திராவிட முன்னேற்றக்கழகத்திலிருந்து வைகோ வெளியேறிய போது அவரின் பின்னால் சென்றவர்களில் மிக முக்கியமானவர் நாஞ்சில் சம்பத் .மிகச் சிறந்த பேச்சாளரான இவர் வைகோவின் மீது மிகுந்த மதிப்பும் மரியாதையும் உள்ளவர் வைகோவின் மீதும் கட்சியின் மீதும் ஏற்பட்ட வெறுப்பினால் ஜெயலலிதாவிடம் சரணடைந்துள்ளார்.
வைகோவுக்கும் நாஞ்சில் சம்பத்துக்கும் இடையேயான பனிப்போர் உச்சக்கட்டத்தை அடைந்து விட்டது. கட்சியை விட்டு நாஞ்சில் சம்பத் வெளியேறப்போகிறார் என்ற செய்தி கசியத் தொடங்கிய உடனே கட்சியை விட்டு வெளியேற மாட்டேன். கட்சியை விட்டு என்னை வெளியேற்ற முடியாது என்று சவால் விட்டார் நாஞ்சில் சம்பத் நாஞ்சில் சம்பத்தின் சவாலுக்கு வெளிப்படையாகப் பதிலளிக்காத வைகோ கட்சிப்பத்திரிகையில் மெல்லிதாகக் குட்டுக்கொடுத்தார்.
மிகச்சிறந்தமேடை பேச்சாளர்களில் நாஞ்சில் சம்பத்தும் ஒருவர். அவருடைய காரசாரமான நக்கல் பேச்சைக் கேட்பதற்கென்றே கூட்டம் சேருவதுண்டு. எதிரணி அரசியல் வாதிகளை அவர் தரக்குறைவாகத் தாக்கிப் பேசும் போது வைகோ கடிவாளம் போடுவதுண்டு. பெண்களைப்பற்றி இழிவாகப்பேசினால் நாஞ்சில் சம்பத்தைக் கூப்பிட்டு அறிவுரை கூறுவார்.
திராவிட முன்னேற்றக்கழகத்திலிருந்து வெளியேறி வைகோவுடன் 19 வருடங்கள் அரசியல் பயணம் செய்த நாஞ்சில் சம்பத் நாடாளுமன்றத்துக்கோ சட்ட சபைக்கோ செல்ல ஆசைப்படவில்லை. அவர் ஆசைப்பட்டுக் கேட்டிருந்தால் வைகோ மறுக்காது சந்தர்ப்பம் வழங்கி இருப்பார். அண்ணாத்திராவிட முன்னேற்றக் கழகத்தில் சேர்ந்த உடனேயே உதவி கொள்கைப்பரப்புச் செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சாஞ்சி விஜயத்துக்கு எதிர்ப்புத் தெரிவிப்பதற்காக வைகோ சாஞ்சி க்குச் சென்றார். கழகத் தொண்டர்களும் பிரமுகர்களும் வைகோவுடன் சென்று நடுவீதியில் மறியல் போராட்டம் செய்தனர். அந்தப்போராட்டத்துக்கு நாஞ்சில் சம்பத் செல்லவில்லை. அப்பொழுதே இருவருக்கும் இடைவெளி அதிகரித்தது.
பொதுக்கூட்டங்களிலும் கருத்தரங்குகளிலும் வைகோ இறுதியாகப் பேசும் வேளை அனைவரும் காத்திருப்பார்கள். ஆனால் நாஞ்சில் சம்பத் இடையில் வெளியேறி விடுவார். இது பற்றி வைகோவும் நாசூக்காக எடுத்துச் சொல்லியிருந்தார். நாஞ்சில் சம்பத் அதனைக் கணக்கில் எடுக்கவில்லை.
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழகத்தில் இருந்து நாஞ்சில் சம்பத் வெளியேறியதனால் கழகத்துக்கு எந்தப் பாதிப்பும் இல்லை அவருடன் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் சென்றிருந்தால் கட்சிக்குப் பாதிப்பு ஏற்பட்டிருக்கும். மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்த மிகச் சிறந்த மேடை பேச்சாளர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு தாவியுள்ளார். அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத்தில் கவர்ச்சிகரமான பேச்சாளர் இல்லாத குறையை நாஞ்சில் சம்பத் தீர்த்துள்ளார்.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் சேர்ந்த உடனேயே நாஞ்சில் சம்பத்துக்குப் பொறுப்பான பதவி வழங்கப்பட்டுள்ளது. கழகத்தில் உள்ள மூத்த தலைவர்கள் இதனை விரும்பவில்லை. வெளிப்படையாக எதிர்ப்புக்காட்ட முடியாது மனதுக்குள் கொதித்துப் போயுள்ளனர். ஜெயலலிதாவுக்கு எதிராக விமர்சனம் செய்ய முடியாததனால் அனைவரும் மௌன யுத்தம் செய்கின்றனர்.
அண்ணாத்திராவிட முன்னேற்றக்கழகத்தலைவர்கள் கூட ஜெயலலிதாவை திடீரெனச் சந்திக்க முடியாது நாஞ்சில் சம்பத் ஜெயலலிதாவைச் சந்தித்து கட்சி உறுப்பினராகி பொறுப்பான பதவி ஒன்றைப் பெற்றதை நினைத்து அண்ணாத் திராவிட முன்னேற்றக் கழகத்தவர்களே ஆச்சரியப்படுகின்றனர்.
அண்ணாதிராவிட முன்னேற்றக்கழகத்தில் நாஞ்சில் சம்பத் இணைந்ததனால் அக்கட்சியின் வாக்குவங்கி அதிகரிப்பதற்கான சாத்தியக்கூறு எதுவும் இல்லை வைகோவின் கட்சியில் இருந்த பிரபலமான பேச்சாளர் ஒருவரை என் கட்சியில் இணைந்து விட்டேன் என்ற பெருமையுடன் ஜெயலலிதா திருப்திப்படுவதை தவிர வேறு ஒன்றும் செய்ய முடியாது.
இந்திய ஜனாதிபதியின் தமிழக விஜயத்தினால் ஜெயலலிதாவும் கருணாநிதியும் கடுப்பில் உள்ளனர். தமிழக சட்ட சபையின் வைர விழாவில் கலந்து கொள்வதற்காகத் தமிழகத்துக்குச் சென்ற ஜனாதிபதி பிரணரப் முகர்ஜி விமான நிலையத்திலிருந்து நேராக கருணாநிதியைச் சென்று சந்தித்தார். தமிழக சட்ட சபை வைர விழாவில் கருணாநிதியின் விருப்பதை மீறியே பிரணாப் முகர்ஜி தமிழக சட்ட சபை வைர விழாவில் கலந்து கொண்டார்.
ஜெயலலிதாவின் விருப்பத்துக்காக தமிழக சட்டசபை வைர விழாவில் கலந்து கொண்ட ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கருணாநிதியைத் திருப்திப்படுத்துவவதற்காக விமான நிலையத்தில் இருந்து நேரே கருணாநிதியைச் சந்திக்கச் சென்றார். தமிழக சட்ட சபையின் வைர விழாவைப் பகிஷ்கரித்த கருணாநிதியின் வீட்டிற்கு முகர்ஜி சென்றதை ஜெயலலிதா வால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை தனது அழைப்பை ஏற்றுத் தமிழகத்துக்கு வந்த ஜனாதிபதி முகர்ஜி தனது எதிரியான கருணாநிதியைச் சந்தித்ததை ஜெயலலிதா விரும்பவில்லை. இந்திய ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக பிரணாப் முகர்ஜியை ஆதரித்தவர்.
கருணாநிதி .முகர்ஜிக்கு எதிராக சுஷ்மாவை வேட்பாளராக்கி எதிர்கட்சிகளை திக்கு முக்காட செய்தவர் ஜெயலலிதா. சட்ட சபை வைர விழாவில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கலந்து கொண்டதனால் காங்கிரஸுடன் நெருங்கிச்செல்வதாக ஜெயலலிதா வெளிக்காட்டினார். ஆனால் காங்கிரஸ் கட்சி கருணாநிதிக்கு ஆதரவாக இருப்பதை முகர்ஜி வெளிபடுத்தினார்.
தமிழக சட்ட சபையில் உரையாற்றிய ஆளுநர் ரோசய்யா தனது பெயரைக் குறிப்பிடாததனால் கருணாநிதி கடும் கோபத்தில் உள்ளார். திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் தமிழக ஆளுநருக்கும் இடையேயான பனிப்போர் இதனால் சந்திக்கு வந்துள்ளது. தமிழகத் தில் அண்ணாதிராவிட முன்னேற்றக்கழகம் ஆட்சி செய்தாலும் மத்திய அரசின் பிரதிநிதியாக இருக்கும் ஆளுநர் சந்தர்ப்பம் கிடைக்கும் போது தனது அதிகாரத்தைப் பயன்படுத் த வேண்டும். அண்ணாதிராவிட முன்னேற்றக்கழகத்தின் அத்துமீறல் சிலவற்றுக்கு ஆளுநர் துணை போகிறார் என்று கருணாநிதி குற்றம் சாட்டியுள்ளார்.
திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மீது பாரிய குற்றச்சாட்டுகளை சுமத்திய தமிழக அரசு அவர்களை கைதுச்செய்து சிறையில் அடைத்தது இதற்கு எதிராக திராவிடமுன்னேற்றக்கழகம்போராட்டம் நடத்தியது. தமிழக அரசின் அராஜகத்தை எதிர்த்தது. ஆளுநர் ரோசய்யாவிடம் திராவிட முன்னேற்றக்கழகம்மனு கையளித்தது.அந்த மனுமீது ஆளுநர் ரோசய்யா எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தமிழகத்தின் சட்ட ஒழுங்கு சீர் கெட்டுள்ளதாகவும் ஆளுநரிடம் புகார் செய்தது திராவிட முன்னேற்றக்கழகம் அதனையும் ஆளுநர் பொருட்படுத்தவில்லை. சட்டமன்றத்தில் உரையாற்றிய ஆளுநர் கருணாநிதியின் பெயரை குறிப்பிடாததை மிகப்பெரிய தவறாக திராவிட முன்னேற்றக்கழகம் கருதுகிறது.
அண்ணாதிராவிட முன்னேற்றக் கழகத்திற் துக்கெதிரான குற்றச்சாட்டுகளுக்கு ஆளுநர் நடவடிக்கை எடுக்காததனால் அவரை மாற்றவேண்டும் என்ற கோரிக்கை திராவிட முன்னேற்றக்கழகத்தினால் முன்வைக்கப்படலாம் தமிழக ஆளுநருக்கு எதிராகக் காய் நகர்த்த ஆரம்பித்து விட்டது திராவிட முன்னேற்றக்கழகம்
மெட்ரோநியூஸ் 14/12/12
No comments:
Post a Comment