Friday, December 28, 2012

குஜராத்தில் அசைக்க முடியாத மோடி பா.ஜ.க.வை அசைத்த காங்கிரஸ்


குஜராத் இமாச்சலப் பிரதேசம் ஆகியவற்றின் தேர்தல் முடிவுகள் இந்திய அரசியலைப் பரபரப்பாக்கியுள்ளன. நரேந்திரமோடி தலைமையிலான பாரதிய ஜனதாக் கட்சி தொடர்ந்து  இரண்டு முறை வெற்றிபெற்று ஆட்சி அமைத்தது.  மூன்றாவது முறை மோடி வெற்றிபெறுவதைத்தடுக்கும்  சபதத்துடன் தேர்தலில் களமிறங்கிய காங்கிரஸ் கட்சி மோடியிடமிருந்து  ஆட்சியைப் பறிக்க முடியாது தோல்வியடைந்தது. இமாச்சலப் பிரதேசத்தில்  பாரதிய ஜனதாக் கட்சியிடமிருந்து ஆட்சியைப் பறித்ததனால் காங்கிரஸ் கட்சி நிம்மதியடைந்துள்ளது.

இமாச்சலப் பிரதேசத்தை விட குஜராத் தேர்தலையே காங்கிரஸூம், பாரதிய ஜனதாக் கட்சியும் மிக முக்கியமாகக் கருதின. காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கு குறைந்துள்ளது என்ற விமர்சனங்களின் மத்தியில் பாரதிய  ஜனதாக் கட்சியிடமிருந்து  இமாச்சலப் பிரதேசத்தை கைப்பற்றியது காங்கிரஸ் கட்சி. ஆனாலும்  குஜராத்தில் மோடியை வீழ்த்த  காங்கிரஸினால் முடியவில்லை.

அகில பாரதிய வித்தியார்த்தி பரிஷாத்தில் இணைந்த மோடி மெதுமெதுவாகத் தனது அரசியல் அபிலாசைகளை வளர்த்துக் கொண்டார். பாரதீய ஜனதாக் கட்சியில் இணைந்த மோடி படிப்படியாக முன்னேறினார்.  1995 ஆம் ஆண்டு பாரதிய ஜனதாக் கட்சியின்  தேசியச் செயலாளராக நியமனம் பெற்றார்.

2001 ஆம் ஆண்டு  குஜராத் இடைத் தேர்தலில் பாரதிய ஜனதாக் கட்சி தோல்வியடைந்ததனால்  முதல்வர்  கோசுபாய் பட்டேல் இராஜினாமா செய்தார். குஜராத்தில் பாரதிய  ஜனதாக் கட்சி வலுவிழுந்த  நிலையில் முதல்வர் பொறுப்பை  ஏற்றார் நரேந்திர மோடி.



2002ஆம் ஆண்டு குஜராத் மாநிலத் தேர்தலில் மோடியின் தலைமையிலான பாரதிய ஜனதாக் கட்சி வெற்றி பெற்றது. 2002 ஆம் ஆண்டு மோடியின் ஆட்சிக் காலத்தில்கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவத்தினால் குஜராத் பற்றி எரிந்தது. முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. குஜராத்தின் சரித்திரத்தில் ஏற்பட்ட இக்கரும்புள்ளியினால் மோடியின் மீது குற்றம் சுமத்தப்பட்டது. முஸ்லிம்களின் எதிரியாக மோடி வர்ணிக்கப்பட்டார்.

2007ஆம் ஆண்டு குஜராத் மாநில தேர்தலில் மோடியைமரணவியாபாரி என்று சோனியாகாந்தி  நேரடியாகத் தாக்கினார். முஸ்லிம்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்து விடப்பட்ட வன்செயல் காரணமாக  பாரதிய ஜனதாக் கட்சி பாதிக்கப்பட்டது.. குஜராத்தேர்தலில்யாருமே எதிர்பார்க்காத நிலையில் மோடியின் தலைமையிலான பாரதிய ஜனதாக் கட்சி வெற்றி பெற்றது.

குஜராத்தில் கடந்த வாரம் நடைபெற்ற தேர்தலிலாவது  மோடியை வீழ்த்தி விடலாம் என்ற  கணவில்  களமிறங்கிய காங்கிரஸ் பலத்த அடி வாங்கியுள்ளது.  இமாச்சல பிரதேசத்தில் வெற்றி பெற்றதனால், நாடாளுமன்றப் பொதுத் தேர்தலை நம்பிக்கையுடன் எதிர்கொள்ளலாம் என்று திருப்திப்பட்டுள்ளது காங்கிரஸ். பாரதிய ஜனதா கட்சியின் கையில் இருந்த இமாச்சல பிரதேச ஆட்சியைத் தட்டிப்பறித்ததினால் வடமாநிலத்தில் காங்கிரஸின்  செல்வாக்கு குறையவில்லை என்பது நிரூபணமாகியுள்ளது.


குஜராத்தை மோடி தக்க வைத்துள்ளார். குஜராத்தில் பாரதிய ஜனதாக் கட்சி வெற்றி பெற்றாலும் அந்த வெற்றிக்கு மோடி தான் முக்கிய காரணம். மோடியின் தனிப்பட்ட செல்வாக்கினால் தான் பாரதிய ஜனதாக் கட்சி தலை நிமிர்ந்துள்ளது. குஜராத்தை முன்மாதிரியான மாநிலமாக வளர்த்துள்ள மோடி குஜராத்தின் முதலமைச்சராக  மோடி பதவி ஏற்றபோது  மின் பற்றாக்குறையால் குஜராத் தத்தளித்தது. மின் பற்றாக்குறையைச் சீர்செய்ய அவர் மேற்கொண்ட முயற்சியின் காரணமாக  அண்டை மாநிலங்களுக்கு மின்சாரம் வழங்கக் கூடிய வகையில் தன்னிறைவு  கண்டுள்ளது.
 
குஜராத்தின் நீர் பற்றாக்குறை காரணமாக  அண்டை மாநிலத்தையே  நம்பி உள்ளது.  சுமூகமான உறவுகள் காரணமாக அண்டை மாநிலங்களிலிருந்து எதுவித தடங்களுமின்றி நீர் கிடைத்தது. பூரணமான மது வில‌க்கு அமுல்படுத்தப்பட்டுள்ளதால் அங்கு குடிமகன்கள் இல்லை. அண்மையில்  குட்காவுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
 
மோடியின் வெற்றி பாரதிய ஜனதாக் கட்சித் தலைவர்களுக்கு கிலியை ஏற்படுத்தியுள்ளது. வாஜ்பாயின்  தலைமையில் ஆட்சி அமைத்த‌ பாரதிய ஜனதாக் கட்சி தகுதியான தலைமைத்துவம் இல்லாமையால் தடுமாடுகிறது. அத்வானியின் வழிகாட்டலில் பாரதிய ஜனதாக் கட்சி  எதனையும் சாதிக்கவில்லை. அடுத்த பிரதமர் யார் என்பதில் பாரதிய ஜனதாக் கட்சிக்குள்   இழுபறி நிலவுகிறது. மோடியை  பிரதமர் வேட்பாளராக  நிறுத்த வேண்டும் என்று ஒரு சிலர் விரும்புகின்றனர். மோடிக்கு எதிராக  ஒரு சிலர் பாரதிய ஜனதாக் கட்சிக்குள் இயங்குகின்றனர். குஜராத்தை விட்டு மோடி வெளியே  வரக்கூடாது  என்பதில் இவர்கள் உறுதியாக இருக்கின்றனர்.
 
குஜராத் மாநிலத்தை விட்டு மத்திய அரசுப் பக்கம் மோடி சென்றால்  பாரதிய ஜனதாக் கட்சியின் செல்வாக்கு அங்கு சரிந்துவிடும். ஆகையால் மோடி குஜராத்திலிருந்து வெளியேறுவதையே காங்கிரஸ் விரும்புகிறது. பிரதமர் வேட்பாளர் போராட்டத்தில் மோடி வெற்றி பெறமாட்டார் என்று கருதுகிறது. காங்கிரஸ் குஜராத்தில் பாரதிய ஜனதாக் கட்சி வெற்றிபெற்றாலும் ஏழு அமைச்சுகள் தோல்வியடைந்துள்ளனர். பாரதிய ஜனதாக் கட்சியை விட மோடியின் செல்வாக்குத்தான் குஜராத்தில் அதிகமாக  இருப்பதை இது  எடுத்துக் காட்டுகிறது.
 
பாரதிய ஜனதாக் கட்சியிலிருந்து வெளியேறி புதிய  கட்சி ஆரம்பித்து குஜராத்தில் தேர்தலைச் சந்தித்த கேசு பாய்பட்டேல் அச்சுறுத்தலாக இருப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. இரண்டு தொகுதிகளில் வெற்றிபெற்ற இவரது கட்சியினால் வாக்குகளைப் பிரிக்க முடிந்ததே தவிர  பாரதிய ஜனதாக் கட்சியைத் தோல்வியடையச் செய்ய முடியவில்லை.
 
குஜராத் இமாச்சல  பிரதேசம்  ஆகியவற்றின் தேர்தல் முடிவுகள் தமிழகத்திலும் எதிரொலித்தன. மோடியின் வெற்றிக்கு  ஜெயலலிதா வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.  இந்தியாவின் அடுத்த பிரதமர்  ஜெயலலிதா என்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தலைமைகளும், தொண்டர்களும் கருதுகின்றனர். காங்கிரஸ் பாதிய  ஜனதாக் கட்சி ஆகியற்றுக்கு போட்டியால்  மூன்றாவது அணி அமைக்க முயற்சி செய்யும் ஜெயலலிதா பாரதிய ஜனதாக் கட்சியின் பிரதமர் வேட்பாளராகக் கருதப்படுபவருக்கு வாழ்த்து  தெரிவித்துள்ளனர்.
 
அத்வானியும் மோடியும் ஜெயலலிதாவுக்கு மிக நெருக்கமானவர்கள். தமிழகத்தில் பாரதிய ஜனதாக் கட்சி காலூன்றுவதற்கு  ஜெயலலிதாவே  முக்கிய காரணம்.துக்ளக் ஆண்டு விழாவில் உரையாற்றிய  சோ, இந்தியாவின் பிரதமராகும் தகுதி ஜெயலலிதாவுக்கு இருக்கும் என்றார். சோ அன்று கொளுத்திப் போட்ட வெடியை  அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர்கள் அவ்வப்போது ஞாபகப்படுத்துகின்றனர்.
 
இமாச்சலப் பிரதேத்தில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றதனால் கருணாநிதி மிகுந்த  உற்சாகத்தில் உள்ளனர். காங்கிரஸூடன் கூட்டணி சேர்வதா இல்லையா என்ற கேள்விக்கு இதுவரை பதிலளிக்காத கருணாநிதி காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்கு வாழ்த்துத் தெரிவித்த போது காங்கிரஸ் கட்சியின் வாக்கு    அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். குஜராத் இமாச்சலப் பிரதேசத் தேர்தல் முடிவுகள் புதியதொரு அத்தியாயத்தை ஆரம்பித்து வைத்துள்ளன.  
மெட்ரோநியூஸ் 28/12/12



No comments: