Sunday, January 29, 2012

சசிகலாவின் ஆதரவாளர்களைகுறிவைக்கும் தமிழக அரசு

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து சசிகலாவின் குழு வெளியேற்றப்பட்டதைத் தொடர்ந்து அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திலுள்ளும் தமிழக அரச நிர்வாகத்திலும் அதிரடி மாற்றங்கள் நடைபெற்று வருகின்றன. சசிகலாவின் குழுவைச் சேர்ந்தவர்கள் மீது சட்ட நடவடிக்கை ஏதாவது எடுக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. எம்மைச் சேர்ந்த எவரையும் கைது செய்ய முடியாது. கைது செய்யவும் விட மாட்டோம் என்று முழங்கினார் சசிகலாவின் கணவர் நடராஜன் . சசிகலாவின் தம்பி திவாகரனைக் கைது செய்யும் ஆணை பிறப்பிக்கப்பட்ட பின்னர் திவாகரன் தலைமறைவாகிவிட்டார்.
தமிழக சட்டமன்ற இடைத் தேர்தலில் வேட்பாளர் தெரிவு, தொகுதி உடன் பாடு, அமைச்சர் பட்டியல் தயாரித்தல், பொலிஸ் அதிகாரிகள் இடமாற்றம் போன்ற பலவற்றில் திவாகரன் தனது செல்வாக்கை வெளிப்படுத்தியுள்ளார். தமிழக சட்டமன்றத் தேர்தலின் போது திவாகரனின் ஆட்டத்துக்கு தாளம் போட மறுத்த திருவாரூர் எஸ்.பி. யான சேவியர் தனராஜ் இடமாற்றம் செய்யப்பட்டார். கடந்த மாதம் சேவியர் தனராஜ் மீண்டும் திருவாரூர் எஸ்.பி.யாகப் பொறுப்பேற்றார். திவாகரனுக்கு பிடிக்காத சேவியர் தனராஜ் பிடியாணையுடன் திவாகரனைத் தேடித் திரிகிறார்.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னாள் பஞ்ஞாயத்துத் தலைவரான தமிழார்வன் தனது கார்ச் சாரதிக்கு வீடொன்றைக் கட்டிக் கொடுத்தார். பஞ்சாயத்து ஆட்சி மாறியதும் கார்ச் சாரதியின் வீடும் தகப்பனின் வீடும் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டது. இச்சம்பவம் பற்றியும் திவாகரனால் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது பற்றியும் உடனடியாக பொலிஸில் புகார் செய்யப்பட்டது. அந்தப்புகார் அப்போது கிடப்பில் போடப்பட்டது. சசிகலா குழுவினர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து வெளியேற்றப்பட்டதும் கிடப்பில் போடப்பட்ட திவாகரனுக்கு எதிரான புகார் தூசு தட்டுப்பட்டது. இந்தப் புகார்கள் அடிப்படையில் திவாகரனை கைது செய்ய பொலிஸ் குழு மன்னார் குடிக்கு விரைந்தது.
திவாகரனுக்கு நெருக்கமான பொலிஸ் அதிகாரிகள் மூலம் தான் கைது செய்யப்படப் போவதாகத் தெரிந்து கொண்ட திவாகரன் தலைமறைவாகிவிட்டார். சுந்தரக்கோட்டையில் உள்ள திவாகரனின் வீட்டுக்குச் சென்ற பொலிஸாருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. திவாகரனுக்குச் சொந்தமான சென்கமலத் தாயார் கல்லூரியிலும் தேடுதல் நடைபெற்றது. அங்கும் திவாகரன் இல்லை. திவாகரனைப் பொலிஸார் தேடித் திரிவதனால் சசிகலா அச்சத்திலும் கவலையிலும் உள்ளார். திவாகரனைத் தொடர்ந்து மேலும் சிலர் பட்டியலில் இடம்பெறலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
சசிகலாவின் குழுவுக்கு எதிராக தமிழக அரசு சட்டப்படி நடவடிக்கை எடுக்க தயாராகி உள்ளது. திராவிட முன்னேற்றக் கழக பிரமுகர்களைக் குறிவைத்த தமிழக அரசின் பார்வை சசிகலாவின் குழுவின் பக்கம் விழுந்துள்ளது. திவாகரனைத் தொடர்ந்து அடுத்த குறி நானாக இருக்குமோ என்ற அச்சம் சசிகலாவில் குழுவில் உள்ளவர்களின் மனதில் எழுந்துள்ளது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் சட்ட மன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்களில் சுமார் 90 பேர் சசிகலாவுக்கு வேண்டப்பட்டவர்கள். அவர்களில் சுமார் 18 பேர் சசிகலாவின் தயவில் அமைச்சரானவர்கள் அமைச்சர்களின் பதவி பறிக்கப்படலாம் அல்லது குறைக்கப்படலாம். சட்டமன்ற உறுப்பினர்களை இப்போதைக்கு எதுவும் செய்ய முடியாது.

திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு பல வெற்றிகளைத் தேடிக் கொடுத்த இளைஞர் அணிக்கு புது இரத்தம் பாய்ச்சும் வேளையில் மும்மூரமாக இறங்கி உள்ளார் ஸ்டாலின். திராவிட முன்னேற்றக் கழகத்தின் இளைஞர் அணி 60 வயதை நெருங்கும் ஸ்டாலினின் தலைமையிலேயே இயங்குகிறது. இளைஞர் அணியை சுறுசுறுப்பாக இயங்கச் செய்வதற்கு புதிய நிர்வாகிகளைத் தேர்வு செய்யும் நேர்முகம் நடைபெறுகிறது. இளைஞர் அணியின் மாநிலச் செயலர் பதவியிலிருந்து விலகுவதற்கு ஸ்டாலின் தீர்மானித்துள்ளார். மாவட்ட ரீதியாக இளைஞர் அணி நிர்வாகிகளிடம் நேர்முகம் நடத்தி வருகிறார் ஸ்டாலின்.
நீண்ட காலமாக ஸ்டாலினின் வழிகாட்டலில் இயங்கிய இளைஞர் அணி புதியவரின் தலைமையில் திராவிட முன்னேற்றக் கழக இளைஞர் அணியை அமைக்க வேண்டும் என்று ஸ்டாலின் விரும்புகிறார். மகன் உதய நிதியை அரசியலில் தனது வாரிசாக களம் இறக்க ஸ்டாலின் விரும்புகிறார் என்ற கருத்தும் நிலவகிறது. திரா
விடி முன்னேற்றக் கழகம் நடத்திய மனிதச் சங்கிலிப் போராட்டம், இளைஞர் அணி அலுவலகத் திறப்பு விழா, திராவிட முன்னேற்றக் கழக முக்கியஸ்தர்களின் திருமண விழா என்பவற்றில் உதயநிதி தலைகாட்டியுள்ளார். இளைஞர் அணிப் பொறுப்பை மகனிடம் கொடுத்து விட்டு கட்சித் தலைமைப் பொறுப்பெடுக்க ஸ்டாலின் தயாராகி வருகிறார்.
ஸ்டாலின், கனிமொழி, அழகிரி ஆகிய மூவரும் தீவிர அரசியலில் இறங்கி உள்ளனர். காங்கிரஸ் கட்சியினால் அரசியலுக்கு இழுத்து வரப்பட்டவர் ஸ்டாலின். கட்சியை வளர்ப்பதற்காக மதுரைக்குச் சென்ற அழகிரி அரசியல்வாதியாக மாறினார். இலக்கியப் பக்கம் சுறுசுறுப்பாக இருந்தவர் கனிமொழி. கருணாநிதிக்கும் குடும்பத்துக்கும் இடையிலான அரசியல் சூறாவளியால் அரசியலுக்கு வலிந்து அழைக்கப்பட்டவர் கனிமொழி.
தந்தைக்குப் பின் கட்சித் தலைமைக்கு கிடைக்கும் என்று காத்திருக்கும் ஸ்டாலினுக்குப் போட்டியாக அழகிரி உருவெடுத்தார். இப்போ கனிமொழியும் முழு நேர அரசியல்வாதியாகி விட்டார். மூவருக்கும் கட்சியில் பொறுப்பான பதவி கொடுக்க வேண்டிய இக்கட்டான நிலை உள்ளது.
ஸ்டாலின் பின்னால் இலட்சக்கணக்கான தொண்டர்கள் உள்ளனர். அழகிரிக்குப் பின்னால் அடியாட்கள் உள்ளனர். ஆட்சி மாறிய பின்னர் அவர்கள் அடங்கிவிட்டனர். கனிமொழியின் பின்னால் யாருமில்லை.
திராவிட முன்னேற்றக் கழகம் பொதுக் குழுக் கூட்டத்துக்கு முன்னர் இளைஞர் அணி புத்துயிர் பெற்று விடும். இளைஞர் அணி எப்பொழுதும் ஸ்டாலினின் பின்னாலேயே உள்ளது. உயதிநிதி இளைஞர் அணிக்குத் தலைமை வகித்தால் ஸ்டாலினின் செல்வாக்கு இன்னும் ஒருபடி உயர்ந்து விடும். ஸ்டாலினுக்குப் போட்டியாக இருக்கும் அழகிரி உதயநிதிக்குப் போட்டியாகத்தான் மகனை இறக்குவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
வர்மா,
சூரன்,ஏ,ரவிவர்மா
வீரகேசரிவாரவெளியீடு29/01/2



No comments: