Saturday, April 21, 2012

தடம் மாறிய தமிழ்ப்படங்கள் 29

சிநேகிதியின் காதலனைக் கரம் பிடித்து குடும்பம் நடத்திய ஒரு துரோகியின் கதைதான் காவலன். தொடர் தோல்விகளால் துவண்டிருந்த விஜயைத் தூக்கி உயரத்தில் வைத்த படம்.
புகை வண்டியில் சிறுவன் பழைய டயரியைப் பார்ப்பதுடன் படம் ஆரம்பிக்கிறது. அடி, தடி, சண்டை சச்சரவுகளால் எதிரிகளை அடக்கி வைத்த ராஜ்கிரண் துரோகி ஒருவனைப் போட்டுத்தள்ள கிராமம் ஒன்றுக்குச் செல்கிறார். அப்போது பிரசவ வலியால் துடித்த ஒரு பெண்ணை வைத்தியசாலையில் சேர்க்கிறார். ஒரு உயிரைக் கொலை செய்த ராஜ்கிரண் இரண்டு உயிர்களைக் காப்பாற்றுகிறார். அந்தக் குழந்தைக்கு பூமிநாதன் எனப் பெயரிடுகிறார்.
ராஜ்கிரனால் பெயரிடப்பட்ட பூமிநாதன் தான் விஜய். வன்முறையைக் கைவிட்டு ராஜ்கிரன் திருந்தி வாழும் போது அவரால் பெயரிடப்பட்ட விஜய் ஊர் வம்பை விலைக்கு வாங்குகிறார். சண்டையில் வெற்றி பெறுவதற்காக வெளி நாட்டுக்கும் செல்கிறார். விஜயைத் திருத்த ராஜ்கிரனால் தான் முடியும் என நினைத்த பெற்றோர் ராஜ்கிரனுக்கு உயிராபத்து பொடிகாட் @தவைப் படுகிறது எனப் பொய் கூறி அனுப்பி வைக்கின்றனர்.
தனக்கு எந்த ஆபத்தும் இல்லை. தன் மகள் அசினுக்குப் பாதுகாப்பு வேண்டும் என்று அசினுக்கு பொடிகாட்டாக விஜயை அனுப்புகிறார் ராஜ்கிரண். அசின் படிக்கும் கல்லூரியில் விஜயும் படிக்கிறார். அசின் மாணவன் அல்ல பொடிகாட் என்றே நினைக்கிறார். பொடிகாட் யூனிபோமோடு தான் கல்லூரிக்கு செல்கிறார். அசினின் தோழி மித்ராவும் அதே கல்லூரியில் படிக்கிறாள். அசின், மித்ரா, விஜய், வடிவேல், வடிவேலின் மனைவி ஆகியோர் ராஜ்கிரன் கெஸ்ட் ஹவுஸில் தங்குகின்றனர். அசினுக்கு ஏற்கனவே திருமணம் நிச்சயதார்த்தம் முடிந்து விடுகிறது. படிப்பு முடிந்ததும் இலண்டனில் திருமணம் நடைபெற ஏற்பாடாகியுள்ளது.
விஜயை ஏமாற்றுவதற்காக தொலைபேசியில் உருகி உருகி காதலிப்பதாக நடிக்கிறார் அசின். தொலைபேசி அழைப்புகளுக்கு முதலில் கரிசனை இல்லாது பதிலளித்த விஜய் அந்தக் குரலைக் காதலிக்கத் தொடங்குகிறார். விஜயை ஏமாற்றுவதற்காக காதலிப்பது போல் நடித்த அசின் விஜயை உண்மையாகவே விரும்புகிறார். இதை அறிந்த மித்ரா அசினை எச்சரிக்கை செய்கிறர். தன்னைக் காதலிப்பது அசின் தான் எனத் தெரியாது முகம் தெரியாத காதலியை உயிருக்குயிராக நேசிக்கிறார் விஜய்.
பெற்றோரின் திருமண நிச்சயதார்த்தத்தை விரும்பாத அசின் விஜயுடன் ஓடி விட முடிவெடுக்கிறார். அது தான் சரியென்று தோழி மித்ரா கூறுகிறாள். விஜயுடன் அசின் தொலைபேசியில் கதைப்பதைக் கேட்ட வடிவேலில் மனைவி அந்தச் செய்தியை ராஜ்கிரனின் மனைவிக்குக் கூறுகிறாள். இரவு புறப்படும் ரெயிலில் விஜய் இல்லையென்றால் அந்த ரயில் பயணமே தன் இறுதிப் பயணம் என்று எச்சரிக்கிறார். தன் காதலியைக் காண்பதற்காக ரயில் நிலையத்தில் விஜய் காத்திருக்கும் போது அசினை யாரோ கடத்தி விட்டதாக வடிவேல் கூறுகிறார்.
அவரைக் கடத்திய ராஜ்கிரனின் அடியாட்களுடன் மோதுகிறார் விஜய். அப்போது அங்கு வந்த ராஜ்கிரனிடம் விஜய் தன் நிலைமையைக் கூறுகிறார். விஜய் ரயில் நிலையத்துக்குப் போகவில்லை என்றால் விஜயின் காதலி இறந்து விடுவாள். ஆகையால் விஜயை போக விடும்படி அசின் கெஞ்சுகிறாள். விஜயைப் போக அனுமதித்த ராஜ்கிரன் ரயில் நிலையத்தில் விஜயின் காதலி இல்லையென்றால் விஜயைக் கொலை செய்யும் படி தனது அடியாளை அனுப்புகிறார். ரயில் நிலையத்தில் தான் இல்லையென்றால் விஜயைக் கொலை செய்து விடுவார்கள் என்பதை அறிந்த அசின் தனது தோழி மித்ராவை ரயில் நிலையத்துக்கு அனுப்புகிறார்.
விஜயை காதலிப்பது அசின் தான் என்ற உண்மையைக் கூறச்சென்ற மித்ராவைக் கண்ட விஜய் ஆச்சரியப்படுகிறார். தன்னை உருக உருகக் காதலித்தது மித்ரா என்று நினைக்கிறார் விஜய். விஜயிடம் உண்மையைக் கூறச் சென்ற மித்ராவால் உண்மையைக் கூற முடியவில்லை. ராஜ்கிரனின் அடியாளைக் கண்டதும் செய்வதறியாது நிற்கிறாள் மித்ரா. விஜய் மித்ராவைக் கட்டிப்பிடிக்கிறார். அந்தக்கணத்தில் விஜயை விரும்புகிறாள் மித்ரா. இப்படி ஒருவரை அடைய நம்பிக்கைத் துரோகம் செய்யலாம் என்ற எண்ணம் ஏற்படுகின்றது.
மித்ராவின் மனச்சாட்சி துரோகத்தை ஒப்புக் கொள்ளவில்லை. உண்மையை எழுதி தனது மகன் படிப்பதற்கு ஏற்பாடு செய்கிறார். மித்ரா இறந்ததும் அந்த டயரி மகனிடம் கிடைக்கிறது. மகனின் விருப்பத்துக்காக அசினின் வீட்டிற்கு மகனுடன் செல்கிறார் விஜய்.
விஜயுடன் மகனையும் கண்ட ராஜ் கிரண் அன்புடன் வரவேற்கிறார். அசின் திருமணம் செய்யவில்லை என்ற உண்மை விஜய்க்குத் தெரிகிறது. ஆனால் காரணம் தெரியவில்லை. அன்றி என்று அசினை மகனுக்கு அறிமுகப்படுத்துகிறார் விஜய். அசினை மம்மி என்று அழைக்கிறார் விஜயின் மகன். எங்களுடன் அவுஸ்திரேலியாவுக்கு வருவீர்களா மம்மி என்று விஜயின் மகன் கேட்டதும் தியேட்டர் நிசப்தமாகிறது. அந்த கேள்வி ரசிகர்களை உலுக்கி விட்டது.
மகனின் கேள்வியால் அதிர்ச்சியடைந்த விஜய் எல்லோரிடமும் மன்னிப்புக் கேட்கிறார். நான் கேட்க நினைத்ததைத் தான் உன் மகன் கேட்டான் என்று ராஜ்கிரன் கூறுகிறார். ராஜ்கிரனின் மீது மதிப்பும் மரியாதையும் வைத்திருக்கும் விஜய் மறு பேச்சின்றி அசினையும் அழைத்துச் செல்கிறார். தான் உயிருக்குயிராகக் காதலித்த விஜயுடன் அசின் இணைகிறார். தன்னை தொலைபேசியில் உருகி உருகி காதலித்தது அசின் தான் என்று தெரியாது அசினை அழைத்துச் செல்கிறார் விஜய்.
அசினும் விஜயும் இணைந்த சந்தோஷத்தில் தாய் மித்ரா எழுதிய டயரியை புகையிரத மேடையின் குப்பைக் கூடைக்குள் போடுகிறான் மகன். அதனைக் கண்ட விஜய் அந்த டயரியை எடுத்துப் படிக்கிறார். அப்போது தான் தன்னை விரட்டி விரட்டி உருகி உருகிக் காதலித்தது அசின் என்பதை அறிகிறார் விஜய். தன் உயிரைக் காப்பாற்றுவதற்காகவே மித்ரா விஜயைத் திருமணம் செய்தார். தனக்குத் துரோகம் செய்யவில்லை. விஜயின் உயிரைக் காப்பாற்றினார் என்ற எண்ணமே அசினிடம் உள்ளது. மித்ரா தன்னுடன்பேசாமலிருந்ததை அசினால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
காவலன் படத்தில் விஜயின் நடிப்பு சகலரையும் கவர்ந்தது. ஹிந்தித்திரை பக்கம் எட்டிப்பார்த்த அசின் நீண்ட நாட்களின் பின்னர் தமிழில் நடித்த படம் இது. அசினின் நடிப்பு மிக நன்றாக இருந்தது. அசினின் தோழியாக நடித்த மித்ரா நடிப்பிலும் அழகிலும் சகலரையும் கவர்ந்து விட்டார். வடிவேலுவின் நகைச்சுவைப் படம் முடிந்த பின்னும் சிரிப்பை உண்டாக்கியது.
மலையாளத்தில் பொடிகாட் என்ற பெயரில் வெளியான படமே தமிழில் காவலன் என்ற பெயருடன் வெளியானது. இப்படத்துக்கு காவல்காரன் என்று பெயரிடவிரும்பினார்கள். எம்.ஜி.ஆர்.நடித்த காவல்காரன் திரைப்பட நிறுவன அனுமதி வழங்காததால் காவலன் என்று பெயரிட்டனர். தமிழ், மலையாளம், ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் வெற்றி பெற்றது. கதை, திரைக்கதை, இயக்கம் சித்திக்.
யாரது யாரது சொல்லாமல் என் நெஞ்சை, பட்டாம் பூச்சி கூப்பிடும் போது பூவே ஓடாதே, ஸ்டெப் எப் எப் ரெப்மினா, சட சட, விண்ணைக் காப்பான் ஒருவன் ஆகிய பாடல்கள் மனதை விட்டகலவில்லை. வித்யாசாகரின் இசை படத்துக்கு வலுவூட்டியது.
பழைய படங்களின் பெயரை வைப்பதில் தனுஷுக்கு அலாதிப் பிரியம். படிக்காதவன், மாப்பிள்ளை என்ற பெயர்களில் தனுஷின் படங்கள் வெளியாகின திருவிளையாடல் படத்தலைப்புக்கு சிவாஜி ரசிகர்கள் போர்க் கொடி உயர்த்தியதால் தனுஷின் திருவிளையாடல் எனப் பெயரிட்டார். விஜயும் வேட்டைக்காரன் பெயரில் படம் நடித்தார். சந்திரலேகா, உத்தமபுத்திரன் ஆகிய பழைய படங்களின் தலைப்புக்களில் புதிய படங்கள் வெளியாகின. பழைய படங்கள் தந்த வெற்றியைப் புதிய படங்கள் தரவில்லை.
ரமணிமித்திரன்29/04/12

1 comment:

More Entertainment said...

hii.. Nice Post

Thanks for sharing

Best Regarding.

ChiCha.in