Sunday, January 15, 2012

நக்கீரைக் குறி வைக்கும் அ.தி.மு.க

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் மிக பிரதான எதிரி நக்கீரன் கோபால். திராவிட முன்னேற்றக் கழகமும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும் இணைய முடியாத இரு துருவங்கள். கருணாநிதியும் ஜெயலலிதாவும் மாறி மாறி அறிக்கை விடுகிறார்கள். ஒருவரை ஒருவர் தாக்கிப் பேசுகிறார்கள். இருவருக்கும் விசுவாசமானவர்கள் அதனை நம்புகின்றனர். ஜெயலலிதாவின் பரம எதிரி கருணாநிதி. ஆனால் வெளியே தெரியாத இன்னொரு பரம எதிரி நக்கீரன் கோபால்.
தமிழகத்தின் அரசியல் அசிங்கங்களை வெளிச்சம் போட்டுக் காட்டும் சில சஞ்சிகைகள் உள்ளன. அவற்றில் முதன்மையானது நக்கீரன். நக்கீரனில் வெளிவரும் கட்டுரைகளில் அதிகமானவை மக்களிடம் மிகுந்த நம்பிக்கையை ஏற்படுத்தின.
ஜெயலலிதாவைப் பற்றி பல தகவல்களை நக்கீரன் வெளியிட்டதால் கடந்தகாலங்களில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியின்போது பல நெருக்குதல்களைச் சந்தித்தது நக்கீரன்.
நக்கீரன் அலுவலகம் மீது பலமுறை தாக்குதல் நடத்தப்பட்டன. நக்கீரன் ஊழியர்கள் மீது குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது. நக்கீரன் ஊழியர்கள் கொல்லப்பட்டனர். இந்த அச்சுறுத்தல்களினால் நக்கீரன் கோபால் கலங்கிப் போய்விடவில்லை. நக்கீரனின் மிக முக்கிய குறியாக ஜெயலலிதா இனங்காணப்பட்டார்.
மாட்டுக் கறி சாப்பிடும் மாமி நான் என்ற கட்டுரை அண்ணா திராவிட முன்னேற்றத் தொண்டர்களை ஆத்திரமடையச் செய்தது. நக்கீரன் அலுவலகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழக சட்டமன்ற உறுப்பினர் தலைமையில் தாக்குதல் நடைபெற்றபோது பொலிஸார் வழமைபோல் கையைக்கட்டி கொண்டு நின்றனர். வன்செயல்களைத் தடுக்க வேண்டிய பொலிஸõர் ஆளும் கட்சியின் நடவடிக்கையை பார்த்துக் கொண்டிருக்கும் நிலை தொடர்கிறது. ஆட்சி மாறினாலும் இப்படிப்பட்ட காட்சி மாறவில்லை.
நக்கீரன் அலுவலகம் மீது இரண்டாம் நாளும் தாக்குதல் நடத்தப்பட்டது. முதல் நாள் தாக்குதல் நடைபெற்றபோது இரண்டாம் நாள் பொலிஸார் தயாராக இருந்திருக்க வேண்டும். இரண்டாம் நாளும் தாக்குதல் ஆரம்பிக்கப்பட்ட பின்பே பொலிஸார் நடவடிக்கை எடுத்தனர்.
முதல்வர் ஜெயலலிதாவைப் பற்றி அவதூறாக கட்டுரை பிரசுரிக்கப்பட்டிருந்ததால் அதனைச் சட்டப்படி சந்தித்திருக்க வேண்டும். உணர்ச்சி வசப்பட்ட தொண்டர்கள் தாக்குதல் நடத்தியிருந்தால் வன்செயல்களை கைவிடுமாறு அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தனது தொண்டர்களுக்கு அறிவுறுத்தி இருக்க வேண்டும்.

முதல்வர் ஜெயலலிதாவை பற்றிய அவதூறுக் கட்டுரை பிரசுரமானதால் சினமடைந்த அரச இயந்திரம் நக்கீரன் அலுவலகத்துக்கான நீர், மின் விநியோகங்களை இடை நிறுத்தியது. நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் நீரும். மின்சாரமும் விநியோகிக்கபபடுகின்றன.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்கள் மீது நக்கீரன் கோபாலும் நக்கீரன் கோபால் மீது அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பிரமுகர்களும் பொலிஸில் புகார் செய்துள்ளனர். நக்கீரன் அலுவலகம்மீது தாக்குதல் நடத்திய போது கைது செய்யப்பட்டவர்கள் விடுதலை செய்யப்பட்டு விட்டனர். அவர்கள் மீது வழக்குத் தாக்கல் செய்யப்படுமா என்ற கேள்விக்கு தமிழக அரசுதான் பதில் கூற வேண்டும். மதுரை தினகரன் அலுவலகம் மீது அழகிரியின் விசுவாசிகள் நடத்திய கொடூரத் தாக்குதலில் மூன்று உயிர்கள் பலியாகின. திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியின்போது அந்த வழக்கு அமுங்கிப் போனது. நக்கீரன் மீதான தாக்குதல் வழக்கும் அதே நிலை தான் இன்று ஏற்படும்.
முன்னாள் அமைச்சரும் மாநில அமைப்புச் செயலாளராகவும் இருந்த தளவாய் சுந்தரம் திருநெல்வேலி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளராக இருந்த பி.ஜி. ராஜேந்திரம், முன்னாள் அமைச்சரும் திருநெல்வேலி மாவட்ட செயலாளராகப் பணியாற்றிய நயினார் ராஜேந்திரன் ஆகியோர் கட்சிப் பொறுப்பில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர். கட்சிப் பொறுப்பில் இருந்து இவர்கள் நீக்கப்பட்டதற்கான இந்த அறிக்கையை அண்ணா திராவிட முன்னேற்றக் கழக பொதுச் செயலாளராக முதல்வர் ஜெயலலிதா உத்தியோகபூர்வமாக வெளியிட்டுள்ளார்.
சசிகலாவும் அவரது பரிவாரங்களும் அண்ணா திராவிட முன்னேற்றறக் கழகத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட பின்னர் அவரது ஆதரவாளர்கள் என இனங்காணப்பட்டு ஒவ்வொருவராக வெளியேற்றப்படுகின்றனர். சசிகலாவும் அவரது கூட்டமும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் ஆடிய ஆட்டமும் அடாவடிகளும் ஜெயலலிதாவுக்கு ஏற்கனவே தெரிந்தவவைதான். அவர்களைக் கட்டிப் போடும் துணிவு ஜெயலலிதாவுக்கு வரவில்லை. தனது தலைக்கு ஆபத்து இல்லாத நிலையில் அதனை மௌனமாக அங்கீகரித்ததார் ஜெயலலிதா.தனது தலைக்கு ஆபத்து வரப் போவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டதையடுத்து விழிப்படைந்துள்ளார். கழகத்துக்கு விசுவாசமற்றவர்கள் என்ற முத்திரையுடன் சசிகலா குழுவினர் வெளியேற்றப்பட்டனர்.
சசிகலா குழுவினர் அண்ணா திராவிட முன்னேற்றக கழகத்தில் இருந் வெளியேற்றப்பட்டதனால் முக்குலத்தோரின் வாக்குகளை ஜெயலலிதா இழக்க வேண்டிய நிலை ஏற்படும் என்று அவரது எதிரிகள் கருதுகிறார்கள். எம்.ஜி.ஆர். என்ற மூன்றெழுத்து மந்திரத்தின் மீது அதி தீவிரபற்றுக் கொண்ட முக்குலத்தோர் சசிகலாவின் வெளியேற்றத்தினால் மன முடைந்து போய்விடமாட்டார்கள்.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்கள் எம்.ஜி.ஆரின் மீது மக்கள் மதிப்பும் விசுவாசமும் தொண்டர்கள். எம்.ஜி.ஆருக்கு அடுத்து ஜெயலலிதாவின் பெயரே அவர்களின் மனதில் பதிந்துள்ளது. ஆகையினால் சசிகலா குழுவினர் வெளியேற்றத்தினால் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வாக்கு வங்கியில் எதுவித பாதிப்பும் ஏற்படப் போவதில்லை.
வர்மா
சூரன்,ஏ,ரவிவர்மா
வீரகேசரிவாரவெளியீடு15/01/2


No comments: