Friday, December 14, 2012

தடம் மாறிய தமிழ் படங்கள் 44


சந்தர்ப்ப சூழ்நிலையில் தான் காதலித்தவனின் தகப்பனை மணக்கிறார் நாயகி. தனக்கு இரண்டாம்  தாரமாக வாழ்க்கைப்பட்டவர் தன் மகனின்  காதலி என அறிகிறார் கணவன்.  தன்  சித்திதான் தனது அன்புக் காதலி என அறிகிறான் நாயகன். இப்படி எதிர்பாராத திருப்பங்களுடன் 1954 ஆம் ஆண்டு வெளிவந்த படம்தான் எதிர்பாராதது.

வி. நாகையாவின் மகன் சிவாஜி கணேசன் தகப்பனுக்குத் தெரியாது பத்மினியைக் காதலிக்கிறார்.  மேற்படிப்புக்காக வெளிநாட்டுக்குச் செல்கிறார் சிவாஜி. விமான விபத்தில் சிவாஜி இறந்துவிட்டதாகத் தகவல் வருகிறது. இதனை அறிந்த காதலி பத்மினி சோகத்தில்  துடிக்கிறார். நடைப்பிணமான வி. நாகையா  நண்பரின் ஆலோசனைப்படி இரண்டாம் திருமணம் செய்ய  பெண் தேடுகிறார். சந்தர்ப்ப சூழ்நிலையில் மகன் சிவாஜியின் காதலி பத்மினி நாகையாவை மணக்கிறார்.

மணமான  முதல் இரவில் மனைவியை நெருங்குகிறான் நாகையா.  முதியவரான நாகையாவை  கணவனாக ஏற்றுக் கொள்ளாத பத்மினி  அப்பா என அலறியடிபடி காலில்  விழுகிறாள். தன்  கடந்த கால வாழ்க்கையையும் தன் காதலனின் புகைப்படத்தையும்  சிவாஜி  எழுதிய கடிதங்களையும்  காட்டுகிறார் பத்மினி.  தன் மகனின்  காதலியை  தான் மணந்ததை நினைத்து வருத்தப்படுகிறார் வி. நாகையா பத்மினி காதலித்தது  தன் மகன் தான் என்ற உண்மையைக் கூறாது வேறு  இளைஞனைத் திருமணம் செய்யும்படி அறிவுரை கூறி விட்டு திருத்தல யாத்திரை  சென்ற  வி. நாகையா தான் இறந்து விட்டதாகத் தகவல் அனுப்புகிறார்.

திருத்தல யாத்திரை சென்ற வி. நாகையா விபத்தில் கண்ணை இழந்த  மகன் சிவாஜியை   காண்கிறார்.  சிவாஜியின்  காதலை அறிந்த வி. நாகையா காதலி பத்மினியைத் திருமணம் செய்யும்படி கூறுகிறார்.

 தன் மனைவி மகனின் காதலி என்பதை அறியாது செய்த தவறினால் மனம் கலங்கி உயிரை விடுகிறார் வி. நாகையா.

தன் காதலி பத்மினியைத்  தேடி செல்லும் சிவாஜி  சிற்பி செதுக்காத பொற்சிலையே என்ற பாடலைப் பாடுகிறார். அந்தப் பாடலின் மூலம் வந்திருப்பது தன் காதலன் சிவாஜி என அறிகிறாள் பத்மினி. காதலிக்கும் போது பாடிய பாட்டு பிரிந்தவர்களைச்    சேர்க்கிறது.  சிவாஜி பாடிய தால் உணர்ச்சி வசப்பட்ட  பத்மினி ஓடி வருகிறாள்.  வந்திருப்பது தன் காதலிதான்  என்பதை அறிந்த சிவாஜி ஆசையோடு அவளைத் தொடுகிறார்.  தன் கணவனைத் தவிர வேறு ஒரு   ஆடவன் தன் தன்  மீது கை வைத்ததை ஏற்றுக் கொள்ளாத  பத்மினி சிவாஜியின் கன்னத்தில்  அறைகிறார்.

பத்மினியின்  அண்ணா சிவாஜிக்கு சிகிச்சை செய்கிறார். சிவாஜிக்கு பார்வை தெரியத் தொடங்குகிறது. நீண்ட நாட்களின் பின்  சந்தித்த சிவாஜியும் பத்மினியும் உணர்ச்சி வசப்படுகின்றனர். சிவாஜியையும் பத்மினியையும் சேர்த்து வைக்க பத்மினியின் அண்ணணும் அண்ணியும் முயற்சி செய்கின்றனர். நாகையா இறந்த செய்தியைக்  கேள்விப்பட்ட பத்மினி விதவைக் கோலம் பூணுகிறாள்.

100  நாட்கள் ஓடிய இப்படம் ரசிகர்களிடம் பெரும் பாராட்டைப் பெற்ற அதேவேளை,  விமர்சகர்களின் கண்டனத்தையும் எதிர்நோக்கியது.  சிவாஜிக்கு பத்மினி அடித்த காட்சி சிவாஜியையும் படக் குழுவினரையும் மட்டுமல்லாது ரசிகர்களையும்  அதிர்ச்சியடைய வைத்தது. அந்தப் படப்பிடிப்பின் போது உணர்ச்சி வசப்பட்ட  பத்மினி சிவாஜிக்கு உண்மையாகவே அடித்தார்.

சிவாஜியை  அடிக்கும் காட்சி படமாக்கப்படப் போவதை அறிந்த பத்மினி முதலில்  மறுத்தார்.  இப்படத்தின் ஜீவ நாடியே இந்தக் காட்சிதான்  ஆகையினால் சிவாஜிக்கு அடிக்க வேண்டும் என்று வற்புறுத்தினார் இயக்குனர் சி.எச். நாராயணமூர்த்தி. சிவாஜியின்  ரசிகர்கள் விரும்பமாட்டார்கள் என்று மறுத்து விட்டார். பத்மினி மறுத்ததும் இக்காட்சியைப் பற்றி பத்மினிக்கு விளக்கும்படி சிவாஜியிடம் வேண்டுகோள் விடுத்தார் இயக்குனர்.

அந்தக் காட்சியின்  முக்கியத்துவத்தை பத்மினிக்கு எடுத்துக் கூறிய சிவாஜி  கதாநாயகனைக் கதாநாயகி அடிக்கும் காட்சி   யின் முக்கியத்துவத்தை பத்மினிக்கு எடுத்துரைத்தார் சிவாஜி. கதாநாயகனை கதாநாயகி அடிக்கும் உள்நாட்டுப்படங்களையும் வெளிநாட்டுப்படங்களையும் போட்டுக்காட்டினார்.சிவாஜியின்  வற்புறுத்தலினால்  அக்காட்சியில் நடிக்க சம்மதித்தார்  பத்மினி.

பத்மினியின் கையை சிவாஜி  தொட்டதும்  எங்கிருந்துதான் அந்த ஆவேசம் பத்மினிக்கு  வந்ததோ தெரியாது. இரண்டு கன்னங்களிலும் மாறி மாறி அடித்தார். அடியின் வலியைப் பொறுத்துக் கொண்ட சிவாஜி,  இயக்குனர் கட் சொல்வார்  என எதிர்பார்த்தார்.  அடியின் அகோரத்தினால்   சிவாஜியின்  மூக்கிலிருந்து இரத்தம் வடிந்தது. இனியும் பொறுக்க முடியாது எனக் கருதிய சிவாஜி பத்மினியின்  கையைப் பிடித்துக் கொண்டு கட் கட் என்று சத்தம் போட்டார். அதன் பின்னர் தான் இயக்குனரும் கட் கட் என்றார்.

படப்பிடிப்பு  முடிந்ததும் பத்மினியின் ஆவேசகம் அடங்கவில்லை. அவரை போர்வையால் போர்த்தி கை காலைத் தேய்த்தார்கள். டாக்டரை     அழைத்து வந்து பத்மினிக்கு ஊசி போட்டார்கள். அடிபட்ட சிவாஜி அப்பாவியா நிற்க. அடித்த பத்மினிக்கு வைத்தியம் பார்த்தார்கள்.

 பத்மினியின் உடல் நிலை காரணமாக படப்பிடிப்பு இரண்டு நாட்கள் நடைபெறவில்லை.

சிவாஜி கணேசன், பத்மினி வி. நாகையா எஸ்.பி. சகஸ்ரநாமம், பிரண்ட்ராமசாமி, துரைசாமி, எஸ்.ஏ. அசோகன்,  நாராயணசாமி, சந்தானம், என்.எஸ். பொன்னுத்துரை, டி.கே. ராமசாமி, எஸ். வரலட்சுமி, பேபி சரஸ்வதி, அங்கமுத்து ஆகியோர் நடித்தனர்.

கதை, வசனம் ஸ்ரீதர், பாடல்கள் பாபநாசம் சிவன், சுரபி, கே.பி. காமாட்சி, கே.எஸ். கோபால்,  கிருஷ்ணன் இசை சி.என். பாண்டுரங்கம் ஒளிப்பதிவு பி. ராமசாமி இயக்கம் சி.எச். நாராயணமூர்த்தி.
ரமணி
மித்திரன்  09/12/12

No comments: