Friday, May 18, 2012

லண்டனில் தங்கத் திருவிழா 2

ஜப்பான்
லண்டன் ஒலிம்பிக் உதைபந்தாட்டப் போட்டியில் பங்குபற்றுவதற்கு ஆசிய கண்டத்தில் நடைபெற்ற தகுதி காண் போட்டிகளில் அதிக புள்ளிகளைப் பெற்ற ஜப்பான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், தென் கொரியா ஆகிய நாடுகள் விளையாடுவதற்கு தகுதி பெற்றுள்ளன. பேர்லின் 1936, மெல்போன் 1956 ரோக்கியோ 1964 ஒலிம்பிக் போட்டிகளில் ஜப்பான் விளையாடியது. மெக்ஸிக்கோவில் 1968 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் ஜப்பான் வெண்கலப் பதக்கம் பெற்றது. 1996 ஆம் ஆண்டு அட்லாண்டாவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிக்குப் பின்னர் லண்டன் ஒலிம்பிக்கில் விளையாடுவதற்கு ஜப்பான் தகுதி பெற்றுள்ளது.
முதல் சுற்றுப் போட்டியில் 4-3 என்ற கணக்கில் குவைத்திடம் தோல்வியடைந்தது ஜப்பான். மலேஷியா, சிரியா, பஹ்ரேன் ஆகியவற்றுக்கு எதிரான மிக முக்கியமான போட்டிகளில் ஜப்பான் வெற்றி பெற்றது. சிரியாவுக்கு எதிராக 2-1 என்ற கோல் கணக்கிலும் மலேஷியாவுக்கு எதிராக 2-0 என்ற கோல் கணக்கிலும் வெற்றி பெற்ற ஜப்பான் லண்டன் ஒலிம்பிக்கில் விளையாடத் தகுதி பெற்றது.
லண்டன் ஒலிம்பிக்கில் விளையாடுவதற்காக எட்டுத் தகுதி காண் போட்டிகளில் விளையாடிய ஜப்பான் 17 கோல்களை அடித்தது. கோல் காப்பாளர் சுசி ஹொண்டா, மத்திய கள வீரர் யுகி ஒட்சு, பின் கள வீரர் ஹிரோகி சகாய் ஆகியோர் மீது ஜப்பான் ரசிகர்கள் பெரிதும் நம்பிக்கை வைத்துள்ளனர்.

தென் கொரியா
ஒலிம்பிக் உதைபந்தாட்டப் போட்டியில் தென் கொரியா அணி தொடர்ச்சியாக எட்டாவது முறையாகப் பங்கு பற்றத் தகுதி பெற்றுள்ளது. தொடர்ச்சியாக ஆறாது தடவையாக ஒலிம்பிக் போட்டியில் பங்குபற்றும் தகுதியை பெற்றுள்ளது. 1948 ஆம் ஆண்டு உதைபந்தாட்டக் களத்தில் களம் புகுந்த தென் கொரியா தனது முதலாவது சுற்றுப் பயணத்தில் 5-3 என்ற கோல் கணக்கில் மெக்ஸிக்கோவை தோற்கடித்தது. 12-0 என்ற கோல் கணக்கில் சுவீடனிடம் தோல்வியடைந்தது.
அட்லாண்டா 2004 இல் உதைபந்தாட்டப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் பெற்ற பரகுவேயுடனான போட்டியில் மிகத் திறமையாக விளையாடி 3-2 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது. ஓமான், கட்டார், சவூதி அரேபியா ஆகியவற்றுடனான தகுதி காண் போட்டிகளில் தென் கொரியா வெற்றி பெற்றது. ஜோர்தானுடனான போட்டியில் 4-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
ஒலிம்பிக்கில் விளையாடுவதற்கான மூன்றாவது சுற்று தகுதி காண் போட்டியில் தலா மூன்று போட்டிகளில் வெற்றி பெற்று மூன்று போட்டிகளை சமநிலைப்படுத்தியது. தென் கொரியா எட்டு கோல்களை அடித்தது.
23 வயதுக்குட்பட்ட தென் கொரிய உதைபந்தாட்ட அணி கடைசியாக விளையாடிய 14 போட்டிகளிலும் வெற்றி பெற்றது.
பின் கள வீரரான ஹொல் ஜெங்  ஹோ-கிம் போகுங், கூஜா  ஹோ ஆகியோர் எதிரணிகளுக்கு நெருக்கடி கொடுப்பர்.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ்
ஒலிம்பிக் உதைபந்தாட்டப் போட்டியில் முதன் முதலில் பங்குபற்ற தகுதி பெற்றுள்ளது ஐக்கிய அரபு இராச்சியம். 1980 ஆம் ஆண்டுகளில் ஒலிம்பிக் தகுதி காண் போட்டிகளில் விளையாடிய ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இறுதிச் சுற்றில் வெளியேறியது. ஐக்கிய அரபு எமிரேட்ஸின் இன்றைய முன்னேற்றத்துக்கு அதன் பயிற்சியாளரான மஹிட் அலியே முக்கிய காரணம். இவரின் பயிற்சியின் கீழ் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உதைபந்தாட்ட அணி பல வெற்றிகளைப் பெற்றுள்ளது. 20 வயதுக்குட்பட்ட 19 வயதுக்குட்பட்ட உதைபந்தாட்ட அணிகள் பல தொடர்களில் வெற்றி பெற்று சம்பியனாகியது. ஒலிம்பிக் தகுதி காண் போட்டிகளில் ஐக்கிய அரபு எமிரேஸ்ட் தோல்வியடையவில்லை. ஏழு போட்டிகளில் வெற்றி பெற்று மூன்று போட்டிகளைச் சம நிலையில் முடித்தது. அஹமட் ஹலில், ஹம்டன் அல் கமலி, ஒமார் அப்துர் ரஹ்மான், மொஹமட் அஹமட் ஆகியோரின் செயற்பாடு எதிரணிகளைத் திக்கு முக்காடச் செய்யும்.    
    ரமணி
மெட்ரோநியூஸ் 13/05/12

2 comments:

வேல்முருகன் said...

இந்தியா என்று கிரிக்கெட் விளையாட்டை புறக்கனிக்கின்றதோ அன்றுதான் மற்ற விளையாட்டில் திறமை வெளிப்படும்

வர்மா said...

வருகைக்கும்,கருத்துக்கும்நன்றி
அன்புடன்
வர்மா