Friday, April 27, 2012

தடம் மாறிய தமிழ்ப்படங்கள் 30

குழந்தைக்கு ஆசைப்பட்டவள் இன்னொருவருடன் படுக்கையைப் பகிர்ந்து குழந்தையைப் பெற்றெடுத்த ஒருவளின் கதைதான் பூட்டாத பூட்டுகள். ஆண் எத்தனை பெண்களுடனும் தொடர்பு கொள்ளலாம். பெண் என்பவள் கணவனைத் தவிர வேறு ஆடவனுடன் உறவு கொள்ளக்கூடாது என்ற யதார்த்தத்தை உடைத்தெறிந்த படம் தான் 1980ஆம் ஆண்டு வெளியான பூட்டாத பூட்டுகள்.
காட்டுப்புத்தூர் என்ற அக்கிராமத்தில் தேநீர்க்கடை நடத்திவரும் தம்பதி ஜெயன், சாருலதா மிக நீண்ட காலமாக இவர்களுக்கு குழந்தை பிறக்கவில்லை. ஜெயன் பல பெண்களுடன் தொடர்புகொண்டு உல்லாசமாக வாழ்க்கையை அனுபவித்தான். குழந்தை இல்லாத ஏக்கத்தில் தினமும் வாழ்ந்தாள் சாருலதா. அந்த ஊரில் வேலை பார்க்கும் இரண்டு இளைஞர்கள் தேநீர் கடையில் அறிமுகமாகி ஜெயனின் வீட்டிற்கு சாப்பிடச் செல்கிறார்கள். அவர்களில் ஒருவன் பெண் பித்தன்.
குழந்தை இல்லாது தவிக்கும் சாருலதாவைத் தன் வலையில் வீழ்த்த முயற்சிக்கிறான். தான் தாயாக வேண்டும் என்ற ஆசையில் பெண் பித்தனின் வலையில் வீழ்கிறாள் சாருலதா. தனக்கொரு குழந்தை பிறக்க வேண்டும் என்பதற்காகப் பெண் பித்தனுடன் சோரம் போகிறாள் சாருலதா. சாருலதாவுக்கும் பெண் பித்தனுக்கும் இடையிலான திருட்டு உறவு ஊருக்குத் தெரிகிறது. பல பெண்களுடன் தன் மனைவி படுக்கையைப் பகிர்ந்ததை ஏற்றுக்கொள்ளாது அவளை வீட்டை விட்டு விரட்டுகிறான்.
கணவனால் விரட்டப்பட்ட சாருலதா பெண் பித்தனின் வீட்டைத் தேடிப்போகிறாள். சாருலதாவிடம் தன் காமப்பசியைத் தீர்த்துக் கொண்டவன் அவளை ஏற்றுக்கொள்ள மறுக்கிறான். வேறு வழியின்றி கூலி வேலை செய்கிறாள் சாருலதா. சாருலதாவை விட்டுப் பிரிந்த ஜெயன் நோயாளியாகி படுக்கையில் விழுகிறான். ஜெயன் நோயாளியானதை அறிந்த சாருலதா அவனைத் தேடிச் செல்கிறாள். தன் தவறை உணர்ந்த ஜெயன் சாருலதாவை மன்னித்தான்.
குழந்தை இல்லாத ஜெயனின் சொத்தை அபகரிக்க அவனது தம்பி பஞ்சாயத்தைக் கூட்டி முயற்சிக்கிறான். ஜெயன் அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கிறான். பஞ்சாயத்தின் தீர்ப்பின்படி ஜெயனையும் சாருலதாவையும் ஊர் ஒதுக்கி வைக்கிறது. தன் மனைவி இன்னொருவனின் குழந்தையைச் சுமக்கிறாள் எனத் தெரிந்தும் வேறு ஊருக்குச் சென்று சந்தோஷமாக வாழ்க்கையை ஆரம்பிக்கிறான் ஜெயன்.
மலையாளப் பட உலகின் முன்னணி நடிகராக இருக்கும் ஜெயன் கதாநாயகனாக நடித்த ஒரேயொரு தமிழ்ப்படம் பூட்டாத பூட்டுகள். இப்படம் வெளியான பின் ஹெலிகொப்டர் விபத்தில் ஜெயன் இறந்து விட்டான். நடன இயக்குனர் அறிமுகமானார். பஞ்சு அருணாசலத்தின் பாடல்களுக்கு இசைஞானி இளையராஜா இசையமைத்தார்.
பிரபல எழுத்தாளர் பொன்னீலன் எழுதிய உறவுகள் என்ற குறுநாவலையே மகேந்திரன் இயக்கினார்.
ரமணி
மித்திரன்29/04/12

No comments: