதாவும் அமைச்சர்களும் விமான நிலையத்தில் பிரதமரை வரவேற்றனர்.
பிரதமர் வரவேற்க காங்கிரஸ் கட்சிப் பிரமுகர்களும் திராவிட முன்னேற்றக கழக மத்திய அமைச்சர்களும் விமான நிலையத்தில் குழுமியிருந்தனர். ஜெயலலிதாவுக்கு வேண்டப்படாதவர்கள் அவருக்கு அருகிலேயே நின்று பிரதமரை வரவேற்றனர். பரம எதிரிகளான ஜெயலலிதாவும் அழகிரியும் மிக நெருக்கமாக நின்று பிரதமரை வரவேற்றனர்.
பிரதமரை வரவேற்பதற்காக அமைச்சர்களான தயாநிதி மாறன், பழனிமாணிக்கம், முன்னாள் அமைச்சர்களான டி.ஆர். பாலு, தயாநிதிமாறன் ஆகியோர் விமான நிலையத்தில் காத்திருந்தபோது முதல்வர் ஜெயலலிதா வந்தார். அப்போது மரியாதையின் நிமித்தம் அனைவரும் எழுந்தனர். இவர்கள் எழுந்திருக்க திராவிட முன்னேற்றக் கழகத்தவர்கள் பிரதமரை வரவேற்றபோது ஜெயலலிதாவின் முகம் இறுகி இருந்தது. அரசியல் காழ்ப்புணர்ச்சி விமான நிலையத்தில் அப்பட்டமாக வெளிப்பட்டது.
வர்மா
சூரன்,ஏ,ரவிவர்மா
வீரகேசரிவாரவெளியீடு01/01/12

No comments: