Friday, December 7, 2012

மனம் மாறும் விஜயகாந்த் காத்திருக்கும் கருணாநிதி


இந்திய நாடாளுமன்றப் பொதுத் தேர்தலைக் குறி வைத்து தமிழக அரசியல் கட்சிகள் அனைத்தும்  காய்நகர்த்த தொடங்கிவிட்டன. திராவிட முன்னேற்றக் கழகம் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆகியன தேர்தலைச் சந்திப்பதற்காக குழு அமைத்துள்ளன.  காங்கிரஸ் தலைமையும் குழு அமைத்து நாடாளுமன்றத் தேர்தலுக்கான முன்னேற்பாடுகளை எடுத்துள்ளது. திராவிட முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி  சேர்வீர்களா என்று நிருபர்கள் விஜயகாந்தைக் கேட்டபோது  சிரித்துக் கொண்டேசாதக சமிக்ஞை காட்டியுள்ளார்?காட்டியுள்ளனர்.

திராவிட முன்னேற்றக் கழகமும் காங்கிரஸ் கட்சியும் ஒன்றை ஒன்று விட்டுப் பிரிய முடியாத நிலையில் உள்ளன.  காங்கிரஸுடனான  தொடர்பை விடுமாறு திராவிட முனனேற்றக் கழகத்தில்  உள்ள சிலர்  நெருக்கடி கொடுக்கின்றனர். திராவிட முன்னேற்றக் கழகத்தை  கை விடும்படி காங்கிரஸ் கட்சியிலுள்ள சிலர் வலியுறுத்துகின்றனர். காங்கிரஸ் கட்சியை மிரட்டும்  வகையில் பேசி எச்சரிப்பதுபோல்  அறிக்கை விடும் கருணாநிதி அந்தச் செய்தி மை அழியுமுன்பே மறுப்புத்தெரிவித்துவிடுவார். காங்கிரஸ்  கட்சியைக் கருணாநிதி  சாடும்போது  புகழகாங்கிதமடையும் தொண்டர்கள்  மறுநாள் கருணாநிதியின் குத்துக் கரணத்தைக் கண்டு நொந்து போகின்றனர்.
தமிழகத்தில் நடைபெறும் தேர்தல்களின் போது கூட்டணி இல்லாமல் வெற்றிபெறுவதற்கு  எந்தக் கட்சியாலும் முடியாது. ஆகையினால் பலமான கூட்டணியை  அமைப்பதற்கு பிரதான கட்சிகள்  முயற்சி செய்கின்றன. திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் தமிழகத்தில் அதிகூடிய வாக்கு வங்கி உள்ளது. பலமான கூட்டணி அமைத்தால் இவைகளால்  பிரமாண்டமான வெற்றியைப் பெற முடியும். ஆகையினால் கூட்டணிக்கான முன் முயற்சிகளில் இக்கட்சிகள் முன்னெடுப்பை தொடங்கியுள்ளன.

காங்கிரஸ் கட்சிக்கு எதிராக  திராவிட முன்னேற்றக் கழகம் அவ்வப்போது சில கருத்துக்களைக் கூறி வந்தாலும்  கூட்டணியிலிருந்து வெளியேறுவதற்குத் தயக்கம் காட்டி வருகின்றது. காங்கிரஸுக்கு மாற்றீடாக  மத்தியில் அரசமைக்கக் கூடிய பலம் பொருந்திய கட்சி இல்லை என்பதே  திராவிட முன்னேற்றக் கழகத்தின் அபிப்பிராயம்.
திராவிட முன்னேற்றக் கழகம், காங்கிரஸ் கூட்டணிக்குள் விஜயகாந்த்தும் சேர்ந்து விட்டால் ஜெயலலிதாவின்  பாடு திண்டாட்டமாக இருக்கும். 2ஜி ஸ்பெக்ரம் பிரச்சினையே திராவிட முன்னேற்றக் கழகத்தை  மண் கௌவச் செய்தது. ஸ்பெக்டரம் விவகாரத்தின்  சூடு  தற்போது குறைந்துள்ளதாக ஸ்பெக்ரம்ஊழலை வைத்து இனிமேல் அரசியல் செய்ய முடியாது என்பதனால்  திராவிட  முன்னேற்றக் கழகம் கொஞ்சம் தெம்பாக  உள்ளது. இந்திய நாடாளுமன்ற லோக் சபாத் தேர்தல்  அடுத்த வருடம் நடைபெறவுள்ளது.  ஆறு நாடாளுமன்ற உறுப்பினர்களின் பதவி காலியாகவுள்ளது.  நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்களைக் தெரிவு செய்யும் பலம் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திடம் உள்ளன. எஞ்சிய இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிர்க்கட்சிகளின்  கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

 மைத்துனன் சதீஷை  நாடாளுமன்ற உறுப்பினராக்கி அழகுபார்த்த  ஆசைப்பட்ட விஜயக்காந்தின் எண்ணத்தை ஜெயலலிதா தவிடு பொடியாக்கியுள்ளார். அடுத்த ஆண்டு ஜூலை மாதம் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழக்கப் போகும்   கனிமொழியை மீண்டும் நாடாளுமன்றத்துக்கு அனுப்பக்கூடிய பலம் கருணாநிதிக்கு இல்லை. விஜயகாந்த், ,கருணாநிதி, காங்கிரஸ் இணைந்தாலும் இரண்டு நாடாளுமன்ற  உறுப்பினர்களை பெற முடியாது. இடதுசாரிகளும்  ஆதரவளித்தால் தான் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பெற முடியும். ஆகையினால் மேல் சபை நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி இந்திய நாடாளுமன்றப் பொதுத் தேர்தலுக்கு புதிய  கூட்டணியும் பரிணமிக்கும் வாய்ப்பு உள்ளது. 
வைகோ,  டாக்டர் ராமதாஸ் ஆகிய இருவரும் தேர்தல் கூட்டணியில் முக்கிய பங்கு வகித்தார்கள்.  வெற்றிதோல்வியை தீர்மானிக்கும் வாக்கு வங்கி ஒரு காலத்தில் இவர்கள் இருவரிடமும் இருந்தது.  இன்று தேடுவாரின்றி இருவரும் நடுத்தெருவில்  அநாதையாக  நிற்கின்றனர்.

 யாருடனும் கூட்டணி இல்லை என்று விஜயகாந்த் கூறியதை மனப் பாடமாக்கி ஒப்பிக்கிறார் ராமதாஸ்.  யாருடன் கூட்டணி சேர்ந்தால்  ஆட்சியைப் பிடிக்கலாம் என்று கருணாநிதியும் ஜெயலலிதாவும் கணக்கு போடும் வேளையில்  பாட்டாளி மக்கள் கட்சி தமிழகத்தை ஆட்சி  செய்யும் என்ற கனவில் மிதக்கிறார் டாக்டர் ராமதாஸ்.  தனது அரசியல் சுயநலனுக்காக தமிழகத்தில் சாதிக் கலவரத்தை ராமதாஸ் தூண்டி விடுகிறார் என்று எதிர்க்கட்சித் தலைவர்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாகச் குற்றம் சுமத்துகின்றனர். 

வன்னியர் என்ற சாதி அடையாளத்துடன் அரசியலில்  நுழைந்த ராமதாஸ் தனது இருப்பை வெளிப்படுத்துவதற்காக சாதி  அரசியலைக்  கையில் ஏடுத்துள்ளார். சாதி அரசியல்  ராமதாஸைக் கைவிட்டு  விட்டது என்றாலும் சாதியை கைவிடமாட்டேன் என்று கங்கணம் கட்டியுள்ளார் ராமதாஸ். கட்சியின் நலனைப் புறந்தள்ளிவிட்டு மகனை முன்னிறுத்தி  அரசியல் வியாபாரம்  செய்த ராமதாஸை  தொண்டர்கள் கைவிட்டு விட்டார்கள். திராவிட முன்னேற்றக் கழகம் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆகியவற்றை விட அதிக வாக்கு வங்கி தனக்கு இருப்பதாகக் கருதுகிறார் டாக்டர் ராமதாஸ். 

மாநிலத்தில் ஆட்சியை இழந்தாலும் மத்திய அரசில் ஆட்சியில் பங்குபற்ற வேண்டும் என்றே திராவிட‌ முன்னேற்றக் கழகம் கருதுகிறது. மத்திய அரசைத் தக்கவைக்க வேண்டும் என்பதில்  குறியாக உள்ளது. காங்கிரஸ் தமிழக சட்ட சபையில்  அதிக உறுப்பினர்களைப் பெற்றது போல்  நாடாளுமன்றத்திலும் அதிக  ஆசனங்களைப் பெற வேண்டும் என்றும்  கருதுகிறார் விஜயகாந்த். ஆகையினால்  மேல் சபை நாடாளுமன்றத் தேர்தலின் போது புதிய கூட்டணி ஏற்பட வாய்ப்பு உள்ளது.  இந்தக் கூட்டணியால் ஜெயலலிதாவுக்கு  இப்போது  ஆபத்து எதுவும் ஏற்படாது நாடாளுமன்றத் தேர்தலில்  பலத்த சவாலைச் சந்திக்க வேண்டிய சந்தர்ப்பம் உண்டாகும்.
 
திராவிட முன்னேற்றக் கழகத்துடன்  கூட்டணி என்ற சாதக சமிக்ஞையினால் கட்சியைப் பாதுகாத்துள்ளார்  விஜயகாந்த்.  ஜெயலலிதாவுடன் ஐக்கியமாகக் காத்திருக்கும்  விஜயகாந்தின் கட்சியை சேர்ந்த தமிழக சட்டமன்ற உறுப்பினர்கள் தமது முடிவைப் பரிசீலனை செய்யும் நிலைமைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள்.
மெட்ரோநியூஸ் 07/12/2012

No comments: