Sunday, January 22, 2012

இடைத் தேர்தலுக்கு தயாரான ஜெயலலிதாகுழம்பிப் போயுள்ள தமிழக எதிர்க்கட்சிகள்

சங்கரன் கோவில் சட்டமன்றத் தொகுதியின் இடைத் தேர்தல் பற்றிய உத்தியோபூர்வ அறிவித்தல் எதனையும தேர்தல் ஆணையம் அறிவிக்காத நிலையில் எஸ். முத்துச்செல்வியை வேட்பாளராக அறிவித்துள்ளார் ஜெயலலிதா. சங்கரன்கோயில் தொகுதியில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர் கருப்பசாமி வெற்றி பெற்றார். அவரை அமைச்சராக்கி சங்கரன் கோவில் தொகுதிக்கு பெருமை சேர்த்தார் ஜெயலலிதா. புற்றுநோய் காரணமாக கருப்பசாமி மரணமானார். ஏப்ரல் 20 ஆம் திகதிக்கு முன்னர் சங்கரன் கோவில் தொகுதியில் இடைத் தேர்தல் நடைபெற வேண்டும். மார்ச் மாதம் தேர்தல் நடைபெறலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
எதிர்பார்க்காத வேளையில் அதிரடியில் முடிவெடுக்கும் ஜெயலலிதா சங்கரன் கோயில் இடைத்தேர்தல் வேட்பாளரை அறிவித்து தமிழக அரசியலைப் பரபரப்பாக்கியுள்ளார். சங்கரன் கோயில் நகராட்சித் தலைவராக இருக்கும் முத்துச் செல்வி பொறியியலாளர் படிப்பை முடித்தவர். இவரது தந்தை சங்கரலிங்கம் முன்னாள் தமிழக சட்டப் பேரவை உறுப்பினர் பலமான கூட்டணிக் கட்சிகள் எவையும் ஜெயலலிதாவுடன் இல்லை. இடைத் தேர்தலில் வெற்றி நிச்சயம் என்ற நம்பிக்கையில் அவரது கட்சியின் வேட்பாளரை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார். முன்னர் நடைபெற்ற தேர்தல்களின்போது வேட்பாளர்களை அறிவித்து விட்டு மாற்றியது போன்ற சம்பவம் சங்கரன் கோயில் இடைத் தேர்தலில் வேட்பாளர் தெரிவிலும் நடைபெறுமா என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
சங்கரன் கோயில் இடைத் தேர்தலில் போட்டியிடுவதா இல்லையா என்ற முடிவை விஜயகாந்த் இன்னமும் அறிவிக்கவில்லை. கருணாநிதிக்கும் ஜெயலலிதாவுக்கும் மாற்றீடாக அரசியல் களத்தில் நுழைந்த விஜயகாந்த் கடந்த சட்ட மன்றத் தேர்தலில் ஜெயலலிதாவிடம் சரணடைந்து தனது மதிப்பையும் செல்வாக்கையும் இழந்துள்ளார். கடவுளுடனும் மக்களுடனும் தான் கூட்டணி என்ற வீரவசனம் பேசியபோது கருணாநிதியையும் ஜெயலலிதாவையும் அச்சுறுத்திய விஜயகாந்த் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி சேர்ந்த பின்னர் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் பலத்த அடி வாங்கியுள்õர். ஆகையால் சங்கரன் கோயில் இடைத் தேர்தலில் ஜெயலலிதாவுக்கு விஜயகாந்தினால் எந்தவிதமான நெருக்கடியும் ஏற்படாது.
கருணாநிதியை வீட்டுக்கு அனுப்பி ஜெயலலிதாவை முதல்வராக்க வேண்டும் என்ற சபதத்துடன் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி சேர்ந்த இடதுசாரிகளை ஜெயலலிதா ஒதுக்கியே வைத்துள்ளார். தனித்து போட்டியிடும் துணிவு இடதுசாரிகளுக்கு இல்லை போட்டியிட்டாலும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை அச்சுறுத்தும் வகையிலான வாக்கு வங்கி இடதுசாரிகளிடம் இல்லை. தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத ஒருவராக விளங்கிய டாக்டர் ராமதாஸ் இன்று மிகவும் நொடிந்து போயுள்ளார். ராமதாசுடன் கூட்டணி சேர்வதற்காக காத்திருந்த கட்சிகள் இன்று அவரைப் புறந்தள்ளியுள்ளன. கட்சிக்குள் ஏற்பட்டுள்ள பிரச்சினையில் குழம்பிப் போயுள்ள ராமதாஸால் அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத்துக்கு எந்தப் பாதிப்பம் ஏற்படப் போவதில்லை.
சங்கரன் கோயில் தொகுதியைத் தனது கட்சிக்கு கருணாநிதி ஒதுக்கவில்லை என்பதற்காக திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணியிலிருந்து வெளியேறி அன்புச் சகோதரி ஜெயலலிதாவுடன் கைகோர்த்தார் வைகோ. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் ஏற்பட்ட அவமானங்களையும் கசப்பான சம்பவங்களையும் பொறுத்துக் கொண்டு அமைதியாக இருந்த வைகோவை கடந்த சட்டமன்றத்தேர்தலின் போது புண்பட்ட மனதுடன் அண்ணா திராவிட முன்னேற்றக் கூட்டணியிலிருந்து வெளியேறினார்.

ஜெயலலிதாவுடனும் கருணாநிதியுடனும் எந்தக் காலத்திலும் கூட்டணி சேரமாட்டேன் என்ற கொள்கையுடன் உள்ளாட்சித் தேர்தலைச் சந்தித்த வைகோவுக்கு நம்பிக்கை ஏற்பட்டது. கருணாநிதி ஜெயலலிதா விஜயகாந்த் என்ற பிரபலங்களும் தனி ஆளாக நின்று முட்டி மோதிய வைகோவின் கட்சிக்கு மக்களின் ஆதரவு உள்ளதென்பதை உள்ளாட்சித் தேர்தல் வெளிப்படுத்தியது. உள்ளாட்சி தேர்தல் முடிவு தந்த உற்சாகத்தால் சங்கரன் கோயில் இடைத் தேர்தலைச் சந்திக்கத் தயாராக உள்ளார் வைகோ. உள்ளாட்சித் தேர்தலுக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கும் இடையேயான வேறுபாடு வைகோவுக்கு நன்கு தெரியும்.
சங்கரன் கோவில் இடைத் தேர்தலின் மூலம் இழந்ததனது அரசியல் பலத்தை மீண்டும் பெறுவதற்குக் கங்கணம் கட்டியுள்ளார் வைகோ. திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீதான தமது ஒட்டுமொத்த வெறுப்பைக் கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது மக்கள் வெளிக்காட்டியதே அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பிரமாண்டமான வெற்றிக்குக் காரணம். ஜெயலலிதாவுக்கும் கருணாநிதிக்கும் எதிரான மாற்று அரசியல் சக்தியா விஜயாகாந்தைத் தமிழக மக்கள் எதிர்பார்த்தனர். ஜெயலலிதாவும் கூட்டுச் சேர்ந்நதனால் அந்த இடத்தை விஜயகாந்த் இழந்துவிட்டார். ஜெயலலிதாவுக்கும் கருணாநிதிக்கும் மாற்றீடான அரசியல் தலைவராக விளங்குவதற்கு வைகோ உறுதி பூண்டுள்ளார். திராவிட முன்னேறக் கழகம். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆகியவற்றினால் வஞ்சிக்கப்பட்ட வைகோ தனி வழிபோக தீர்மானித்து விட்டார்.
சங்கரன் கோயில் இடைத் தேர்தலில் தமிழக அரசுக்கு நெருக்கடியைக் கொடுக்கலாம் என்று வைகோ எதிர்பார்க்கிறார். இடைத் தேர்தலில் ஆளும் கட்சி வெற்றி பெறுவது எழுதப்படாத சட்டமாக உள்ளது. பிரதான இரண்டு திராவிடக் கட்சிகளுக்குச் சமமான வாக்குகளை பெற்று தனது இருப்பை வெளிப்படுத்த வைகோ முயற்சி செய்கிறார்.
திராவிட முன்னேற்றக் கழகமும் காங்கிரஸ் கட்சியும் ஒரே கூட்டணியில் இருப்பதாக அடிக்கடி பத்திரிகைகளில் அறிக்கை வெளியாகின்றன. இரண்டு கட்சிகளுக்கும் இடையிலான புகைச்சல் இன்னமும் வெளியே கசியவில்லை. சங்கரன் கோயில் இடைத் தேர்தலில் போட்டியிடுவது பற்றி திராவிட முன்னேற்றக் கழகம் இன்னமும் முடிவு செய்யவில்லை. திராவிட முன்னேற்றக் கழகம் சங்கரன் கோயில் இடைத் தேர்தலில் போட்டியிட்டால் காங்கிரஸ் கட்சி ஆதரவாகப் பிரசாரம் செய்யுமா என்பதும் சரியாகத் தெரியவில்லை.
சங்கரன் கோயில் இடைத் தேர்தல் திகதியை தேர்தல் ஆணையம் அறிவிக்கும்போது தமிழக அரசியல் சூடு பிடிக்க ஆரம்பிக்கும்.
வர்மா

சூரன்,ஏ,ரவிவர்மா

வீரகேசரிவாரவெளியீடு22/01/2


No comments: