Friday, December 28, 2012

ச‌ச்சின் இல்லாத ஒரு நாள்...


உலகக் கிண்ண ஒருநாள் போட்டி 1978 ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற போது பந்து பொறுக்கும் சிறுவனாக ஓடித் திரிந்த சச்சின் டெண்டுல்கர் பின் நாளில் கிரிக்கெட்டைத் தனது கட்டுப்பாட்டினுள் வைத்திருப்பார் என யாரும் எதிர்பார்த்திருக்கவில்லை.
கிரிக்கெட் போட்டியின் பல சாதனைகளின் சொந்தக்காரர் சச்சின் டெண்டுல்கர். சச்சினின் ஆட்டத்தில் சிறிது தொய்வு ஏற்பட்டுள்ளது. அவரது ஆட்டத்தில் தடுமாற்றமும் பந்தை எதிர்நோக்கும் வேகமும் குறைந்துள்ளது. இதன் காரணமாக அவர் மீது ஏகப்பட்ட விமர்சனங்கள். சச்சின் ஓய்வு பெற வேண்டும் என சிலரும் ஓய்வு பெறக் கூடாது எனச் சிலரும் வாதிட்டனர்.


இந்திய அணியில் முன்னாள் வீரர்கள் உட்பட சில கிரிக்கெட் வீரர்கள் சச்சின் ஓய்வு பெறுவது நல்லது என்று கூறினார்கள். ஒரு சில வர்ணனையாளர்களும் சச்சின் ஆட்டம் இழந்ததும் தமது மேதாவித்தனத்தை வெளிப்படுத்துவார்கள். இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, இந்தியா ஆகிய நாடுகளில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டிகளில் இந்தியா படுதோல்வியடைந்து தொடர்களை இழந்தது. இந்திய அணியின் படுதோல்விக்கு சச்சினும் ஒரு காரணம் என்ற கடும் விமர்சனம் எழுந்தது. இந்த விமர்சனங்கள் சச்சினை வெகுவாகப் பாதித்தன.


விமர்சனங்களைப் பற்றி நான் கவலைப்பட போவதில்லை. நான் நல்ல உடல் தகுதியுடன் இருக்கிறேன். இப்போதைக்கு ஓய்வு பெற மாட்டேன் என்று அடிக்கடி கூறி வந்த சச்சின் திடீரென முன் அறிவித்தல் எதுவுமின்றி இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபைக்கு எழுதிய கடிதத்தின் மூலம் ஒரு நாள் போட்டியிலிருந்து ஓய்வு பெறப் போவதாக அறிவித்துள்ளார்.
இந்திய, இலங்கை, பாகிஸ்தான் வீரர்கள் ஓய்வு பெறுவதற்கு இலகுவில் விரும்புவதில்லை. உடல் தகுதி இல்லாத ஆட்டத் திறன் குறைந்த சில வீரர்களைத் தெரிவு செய்யாத கிரிக்கெட் சபைகள் அவர்களுக்கு ஓய்வு கொடுத்துள்ளதாக அறிவிக்கும். கிரிக்கெட் சபைக்கும் வீரருக்கும் பாதிப்பில்லாத இந்த அறிக்கையால் தற்காலிகமாகச் சில பிரச்சினைகள் தீர்ந்து விடுவதுண்டு. முரளி போன்ற ஒரு சிலர் மட்டும் செல்வாக்கு இருக்கும் போது ஓய்வு பெறப் போவதைத் துணிச்சலுடன் அறிவித்தார்கள்.
கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற விரும்பும் வீரர் இரண்டு நாட்களுக்கு முன்பு கிரிக்கெட் தொடர் ஆரம்பிக்க முன்னர் அறிவிப்பார். பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடும் இந்திய வீரர்களின் பெயர் அறிவிக்க முன்னமே ஒரு நாள் போட்டியில் ஓய்வு பெறப் போவதாக சச்சின் அறிவித்தது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

டோனியின் செயற்பாட்டில் அதிருப்தியுற்ற இந்திய கிரிக்கெட் தெரிவுக் குழு தலைமைப் பொறுப்பில் இருந்து டோனியை நீக்க முடிவெடுத்தது. தெரிவுக் குழுவின் உயர் பதவியிலிருந்த ஒருவர் டோனியின் தலைமைப் பதவியைக் காப்பாற்றினார். தெரிவுக் குழுக் கூட்டத்தில் நடைபெற்ற இந்த ரகசிய விவாதம் அண்மையில் பரகசியமானது. பாகிஸ்தானுக்கு எதிரான இந்திய அணியில் சச்சினின் பெயர் இல்லை என்ற ரகசியம் தெரிந்ததனால் தான் இந்த அவசர ஓய்வு பெறும் முடிவை சச்சின் எடுத்திருக்கலாம் என்ற சந்தேகமும் உள்ளது.


சச்சினின் அறிவிப்பு அவரது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சச்சின் இப்போது ஓய்வு பெற்றிருக்கக் கூடாது என்ற‌ குரல் இப்போது பலமாக ஒலிக்கத் தொடங்கியுள்ளது. முன்னாள் கிரிக்கெட் தலைவர்களும், வீரர்களும் சச்சினின் திடீர் ஓய்வை விரும்பவில்லை. சச்சினின் ஓய்வு அறிவிப்பால் பாகிஸ்தான் வீரர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். பாகிஸ்தானுடன் ஆரம்பமான சச்சினின் கிரிக்கெட் ஓய்வு பாகிஸ்தான் அணியுடனான போட்டியின் பின்னர் ஏற்பட்டிருக்கலாம் என ஆதங்கப்படுகிறார்கள்.


வேகப்பந்து வீரராகவே சச்சின் ஆசைப்பட்டார். டென்னிஸ் லில்லியால். நிராகரிக்கப்பட்ட சச்சின் துடுப்பாட்டத்தில் கவனம் செலுத்தி சாதனைகளின் சொந்தக்காரரானார். பாடசாலைப் போட்டியில் வினோத் கம்ளியுடன் இணைந்து 326 ஓட்டங்கள் எடுத்தார் சச்சின். அப்போட்டியில் சச்சின் 326 ஓட்டங்கள் எடுத்தார் ரஞ்சி, இரானி, துலிப் டிராபி போட்டிகளில் அறிமுக வீரராகக் களமிறங்கி சதமடித்தார். சச்சினும் கம்ளியும் கிரிக்கெட்டில் அறிமுகமான போது சாதனை வீரர்கள் வருகிறார்கள், சாதிப்பார்கள். இந்திய அணியின் எதிர்காலம் பிரகாசமாக இருக்கும் என்று எவரும் கட்டியம் கூறவில்லை. பாகிஸ்தானுடனான அறிமுகப் போட்டியிலும் நியூஸிலாந்துக்கு எதிரான இரண்டாவது போட்டியிலும் ஓட்டமெடுக்காது ஆட்டமிழந்தார் சச்சின். அப்போது அவர் மீது எதிர்பார்ப்பு இல்லாமையால் எந்த ஊடகமும் அவரை வறுத்தெடுக்கவில்லை.
இலங்கையில் நடைபெற்ற சிங்கர் கிண்ண முத்தரப்பு போட்டியில் அவுஸ்திரேலியாவுக்கு எதிராகச் சதமடித்து தனது சத சாதனைக் கணக்கை ஆரம்பித்தார். 75 ஆவது போட்டியிலேயே முதலாவது சதத்தை அடித்தார் சச்சின். பிட்ச்சில் நின்றால் பிச்சு உதறுவார் என்ற பயம் எதிரணி வீரர்களிடம் இருந்தது. அந்தப் பயத்தில் இருந்து எதிரணி வீரர்கள் தற்போது விடுபடத் தொடங்கி விட்டார்கள். சிறிது காலம் தடுமாறிய நிலையில் இருந்த சச்சின் மீண்டும் விஸ்வரூபம் எடுத்து விளாசுவார் என்ற நம்பிக்கை அவரது ரசிகர்களிடம் இருந்தது. அந்த நம்பிக்கையைச் சிதறடித்து விட்டார் சச்சின். கிரிக்கெட்டில் அதிக ஆர்வம் இல்லாதவர் சச்சினின் மனைவி அஞ்சலி. திருமணத்துக்கு முன் கிரிக்கெட்டைப் பற்றி அவருக்கு எதுவுமே தெரியாது. ஒருநாள்போட்டியில் 49 சதம் அடித்த சச்சின் 50 ஆவது சதமடிப்பாரா என்ற நம்பிக்கை உள்ளதாக அண்மையில் தெரிவித்திருந்தார் அஞ்சலி. தன் மனைவி அஞ்சலியின் ஆசையை நிறைவேற்றாது ஒரு நாள் போட்டியிலிருந்து ஓய்வு பெற்று விட்டார் சச்சின்.
ஜென்ரில்மன் விளையாட்டு என வர்ணிக்கப்படும் கிரிக்கெட்டில் கண்ணியமான ஒரு சில வீரர்களில் சச்சினும் ஒருவர். ஆட்டமிழந்தால் நடுவரின் முடிவை எதிர்பாராது வெளியேறி விடுவார். தவறான தீர்ப்பை நடுவர் வழங்கினாலும் அதற்கு எதிராக உடலசைவு எதனையும் வெளிக்காட்டாது வெளியேறி விடுவார். 2001 ஆம் ஆண்டில் தன் ஆபிரிக்காவில் பந்தைச் சேதப்படுத்தியதாக சச்சினின் மீது புகார் சுமத்தப்பட்டு தண்டனை வழங்கப்பட்டது.
2007 ஆம் ஆண்டு சச்சினுக்கு அன்பளிப்பு வழங்கப்பட்ட காருக்கு சுங்கவரி விதிப்பிலிருந்து விலக்களிப்பதற்கு  சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டது. இந்த சட்ட திருத்தத்தினால் 1.13 கோடி (இந்திய ரூபா) இழப்பீடு என்று வழக்குத் தொடரப்பட்டது.
463 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய சச்சின் 452 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ளார். 21.367 பந்துகளுக்கு முகம் கொடுத்தார். 18.426 ஓட்டங்கள் எடுத்தார். இவற்றில்  2.016 பவுண்டரிகள், 195 சிக்ஸர்கள் அடக்கம். 41 முறை ஆட்டம் இழக்கவில்லை. துடுப்பாட்டத்தில் மட்டுமல்லாது பந்து வீச்சிலும் ஒரு சில போட்டிகளில் இந்திய அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
அஸார் தலைமையிலான இந்திய அணி 1993 ஆம் ஆண்டு ஹீரோ ஆப் கிண்ண அரையிறுதிப் போட்டியில் தென்னாபிரிக்காவைச் சந்தித்தது. கடைசி ஓவரில் ஆறு ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி பெறும் நம்பிக்கையில் தென்னாபிரிக்கா இருந்தது. கடைசி ஓவரை வீச சச்சினை அழைத்தார் அஸார். தென்னாபிரிக்க ரசிகர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். கடைசி ஓவரில் மூன்று ஓட்டங்களை மட்டுமே விட்டுக் கொடுத்த இந்திய அணியை இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்றார் சச்சின்.
463 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய சச்சின் 270 இன்னிங்ஸ்களில் பந்து வீசினார். 8054 பந்துகளை வீசிய சச்சின் 6,850 ஓட்டங்களை விட்டுக் கொடுத்தார். ஒரு நாள் போட்டிகளில் 154 விக்கெட்களை வீழ்த்தினார். அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக 32 ஓட்டங்களைக் கொடுத்து ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தியதே இவரது சிறந்த பந்து வீச்சாகும். இரண்டு முறை ஐந்து விக்கெட்டுகளையும் நான்கு முறை நான்கு விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.
கிரிக்கெட்டை விட்டு வெளியேறினால் விளம்பரங்களின் வருவாய் குறைந்து விடும். தடை ஓய்வு பற்றிய முடிவை காலதாமதமாக சச்சின் அறிவித்ததற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்.
ஓய்வு எப்போது என்ற கேள்விக்கு சச்சின் பதிலளித்துள்ளார்.
எப்போது ஓய்வு என்ற கேள்வி கேள்வியாக மட்டுமல்லாது சர்ச்சையையும் எழுப்பியது. சர்ச்சைகளின் வீரியத்தை சச்சின் சற்று குறைத்துள்ளார்.
சச்சினின் இந்த முடிவுக்கு சர்ச்சைகளும் விமர்சனங்களும் ஊடகங்களும் தான் காரணம் என்று அவரது ரசிகர்கள் குற்றம் சாட்டுகின்றனர். சர்ச்சைகளும் விமர்சனங்களும் என்றாவது ஒரு நாள் ஏதோ ஒரு ரூபத்தில் வெளிவந்து கொண்டே இருக்கும். விமர்சகர்களின் பார்வை இப்போ டோனியின் மீது விழுந்துள்ளது. டோனியின் தலைவிதி பாகிஸ்தானின் கையில் உள்ளது.
கங்குலி, லக்ஷ்மன், ட்ராவிட் ஆகியோரின் வெற்றிடங்களை நிரப்ப முடியாது தவிக்கும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை சச்சினின் வெற்றிடத்தை எப்போது நிரப்பும்?
சாதனைகள் என்றோ ஒரு நாள் முறியடிக்கப்படலாம். சச்சினின் ஒரு சில சாதனைகள் முறியடிக்கப்பட முடியாதவை. சச்சினின் சாதனைகள் அனைத்தையும் ஒரு வீரரால் முறியடிக்க முடியாது. பிரிக்க முடியாதது. சச்சினும் சாதனையும் ஒரு நாள் போட்டியில் சச்சின் இல்லை என்றாலும் அவரது சாதனைகள் நிலைத்து நிற்கும்.
மெட்ரோநியூஸ்   28/12/12

No comments: